எழுத்தாளர் பற்றி: பெஸீ ஹெட் Bessie Head
தென்னாபிரிக்க பெண் எழுத்தாளரான பெஸீ ஹெட் 1937 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் ஆறாம் திகதி பிறந்தவர். விருதுகள் பல பெற்ற பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புக்களையும் எழுதியுள்ள இவர் இன்றும் கூட ஆளுமை மிக்க எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். 1950 களின் பின்னர் ஆசிரியையாகவும், ‘ட்ரம்’ எனும் சஞ்சிகையில் ஊடகவியலாளராகவும் கடமையாற்றிய இவர், அரசியல் நிலவரங்களின் காரணமாக 1964 ஆம் ஆண்டு பொஸ்த்வானாவிற்கு ஒரு அகதியாக புலம்பெயர்ந்தார். அங்கு 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி காலமான பெஸீ ஹெட்டின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பான ‘The Collector of Treasures’ எனும் தொகுப்பிலுள்ள ‘Hunting’ எனும் சிறுகதை இங்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. –மொ.பெ.
சிறுகதை: வேட்டை!
ஜூலை மாதம் வேட்டைக்குரிய மாதம். பல காரணங்களுக்காக அக் காலநிலை வேட்டைக்கேற்ற பல அனுகூலங்களைக் கொண்டிருக்கிறது. ஜூன் மாத அறுவடைக் காலமானது அத் தறுவாயில் முடிந்திருக்கும் என்பதால் எல்லோரிடமுமே சோளம் இருக்கும். அச் சோளத்தோடு கலந்து சுவையான உணவாகக் கொள்ள ஏதேனும் தேவைப்படும். சாதாரணமாக இக் காலத்தில், அவ் வருடத்திற்கான மழை வீழ்ச்சி பெய்யுமெனில் கொடிய மிருகங்களைக் காணக் கிடைக்கும்.
பன்னிரண்டு மாதங்களிலும் மிக அதிகளவில் குளிரான மாதம் ஜூலை மாதம் என்பதனால் இறைச்சியைக் காய வைக்கையில் ஏனைய மாதங்களில் போல கெட்டுப் போகவோ புளுத்துப் போகவோ மாட்டாது. எனவே ஜூலை மாதத்தில் அனேக ஆண்கள் ஊரை விட்டுக் கிளம்பி விடுவார்கள். சிலர் வாரக் கணக்கிலும், சிலர் ஒரு மாதம் தாண்டியும் கூட ஊரைத் தாண்டி வெளியே இருப்பர். அவர்கள் அடர்ந்த வனாந்தரத்துக்குச் சென்று மிகக் கடினமாக வாழ்க்கையைக் கழிப்பர். மரங்களிலிருந்து கிளைகளை வெட்டியெடுத்து முக்கோண வடிவத்தில் நட்டு அதன் மேல் புற்களை கூரையாகப் பரப்பி கூடாரங்களையோ குடிசைகளையோ உருவாக்கிக் கொள்வர். இரவு நேரங்களில் ஓய்வெடுக்கவும் குளிரிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் அதற்குள் புகுந்துகொள்வர். சிங்கங்கள் நடமாடும் பகுதியொன்றுக்கு அவர்கள் வேட்டைக்காக வந்திருப்பின் சிங்கங்களை அச்சுருத்துவதற்காக தமது குடிசைக்கருகில் தீ மூட்டி விசாலமானதாக எரிய விட்டிருப்பர்.