தி.ஆ. 2044 மடங்கல் (ஆவணி) 2, (18-8-2013) அன்று விழுப்புரம் தமிழ்ச் சங்க 11ஆம் ஆண்டுவிழாப் பாட்டரங்கத்தில் ‘இளங்கோ அடிகள்’ என்ற தலைப்பில் பாடிய கலிவெண்பா:
இளங்கோ அடிகள்!
– தமிழநம்பி –
பாட்டரங்கின் நற்றலைவ! பைந்தமிழ் முன்மரபில்
தீட்டும் விரைவியப் பாவல! என்றென்றும்
நெஞ்சில் நிறைந்தார் நிலைப்புகழை இவ்வரங்கில்
எஞ்சலின்றிக் கூற எழுந்துள்ள பாவலர்காள்!
ஓரேர் உழவர், உழன்று விழாவெடுக்கும்
தீராத் தமிழ்ப்பசியர் தேர்ந்த மருத்துவர்
பாவலர் நல்லெளிமை பாலதண் டாயுதரே!
ஆவலுடன் வந்தே அமைந்திருந்து கேட்கின்ற
அன்புசால் தாய்க்குலமே! ஆன்ற பெரியோரே!
இன்தமிழ்ப் பற்றார்ந்த எந்தமிழ நல்லிளைஞீர்!
எல்லார்க்கும் நெஞ்சார்ந்த என்வணக்கம் கூறுகிறேன்!
நல்ல தலைப்பொன்றை நான்பாடத் தந்தார்!
நெஞ்சில் நிறைந்த இளங்கோ அடிகள்!ஆம்!
எஞ்சலின்றி எல்லாத் தமிழருளம் ஈர்க்கும்
புரட்சி நெருப்பினில் பூத்த துறவி!
மிரட்சி கொளச்செய்யும் மேன்மைமிகு பேரறிஞர்!