நேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக,..

சமகால எழுத்துக்களை அலுக்காமல், சளைக்காமல், அமைதியாகத்தன் போக்கில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி, விமர்சித்து, கவனப்படுத்தி வருபவ‌ர் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன் (முரளிதரன் பார்த்தசாரதி).  பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீனவிருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, சங்கு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணையத்தளங்களிலும் தீவிரமாகத் தனதுபடைப்புகளைப்பிரசுரித்துள்ளார். இவரது சமீபத்திய கவிதைகள், கட்டுரைகள் பெரும்பாலும் திண்ணையில் வெளிவந்தவை. தொடராக ‘ஜென் ஒரு புரிதல்‘, முள்வெளி- சமூகநாவல், போதிமரம்- சரித்திர நாவல், ராமாயணம் தொடங்கி வைத்த ஒரேகேள்வி என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை ஆகியவை திண்ணையில் பிரசுர‌ங்கண்டன. இவை அச்சு வடிவில் வராதவை. புனைகதைகள், நாவல்கள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர். வாசிப்பையும் எழுத்தையும் இருகரைகளாகக் கொண்டு ஆரவாரம் இல்லாத மிக அமைதியான ஆறாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார் சத்யானந்தன். வாசகர்களும் படைப்பாளிகளும் அவரைக் குறித்து மேலும் அறிய வேண்டும் என்ற நோக்கில் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவரிடம் மின்னஞ்சல்வழி உரையாடி பதில்களைத் தொகுத்துள்ளார்.

ஜெயந்தி சங்கர்; உங்கள் புனைபெயர் குறித்த பின்னணியைச் சொல்லுங்கள்.

சத்யானந்தன்; அம்மா பெயர் சத்தியபாமா. எனது ஆதர்ச எழுத்தாளர் ஜெயகாந்தன் பெயர் போல என் பெயர் முடிய வேண்டும் என்ற ஆசை பதின்ம வயதிலேயே இருந்தது.

ஜெயந்தி சங்கர்; அண்மையில்எழுதிய, உங்களுக்கு திருப்தியளித்த உங்களுடைய விமர்சனம் எது?

சத்யானந்தன்; நவம்பர் 2015 உயிர்மையில் வந்த இமையத்தின் ‘ஈசனருள்’ என்ற நீள்கதைக்கு எழுதிய விமர்சனம்.

ஜெயந்தி சங்கர்; ஒரு தேர்ந்த வாசகனின் அடிப்படை அடையாளமாக எதைச்சொல்வீர்கள்?

Continue Reading →

கவிதை: கழியும் பொழுதில் சிறக்கும் வாழ்வில்..

- வ.ந.கிரிதரன் -

எக்கணமும் இக்குமிழி உடைந்து விடலாம்.
அவ்விதமே எனக்குத்தோன்றுகிறது.
தற்செயற் சாத்தியங்களில் சுழலுமிருப்பில்
அவ்விதம்தான் எனக்குத்தோன்றுகிறது.
சிறு மாற்றம் கூட சில வேளைகளில்
இருப்பினைக் கேள்விக்குறியாக்கும்
அபாயமுண்டு என்பதை
உணர்வதற்கு இயலாத
ஆட்டங்களில், ஓட்டங்களில்
விரைந்து செல்லும் வாழ்வு
இதனைத்தான் எனக்கு உணர்த்துகிறது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 135: பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது ‘கருடா! செளக்கியமா?’ ருஷ்யக் கரடியைச் சீண்டியது துருக்கி!

ருஷ்ய அதிபர் புடின்துருக்கி அதிபர்அண்மையில் ருஷ்ய விமானப்படையினரின் விமானமொன்றினை துருக்கி சுட்டு வீழ்த்தியது யாவரும் அறிந்ததே. துருக்கியால் ஒரு போதுமே ருஷ்யாவுடன் நேருக்கு நேர் மோத முடியாது. இருந்தாலும் ஏன் துருக்கி இவ்வளவு துணிவாக ருஷ்ய விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. ருஷ்ய அதிபர் புட்டின் குற்றஞ்சாட்டுவது போல் துருக்கி திரை மறைவில் இசிஸுடன் (ISIS) நட்பாகவிருக்கிறது. அவர்கள் விற்கும் எண்ணெயினை வாங்குகின்றது. சிரியாவின் தன்னின மக்களைக்கொண்ட போராளிகளுக்கு ஆதரவளிக்கிறது. அதே சமயம் துருக்கி நேட்டோ என்னும் மேற்கு நாடுகளின் கூடாரத்தில் அங்கம்  வகிக்கும் நாடு. துருக்கிக்கும் , ருஷ்யாவுக்குமிடையிலான மோதல் வளர்ந்து ருஷ்யாவுக்கும் நேட்டோவுக்குமிடையிலான மோதலாக வெடிக்கும் ஆபத்து உண்டு.

இவ்விதமானதொரு சூழலில்தான் துருக்கி ருஷ்ய விமானத்தைச்சுட்டு வீழ்த்தியுள்ளது. இது துருக்கியுடன் நட்பாகவிருக்கும் இசிஸின் ஆலோசனையாகவிருக்க வேண்டும். துருக்கி ருஷ்ய விமானத்தைச்சுட்டு வீழ்த்துவதன் மூலம் அம்மோதலை நேட்டோவுக்கும், ருஷ்யாவுக்குமிடையிலான மோதலாக மாற்றிடலாமென்று துருக்கியும், இசிஸும் திட்டமிட்டிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஆனால் அவர்கள் விரித்த வலைக்குள் ருஷ்யா விழவில்லை என்பதை அவதானிக்க முடிகிறது. அது மட்டுமல்ல உடனடியாகவே ருஷ்யா சிரியாவில் இசிஸின் எண்ணெய்க்கிணறு நிலைகள் மீது தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 134 : பொன் குலேந்திரனின் ‘முகங்கள்’

பொன் குலேந்திரனின் 'முகங்கள்'கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் பொன்.குலேந்திரனின் ‘முகங்கள்’ சிறுகதைத்தொகுதியினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ‘ஓவியா பதிப்பகம்’ (தமிழகம்) வெளியீடாக , அழகான அட்டையுடன் வெளிவந்திருக்கின்றது. தான் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களை மையமாக வைத்து அவரால் எழுதப்பட்ட 21 சிறுகதைகளின் தொகுப்பிது.

இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளை பின்வருமாறு வகைப்படுத்த முடிகிறது: குறிப்பிட்ட ஆளுமை மிக்க ஒருவர் பற்றிய விவரணச்சித்திரங்களாச் சில கதைகள் அமைந்துள்ளன. சந்திக்கடை சங்கரப்பிள்ளை, வைத்தியர் வைத்திலிங்கம், சண்டியன் சங்கிலி இஸ்மாயில், நாட்டாண்மை நாச்சிமுத்து, நாவிதர் நாகலிங்கம், பியூன் பிரேமதாசா, அரசாங்க அதிபர அபயசேகரா, சின்னமேளக்காரி சிந்தாமணி போன்ற சிறுகதைகளை இவ்வகையில் அடக்கலாம். இவ்விதமான சிறுகதைகள் பொதுவாக ஒருவரைப்பற்றி அல்லது ஒரு பிரதேசமொன்றினைப்பற்றிய விவரணைகளாக, ஆரம்பம் , முடிவு போன்ற அம்சங்களற்று அமைந்திருக்கும். இதற்கு நல்லதோர் உதாரணமாகப் ‘புதுமைப்பித்தனின்’ புகழ் பெற்ற சிறுகதைகளிலொன்றான ‘பொன்னகரம்’ சிறுகதையினைக் குறிப்பிடலாம்.

இன்னும் சில சிறுகதைகள் குறிப்பிட்ட ஆளுமை மிக்க ஒருவரைபற்றிய விவரணையாக இருக்கும் அதே சமயம், எதிர்பாராத திருப்பமொன்றுடன், அல்லது முக்கியமானதொரு நீதியினைப் புகட்டும் கருவினைக்கொண்டதாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இவ்விதம் அமைந்துள்ள கதைகளின் மேலும் சில அம்சங்கள் முக்கியமானவை. கதைகள் கூறும் நடை, மற்றும் கதைகளில் விரவிக்கிடக்கும் பல்வகைத்தகவல்கள். எளிமையான ஆனால் ஆற்றொழுக்குப் போன்ற நடை ஆசிரியருக்குக் கை வந்திருக்கின்றது. அந்நடையில் அவ்வப்போது அளவாக நகைச்சுவையினையும் ஆசிரியர் கலந்து வெளிப்படுத்தியிருக்கின்றார். தொகுப்பிலுள்ள பல்வேறு ஆளுமைகளும் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களது காலங்களில் நிலவிய சமூகப்பழக்க வழக்கங்கள், குறிப்பிட்ட இடம் அல்லது கட்டடங்கள் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் எனப்பல்வகைத்தகவல்கள் இக்கதைகள் எங்கும் பரந்து கிடக்கின்றன.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 133 : சென்னை வெள்ளமும், நகர் அமைப்பு பற்றிய சிந்தனைகளும்…

சென்னையில் வெள்ளம்!சென்னையில் விரைவில் இயல்பு நிலை தோன்றி , அனைவரினதும் சிரமங்கள், துன்பங்கள் நீங்கிட அனைவரும் வேண்டுவோம். விமானநிலையம் போன்ற கட்டடங்களுக்குள் எல்லாம் எவ்வளவு வெள்ளம்! இந்திய மத்திய , மாநில அரசுகள் இதிலிருந்து பாடம் படிக்க வேண்டும். இவ்விதமான இயற்கைச்சீற்றங்களைச் சமாளிக்கும் வரையில், நகரைத்தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில் நகர அமைப்புத்திட்டங்களை வடிவமைத்து அமுல் படுத்த வேண்டும். இந்த மாமழை ஒன்றை அனைவருக்கும் புரிய வைத்திருக்கின்றது. காங்கிரீட் வனமாக மாறிக்கொண்டிருக்கும் நகருக்கு, இவ்விதமான சமயங்களில் விரைவாக நீர் வடிந்து போவதற்குரிய வடிகால்கள் போதுமான அளவுக்கு இல்லை என்பதுதான் அந்தப்புரிதல்.

டொராண்டோ, கனடாவிலும் இதுபோன்ற நிலையுண்டு. ஒரு மணித்தியாலம் விடாது மழை பெய்தால் போதும் நகரம் வெள்ளக்காடாக மாறிவிடும். குறிப்பாக ‘டொன் வலி பார்க்வே’ கடுகதி நெடுஞ்சாலை வெள்ளத்தால் நிறைந்துவிடும். இதற்குக்காரணமும் இங்கும் போதிய அளவு குறுகிய நேரத்தில் அதிகமாகப்பெய்யும் மழை நீர் விரைவாக வடிந்து போவதற்குரிய வடிகால் வசதிகள் போதுமான அளவு இல்லை என்பதுதான். சென்னையில் தற்போது பெய்யும் மழைபோல் பல நாள்களாக மழை பெய்தால், ‘டொராண்டோ’வுக்கும் இந்த நிலைதான் எதிர்காலத்தில் ஏற்படும்.

இந்த இயற்கையின் சீற்றத்திலிருந்து இந்திய மத்திய , மாநில அரசுகள் பாடம் படிக்க வேண்டும். நகரத்திட்டமிடல் வல்லுநர்கள் நகரொன்றுக்குப்போதிய அளவில் வடிகால்கள் இருக்கும் வரையில் அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும். சூழற் பாதுகாப்பினை மையமாக வைத்துத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். மக்களை நகரங்களை நோக்கிப் படையெடுக்காத வண்ணம், பிற பகுதிகளிலும் வேலை வாய்ப்புகள் உருவாகும் வகையிலான திட்டங்களை உருவாக்க வேண்டும்.

Continue Reading →

படித்தோம் சொல்கின்றோம்: சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த குழந்தைப் போராளிகளின் மௌனத்தை உடைக்கும் புதினம் வழி தவறிச்சென்ற ஒரு ஆட்டுக்குட்டியின் கதை அம்மாவை இழந்து துப்பாக்கியை ஏந்திய சைனா கெய்ரெற்சியின் குழந்தைப்போராளி நவீனம்

சைனா கெய்ரெற்சியின்    குழந்தைப்போராளி   நவீனம்முருகபூபதி“ஏகே 47  துப்பாக்கியுடன்  ஒவ்வொரு  குழந்தையும்  மூன்று ரவைக் கூடுகளை   அணிந்துகொள்கிறார்கள்.  சிலர்  ஆறு ரவைக் கூடுகளைக்கூட  கட்டியிருப்பார்கள்.  இந்தச் சுமையைப்பற்றி எங்களுக்கும்   கவலையில்லை.  எங்கள்  தலைவர்களுக்கும் கவலையில்லை.    எந்தப்பாரத்தைச் சுமந்தாவது,  என்ன  வித்தை காட்டியாவது   தலைமையின்  கவனத்தைப் பெற்றுவிடுவதில் குழந்தைகள்   கண்ணும்  கருத்துமாயிருந்தார்கள்.   கனமான இந்தத்துப்பாக்கிகள்   எங்களுக்குத்தாயின் அரவணைப்பைப்போன்றன.   நாங்கள்  உயிரைவிட்டாலும் விடுவோமே  தவிர  ஒரு  கணமும்  துப்பாக்கியை விட்டுப்பிரியமாட்டோம்.   துப்பாக்கி  இல்லாத  நாங்கள் முழுமையற்ற   பிறவிகள்.   உங்களின்  இந்த  அவலநிலை  குறித்து உங்கள்  தளபதிகள்  கொஞ்சமேனும்  கவலை கொள்ளவில்லையா… ?  என  நீங்கள்  கேட்கக்கூடும்.   அவர்கள் முசேவெனியின்   விருப்பங்களைப் பிழைபடாமல்  நிறைவேற்றும் கலைகளில்   மூழ்கிக்கிடந்தார்கள். ”

இந்த  வாக்குமூலம்,  ஆபிரிக்க  நாடான  உகண்டாவில்  1976  ஆம் ஆண்டு   பிறந்த  ஒரு  குழந்தையின்   போர்க்கால  வாழ்க்கையின் சரிதையில்  பதிவாகியிருக்கிறது. அவள்  பெயர்   கெய்ரெற்சி.   (Keitetsi). அந்தக்குழந்தைக்கு  ஒன்பது  வயதாகும்பொழுது  இராணுவப்பயிற்சிக்கு   தள்ளப்படுகிறாள்.   கட்டளைத்தளபதிக்கு அவளுடைய   குழந்தைப்பருவம்  ஒரு பொருட்டல்ல.   ஆனால்,  அவளுக்கு  ஒரு  அடைமொழிப்பெயர்  சூட்டவேண்டும்.  அவளுக்கு இடுங்கிய  கண்கள். ” ஏய் உன்னைத்தான்.சீனர்களைப்போல  இடுங்கிய  கண்  உள்ளவளே…. என்னை  நிமிர்ந்துபார்.”  அந்த உறுமலுடன்  அவளுக்கு பெயரும்  மாறிவிடுகிறது. அன்றுமுதல் அவள் சைனா கெய்ரெற்சி. (China Keitetsi)

தாயன்பு,   நல்ல  பராமரிப்பு,  நேசம்  தேவைப்பட்ட  குடும்பச்சூழல், கல்வி   யாவற்றையும்   தொலைத்துவிட்ட  பால்ய காலம், களவாடப்பட்ட  குழந்தைப் பருவம்,  ஆரோக்கியமற்ற  அரசு,  அதிகாரம் யாரிடமுண்டோ  அவர்களே   மற்றவர்களின்  வாழ்வைத் தீர்மானிக்கும்   சக்திகள்.   இவ்வளவு  கொடுந்துயர்களின்  பின்னணியில்  சபிக்கப்பட்ட  ஒரு  பெண் குழந்தையின்  வாழ்வு  அந்த   உகண்டா   மண்ணில்  எவ்வாறு  பந்தாடப்பட்டது…? அவளது அபிலாசைகள்   எங்கனம்  புதைக்கப்பட்டது…? என்பதை சயசரிதைப்பாங்கில்   சொல்லும்  புதினம்தான்  குழந்தைப்போராளி.

Continue Reading →

மக்கள் வாழ்வியல் பேசும் சீவக சிந்தாமணி

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

தலைசிறந்த காப்பியங்கள் அனைத்தும் கற்பனைக் களஞ்சியமாகவே தோன்றுகின்றன. கற்பனையின் சொல்லாற்றல் இலக்கியமாகின்றது. அந்த இலக்கியங்கள் சிறந்த காப்பிய நூலாய் மிளிர்கின்றன. அக் காப்பியங்களுள் தலை சிறந்தது சீவக சிந்தாமணியாகும். இது ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றானது. இதைக் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருத்தக்க தேவர் எனும் புலவர் யாத்துத் தந்தனர். இக் காப்பியத்தின் தலைவன் சீவகன் என்ற அரசன் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களை ஒன்றன்பின் ஒன்றாகத் திருமணம் புரிந்து அவர்களுடன் ஒன்றுபட்டுக் கூடி மகிழ்வுற்று  ஏமாங்கத நாட்டின் தலைநகரான இராசமாபுரத்தில் இருந்து அரசாண்டு வந்தான் என்று கதை நீண்டு போகின்றது. இனி, கதைப் போக்கைத் தவிர்த்து, வாழ்வியல் தொடர்பில் சீவக சிந்தாமணி பேசும் பாங்கினையும் பார்ப்போம்.

மாநகரின் சிறப்பு:- மலைகள், குன்றுகள், பொய்கைகள், குளங்கள், வாவிகள், ஏரிகள், ஆறுகள், நீர் வீழ்ச்சிகள், மரங்கள், சோலைகள் ஆகிய இயற்கை வளங்கள் நிறைந்துள்ள நாடுகளையும் காண்கின்றோம். நகரைச் சுற்றி வன்மையான கல் மதில்கள், அவற்றின் மீது பல்வேறு போர்க் கருவிகள், மதில்களைச் சூழ்ந்து அகழிகள் போன்றனவும் அமைத்திருந்தனர். அந்நகரத்தைக் கடைநகர், இடைநகர், உள்நகர் என மூன்று பிரிவாக வகுத்துள்ளனர். கடைநகரில் யானையின் மருப்பிற்குப் பூண் இடுவோர் வாழும் வீதிகள் அமைந்திருந்தன. அங்கு தேர் ஏறும் இடமும், வாட்போர் பயிலும் இடங்களும் இருந்தன. இடைநகரில் அழகிய மாடங்கள், அதன் உச்சியில் நீல மணியால் செய்யப்பட்ட அழகிய இடங்களும் அமைந்திருந்தன. உள்நகரில் பரத்தையர் சேரி அமைந்திருந்தது. கடைகளின் தரையை நாள் தோறும் மெழுகி, அகிற்புகை, சந்தனப் புகை இட்டு, குலதெய்வங்களை வணங்கி நிற்பர்.

அரசன் அரண்மனையைச் சுற்றி ஆழமான அகழி அமைந்துள்ளது. தற்பாதுகாப்பிற்காக அந்த அகழியில் முதலைகள் நிறைந்திருக்கும். கால்வாய்களில் எவரும் விழாதபடி என்றும் மூடப்பட்டிருக்கும். அரசன் தங்குவதற்குப் பூங்காவில் பள்ளிமாடம் அமைந்திருக்கும். ஆங்கே கண்கவர் சிலைகள் காணப்படும். அரசன் அரண்மனையில் என்றும் இன்னிசை, யாழ் ஒலி, முரசொலி, நடன ஒலி நிறைந்திருக்கும்.

Continue Reading →

அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்: சொ.டேவிட் ஐயா!

சமூகம் இயல் பதிப்பகம்’ வெளியீடாக வெளிவந்திருக்கிறது ‘அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்’ என்னும் காந்தியம் அமைப்பின் ஸ்தாபகரானடேவிட் ஐயா அவர்கள் பற்றிய இச்சிறு நூல். பதிப்பாளர்…

Continue Reading →

நினைவுகளின் தடத்தில் (1)

அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் ‘நினைவுகளின் சுவட்டில்..’ முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் ‘பதிவுகள்’ இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் ‘பதிவுகள்’ இதழில் மீள்பிரசுரமாகும். – திவுகள் –

- வெங்கட் சாமிநாதன் -என் மிகப் பழைய ஆரம்ப ஞாபகங்கள் சில அடிமனதில் பதிவானவை அவ்வப்போது மேலெழுந்து நினைவில் நிழலாடிச் செல்லும். இப்போது அவற்றை எழுத்தில் பதியத் தோன்றுகிறது. அப்போது எனக்கு இரண்டரை அல்லது மூன்று வயதிருக்கலாம். அந்த வீட்டில் பாட்டியை நன்கு நினைவிருக்கிறது. மாமாவையும் நன்கு நினைவிருக்கிறது. கொல்லைப்புறம் இருக்கும் கிணற்றிலிருந்துதான் தண்ணீர் எடுத்து வரவேண்டும். பாட்டி குடத்துடன் கிணற்றுக்குச் செல்வாள். குடத்தில் தண்ணீர் நிரப்பி இடுப்பில் வைத்துக் கொண்டு திரும்பும் போது நான் பாட்டியை முந்திக்கொண்டு வீட்டுக்கு ஒடுவேன். இது ஒரு நினைவோட்டம்.

பின் மங்கலாக மனத்தில் திரையோடும் ஒரு துண்டுக் காட்சி. குரங்கு ஒன்று என்னைத் துரத்துகிறது. ஒரு பெரிய உயர்ந்த மண்டபத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு என்னை மிரட்டுகிறது. வெகு வருடங்களாக இந்த மாதிரி ஒரு காட்சி என்னில் அவ்வப்போது திரையோடினாலும், அந்த மாதிரி ஓரிடத்தில் நான் இருந்ததாகவே நினைவில் இல்லை. என்னவோ என் மனதுக்குள் கற்பனை செய்து கொண்டிருக்கிறேனோ என்று நினைத்துக்கொள்வேன். ஆனாலும், அந்த மண்டபம், குரங்கு மிரட்டுவது எல்லாம் அவ்வப்போது, சிறுவயது ஞாபகங்கள் வரும்போது, இக்காட்சியும் உடன் வந்து மறையும். பின் ஒரு முறை பழனிக்குப் போயிருந்தேன், என் சின்ன மாமா பெண்ணின் கல்யாணத்திற்காக. பத்து வருடங்களுக்கு முன். அப்போது தான் நான் பழனிக்கு முதன் முறையாகச் செல்கிறேன். நிலக்கோட்டையிலிருந்து அப்படி ஒன்றும் வெகு தூரத்தில் இல்லை பழனி. அருகில் இருந்த போதிலும், என் மாமா தீவிர முருக பக்தர் என்ற போதிலும், பழனி சென்றதில்லை அது வரை. அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், கல்யாணத்திற்குப் பழனி சென்றவன் கோவிலைப் பார்க்கச் சென்ற போது அடிவாரக் கோயிலின் முகப்பு மண்டபம், என் சிறு வயதிலிருந்து திரையோடிக்கொண்டிருக்கும் மண்டபம் போலவே இருந்தது. சிறு வயதில் குரங்கு என்னைப் பார்த்து மிரட்டியது இங்கு தானோ? ஒரு வேளை மாமா என்னையும் அழைத்துக் கொண்டு பழனி வந்திருப்பாரோ? இருக்கலாம். என்னவோ தெரியவில்லை. ஆனால் அந்த அடிவார முகப்பு மண்டபத்தைப் பார்த்ததும், சட்டென சிறுவயதிலிருந்து இன்று வரை அவ்வப்போது நிழலாடிச் செல்லும் நினைவு, இப்போது கண்முன் பிரத்யட்சமாகியுள்ளது போன்று ஒரு திகைப்பு. எப்படியும் விளக்கவோ, விளங்கிக் கொள்ளவோ முடியாத dejavu -க்கள்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 132: ஜெயமோகனின் குணா கவியழகனின் படைப்புகள் பற்றிய கருத்துகள் பற்றி…., அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா!

ஜெயமோகனின் குணா கவியழகனின் படைப்புகள் பற்றிய கருத்துகள் பற்றி….,

ஜெயமோகன் ஜெயமோகன் அண்மையில் தனது வலைப்பதிவில் குணா கவியழகனின் படைப்புகளைப்பற்றிக் கூறிய கருத்துகளையிட்டுப்பலர் முகநூலில் வாதிட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.ஜெயமோகனுக்குத் தன் கருத்துகளைக்கூறும் முழு உரிமை உண்டு. பேச்சுரிமை, எழுத்துரிமையினை வலியுறுத்தும் அனைவரும் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு படைப்பு எல்லோருக்கும் ஒரே விதமான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதில்லை. ஒருவருக்குப்பிடித்த படைப்புகள் இன்னுமொருவருக்குப் பிடிக்காது. ஜெயமோகனுக்கு சயந்தனின் படைப்புகள் பிடித்திருக்கின்றன. கவியழகனின் படைப்புகள் அவ்விதம் பிடித்திருக்கவில்லை. ஜெயமோகன் போன்றவர்களிடம் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதும், கிடைக்கவில்லையென்றால் கடுமையாக எதிர்வினையாற்றுவதும் ஆரோக்கியமான இலக்கியச் செயற்பாடுகளல்ல. ஜெயமோகன் கவியழகனின் படைப்புகள் ஏன் தன்னைக் கவரவில்லை என்பதற்குக் காரணங்கள் கூறியிருக்கின்றார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவர் கவியழகனின் படைப்புகளை உதாரணங்களாக்கி, ஏன் ஜெயமோகனின் கூற்றுகள் தவறென்று தர்க்கபூர்வமாக வாதிட வேண்டும். இவற்றை எதுவும் செய்யாமல் ஜெயமோகனுக்கு எதிராக வார்த்தைகளை அள்ளிக்கொட்டுவதில் அர்த்தமில்லை. ஜெயமோகனின் கட்டுரையினை நானும் வாசித்தேன். அதன் இணைப்பினைக் கீழே தருகின்றேன். இதனை வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை ஜெயமோகனின் கருத்துகளின் அடிப்படையில் கூறுவீர்களென்றால் விவாதம் மேலும் சிறக்கும்.

விமர்சனங்களை அவை எவ்விதமிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் ஒருவரின் விமர்சனமென்பது அவர் குறிப்பிடும் படைப்பு பற்றிய முற்று முழுதான உண்மையல்ல. விமர்சனங்கள் எப்பொழுதுமே சார்பானவை. அவரது வாசிப்பு அனுபவம், கலை, இலக்கியம் பற்றிய கருத்தியல் போன்ற காரணங்களுக்காக அவரது விமர்சனம் இன்னுமொருவரிடமிருந்து வேறுபடும். அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

Continue Reading →