அண்மையில் கோப்பாய் சிவம் , செல்லத்துரை சுதர்சன் ஆகியோரால் தொகுக்கப்பட்டு வெளியான ‘மறுமலர்ச்சிச் சஞ்சிகைகளின் தொகுப்பு’ பற்றிய ஞானம் சஞ்சிகை ஏபரல் மாத இதழின் தலையங்கத்தில் வாழ்த்தியிருக்கின்றது. மேற்படி ஞானம் சஞ்சிகையின் வாழ்த்துச்செய்தி வரவேற்கத்தக்கது. ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள , குறிப்பிடப்படாத விடயங்கள் பற்றிச் சுட்டுக்காட்டுவது முக்கியமென்று எனக்குத் தோன்றுகின்றது. ‘அ.செ.மு , வரதர் போன்ற ‘ஈழத்து நவீன எழுத்தாளர்களின் இரண்டாவது பரம்பரையினரில் பலர் மறுமலர்ச்சி உருவாக்கிய எழுத்தாளர்களே. என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அ.செ.மு போன்றவர்கள் மறுமலர்ச்சி சஞ்சிகையின் வரவுக்கு முன்னரே ஈழகேசரி மூலம் எழுதத்தொடங்கி ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர்கள். அவர்களில் அ.செ.முருகானந்தன், தி.ச.வரதராசன், க.செ.நடராசா, அ.ந.கந்தசாமி, பஞ்சாட்சரசர்மா போன்ற ஐவருமே மறும்லர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியவர்கள். இதனால்தான் இவர்கள் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று கூறப்படுகின்றார்களே தவிர ‘மறுமலர்ச்சி’ சஞ்சிகையில் எழுதியதனால் அல்ல.
மறுமலர்ச்சிச் சங்கத்திற்குள் பஞ்சாட்சர சர்மாவை இழுத்தவர் அ.ந.கந்தசாமி. பஞ்சாட்சர சர்மாவே தனது கட்டுரைகள் பலவற்றில் தன்னை எழுத்துத்துறையில் ஊக்கப்படுத்தியவராகக் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் ‘பஞ்சாட்சரம்’ நூல் முன்னுரையிலும் தன்னை எழுதுமாறு தூண்டிய இருவர்களாக அ.ந.கந்தசாமியையும், பண்டிதர் பொ.கிருஷ்ணபிள்ளையையும் குறிப்பிட்டுள்ளார். அதிலவர் அவர்கள் தன்னை எழுதுமாறு தூண்டித் தன்னம்பிக்கையூட்டி எழுத வைத்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாட்சர சர்மா அவர்களின் மகனான கோப்பாய் சிவம் அவர்கள் தனது தந்தையின் எழுபதாண்டு வயதினையொட்டி வெளியிட்ட ‘பஞ்சாட்ஷரம்’ நூலில் , பஞ்சாட்சர சர்மா அவர்களுக்கு ஏனைய கலை, இலக்கியவாதிகள் எழுதிய கடிதங்களையும் இணைத்துள்ளார். மேற்படி நூலை நூலகம் இணையத்தளத்தில் எழுத்தாளர் கோப்பாய் சிவம் அவர்களின் படைப்புகளுக்கான பக்கத்தில் காணலாம்.
மேலும் மேற்படி நூலிலுள்ள பஞ்சாட்சர சர்மா அவர்களைப்பற்றிய கட்டுரையில் எழுத்தாளர் வரதர் அவர்கள் மறுமலர்ச்சிச்சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்கள் ஐவரென்றும், அவர்களிலொருவராக அ.ந.கந்தசாமியையும் குறிப்பிட்டிருப்பார்.
பஞ்சாட்சரம் தொகுப்பு நூலில் பலர் பஞ்சாட்சர சர்மா அவர்களுக்கு எழுதிய கடிதங்களையும் சேர்த்திருக்கின்றார்கள். அதிலொன்று அ.ந.க எழுதிய கடிதம். அதிலவர் பஞ்சாட்சர சர்மாவை மறுமலர்ச்சிச்சங்கத்தில் இணைந்து பணியாற்றும்படி அழைப்பு விடுத்திருக்கின்றார். அக்கடிதத்தில் அ.ந.க குறிப்பிட்டுள்ள விடயங்கள் சில வருமாறு:
1. மறுமலர்ச்சிச்சங்கம் அமைக்கப்பட வேண்டுமென்ற அவசியத்தை முதலில் வலியுறுத்தியவர் அ.செ.முருகானந்தன். ஈழகேசரி பத்திரிகையில் அவரது பத்தியான ‘பாட்டைசாரியின் குறிப்புக’ளில் இவ்விதம் மறுமலர்ச்சி சங்கத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தியிருக்கின்றார். இதனை அக்கடிதத்தில் அ.ந.க குறிப்பிட்டிருக்கின்றார்.
2 . இவ்விதமாக மறுமலர்ச்சிச்சங்கத்தினை அமைக்கும் முயற்சியில் தனது நண்பர்களான அ.செ.மு.வும், வரதரும் ஈடுபட்டிருப்பதாகவும் , அவர்களுடன் ஒத்துழைத்துச் சங்கத்தை வெற்றியாக்க வேண்டுமென்பது தனது அவாவென்றும் அ.ந.க அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் ‘மறுமலர்ச்சிச்சங்கம் மறுமலர்ச்சி இலக்கிய ஆர்வமுள்ள உத்தம ரஸிகர் திருக்கூட்டமாக இருக்க வேண்டும். தாங்கள் அத்தகையார் ஒருவர். எனவே தங்கள் ஒத்துழைப்பை நான் அதிகம் விரும்புகின்றேன்’ என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். அக்கடிதம் எழுதப்பட்ட திகதி: 01.06.48. (பஞ்சாட்சர்மா; பக்கம் 169]
Continue Reading →