அண்மையில், வாசித்த அறிவியல் கட்டுரைகளில் என் கவனத்தை ஈர்த்த கட்டுரைகளிலொன்று யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவரும், பொறியியலாளருமான திரு. ப. தயாநிதி , சென்ற வருடம் யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தினரால் , யாழ் இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டினை சிறப்பிக்குமுகமாக நடாத்திய ‘கலையரசி’ நிகழ்வு மலரில் எழுதிய ‘இன்னும் சில தசாப்த காலத்திற்கு வாழ்வீர்களாயின் நித்திய வாழ்வு காணலாம் (Live long enough to live for ever) என்னும் கட்டுரைதான் அது.
தானியங்கியியல் (Robotics), நனோ தொழில் நுட்பம் (nano thechnology) மற்றும் மரபுப்பொறியியல் (Genetic engineering) ஆகிய தொழில் நுட்பங்கள் இணைந்த அடுத்த கட்ட அறிவியல் வளர்ச்சியே இவ்விதம் மானுடர் நீண்ட காலம் அல்லது நித்திய வாழ்வு வாழ்வதற்குரிய சாத்தியத்தைக்கொண்டு வந்துள்ளதை , அழகு தமிழில் , தர்க்கச்சிறப்புடன் விபரிக்கின்றது தயாநிதியின் இந்தக்கட்டுரை.
நனோ தொழில் நுட்பத்தினைப்பாவித்து மானுடரின் கண்களுக்குப்புலப்படாத ‘நுண் தானியங்கி’ (nanobot) எனப்படும் தானியங்கியை (robot) உருவாக்க முடியும். இந்த ‘நுண்தாங்கிகளை’ வைரஸ்கள், பக்ரீயியாக்களைப்போல் தம்மைத்தாமே பிரதியெடுத்துப் பெருகும் வகையில் உருவாக்க முடியும். இதன் மூலம் இவ்விதமான ‘நுண் தாங்கிகள்’ கொண்டு பல்வேறு நோய்களை உருவாக்கும் வைரஸ்களை, பக்ரீறியாக்களை மற்றும் புற்று நோய்க்கலங்களை அடையாளம் கண்டு அழிக்க முடியுமென்பதை, பல்வேறு நோய்களுக்குக் காரணமான மரபணுக்களைச்சரி செய்ய முடியுமென்பதை எளிமையாக விபரிக்கின்றது மேற்படி கட்டுரை.
அத்துடன் நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இருதயம் போன்ற உறுப்புகளுக்குப் பதிலாக , அவற்றின் வேலைகளைச்செய்வதற்கு இவ்வகையான நுண்தாங்கிகளை இரத்தத்துக்குப் பதிலாகப்பாவிக்கக்கூடிய நிலையும் உருவாகுமென்றும் கட்டுரை விபரிக்கின்றது.
அத்துடன் கட்டுரை கூறும் இன்னுமொரு விடயமும் என் கவனத்தைக்கவர்ந்தது. அது மானுடர் செய்யும் வேலைகள் அனைத்தையும் தானியங்கிகள் செய்வதால், தற்போது நிலவும் பொருளாதார நிலை முற்றாக அழிந்து, எல்லாருக்கும் எல்லாப்பொருள்களும், சேவைகளும் கிடைக்க வழி பிறக்குமாம்.