சமகாலத்தில் மறைந்தவர்களின் அறையினுள்தான் வாழ்கின்றேனா….? இந்தக்கேள்வியை எனக்கு நானே கடந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். ஆனால், இந்தக்கேள்விக்கு பதில் இல்லை. இந்த ஆண்டின் இறுதியும் மறைந்தவர்களின் அறையினுள்தான் என்னை முடக்கிப்போட்டிருக்கிறது. எனது அறையிலிருக்கும் கணினியை திறக்கும்பொழுதே பதட்டம்தான் வருகிறது.
துயில் மறைந்து பல மாதங்கள். துயரம் கப்பிய சிந்தனைகளும் அப்படியே பல மாதங்களாக ஓடுகிறது. முற்றுப்புள்ளியில்லாத நீண்ட வசனங்களையே எனது அறையிலிருந்து எழுதுகின்றேன். பழகியவர்கள் தெரிந்தவர்கள் இலக்கியப்பாதையில் இணைந்து வந்தவர்கள் ஒவ்வொருவராக விடைகொடுக்கும்பொழுதும் அவர்களின் படங்கள் நிரம்பியிருக்கும் எனது கணினியை தினமும் பார்க்கும்பொழுதும் நீண்டபொழுதுகள் தினமும் செலவிடும் இந்த அறை எனக்கு மறைந்தவர்களின் அறையாகவும், அவர்கள் என்னோடு பேசிக்கொண்டிருக்கும் அறையாகவும் மாறிவிட்டது.
கடந்த 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியா மெல்பனில் எமது அருமை இலக்கியச்சகோதரி அருண். விஜயராணியை அவருடைய இறுதிப்பயணத்தில் வழியனுப்பிவிட்டு மறுநாள் 21 ஆம் திகதி வீடு திரும்பி அவருடைய இறுதி நிகழ்வுகளை மனதில் அசைபோட்டுக்கொண்டிருக்கையில் அடுத்த செய்தி தமிழ்நாட்டிலிருந்து தளம் ஆசிரியரும் மூத்த எழுத்தாளர் அகிலனின் மருமகனுமான பா. ரவியிடமிருந்து வருகிறது.
” முருகபூபதி, எங்கள் சார்வாகன் மறைந்தார்.”
” ஆளுமைகளையெல்லாம் உம்மிடம் அழைத்துக்கொள்ளும் வேலையைத்தான் தொடர்ந்து பார்க்கிறீரா…? ” என்று அந்தக்கடவுளிடம் உரத்துக்கேட்கின்றேன். ஆனால், எனக்கிருக்கும் அந்த இறை நம்பிக்கைகூட இல்லாத ஒரு மகத்தான மனிதர்தான் ஸ்ரீநிவாசன் என்ற சார்வாகன். அவர் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால், தனக்கு மதம் மீதான நம்பிக்கை ஏன் இல்லாமல் போனது…? என்று என்னிடம் ஒரு உண்மைக்கதையையே மெல்பனுக்கு வந்திருந்த சமயத்தில் சொல்லியிருக்கிறார்.
யார் இந்த சார்வாகன்….?