சங்க இலக்கியம் பற்றிய ஆழ்ந்த தேடல் அனுபவம் மிக்கவராக 2006இல் எனக்கு அறிமுகமானவர் நுணாவிலூர் தமிழறிஞர் கா.விசயரத்தினம் அவர்கள். அவரது தொடர்பினை எனக்குப் பெற்றுத்தந்தவர் அவரது ஆஸ்தான பதிப்பாளரான மணிமேகலைப் பிரசுர அதிபர், இரவி தமிழ்வாணன் அவர்கள். நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் நூலொன்றை கணினியை விஞ்சும் மனித மூளை என்ற தலைப்பில் அவர் 2005 இல் அச்சிட்டிருந்தார். தான் வெளியிட்ட ஈழத்தவரின் பல நூல்களை எனது நூல்தேட்டம் பதிவுக்காக ரவி தமிழ்வாணன் ஒரு தடவை தமிழகத்திலிருந்து அனுப்பிவைத்திருந்தார். அதில் கிடைத்ததே நுணாவிலூராரின் இலக்கியத் தொடர்பு. அத்தொடர்பினைத் தொடர்ந்து தனது ஒவ்வொரு நூலையும் தவறாமல் எனக்குத் தபாலில் அனுப்பிவைப்பார். நூல்பற்றிய விமர்சனங்களை நேரில் கேட்டறிவதில் அலாதிப் பிரியம் கொண்ட வித்தியாசமான படைப்பாளி அவர். நானும் எனது விமர்சனங்களுடன் ஐ.பீ.சீ. காலைக்கலசம் வானொலி உரைகளில் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வந்திருந்தேன். இத்தொடர்பு காலக்கிரமத்தில் அவரை எனது வானொலிவழி நட்புவட்டத்திற்குள் கொண்டுவந்தது. அவரது மறைவுச்செய்தியை வவுனியூர் இரா.உதயணன் ஓரிரவு தெரிவித்திருந்தார். அவரது மறைவு உடனடிச் சோகத்தை எம்மிடம் விட்டுச்சென்றாலும் அவர் தன் வாழ்நாட்தேடல் வழியாக தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கிய ஒன்பது நூல்களும் அவரை நீண்டகாலம் எம்மிடையே நிலைகொள்ள வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.
வடபுலத்தில் சாவகச்சேரி, மேற்கு நுணாவிலைப் பிறப்பிடமாகக்கொண்ட கா.விசயரத்தினம் அவர்கள் 02.03.1931இல் பிறந்தவர். சாவகச்சேரி ட்ரிபேர்க் கல்லூரியின் பழைய மாணவன். அரச கணக்காய்வுத் திணைக்களத்தில் கணக்காய்வு அத்தியட்சகராகப் பணியாற்றி 1991இல் ஓய்வுபெற்றவர். இரு ஆண்களும் ஒரு பெண்ணுமாக மூன்று பிள்ளைகள். மூவரையும் உயர்கல்விக்காக லண்டனுக்கு அனுப்பிவைத்த இவர், 1998இல் துணைவியார் சிவபாக்கியம் அவர்களுடன் லண்டனுக்கு வந்து தமது மூன்று பிள்ளைகளுடன் இணைந்துகொண்டார். லண்டனில் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தில் இணைப்பாளராக இயங்கி இலக்கியப் பசியாறியவர். கனடா ‘பதிவுகள்” இணைய இதழின் ‘நுணாவிலூர் கா.விசயரத்தினம் பக்கம்” என்ற தனிப் பக்கத்தில் சங்க இலக்கியம் சார்ந்த தன் தேடல்களை உடனுக்குடன் பதிவுசெய்து பின்னூட்டங்களைப் பெற்றவர். அதன்வழியாகத் தன் படைப்புக்களுக்கு மெருகேற்றிக் கொண்டவர். பதிவுகள் இணையம் வழியாக பல இலக்கிய உறவுகளையும் ஏற்படுத்திக்கொண்டவர். இவரது நட்புவட்டம் விசாலமானது. துணைவியார் சுகவீனமுற்றகாலத்தில் அவரை உடனிருந்து கண்ணும் கருத்துமாகப் பேணியவர். 22.07.2015இல் தனது அன்புத் துணைவியாரை இழந்த இரண்டாண்டுகளில் 7.10.2017இல் குடும்ப உறவுகளையும், தான் நேசித்த தமிழ் இலக்கிய உலகையும் பிரிந்து கா.விசயரத்தினம் அவர்களும் லண்டனில் அமரத்துவமடைந்துவிட்டார்.