பெங்களூர், அக். 24, 2013 – புகழ்பெற்ற திரைப்பட பாடகர் மன்னா டே பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் வியாழனன்று காலமானார். அவருக்கு 94வயது நீண்டகாலம் நோய்வாய்பட் டிருந்த அவர் 5 மாதங்களுக்கு முன்னர் சுவாசப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அதிகாலை 3.50 மணிக்கு மராடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது உயிர் பிரிந்த போது மகள் சுமிதா தேப் மற்றும் அவரது மருமகன் ஞானராஜன் தேப் ஆகியோர் அருகில் இருந்தனர். அவரது இறுதிச் சடங்கு மாலையில் நடைபெற்றது. மன்னா டேவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங் களூரில் உள்ள ரவீந்திரா கலாஷேக்த்ராவில் வைக்கப்பட்டுள்ளது. மன்னா டே கொல்கத்தாவில் 1919ம் ஆண்டு பிறந்தார். அவர் நாட்டின் உயரிய தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர்.அவர் தனது இறுதி காலத்தில் பெங்களூரில் இருந்தார்.
இந்திய சினிமா நூறு ஆண்டை கடந்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிற செய்தியாக இருந்தாலும், இந்த நூறு ஆண்டுகளில் இந்திய சமூகம், குறிப்பாக தமிழ் சமூகம் கொஞ்சம் கூட சினிமாவை புரிந்துக் கொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் இருக்கவே செய்கிறது. சினிமா எடுப்பவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? சினிமாவில் நடிப்பவர்கள், இயக்குபவர்கள் உள்ளிட்ட வெகு சில கலைஞர்கள் மட்டுமே பொருளாதார ரீதியில் வளர்ந்துக் கொண்டே இருக்கிறார்கள். போகட்டும். பிரச்சனை அதுவல்ல இப்போது. இந்த நூற்றாண்டு கால சினிமாவை நாம் ஏன் கொண்டாட வேண்டும். சமூகத்திற்கு இதுவரை கொஞ்சமும் பயன்படாத வகையில்தான் இந்தியாவில் சினிமா உருவாகி கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், சமூகத்தை சீரழிப்பதிலும் சினிமா முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கிறது. பல கொலைகளை செய்த ஒருவன், குறிப்பிட்ட சினிமாவின் பெயரை சொல்லி இந்த படத்தை பார்த்துதான் நான் கொலை செய்தேன், இந்த படமே என்னை இப்படி கொலை செய்யத் தூண்டியது என்று அறிக்கை விட்ட சங்கதியெல்லாம் நடந்த நாடுதானே இது.
நேற்று எனக்கு ஒரு வேறுபாடான அனுபவம். திவ்வியராசன் தயாரித்து இயக்கி வெளிவந்த உறவு என்ற திரைப்படத்தை பெரிய திரையில் அல்லாது சின்னத்திரையில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. பொதுவாக நான் திரையரங்குகளுக்குப் போவதில்லை. இரண்டு காரணம். ஒன்று இப்போது வெளிவரும் படங்கள் எல்லாம் குப்பைப் படங்கள். அவற்றில் கதையே இல்லை. படத்தின் பெயர்களை கண்டபடி வைக்கிறார்கள். தமிங்கிலப் பாடல்கள். இரட்டைப் பொருள் உரையாடல். இரண்டாவது நேரமில்லை. நம்மவர்கள் தயாரிப்பு என்றால் ஓட்டை ஒடிசல்கள் அதிகம் இருக்கும் என எதிர்பார்த்துப் போன எனக்கு ஏமாற்றம் காத்திருந்தது. உள்ளுர் தயாரிப்பில் வெளியாகும் குறும்தட்டுக்களின் ஒலிப்பதிவு தரமாக இருப்பதில்லை. தண்ணுமை வாசிப்பு தகரத்தில் தடியால் தட்டயமாதிரி இருக்கும். உறவு திரைப்படத்தில் ஒளி, ஒலி மிக நேர்த்தியாக இருந்தது. பாரதியாரின் பாடலைப் புகுத்தியது சுவைக்குப் படி இருந்தது. இரண்டொரு பாடல்களை திவ்வியராசன் கணீர் என்ற குரலில் பாடியிருந்தார். அவை நல்லபடியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தன.
தமிழ் திரையுலகின் இசைத்துறைக்கு சென்றவாரம் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. ஒன்று திரையுலகில் தனது இனிய குரலால் பாடலிசைத்துக் கொடிகட்டிப் பறந்த பாடகர் பி.பி.சிறீனிவாஸின் இழப்பு, மற்றையது தமிழ் திரையுலகில் தனது இசையால் பல ஆண்டுகாலம் ஆளுமை செய்த இசையமைப்பாளர் ரி.கே. ராமமூர்த்தியினுடையது. 1922ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்த ரி,கே. ராமமூர்த்தி 2013 ஏப்ரல் மாதம் 17ம்திகதி புதன்கிழமை நோய்வாய்ப்பட்டு தனது 91வது வயதில் சென்னை தமிழ்நாட்டில் காலமானார். அவரது புனித உடல் சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. எம்மைவிட்டுப் பிரிந்த அமரர் ராமமூர்த்திக்கு 4 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் உட்பட 11 வாரிசுகள் உள்ளனர். ரி.கே. ராமமூர்த்தி என்று பலராலும் அழைக்கப்பட்ட இவர், தான் பிறந்த ஊரான திருச்சிராப்பள்ளியின் முதல் எழுத்தையும், தனது தந்தையின் முதலெழுத்தiயும் தனது பெயருக்கு முன்பாகப் பாவித்துக் கொண்டிருந்தார். சி.ஆர். சுப்புராமனின் இசைக்குழுவில் வயலின் வாசிப்பதில் மிகவும் திறமைசாலியாக இருந்த இவர் பின்னர் எம். எஸ் விஸ்வநாதனுடன் இணைந்து பல பாடல்களுக்கு இசை அமைத்திருக்கின்றார். இவரது தந்தையான கிருஸ்ணசுவாமி ஐயர், தாத்தாவான மலைக்கோட்டை கோவிந்தசுவாமி ஐயர் ஆகியோர் திருச்சிராப்பள்ளியில் வயலின் வாசிப்பதில் மிகவும் பிரபலமாக இருந்தார்கள். அவர்களிடம் இருந்து இவர் இந்த இனிய வயலின் இசையைக் கற்றுக் கொண்டார். அந்த நாட்களில் பிரபல இசை அமைப்பாளராக விளங்கிய எஸ். பி. வெங்கட்ராமன்தான் இவரைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
தமிழ்த்திரை உலகில் அன்றும் இன்றும் பலராலும் விரும்பப்பட்ட குரலுக்கு உரியவரான, ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடலின் மூலம் பலரின் மனதைத் தொட்ட, பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் பி.பி.சிறீனிவாஸ் சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி.காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது 82வது வயதில் (14-04-2013) காலமானார். 1930ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ம் தேதி ஆந்திரமாநிலத்தில் உள்ள காக்கிநாடாவில் பிறந்த இவர் பனிந்திரஸ்வாமி, சேஷகிரியம்மா தம்பதிகளின் மகனாவார். திருமணமான இவருக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றார்கள். பட்டதாரியான, கர்நாடக சங்கீதம் கற்ற இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற எட்டு மொழிகளை அறிந்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை இவர் பாடியுள்ளார்.
இன்று விசேட காட்சியாக காண்பிக்கப்பட்ட ‘தேன்கூடு’ திரைப்படம் பல செய்திகளை நமக்குத் தந்தது. புருவங்களை மீண்டும் ஒருமுறை உயர்த்திய திரைப்படம் என்பேன். ஈழத்துத் திரைப்படம் ஒன்றைப் பார்த்த உணர்வு எதுவித மாற்றுக் கருத்தின்றியே அனைவராலும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கதைக்கரு கிழக்கு மாகாணம் ஒன்றில் ஆரம்பித்து பின்னர் வன்னிக்கூடாக இந்தியா வரை நகர்ந்து மீண்டும் ஈழம் நோக்கிப் பயணிக்கிறது. இரண்டு கதாபாத்திரங்களூடாக கதை நகர்த்திச் செல்வது பாராட்டக்கூடியது. சிறு சிறு பாத்திரங்கள் வந்து போனாலும் கதையைச் சிதைத்து விடாமல் பார்த்துக்கொள்ளுகின்றன. இந்தியாவில் சந்தித்து கதா நாயக/நாயகிக்கு உதவும் நண்பனாக சந்திரன் பாத்திரம் நாம் சந்தித்த சில நல்ல நண்பர்களை ஞாபகப்படுத்துகின்றது. இன்னும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை சந்திரன் பாத்திரம் ஊடாகக் கதாசிரியர் சொல்லிச் செல்கிறார். பாத்திரப் பொருத்தம் கவனமெடுக்கப்பட்டதில் பட இயக்குனரின் தெரிவு சிறப்பானது.
பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைந்து விட்டார். ஆனால் அவரது பாடல்கள் நிரந்தரமானவை. அவற்றுக்கு அழிவேயில்லை. தனது பாடல்களின் மூலம் அவரது அந்த மதுரக்குரல் நிலைத்து நிற்கப் போகின்றது. பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் இந்தியத் திரையுலகு மிகவும் பெருமைப்படத்தக்க பாடகர்களிலொருவர். இந்தியாவின் பல் மொழிகளிலும் அவர் பாடியிருக்கின்றார். மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளார். அவரது மறைவு கலையுலகுக்கு மிகப்பெரிய இழப்பென்றாலும், அவர் தனது பாடல்களினூடு நிரந்தரமாக வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார். தனக்கென்று மென்மையான குரல் வாய்க்கப்பெற்றவர். இவரது அந்த மென்குரல் நடிகர் ஜெமினி கணேசனுக்கு அற்புதமாகப் பொருந்தியது. எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற பல நடிகர்களுக்கு இவர் பாடியிருந்தாலும் இவரது அந்த மென்குரல் காரணமாக இவர் ஜெமினி கணேசனுக்காகப் பாடிய பாடல்கள் மிகுந்த வரவேற்பினைப்பெற்றன.
விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான தனது தந்தையைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருப்பதால் அவளது வெளிநாட்டுப் பயணத்திற்கு உடன்பட மறுக்கிறான். மனைவி விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கிறாள்.
மின் பல்புகள் மங்கி மறைகின்றன. காட்சி தொடங்குகிறது. பஸ்சில் பயணிக்கிறான் ஒருவன். சொகுசு பஸ் அல்ல. கட கட லொட லொட எனகட்டை வண்டி போல ஒலிக்கும் வண்டி. பயணிப்பவன் ஆஜானுபானவன். வடபுலத்தானின் சொல்லப்பட்ட கருமை நிற மேனி. முகத்தில் காரணம் சொல்ல முடியாத வெறுமை. இளமைக்குரிய உற்சாகம் பரபரப்பு ஆவல் யாவும் மரணித்துவிட்டதான பாவம். இவன் கூடவே யன்னல் வழியே பயணிக்கும் பாதை வெளியும் வெறுமையானது. வெற்றை வெளிகள், கருகிய வனங்கள், புற்களும் மரணித்துவிட்ட பூமி. படிப்படியாக சூழலில் மாற்றம் தெரிகிறது. ஓரிரு பாழடைந்த வீடுகள். பின்னர் வேலியடைப்பிற்குள் சிறிய வீடுகள், மதிலுடன் கூடிய வீடு என மாற்றத்தை உணர முடிகிறது. இவை யாவும் படத்தின் பெயர் விபரங்கள் காட்டப்படும்போது பின்னணியாக ஓடிக்கொண்டிருந்தன. மாறிவரும் காட்சிப் பின்புலம் எதை உணர்த்துகிறது. காட்சி மாற்றம் போலவே அவனது வாழ்விலும் செழிப்பு மலரும் என்கிறதா? ‘இனி அவன்’ என்பது படத்தின் பெயர். வாகனத்திலிருந்து இறங்கி நடக்கிறான். நீண்ட தூரம் நடந்து செல்கிறான். தனது பாதங்களைத் தனது சொந்த மண்ணின் வெறுமையான வீதிகளில் ஆழப்பதித்து, கிராமத்தை நோக்கி நடக்கிறான். முகத்தில் ஒருவித ஏக்கம். வீதியையும் வருவோர் போவோரையும் இவன் பார்க்கிறான். ஆனால் பார்க்காதது போல போகிறார்;கள் சிலர். பார்த்தும் பார்க்காதது போல வேறு சிலர். பார்க்காதது போலப் பாவனை பண்ணித் தாண்டிச் சென்றதும் அவன் பார்க்காத வேளை அளந்து பார்த்து நடக்கிறார்கள். பார்த்துவிட்டு முகத்தை மறுபக்கம் திருப்புவோர், முகம் சுளிப்போர் என வேறு சிலர். ஆனால் யாரும் அவனுடன் பேச வரவில்லை. ஏன் என்று கேட்கவும் இல்லை.
’’ஆகாயம் பல்வேறு வண்ணங்கள் காட்டுவதுண்டு..நிறமற்ற ஆகாசமும் உண்டு..நம் கற்பனைக்கேற்ற வண்ணம் காட்டும் ஆகாயமாக அது விரிவதும் உண்டு….எதுவும் நம் பார்வையைப் பொறுத்ததே’’. சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ’ஆகாசத்திண்ட நிறம்’ என்ற மலையாளத் திரைப்படத்தை நேற்று தில்லி ஹேபிடட் திரைப்படவிழாவில் காண வாய்த்தது அற்புதமான ஓர் அனுபவம். படத்தைப் பற்றிய முன் அனுமானங்கள் தகவல்கள் ஆகிய எவையுமே இன்றி,அங்கு சென்றிருந்த எனக்குக் குறைந்த பொருட்செலவில் எளிமையான ஒரு கதைக்கருவை மையமிட்டு அழகானதொரு செய்தியை முன் வைத்திருந்த அந்தப்படம், ஆனந்தம் கலந்த அதிர்ச்சியைஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. படத்தின் ஒரு வரிக்கதை என்று சொல்லப்போனால் திருடன் திருந்தி நல்லவனாகும் வழக்கமான ஜீன்வால்ஜீன் கதைதான்….ஆனாலும் அதற்குத் தரப்பட்டிருக்கும் ட்ரீட்மெண்ட்…, அதைத் திரைக்கதையாக்கிக் காட்சிப்படுத்தியிருக்கும் நேர்த்தி இவை சொல்லுக்கடங்காதவை.