ஒரு மனிதனின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஆரம்ப சக்தியாயிருப்பது அவனுடைய மொழியாகும். இந்த மாபெரும் அடிப்படையில் அவனுடைய அடையாளம்,அறிவு, கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம்,இசை நாடகம் போன்ற விழுமியங்கள் கட்டமைக்கப் படுகின்றன,வளர்கின்றன.காலக் கிரைமத்தில் அவனுடைய மொழி சார்ந்த ஆக்கங்கள் அவனுடைய பாரம்பரியத்தின் சரித்திமாகின்றன.
அது மட்டுமல்லாமல்,ஒரு மனிதனின்,உடல்,உள.அறிவியல்,சமூக,ஆத்மீக வளர்ச்சியுடன் மொழி வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஒரு குழந்தையின் மொழிவளர்ச்சியின் ஆரம்பம் அந்தக்குழந்தை தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஆரம்பிக்கிறது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். தனக்குப் பரிச்சயமான ஒலிகளை, குழந்தை தனது தாயின் வயிற்றிலிருக்கும்போதே அடையாளம் காண்கிறது. குழந்தை தனது தாயின் வயிற்றில் உண்டாக்கும் முதல் அசைவைக் கொண்டாட வளைக் காப்பு வைபம் மூலம் குழந்தைக்குத் தாயின் அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தும் நல்லொலியை ஆரம்பித்தவர்கள் எங்கள் மூதாதையர்.
குழந்தை பிறந்ததும் அதன் மொழி வளர்ச்சி மொழியற்ற வித்தியாசமான ஒலிகளால் வெளிப்படுத்தப்படுகிறது.பின்னர் குழந்தை சார்ந்த நெருங்கிய சூழ்நிலையில் உள்ள குடும்பத்தினரிடமிருந்து பல்வகையான ஒலிகளின் படிமம் சார்ந்த மொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறது.
அதன் நீட்சி குழந்தை மிகச் சிறுவயதில் மற்றக் குழந்தைகளுடன் விளையாடிப் பழகும்போதும், அன்னியர்களுடன் பழகும்போதும் தொடர்கிறது.அதன் பின்னர் குழந்தையின் கல்வி பாடசாலையில் ஆரம்பிக்கும்போது,அந்தக் கல்வி குடும்பம், சமுகம், தாண்டி, ஒரு நாட்டின் கல்வியற் கோட்பாடுகளின் கட்டுமானங்களுடன் நீட்சிபெறுகிறது.