“காலடியில் வந்து சேரும் பந்து என்னுடையதல்ல, அது என் குழுவினுடையது என்று எப்போதும் நினை. நீதான் கோல் போட வேண்டுமென ஒரு போதும் நினைக்காதே. உனக்குப் பெரும் தடைகள் சூழ்ந்து வரும்போது, பந்தை மேல் எடுத்துச் செல்ல வசதியுடன் உன் சக ஆட்டக்காரர்கள் காத்துக் கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே”. – சுந்தரராமசாமி ( ஜே.ஜே. சில குறிப்புக்களில்) –
மீண்டும் உலக கால்பந்து போட்டியொன்று ஆரம்பமாகியுள்ளது. உலகின் பெரும்பாலான மக்கள் அதனால் பின்னப்பட்ட மாய வலையின் பிரமிப்பிலிருந்து விடுபடாமல் குடும்பங்கள், வேலைகள், நோய்கள், கடன் சுமைகள் என அனைத்து பிரச்சினைகளையும் மறந்து அதில் லயிக்க ஆரம்பித்து விட்டனர். சாதாரண அடித்தட்டு மக்கள் மட்டுமன்றி, படித்தவர்கள், அறிவு ஜீவிகள், சமூக அக்கறையுள்ளவர்கள் கூட அதன் பிடியில் சிக்குண்டு ஒரு வித போதையுணர்வோடு தமக்கு பிடித்தமான அணியின் வெற்றி தோல்விகளுக்கு பின்னான களிப்பிலும் கலக்கத்திலும் மாள்ந்து போயுள்ளார்கள்.
கால்பந்து – ஆதியில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சீனாவில் ஆரம்பிக்கப் பட்டு பின்பு இங்கிலாந்தில் நவீனமயப்படுத்தப் பட்டு இன்று People Game என்று சொல்கின்ற அளவிற்கு உலகின் பெரும்பாலான மக்களின் வாழ்வில் (அமெரிக்கா, இந்தியா போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர) பின்னிப் பிணைந்துள்ள ஒரு அற்புதமான விளையாட்டு ஆகும். ஆயினும் இம் மக்கள் விளையாட்டானது இன்று முற்று முழுதாக வணிகமயப் படுத்தப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களினதும் பல வணிக நிறுவனங்களினதும் கைகளுக்குள் சிக்குண்டு அதன் தனித் தன்மையை இழந்து வருகின்றது. அத்துடன் ஊழல் மிகுந்த பல அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் கறை இதற்குப் பின்னால் எவ்வளவு தூரம் உள்ளன என்பதுவும் இன்று மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. இதற்கு உதாரணமாக 2022 உலக பந்து தொடரிற்காக Qatar தெரிவு செய்யப்பட்ட முறையும் அதன் பின்னால் நடை பெற்ற பல்லாயிரக்கணக்கான கோடி டொலர்கள் ஊழலையும் நாம் குறிப்பிடலாம். இதன் காரணமாக உலக கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் இருந்து அதன் தலைவர் Sepp Platter அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டமையும் நாம் அறிந்தவையே.