– ‘திறனாய்வுக் கட்டுரைகள்’ நூலிலிருந்து பெறப்பட்ட இக்கட்டுரையினை நன்றியுடன் காலத்தின் தேவை கருதி மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள் –
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைத் தேயங்களில் சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பிருச்தே கவிதைக்கென்று தனிச்சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்கின. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “பொயற்றி”, என்ற கவிதைச் சஞ்சிகை 1912ஆம் ஆண்டு முதல் வெளிவருகின்றது. 1909ஆம் ஆண்டு முதல் “பொயற்றி றிவியு” என்னுஞ் சஞ்சிகை இங்கிலாந்தில் இருந்து வெளிவருகின்றது. கவிதைகளையும், கவிதை பற்றிய விமர்சனங்களையும், புத்தக மதிப்புரைகளையும் இச் சஞ்சிகைகள் தாங்கி வருகின்றன.
தமிழில், கவிதைகளை மாத்திரம் தாங்கிய ஒரு இதழை வெளிக்கொண்டு வரும் முயற்சி, முதன்முதல் தமிழ் நாட்டிலேயே தொடங்கியது. பாரதிதாசனே இதைத் தொடங்கி வைத்தவர். அவர் வெளியிட்ட குயில் பத்திரிகையே தமிழின் முதலாவது கவிதை இதழ் என்று தெரிகின்றது. குயில், பாரதிதாசனின் படைப்புக்களையே பெரும்பாலும் தாங்கி வந்தது. குயிலைத் தொடர்ந்து கவிதை, சுரதா, வானம்பாடி முதலிய கவிதை இதழ்கள் தமிழகத்தில் இருந்து வெளிவந்தன. வானம்பாடி அண்மைக் காலத்து முயற்சியாகும். தமிழ் நாட்டுக் கவிதை உலகில் பரபரப்பை ஏற்படுத்திய வானம்பாடி, வானம்பாடிக் குழுவினருக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நின்று விட்டதாகத் தெரிகின்றது.
ஆசிரியத் தலையங்கம் முதல் அடுத்த இதழுக்கான அறிவித்தல் வரை அனைத்தையும் செய்யுளிலேயே எழுதுவது தமிழ் நாட்டுக் கவிதை இதழ்களின் பிரதான பண்பாகக் காணப்பட்டது. பாரதிதாசனே இப்போக்கைத் தொடங்கி வைத்தவர் எனலாம். “சுரதா தன் கவிதைப் பத்திரிகையில் விளம்பரத்தைக் கூடக் கவிதையில் தான் பிரசுரிக்கிறார்” என்று நண்பர் ஒருவர் என்னிடம் சிலாகித்துப் பேசினார். அந்த அளவுக்கு ஆசிரியத் தலையங்கம், போட்டி அறிவித்தல், வர்த்தக விளம்பரங்கள் அனைத்தையும் அவை செய்யுளில் எழுதப்பட்ட காரணத்தால் கவிதையோடு சமமாக மதிக்கும் ஒரு சமரச மனப்பான்மை இவ்விதழ்களில் காணப்பட்டது. வானம்பாடி இதில் இருந்து வேறுபட்டது. முற்றிலும் புதுக்கவிதைக்கான ஒரு வெளியீட்டுக் களமாக அது அமைந்தது. ஆயினும் டாம்பீகமான மொழிப் பிரயோகம் அதன் பிரதான பண்பாகக் காணப்பட்டது. சமூக சமத்துவ நோக்கை வானம்பாடிக் குழுவினர் தங்கள் உட்பொருளாகக் கொண்டிருந்த போதிலும் சமூகத்தின் பொது வழக்குக்குப் புறம்பான மொழிப்பிரயோகத்தயும், சிந்தனை முறையையும், கற்பனைப் படிமங்களையும் பெருமளவு கையாண்டதால் வானம்பாடி எழுப்பிய குரல் சமூகத்தோடு ஒட்டாது அந்நியமாகவே ஒலித்தது. வானம்பாடியில் இதற்குப் புற நடைகள் உண்டு. எனினும் இதுவே பொதுப்பண்பு என எனக்குத் தோன்றுகின்றது.
தமிழ் நாட்டைப்போல், ஈழத்தில் இருந்தும் கவிதைக்கென்றே சில கவிதை இதழ்கள் வெளிவந்தன. ஈழத்துக் கவிதை இதழ்களுக்கு ஒரு இருபது வருட வரலாறு உண்டு. 1955ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் “தேன்மொழி”யின் முதல் இதழ் வெளிவந்தது. தேன்மொழியே ஈழத்தின் முதலாவது தமிழ்க் கவிதை இதழாகும். மஹாகவி, வாதர் ஆகிய இருவரும் சேர்ந்து சோமசுந்தரப் புலவரின் நினைவுச் சின்னமாகத் தேன்மொழியை வெளியிட்டனர். “கட்டிளமை செட்டுகின்ற கன்னிகையும் காதலனும் ஒன்று சேர்ந்தது போல எமது உள்ளத்திலே தோன்றிப் பேராவலாய் நிறைந்த இரு எண்ணங்களின் சேர்க்கைதான் இந்த இதழ். கவிதைகளை மாத்திரமே தாங்கிய ஒரு இதழை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பது மற்ற எண்ணம். நவாலியூர் சோமசுந்தரப் புலவருக்கு ஒரு நல்ல நினைவுச் சின்னம் உருவாக்க வேண்டும் என்பது மற்ற எண்ணம். இந்த இரண்டு எண்ணங்களும் சேர்ந்து தேன்மொழியை உருவாக்கிவிட்டன.” என்று முதலாவது இதழில் ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.