திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்!

திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களுடன்  ஒரு சிறப்பு நேர்காணல்!ஈழத்து  மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வு நிலை ஆசிரியருமான திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு  ஒருநேர்காணல்

நிலவன் :- உங்களைப் பற்றிச் சற்றுக் கூறுங்கள்…?

பாராசத்தி :- எனது பெயர் திருமதி பாராசத்தி  ஜெகநாதன். முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளைக் காட்டு விநாயகர் கோயிலடி எனது சொந்த ஊராகும். தற்போது விநாயகர் வீதி உக்குளாங்குளம் வவுனியாவில் வாசித்து வருகிறேன். நான் கணபதிப்பிப்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் ஒரே புதல்வியாவேன். எனது தந்தையார் ஒரு நாட்டுக் கூத்துக் கலைஞன். எனது ஒன்பதாவது வயதிலிருந்து இசை, நாடகம் இரண்டையும் முறையாக பயின்று வந்தேன். எனது பாடசாலைக் கல்வியை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியிலும் பட்டப்படிப்பை இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பெற்று பத்து ஆண்டுகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும், இருபதாண்டு வவுனியா மாவட்டத்திலும் இசை ஆசிரியராக பணிபுரிந்து முப்பதாண்டுகள் பூர்த்தி செய்தும் தற்போது வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்று ஓய்வு நிலை ஆசிரியராக இருக்கிறேன்.

நிலவன் :- பல்துறை சார் நிபுணத்துவம் உருவாக்கத்தில் உங்கள் இளைமைக்காலச் சூழல் செலுத்திய தாக்கம் பற்றி கூறுங்கள்?

பாராசத்தி :- பெண் பிள்ளை என்று ஒரு காரணத்தைக் காட்டிப் பல்துறையிலும் ஊக்கப்படுத்தாதீர்கள் என்று பலர் தடைவித்தனர். என் பெற்றோர் எனக்குப் பக்கபலமாக இருந்து என்னை ஊக்குவித்தனர். மேலும் எனக்குக் கிடைத்த இசை ஆசான்களின் பயிற்சி மற்றும் வழிப்படுத்தலினாலே இது சாத்தியமானது.

Continue Reading →

அருண். விஜயராணி நேர்காணல் – புரிதலும் பகிர்தலும்: ” ஒரு பெண் குழந்தையைப் படிப்பித்தலே ஒரு நாடு செய்யக்கூடிய சிறந்த மூலதனம்” ” நம் மரபு பற்றி நமக்கே ஒரு பெருமை இருக்க வேண்டும் “

அருண். விஜயராணி–  இலங்கையில் வெளியாகும் ஞானம் மாத இதழின் ஆசிரியர் தி. ஞானசேகரனுக்கு 1999 இல் அருண். விஜயராணி வழங்கிய நேர்காணல். புரிதலும் பகிர்தலும் நேர்காணல் தொகுப்பில் வெளியானது. 16-03-1954 ஆம் திகதி இலங்கையில் உரும்பராயில் பிறந்த விஜயராணி செல்வத்துரை  இலக்கியவாதியானதன்  பின்னர், அருணகிரி அவர்களை மணந்து  அருண். விஜயராணி என்ற பெயரில் எழுதிவந்தவர். கடந்த 13-12- 2015 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் மறைந்தார். இன்று  13 ஆம் திகதி  அவரது ஓராண்டு நினைவு அஞ்சலி காலத்தில் இந்த நேர்காணலும் பதிவாகிறது. –

கேள்வி:   இலங்கையிலும்  இங்கிலாந்திலும்  வாழ்ந்து  தற்போது அவுஸ்திரேலியாவில்  குடியேறியிருக்கிறீர்கள்.  இம்மூன்று நாடுகளிலும்  தங்கள் வாழ்வு அனுபவங்கள் எழுத்தாளர் என்ற நிலைமையில்  எவ்வாறு அமைந்துள்ளன ?

பதில்:   ”  இலங்கை  விஜயராணியே  நான்  ரசிக்கும்  எழுத்தாளர்.  கன்னிப் பெண்ணாக  இருந்து  படைத்த  படைப்புகள்  தைரியமானவை.  போலித்தனம்   இல்லாதவை.   யாருக்கும்  பயப்படாமல்  எழுதிய  எழுத்துக்கள்.    திரும்பிய  பக்கம்  எல்லாம்  இலக்கியம்  பேச  மனிதர்கள் இருந்தார்கள்.   கருத்துச்  சுதந்திரம்  இருந்தது.   (சில  அரசாங்கக் கட்டுப்பாடுகளைத்   தவிர)   மாற்றுக்  கருத்துக்கள்  பலவற்றை  பகிர்ந்து கொள்ளக்கூடிய   சந்தர்ப்பங்களும்,    அவற்றை  முன்வைக்க  மாறுபட்ட கருத்துடைய   பல  பத்திரிகைகள்,  சஞ்சிகைகள்,  வானொலி, தொலைக்காட்சி   என்று  அங்கு  ஓர்  இலக்கிய  உலகமே  இருந்தது.   எனவே நாம்   சுழல  விரும்பாத  உலகத்தை  ஒதுக்கி  விட்டு  இலக்கிய  உலகில் மூழ்கித்   திளைக்க   அது   வசதியாக   அமைந்தது.

Continue Reading →

நேர்காணல்: சுங்கை பட்டாணி க.பாக்கியம் அவர்களின் நேர்காணல்

சுங்கை பட்டாணி க.பாக்கியம்மலேசிய இலக்கியத்தின் இன்றியமையாத  சிறுகதை எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், , முன்னாள் கெடா மாநில எழுத்தாளர் கழக தலைவர். கெடா மாநிலம் தந்த தமிழ்ச்சுடர் சுங்கைபட்டாணி க. பாக்கியம் விருதுகட்கு அப்பாற்பட்டவர்.பெண் எழுத்துக்களை மலேசிய வரலாற்றில் பதிவு செய்தே ஆகவேண்டும் என மூன்று தலைமுறை  எழுத்தாளினிப் பெண்களை தேடித் தேடிக் கண்டடைந்தவர். வள்லலார் மண்டபம் எழுப்பிய பெருமைமிகு பெண்மணி. பெண்ணிலக்கியவாதிகளுக்காக இவர் வெளியீடு செய்த ஆய்விலக்கிய நூல் வரலாற்றில் இவர் பெயர் சொல்லும்.  வள்லலார் மண்டபம் எழுப்பிய பெருமைமிகு பெண்மணி. நேர்காணல்: கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) –

கேள்வி 1:மலேசிய பெண் படைப்பாளர்களில் முதன் முதலில் நூல் வெளீயீடு செய்தவர் என்ற பெருமையை பெற்றவர் நீங்கள். அந்த நெகிழ்ச்சியான தருணத்தை எங்களிடம் பகிர்ந்து கொள்ளலாமா?

மலேசியத் தமிழிலக்கியத் துறையில் தொடர்ச்சியான நூல் வெளியீடுகள் நடைபெற்ற காலகட்டம் 1970/1980பதுகள்  எனலாம். மலேசியத் தமிழிலக்கிய வரலாற்றில் இலக்கியத் தரம் உச்சத்திலிருந்த காலகட்டம் அது. தரமிக்க இலக்கியவாதிகள் வரிசை பிடித்திருந்த காலம். பத்திரிகைத் துறையிலும் இலக்கியப் பரிச்சயமிக்க பத்திரிகை ஆசிரியர்கள் சூழ இருந்தனர். இலக்கிய போட்டிகளை அன்றைய  தமிழ்ப் பத்திரிகைகள் முன்னெடுத்தன. சிங்கப்பூர் இலக்கிய களமும் தன் பங்குக்கு தரமிக்க இலக்கியத்தை அடையாளம் காட்ட முனைப்புடன் செயல்பட்டது.

மலேசிய சிங்கப்பூர் இலக்கியவாதிகளின் தரம் எவ்வித பாரபட்சமுமின்றி அடையாளம் காணப்பட்டு இலக்கிய வெளியில் பதிவு செய்யப்பட்டது. பத்திரிகைகள், இலக்கிய அமைப்புகள் என இலக்கியவாதிகளை உருவாக்கவும், அடையாளப் படுத்தவும் பெரிதும் முனைப்புக் கொண்டு செயல்பட்ட மிக உன்னதமிக்க அந்தக் காலகட்டத்தில் நூல் வெளியீடுகளும் ஆங்காங்கே பரபரப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தன. இலக்கியப் போட்டிகளில் வெற்றி கொள்ளும் முனைப்பும், தரத்தை உயர்த்திக் கொள்வதில் விளைந்த முயற்சிகளும் அக்காலகட்டம் மலேசிய இலக்கியவானில் உதயம் கொண்ட பொற்காலம்.

அக்காலகட்டத்தில் பெண்ணிலக்கியவாதிகளில் பலர் இலக்கிய உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தனர். ஆண் பெண் என்ற பேதமில்லாமல் தரத்தைப் பதிவு செய்வதில் உற்சாகத்தோடு செயல்பட்டிருந்தனர்.

அச்சூழலில், நூல் வெளியீடும் எண்ணம் என்னுள் துளிர் விடத் துவங்கியது. இலக்கியப் போட்டிகளில் வென்றதும் சிங்கப்பூர் இலக்கிய களத்தின் வழி அன்றைய பிரபல தமிழிலக்கியவாதிகளால் தேர்வு செய்யப்பட்டு பாராட்டுப் பெற்ற எனது சிறுகதைகள் என என்னுள் இலக்கியத் தாகம் ஊற்றெடுத்ததன் விளைவாக புத்தக வடிவில் பதிவு  செய்வதில் முனைப்புக் கொண்டேன்.

Continue Reading →

எழுத்தாளர் தேவகாந்தனுடான நேர்காணல் (மூன்றாம் பகுதி)!

எழுத்தாளர் தேவகாந்தன்பதிவுகள்:  அண்மையில் வெளியான அ-புனைவுகளில் மிகவும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிய நூல் தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’.  விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான ஆளூமையொருவரின் சுயசரிதையான இந்த நூல் அதன் காரணமாகவே வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதுகின்றோம். தன்னைச்சுயவிமர்சனம் செய்வதன் மூலம் மெளனிக்கப்பட்ட தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் முக்கிய அமைப்பான விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனமாகவும் இந்த நூல் விளங்குவதாகக் கருதுகின்றோம். இது போன்ற நூல்கள் ஆரோக்கியமான விளைவுகளையே தருவதாகவும் நாம் கருதுகின்றோம். மேலும் ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையிலும் இந்த நூல் முக்கியத்துவம் பெறுவதாகவும் கருதுகின்றோம். இந்த நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததா? வாசித்திருந்தால் இந்நூல் பற்றிய உங்கள் எண்ணங்களையும் ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

தேவகாந்தன்: தமிழ்நாட்டில் நான் தங்கியிருந்தபோதுதான் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் வெளியீட்டுவிழா  (பெப். 27, 2016ல் என்று ஞாபகம்) காலச்சுவடு பதிப்பகம் சார்பில் சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடந்தது. அந்நிகழ்வுக்குப் போக முடியாதிருந்தபோதும், மறுநாள் மாலைக்குள்ளேயே நூலை நான் வாசித்துவிட்டேன். அதுபற்றிய என் அபிப்பிராயங்களை அன்று பின்மாலையில் சந்தித்த சில நண்பர்களிடமும் பகிர்ந்திருந்தேன்.

ஒரு வாசகனாய் அந்த நூலை வாசித்தபோது என் ரசனையில் அதன் பின்னைய மூன்றில் இரண்டு பகுதியின் உணர்வோட்டத்தில் அது விழுத்தியிருந்த மெல்லிய பிரிநிலை துல்லியமாகவே தெரிந்தது.  நீண்ட இடைவெளிவிட்டு எழுதப்படும் ஒரு நூலும் அம்மாதிரி வித்தியாசத்தைக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. தமிழினியின் சுகவீனம் அந்த உணர்வுநிலை மாறுபாட்டின் காரணமோவெனவும் அப்போது நான் யோசித்தேன். அது எது காரணத்தால் நடந்திருந்தாலும் அந்த உணர்வு மாற்றம் அங்கே நிச்சயமாக இருந்தது.

இதற்குமேலே நாமாக யோசித்து எந்தவொரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது. எழுதியவர் ஜீவியந்தராக இருக்கிறபட்சத்தில் அந்நூல் குறித்து எழக்கூடிய சந்தேகங்களை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும். அல்லாத பட்சத்தில் அதுகுறித்த சந்தேகங்களையும், கேள்விகளையும் நூலின் தரவுகள்மூலமாகவேதான் நாம் அடையவேண்டியவர்களாய் உள்ளளோம். ஆசிரியர் அந்நூலை எழுதத் தொடங்கிய காலம், எழுதிமுடித்த காலம், பிரசுரப் பொறுப்பைக் கையேற்றவர் யார், எப்போது என்ற விபரம், பிரசுரத்திற்கு கையளிக்கப்பட்ட காலம் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு பதிவு பதிப்பினில் இடம்பெற்றிருக்க வேண்டும். இது முக்கியமான அம்சம். அதுவும் இல்லாத பட்சத்தில் அப்பிரதி சந்தேகத்திற்கு உரியதுதான். அதற்கும் நியாய வரம்புகள் உள்ளன. அந்த நியாய வரம்புகளை எமது நிலைப்பாட்டினடியாக அல்லாமல் உண்மையின் அடிப்படையில் பார்க்கவேண்டுமென்பது இதிலுள்ள முக்கியமான விதி.

Continue Reading →

நேர்காணல் பகுதி 2 : தேவகாந்தன்!

எழுத்தாளர் தேவகாந்தன்பதிவுகள்: இலங்கைத்தமிழ் இலக்கியத்தை பலவகை எழுத்துகள் பாதித்துள்ளன. தமிழகத்தின் வெகுசனப் படைப்புகள் , மணிக்கொடிப்படைப்புகள், மார்க்சிய இலக்கியம், மேனாட்டு இலக்கியம் எனப்பல்வகை எழுத்துகள் பாதித்தன. இலங்கையைப்பொறுத்தவரையில் மார்க்சியவாதிகள் இரு கூடாரங்களில் (சீன சார்பு மற்றும் ருஷ்ய சார்பு) ஒதுங்கிக்கொண்டு இலக்கியம் படைத்தார்கள். மார்க்சிய இலக்கியத்தின் தாக்கத்தினால் இலங்கைத்தமிழ் இலக்கியம் முற்போக்கிலக்கியம் என்னும் தத்துவம் சார்ந்த, போராட்டக்குணம் மிக்க இலக்கியமாக ஒரு காலத்தில் கோலோச்சியது. அதே சமயம் எஸ்.பொ.வின் நற்போக்கிலக்கியம், மு.தளையசிங்கத்தின் யதார்த்தவாதம், தமிழ்த்தேசியத்தை மையப்படுத்திய இலக்கியம் எனப்பிற பிரிவுகளும் தோன்றின. இவை பற்றிய உங்களது கருத்துகளை அறிய ஆவலாகவுள்ளோம். இவை தவிர வேறு தாக்கங்களும் இலங்கைத்தமிழ் இலக்கியத்தைப்பொறுத்தவரையிலுள்ளதாகக் கருதுகின்றீர்களா?

தேவகாந்தன்: சோவியத் நூல்கள் மட்டுமில்லை. வங்கம், மராத்தி  முலிய மொழிகளின்  எழுத்துக்களும் இலங்கை எழுத்துக்களைப் பாதித்தன. இது அதிகமாகவும் முற்போக்குத் தமிழிலக்கியத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவே இருந்தது.  இவ்வகையான மொழியாக்கங்களால்  விளைவுகள் ஏற்பட்டுக்கொண்டு இருந்தபொழுது, ஆங்கிலத்திலிருந்தும் பல நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பாகின. அ.ந.கந்தசாமி போன்றோர் இலங்கையிலேயே  இது குறித்து பல்வேறு முயற்சிகளையும் செய்தனர். அது முற்போக்குக்கு வெளியே இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்கும் கருதுகோளை உருவாக்கியது. தமிழ்நாட்டில் எவ்வாறு மார்க்சிய  எழுத்துக்கு அப்பால் ஒரு இலக்கியம் உருவாக இவ்வகையான மொழிபெயர்ப்புக்கள் வழிவகுத்தனவோ, அதுபோலவே இலங்கையிலும் உருவாகிற்று. ‘அலை’ இலக்கிய வட்டம் அப்படியானது.  ‘மெய்யுள்’ மற்றும் ‘நற்போக்கு’ போன்றனவும் அப்படியானவையே. ‘மெய்யுள் மேற்கத்திய புதிய கருத்தியல்களின் பாதிப்பினைக் கொண்டிருந்தவேளையில், நற்போக்கு இலக்கியம் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு முற்போக்கு இலக்கியத்துக்கான எதிர்நிலைகளிலிருந்து, தனிநபர்களின் நடத்தையிலிருந்த நேர்மையீனங்களை எதிர்ப்பதிலிருந்து பிறந்திருந்தது. அதேவேளை அய்ம்பதுகளில் ‘சுதந்திரன்’ பத்திரிகையை மய்யமாகக் கொண்டு தமிழ்த் தேசியம் சார்ந்தும் எழுத்துக்கள் பிறந்ததையும்  சொல்லவேண்டும். இது தமிழ்நாட்டில் வளர்ந்துகொண்டிருந்த திராவிட இலக்கியத்தின் பாதிப்பிலிருந்தும், தன் சொந்த அரசியல் நிலையிலிருந்தும் தோன்றுதல் கூடிற்று.

Continue Reading →

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: சிறுகதைகள், நாவல்கள், வானொலி தொலைக்காட்சி மேடை நாடகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவருபவர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழியிலும் எழுதும் ஆற்றல் உடைய சிங்கையின் முன்னணி எழுத்தாளர். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் உள்ளூர் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழவேள் விருது கொடுத்து சிறப்பித்து வருகின்றது. இவ்வாண்டு எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளிலும் எழுதும் இவரது ஆற்றலுக்கும், சிறுகதைகள், நாடகங்கள், [வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்கள், ] எழுதி இயக்கிய இயக்குனராக, ஆய்வுக்கட்டுரையாளராக, நூலாசிரியராக, தமிழுக்கு இவர் ஆற்றிய இலக்கிய அர்ப்பணத்துக்கு, தமிழவேள் விருது, தங்கப் பதக்கமும், மற்ற சிறப்புக்களுடன் நாடாளுமன்ற திரு விக்ரம் நாயர் தலைமையில் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் இவரை கெளரவித்தது. ‘தமிழ் ஆதர்ஸ்.காம்’ அகில் சாம்பசிவம் அவர்களால் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் அவர்களுடன் காணப்பட்ட நேர்காணல் இது.


அகில்: உங்களைப்பற்றிய சிறிய அறிமுகத்தோடு நேர்காணல தொடங்கலாம் என்று நினைக்கிறேன், முதலில் உங்கள் எழுத்துலக தொடக்கம் பற்றி சொல்லுங்கள்?

எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்:  கேரளத்தைச்சேர்ந்த ஒற்றப்பாலம் குருப்பத்த வீடு எனும் தேவி நிவாஸ் தரவாட்டைச் சேர்ந்தவர் தந்தை. அம்மாவும்  பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் படித்து வளர்ந்த நான், குழந்தையிலிருந்தே, குடும்ப  தரவாட்டுப் பெருமையைப் பெற்றோர் சொல்லிச்சொல்லி கேட்டு வளர்ந்ததால், எந்நேரமும் மலையாளமே என் முதல் மொழியாக உணர்ந்து வளர்ந்தவள்.ஆனால் கற்ற ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் எனக்கு தமிழ் கற்பிக்க வந்த ஒரு தமிழாசிரியரின் ஊக்கத்தால், தமிழ் மீது அபாரக்காதல் உண்டானது. எனது கட்டுரைகளை எல்லாம் அவரே தமிழ் நேசன் சிறுவர் அரங்கத்துக்கு அனுப்பினார்.கட்டுரை பிரசுரமாகும் போது பள்ளியில் கிட்டிய அங்கீகாரம்,ஆசிரியர்களின் பாராட்டு, அதனாலேயே, இன்னும் முனைப்பாக எழுதவேண்டுமே  எனும் ஆசை –இப்படியாகத்தான் எழுதத் தொடங்கினேன். தமிழ்நேசன், தமிழ்முரசு, தமிழ் மலர். மயில், பத்திரிகைகள் மட்டுமின்றி, மலேசிய வானொலியில் அந்த சின்ன வயதிலேயே சிறுவர் நாடகங்கள் எழுதியிருக்கிறேன்.கவிதை, சிறுகதைகள், தொடர்கதைகள், என என்னை எழுதவைத்ததே அன்றைய பத்திரிகையாசிரியர்கள் எனக்குத் தந்த ஊக்கத்தால் மட்டுமே.

Continue Reading →

எழுத்தாளர் தேவகாந்தனுடனானதொரு நேர்காணல்(1)!

எழுத்தாளர் தேவகாந்தன்எழுத்தாளர் தேவகாந்தன் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும், தமிழகத்தமிழர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர்களிலொருவர். இம்முறை ‘பதிவுகள்’ அவருடனான நேர்காணலைப்பிரசுரிப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றது. முதலில் அவரைப்பற்றிய சிறு அறிமுகத்துடன் நேர்காணலை ஆரம்பிப்பதும் பொருத்தமானதே.

தேவகாந்தனும் அவரது படைப்புகளும்

புகலிடத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் தேவகாந்தனுக்குச் சிறப்பானதோரிடமுண்டு. இவரது கனவுச்சிறை (திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய  ஐந்து பாகங்களை உள்ளடக்கிய, 1247 பக்கங்களைக் கொண்ட,  1981 முதல் 2001 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய நாவல்.) புகலிடத்தமிழ் இலக்கியத்தில் மிகவும் முக்கியத்துவத்துக்குரிய  நாவலாகும்.

முனைவர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலைப் பற்றி அதுபற்றிய அவரது  விமர்சனக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்: ‘திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய தலைப்புகள் கொண்ட ஐந்து பாகங்களாக 237 அத்தியாயங்களில் 1247 பக்கங்களில் விரியும் இவ்வாக்கம் 1981 முதல் 2001 வரையான இருபத்தொரு ஆண்டுக்கால வரலாற்றியக்கத்தைப் பேசுவது. இந்த வரலாற்றுக் கட்டம் ஈழத்துக் தமிழர் சமூகத்தின் இருப்பையும் பண்பாட்டுணர்களையும் கேள்விக்குட்படுத்தி நின்ற கால கட்டம் ஆகும். பெளத்த சிங்கள பேரினவாதப் பாதிப்புக் குட்பட்ட நிலையில் ஈழத்துத் தழிழ் மக்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட உணர்வு தீவிரமடைந்த காலப்பகுதி இது. அதே வேளை மேற்படி பேரினவாதக் கொடுமைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கில் ஈழத்தமிழர் பலர் புலம் பெயர்ந்தோடி அனைத்துலக நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்வை நிலைப்படுத்திக் கொண்ட காலப்பகுதியாகவும் இவ்வரலாற்றுக் காலகட்டம் அமைகின்றது. இவ்வாறு போராட்டச் சூழல் சார் அநுபவங்களுமாக விரிந்து சென்ற வரலாற்றியக்கத்தை முழு நிலையில் தொகுத்து நோக்கி, அதன் மையச் சரடுகளாக அமைந்த உணர்வோட்டங்களை  நுனித்துநோக்கி இலக்கியமாக்கும் ஆர்வத்தின் செயல்வடிவமாக இவ்வாக்கம் அமைந்துள்ளது. மேற்படி உணர்வோட்டங்களை விவாதங்களுக்கு உட்படுத்திக் கதையம்சங்களை வளர்த்துச் சென்ற முறைமையினால் ஒரு சமுதாய விமர்சன ஆக்கமாகவும் இந்நாவல் காட்சி தருகின்றது. குறிப்பாக, தமிழீழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடும் இயக்கங்களின் உணர்வுநிலை மற்றும் செயன் முறை என்பவற்றுக்குப் பின்னால் உள்ள நியாயங்கள் மற்றும் புலம் பெயர்ந்துறைபவர்களின் சிந்தனைகள், செயற்பாடுகள் என்பவற்றின் பின்னால் உள்ள நியாயங்கள் என்பன இந்நாவலில் முக்கிய விவாதமையங்கள் ஆகின்றன. இவற்றோடு பேரினவாத உணர்வுத்தளமும் இந்நாவலில் விவாதப் பொருளாகின்றது. அதன் மத்தியில் நிலவும் மனிதநேய இதயங்களும் கதையோட்டத்திற் பங்கு பெறுவது நாவலுக்குத் தனிச் சிறப்புத் தரும் அம்சமாகும். போராட்டத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் இருப்பு சார்ந்த உணர்வோட்டங்கள் மற்றும் அவல அநுபவங்கள் ஆகியனவும் விவாதப் பொருள்களாகின்றன.

Continue Reading →

நேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக,..

சமகால எழுத்துக்களை அலுக்காமல், சளைக்காமல், அமைதியாகத்தன் போக்கில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி, விமர்சித்து, கவனப்படுத்தி வருபவ‌ர் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன் (முரளிதரன் பார்த்தசாரதி).  பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீனவிருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, சங்கு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணையத்தளங்களிலும் தீவிரமாகத் தனதுபடைப்புகளைப்பிரசுரித்துள்ளார். இவரது சமீபத்திய கவிதைகள், கட்டுரைகள் பெரும்பாலும் திண்ணையில் வெளிவந்தவை. தொடராக ‘ஜென் ஒரு புரிதல்‘, முள்வெளி- சமூகநாவல், போதிமரம்- சரித்திர நாவல், ராமாயணம் தொடங்கி வைத்த ஒரேகேள்வி என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை ஆகியவை திண்ணையில் பிரசுர‌ங்கண்டன. இவை அச்சு வடிவில் வராதவை. புனைகதைகள், நாவல்கள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர். வாசிப்பையும் எழுத்தையும் இருகரைகளாகக் கொண்டு ஆரவாரம் இல்லாத மிக அமைதியான ஆறாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார் சத்யானந்தன். வாசகர்களும் படைப்பாளிகளும் அவரைக் குறித்து மேலும் அறிய வேண்டும் என்ற நோக்கில் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவரிடம் மின்னஞ்சல்வழி உரையாடி பதில்களைத் தொகுத்துள்ளார்.

ஜெயந்தி சங்கர்; உங்கள் புனைபெயர் குறித்த பின்னணியைச் சொல்லுங்கள்.

சத்யானந்தன்; அம்மா பெயர் சத்தியபாமா. எனது ஆதர்ச எழுத்தாளர் ஜெயகாந்தன் பெயர் போல என் பெயர் முடிய வேண்டும் என்ற ஆசை பதின்ம வயதிலேயே இருந்தது.

ஜெயந்தி சங்கர்; அண்மையில்எழுதிய, உங்களுக்கு திருப்தியளித்த உங்களுடைய விமர்சனம் எது?

சத்யானந்தன்; நவம்பர் 2015 உயிர்மையில் வந்த இமையத்தின் ‘ஈசனருள்’ என்ற நீள்கதைக்கு எழுதிய விமர்சனம்.

ஜெயந்தி சங்கர்; ஒரு தேர்ந்த வாசகனின் அடிப்படை அடையாளமாக எதைச்சொல்வீர்கள்?

Continue Reading →

அருண்மொழிநங்கை ஜெயமோகனுடன் ஒரு நேர்காணல்!

அருண்மொழி நங்கை; நன்றி: ஜெயமோகன் வலைப்பதிவு (புகைப்படம்)ஶ்ரீரஞ்சனி விஜேந்திராஎன்ன எழுதியிருக்கிறாய் என்று பெண்ணை, ஆண் கேட்பது என்பது ஒரு சீண்டல், அதற்குச் சவாலாகப் பெண் எழுதிக்காட்ட வேண்டும் எனச் சொல்லும், அருண்மொழிநங்கை ஜெயமோகன்,  ஒழுக்கம் என்பது பெண்ணுக்குக்கான ஒரு அளவுகோல் இல்லை, அதைச் சொல்லிவிட்டார்களே என்று பெண் எழுத்தாளர்கள் அனுதாபம் தேடியிருக்கக் கூடாது. பெண் என்றால் கொஞ்சம் திமிர் தேவை என்கிறார்.

கேள்வி: ஜெயமோகன் அவர்களின் வாசகி என்ற நிலையிலிருந்து மனைவியாக மாறிய அந்தக் காலகட்டத்தை மீட்க முடியுமா? மனைவியான பின் உங்களின் வாசிப்பு மனநிலையில் ஏதாவது மாற்றத்தை அவதானித்தீர்களா?

பதில்: வியப்புடன் பார்க்கும் ஓர் ஆளுமையின் எழுத்தை மட்டுமே வாசகியாக இருக்கும்போது நாம் பார்க்கிறோம். அவர்களின் அன்றாட வாழ்க்கை நமக்குத் தெரிவதில்லை. அப்போது நான் அறிந்த ஜெ, ஓர் அறிவுஜீவி. அவரது எழுத்துப் பற்றிய பிரமிப்பு மட்டும்தான் என்னிடம் இருந்தது. திருமணம் ஆனதும் அவரின் அன்றாட வாழ்க்கை தெரியவந்தது. சாதாரண மனிதர்களின் அன்றாடவாழ்க்கையை விடவும் அது குழறுபடியானது என்று புரிந்தது. அப்போது எழுத்தையும் ஆளையும் நான் பிரித்துப் பார்க்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக மனிதரை நன்றாக அறிந்து அந்த அறிதலின் வழியாக, மேலும் நெருங்கியபோதுதான் அவருக்குள் படைப்புத்தன்மை மிகுந்த ஆளுமையைக் கண்டேன். இன்று படைப்புமனம் கொண்ட ஒருவர்தான் எனக்கு முதன்மையாவராகத் தெரிகின்றார். இது படிப்படியாக மாறிவரும் ஒரு சித்திரம்.

அத்துடன் நான் என்றைக்குமே ஒரு  நல்ல வாசகி. அவர் எழுதும்போதே வாசிப்பவள். திருமணம் ஆனபோது அவர் எழுதும் வேகம் ஆச்சரியத்தை அளித்தது. ஆனால் இப்போது ஆச்சரியமெல்லாம் இல்லை. அது இயல்பாகத் தெரிகிறது. நான் வாசகியாக  இருந்த அவரின் எழுத்துக்களை வாசிக்கும்போது ஜெ வேறு ஒருவராகத்தான் தெரிகிறார். அது அவரது ஓர் உச்சநிலை மட்டும்தான்.

கேள்வி: ஜெயமோகன் அவர்களின் முதல் வாசகியாக இருக்கும் நீங்கள் அவருக்குக் கொடுக்கும் பின்னூட்டம், அவருடைய படைப்புக்களில் குறிப்பிடத்தக்க ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றதா? அது பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

பதில்: அவரின் ஆரம்பகால படைப்புகள் எல்லாவற்றையுமே நான் வாசித்து எடிட் செய்திருக்கிறேன். விஷ்ணுபுரம் முழுக்கமுழுக்க என் தொகுப்பில் உருவான ஒரு நாவல். நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதியது என்றுகூட அவர் சொல்லியிருக்கிறார். காடு, ஏழாம் உலகம் யாவுமே நான் எடிட் செய்தவைதான். கதையோட்டம், அமைப்பின் சமநிலை இரண்டையும் நான் புறவயமாக அளந்து சொல்வேன். அது அவருக்கு உதவியாக இருக்கின்றது என்று அவர் சொல்வார்.

Continue Reading →

ஜெயந்தி சங்கருடன் ஒரு நேர்காணல்: முடிவை விட பயணமே முக்கியம்

ஜெயந்தி சங்கர்:1. வணக்கம்!  உங்கள் குடும்பப்பின்னணி குறித்துச் சொல்லுங்கள்

ஜெயந்தி சங்கர்: என் பெற்றோரின் பூர்வீகம் மதுரை. நான் பிறந்ததும் மதுரை. இருப்பினும், பள்ளிவிடுமுறைநாட்களுக்குப் போவது தவிர மதுரையுடன் எனக்கு எந்தத் தொடர்பும் குறிப்பிடும் அளவிற்கு இருந்ததில்லை. அம்மா சாதாரண இல்லத்தரசி. இசை அறிந்தவர். புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்ட அப்பா மத்திய அரசாங்கத்தில் ஒரு பொறியாளராக இருந்தார். வாசிப்பு, தொழில்நுட்பம், புகைப்படம், ஓவியம், தோட்டக்கலை போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர். 2-3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்பாவுக்கு மாற்றலாகிக் கொண்டே இருக்கும். ஆகவே, கோவை முதல் ஷில்லாங் வரை பல ஊர்களிலும், மாநிலங்களிலும் வளர்ந்தேன். ஆகவே, பல மொழிகளும் பல்வேறுபட்ட கலாசாரங்களும் எனக்கு சிறு வயது முதலே அறிமுகம். குடும்பத்தில் நானே மூத்தவள். ஒரு தங்கை, லண்டனில் ஆங்கில ஆசிரியையான இருக்கிறாள். இரண்டு தம்பிகள். இருவரும் பொறியாளர்கள். கணவர் ஒரு பொறியாளர். இரண்டு மகன்கள். பெரியவன் ஒரு பொறியாளர். சிறியவன் சட்டம் இரண்டாம் வருடம் படிக்கிறான்.

Continue Reading →