சூழற் பாதுகாப்பு: பூவரசங்குளம் பிரதேசத்தில் காடழிப்பு!

பூவரசங்குளம் பிரதேசத்தில் காடழிப்பு!வவுனியா மாவட்டம் பூவரசங்குளம் – வன்னிவிளாங்குளம் வீதியானது, வவுனியா – மன்னார் – முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் பயணிக்கக்கூடிய மிகவும் முக்கியமான போக்குவரத்து வீதியாகும். வன்னித்தொகுதி என்று அழைக்கப்படும் இம்மூன்று மாவட்டங்களையும் இணைக்கும் இத்தரைவழிப்பாதையின் மையப்புள்ளியாக பூவரசங்குளம் எனும் கிராமம் அமையப்பெற்றுள்ளது. செழிப்பு மிகுந்த வனாந்தரக் காடுகளை ஊடறுத்துச் செல்லும் பூவரசங்குளம் – வன்னிவிளாங்குளம் வீதியை அண்டிய காட்டுப்பகுதிகளிலும், பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தின் ஆளுகைக்குள்பட்ட பகுதிகளிலும் சட்டவிரோத தனிமனித காடழிப்பு நடவடிக்கைகள் பொலிஸாரின் ஒத்துழைப்போடு அசுர வேகத்தில் இடம்பெற்று வருகின்றன. பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதி வாய்ந்த பாலை, முதிரை, கருங்காலி மரங்கள் இக்காட்டுப்பகுதிகளிலிருந்து ஒவ்வொரு இரவும் பொலிஸாரின் பாதுகாப்போடு மூன்று மாவட்டங்களுக்கும் எண்ணிக்கை கணக்கின்றி விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

இது தொடர்பில் கந்தன்குளம் கிராம பொதுஅமைப்பு ஒன்றின் பிரதிநிதி தகவல் தருகையில், பூவரசங்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள அனைத்து கிராமங்களின் மக்களுக்கும் நன்கு பரிச்சயமான ‘வீரப்பன், காட்டு ராசா, காட்டு அரசன்’ என்ற பட்டப்பெயர்களால் அழைக்கப்படும் ஒரு சில நபர்களே, காடழிப்பை ஒரு தொழிலாக (பிசினஸ்) செய்து வருவதாகவும், அவர்களிடம் பணம் மற்றும் குடி வகைகள், போதைப்பொருள்களை இலஞ்சமாக பெற்றுக்கொண்டு பொஸிஸார் இவ்வாறான சட்ட விரோத காடழிப்பு நடவடிக்கைகளுக்கு சம்மதம் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும் குறித்த நபர்கள் காடுகளை அழித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், தாம் ஒரு சமுக அக்கறையோடு பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தால்… பொலிஸார் அடுத்த நிமிசமே, காடுகளை அழித்துக்கொண்டிருக்கும் அந்த நபர்களுக்கு போன் பண்ணி, ‘இன்ன நம்பரில இருந்து, இன்னாள் உங்களப்பத்தி முறைப்பாடு செய்யது. பார்த்து செய்யுங்க. கவனம். ஆளையும் கவனிச்சு வையுங்க’ என்று அறிவுறுத்துவதாகவும், காட்டிக்கொடுப்பதாகவும் குறைபட்டுக்கொண்டார்.

Continue Reading →

நூல் அறிமுகம்” கோடை மழை சிறுகதைத் தொகுதி மீதான ஒரு பார்வை

நூல் அறிமுகம்" கோடை மழை சிறுகதைத் தொகுதி மீதான ஒரு பார்வைஉடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்துகள் சிகிச்சையளிப்பது போன்று மனதில் தோன்றும் நோய்களுக்கு இலக்கியம் சிக்கிச்சையளிக்கின்றது. இது எழுத்தை நேசிக்கும் பெரும்பாலானவர்களின் கருத்து. அவ்வாறு குணப்படுத்துபவர்களுள் வைத்திய கலாநிதி ச. முருகானந்தன் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்.

யுத்த பிரதேசங்களில் சேவையாற்றி வந்த காலத்தில் அவரும், அவர் வாழ்ந்த சூழலில் இருந்த மக்களும் எதிர்நோக்கிய இடர்களை சிறுகதைகளாகப் பதிவு செய்திருக்கின்றார். மேலும் மலையக சமூகத்தினருடன்; வாழ்ந்த காலத்தில் தோட்டத் தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் ச. முருகானந்தனின் பல சிறுகதைகள் காணப்படுகின்றன. அவரது கோடை மழை என்ற இத்தொகுதி 11 கதைகளை உள்ளடக்கி ஜீவநதி பதிப்பகத்தின் 48 ஆவது நூலாக வெளியிடப்பட்டிருக்கின்றது. இது 88 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றது.

குழந்தை உள்ளம் எப்போதும் தூய்மையாகவே இருக்கின்றது. இதில் கறைகளைப் படியச் செய்வது பெரியவர்களின் செயற்பாடுகள்தான். பிஞ்சு மனங்களில் நஞ்சைத் தூவி அவர்களை வஞ்சம் கொண்டவர்களாக வாழச் செய்வதும் பெரியவர்களே. பெரியவர்கள் தமது செயற்பாடுகளில், பேச்சுக்களில் நல்லவற்றை மாத்திரம் வெளிப்படுத்துவார்களாயின் குழந்தைகளும் அவ்வாறே நல்ல விடயங்களைச் செய்வார்கள். ஏனெனில் ஒரு குழந்தைக்கு முதல் பள்ளிக்கூடம் வீடுதான். வீட்டில் உள்ளவர்களைப் பார்த்துத்தான் குழந்தை முதன்முதலாக கற்றுக்கொள்கின்றது.  இத்தொகுதியில் காணப்படும் குழந்தைகள் உலகம் (பக்கம் 05)  என்ற சிறுகதையின் கரு சிறுவர் உள்ளங்கள் மாசு மருவற்றவை என்பதையே பறைசாற்றியிருக்கின்றது.

அகல்யா என்ற சிறுமி தன் தந்தையிடம் பேச்சுப் போட்டிக்காக பேச்சு எழுதிக் கேட்கின்றாள். அதை மனப்பாடமாக்கி பாடசாலையில் முதலாமிடமும் பெற்று விடுகின்றாள். ஆனால் பாடசாலையில் உள்ள ஆசிரியர் தனது மகனான பிரவீன் அந்தப் போட்டியில் முதலாமிடம் பெறவில்லை என்ற கோபத்தை மனதில் இருத்தி வகுப்புப் பாடவேளையின்போது அகல்யாவுக்கு தழும்பு ஏற்படும் வண்ணம் அடிக்கின்றார். ஆனால் முதலாமிடம் பெற்ற அகல்யாவுக்கு பிரவீன் கண்டோஸ் சொக்லட் கொடுத்து வாழ்த்துகின்றான். அவன் பா ஓதல் போட்டியில் பரிசு பெற்றதற்காய் அகல்யா பிஸ்கட் பக்கற் வாங்கிக் கொடுக்கின்றாள். தன் தாய் அகல்யாவுக்கு அடித்ததைப் பற்றி பிரவீனுக்கு யோசிக்கத் தெரியவில்லை. பிரவீனின் தாயான டீச்சர் தனக்கு அடித்தமை பற்றி அகல்யாவுக்கு யோசிக்கத் தெரியவில்லை. பிஞ்சு உள்ளங்கள் எத்தனை அழகானவை என்பதற்கு இக்கதை சிறந்த எடுத்துக்காட்டகும்.

Continue Reading →

கணங்களைக் கைதுசெய்தல் [ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ப. ஆப்டீன் அவர்களது ‘கொங்காணி’ சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரை]!

கணங்களைக் கைதுசெய்தல்! (ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ப. ஆப்டீன் அவர்களது ‘கொங்காணி’ சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரை).க. நவம்நவீனத் தமிழிலக்கியச் சூழலில் சிறுகதை இன்னமும் தனது செழிப்பையும் செல்வாக்கையும் இழந்துவிடவில்லை. ‘சிறுகதை எனப்படுவது ஒரு சிறிய கதை’ என்ற சௌகரியம் அதற்கான ஒரு புறவயமான காரணம். எனினும் அதற்கும் அப்பால், சிறந்த சிறுகதை ஒன்றினுள் அடங்கியிருக்கும் அளவிறந்த ஆற்றலே அல்லது உள்ளார்ந்த வீரியமே அதன் சிறப்பின் மூலாதாரம். ‘அணுவைத் துளைத்தலும், ஏழு கடலைப் புகுத்தலும்’ சிறுகதைக்குள்ளும் நிகழ்த்தப்படக்கூடிய சித்து வித்தைகள்தான் என்பதற்குச் சாட்சியங்கள் நிறையவுண்டு. தமிழ்ச் சிறுகதையின் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சொல்முறைமையிலும் காலநகர்வுக்கேற்ப அவ்வப்போது பரிணாம மாற்றங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றபோதிலும், அதற்கான தேவையிலும் தேடலிலும் சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஏதும் இதுவரை தென்படவில்லை!

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாறு, கடந்த நூற்றாண்டின் நடுக்கூறான ஐம்பதுக்கு முற்பட்ட, பொழுதுபோக்குக் கதைக் காலத்துடன் ஆரம்பமானது. ஐம்பதுக்குப் பின்னர் தோற்றம் பெற்றது, மறுமலர்ச்சிக் காலமாகும். இதனைத் தொடர்ந்து அறுபதுகளின் ஆரம்பத்தில் தேசிய இலக்கியக் காலம் மூன்றாவது காலகட்டமாக முகிழ்த்தது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தனித்துவங்களைத் துணிச்சலுடன் முரசறைந்து பிரகடனஞ்செய்த இக்காலகட்டத்தில் முளைதள்ளிச் செழித்து வளர்ந்து, பல நல்ல கதைகளை எமக்களித்த ஒரு மூத்த படைப்பாளி, அன்பு நண்பர் ப. ஆப்டீன் அவர்கள். ‘கொங்காணி’ எனும் இத்திரட்டு, நண்பர் ஆப்டீன் அவர்களது 12 கதைகளைக் கொண்டது. இவற்றுள் அநேகமானவை பல்வேறு சஞ்சிகைகளில் நான் ஏற்கனவே உதிரிகளாகப் படித்தவை. ஆயினும் இவ்வாறு ஒரு திரட்டாகப் படிக்கும்போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது; அது ஒட்டுமொத்த அபிப்பிராயம் சொல்ல வசதியானது. மேலும், நண்பர் ஆப்டீன் அவர்களது படைப்பாளுமையின் அடையாளம் எனும் வகையில் இத்திரட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. நண்பர் ஆப்டீன் அவர்கள் மிகவும் மென்மையான மனம் படைத்த ஒரு படைப்பாளி; பழகுவதற்கு இனிமையானவர்; பண்பானவர். எனது சுமார் ஒருவருடகால நட்புறவாடலின் கண்டுபிடிப்புக்கள் இவை. ‘இவைதவிர்ந்த அவரது இன்னொரு முகத்தை, இப்பன்னிரண்டு கதைகளூடாகக் கண்டேன்’ என்பது பச்சைப் பொய்! அவருக்குள் உள்ளது ஒரேயொரு முகம் மட்டுந்தான். அந்த முகத்தையே இக்கதைகள் பூராவும் நான் காண்கிறேன். ஆக, தம்மைச் சூழ்ந்து வாழும் மக்களது அன்றாட வாழ்வின் அவலங்களையும், அற்புதங்களையும் கண்டு சிலிர்க்கும் தமது சொந்த முகத்தையே இக்கதைகள் வழியாக அவர் காண்பித்திருக்கின்றார்.

Continue Reading →

கவிஞர் புவியரசின் மொழிபெயர்ப்பில் தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்…..

கவிஞர் புவியரசின் மொழிபெயர்ப்பில் தத்யயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்.....‘கரமசோவ் சகோதரர்கள்’ தஸ்தயேவ்ஸ்கியின் மிகச்சிறந்த நாவல் மட்டுமல்ல. உலக இலக்கியத்தின் சிறந்த நாவலாகவும் கருதப்படுவது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பினை ‘நியூ செஞ்சுரி புக்ஸ்’ பதிப்பகமும் (கவிஞர் புவியரசு மொழிபெயர்ப்பிலும்) , காலச்சுவடு பதிப்பகமும் (நேரடியாக ருஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து ‘கரமஸாவ் சகோதரர்கள் என்னும் தலைப்பில்) வெளியிட்டுள்ளன.

நம்மவர்கள் பலர் அவ்வப்போது ஏன் அவரைப்போல் அல்லது இவரைப்போல் எழுத முடியவில்லையே என்று கண்ணீர் வடிப்பதுண்டு. அவர்கள் முதலில் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை வாசிக்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்விதம் வாசித்தால் அவர்கள் ஏன் அவர்கள் குறிப்பிடும் படைப்பாளிகளால் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளைப்போன்ற படைப்புகளை வழங்க முடியவில்லை என்பது புரிந்து நிச்சயம் கண்ணீர் விடுவார்கள்.

மானுட வாழ்வின் இருப்பை, இருப்பின சவால்களை, இருப்பின் இன்பதுன்பங்களை, இருப்பின் நன்மைக்கும் தீமைக்குமிடையிலான மோதல்களை, இருப்பின் நோக்கம் பற்றிய தேடலை தஸ்தயேவ்ஸ்கி எழுதியதுபோல் வேறு யாருமே இதுவரையில் எழுதவில்லை என்பது இதுவரையிலான என் வாசிப்பின் அடிப்படையில் எழுந்த கருத்து. தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளின் ஒவ்வொரு பக்கத்தையும் ஒதுக்கித்தள்ள முடியாது. அது அவரது எழுத்தின், சிந்தனையின் சிறப்பு.

வக்கிரமான உணர்வுகளும், காமமும் மிகுந்த ஒரு பணக்காரத்தந்தை, அவரது மூன்று வகைக்குணவியல்புகளுள்ள மூன்று புத்திரர்கள், அவருக்கும் பிச்சைக்காரியொருத்திக்குமிடையில் முறை தவறிப்பிறந்ததாகக் கருதப்படும் இன்னுமொரு புத்திரன், அவரது வேலைக்காரன், மூன்று புத்திரர்கள் வாழ்விலும் புகுந்துவிட்ட பெண்மணிகள், அந்தப்பெண்மணியிலொருத்திக்கும் மூத்த புத்திரனுக்கும், தந்தைக்குமிடையிலுமான காதல், காம உணர்வுகள், மேலுமிரு சகோதரர்களுக்குமிடையில் வரும் இன்னுமொரு பெண்மணி , ஒரு துறவி என வரும் முக்கியமான பாத்திரங்களை உள்ளடக்கிப் பின்னப்பட்டிருக்கும் மகாநாவல் கரமசோவ் சகோதரர்கள்.

நாவலின் பின்பகுதியில் வரும் தந்தையின் மரணமும் , சந்தர்ப்பசூழ்நிலைகளால் மூத்தமகன் குற்றஞ்சாட்டப்படுவதும், உண்மையில் அக்கொலையின் சூத்திரதாரியான முறைதவறிப்பிறந்த புத்திரன் தற்கொலை செய்வதும், இருந்தும் நீதிமன்றத்தால் மூத்தவன் தண்டிக்கப்படுவதும், அது பற்றி நிகழும் நீதிமன்ற வாதிப்பிரதிவாதங்களும் வாசித்து அனுபவித்து மகிழ வேண்டியவை.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 129 : என்னருமை யாழ்ப்பாணமே! | சாகித்திய விருதும் , திருப்பிக்கொடுத்தலும்! | எழுத்தாளர் டிசெதமிழன் ‘காந்தியம் அமைப்பைப்பற்றி….

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்ஈழத்துத்தமிழ்ப்பகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். தனித்துவம் மிக்கவை. நில அமைப்புகளும் வித்தியாசமானவை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் ஈழத்தமிழர்களாகிய நாம் அவற்றை முறையாகப்பயன்படுத்துகிறோமா? உதாரணத்துக்கு யாழ்ப்பாணத்தை எடுத்துக்கொள்வோம்.

வான் பார்க்கும் வட மாகாணத்தின் பிரதான நகர்தான் யாழ்ப்பாணம். அந்நகர அமைப்பினை நினைக்கும் தோறும் எனக்கு ‘டொராண்டோ’ நகரின் நகர அமைப்பு ஞாபகத்து வருவதுண்டு. ‘டொராண்டோ’ நகரின் உள்நகரின் (downtown) பிரதான அம்சங்களிலொன்று: பிரதான விளையாட்டு அரங்குகள், சுற்றுலாப்பயணிகளுக்கு முக்கியவத்துவம் வாய்ந்த கட்டடங்கள் மற்றும் வாவிக்கரை போன்றவையெல்லாம் ஓரிடத்தில் அமைந்திருக்கும். யாழ்ப்பாணத்தைப் பார்ப்பீர்களென்றால் இது போன்ற ஓர் ஒழுங்கமைப்பினை அவதானிக்கலாம். பிரதான விளையாட்டரங்கு, முற்றவெளி, திறந்த பிரதான திரையரங்கு, சுப்பிரமணியன் பூங்கா, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த டச்சுக் கோட்டை, அழகான பண்ணைக்கடலும், பாலம், மேலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல கட்டடங்கள் (உதாரணத்துக்குப் போர்த்துக்கேயர் காலத்துக் கிறிஸ்தவ ஆலயங்கள், ஆங்கிலேயர் காலத்து வீடுகள் போன்றவை), மணிக்கூட்டுக்கோபுரம், முறையாகப்பாவித்திருக்க வேண்டிய புல்லுக்குளம், யாழ் பொதுசன நூலகம், தந்தை செல்வா சமாதி எனப் பல முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையெல்லாம் ஓரிடத்தில் அமைந்திருக்கும் ஒழுங்கமைப்பினையே கூறுகின்றேன்.

‘டொராண்டோ’ நகரினை மக்கள் பாவிப்பதுபோல் யாழ்நகரை மக்கள் பாவிப்பதில்லை. இதற்குக்காரணம் நகரினைப் பரிபாலிக்கும் ஆட்சியிலிருக்கும் அமைப்புகளெல்லாம் தொலைநோக்கில் சிந்தித்து நகரினை மக்கள் அதிகமாகப்பாவிக்கும் வகையில் பிரதானப்படுத்திச் செயற்பாடுகளை எடுக்கவில்லை என்பதால்தான் என்பதென் கருத்து.

Continue Reading →

செம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு

செம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு!   சேசாத்திரி ஶ்ரீதரன-நடுவண் பண்பாட்டு அமைச்சகம் தெலுங்கிற்கான செம்மொழி வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின்படி 2008 நவம்பரில் இல் தெலுங்கைச் செம்மொழியாக  அறிவித்தது.

இதற்கு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழைமை உடைய  இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில்1904 இல் சென்னையில் இருந்து செயற்பட்ட இந்தியத் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட கள ஆய்வில் கடப்பை மாவட்டம் கமலாபுரம் வட்டம் ஏற்ரகுடிபாலேம் கலமல்லா ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் கண்டு அறியப்பட்ட ரேனாட்டு சோழன் எரிகல் முத்துராசு  தனஞ்செயன் பற்றிய கல்வெட்டு எழுத்தமைதியால் பழமையானது இதாவது, கி.பி. 575 ஆம்  நூற்றாண்டினது என்று முடிவு செய்யப்பட்டு அதை நடுவண் பண்பாடு அமைச்சகத்திற்கு சான்று ஆவணமாகக் காட்டியுள்ளனர்.

ரேநாடு என்பது இற்றைய இராயல்சீமையின் கடப்பை மாவட்டத்தைச் சுற்றி அமைந்த நாட்டுப் பகுதியாகும். இதை ஆண்ட தெலுங்கு சோழர்கள் ரேநாட்டுச் சோழர்கள் எனப்பட்டனர். யுவான் சுவாங்கின்  பயணக் குறிப்பில் உள்ள “சுளியர்” என்பதை மேற்கோளாகக் கொண்டு சிலர் தெலுங்கு சோழர்களை கி.பி  7 ஆம் நூற்றாண்டு முதல்13 ஆம் நூற்றாண்டுவரை ஆண்டவர்கள் என்று கூறுவது உண்டு.

இக்கல்வெட்டு கோவில் வளாகத்தில் கிடத்தப்பட்டிருந்த உடைந்த தூணின் இரண்டு பக்கங்களில்17 வரிகளில் வெட்டப்பட்டுள்ளது. இதில் நான்கு வரிகள் (12 – 15) சிதைந்து உள்ளன. அதை சென்னைக்கு கொண்டுவந்து தொல்பொருள் சேமிப்பில் வைத்திருந்துள்ளனர். ஆனால் இப்போது அக்கல்வெட்டு காணாமல் தொலைக்கப் பட்ட நிகழ்வு தொல்லியல் ஆர்வலர்களை பெரிதும் வருத்தமுறச் செய்துள்ளது. இனி, இக் கல்வெட்டு பாடமும்  விளக்கமும்.

Continue Reading →

நூல் அறிமுகம்: விடைதேடி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு! | மழலையர் மாருதம் நூல் பற்றிய கண்ணோட்டம்!

1. விடைதேடி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு!

விடைதேடி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு!தம்பிலுவில் ஜெகாகிழக்கிலங்கையின் தெற்கே அமைந்துள்ள தம்பிலுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரி நாதனின் கன்னிக் கவிதைத் தொகுதியே விடைதேடி எனும் கவிதை நூலாகும். 100 பக்கங்களில் அமைந்துள்ள இந்தக் கவிதை நூலில் 75 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இக்கவிதைகள் தாயன்பு, தமிழின் சிறப்பு, ஆடவரின் அடக்குமுறை, இனத்துன்புறுத்தல்கள், வன்னிப் போரின் கொடூரம், கடமையுணர்வு, ஆசிரியரின் பெருமை, வாழ்வியல் தரிசனங்கள், மனித நடத்தைக் கோலங்கள், சிறுவர் துஷ்பிரயோகம், காணாமல் போனோர் ஆகிய கருப்பொருட்களில் அமைந்துள்ளன.

தனது 12 ஆவது வயதில் எழுதத் தொடங்கிய இவர் தம்பிலுவில் ஜெகா என்ற புனைப்பெயரிலேயே அதிகம் எழுதியுள்ளார். எண்பதுகளில் எழுதத் தொடங்கிய இவர் அன்று தொடக்கம் இன்று வரை மரபுக் கவிதை வடிவங்களிலும், புதுக் கவிதை வடிவங்களிலும் தனது கவிதைகளை எழுதி வருகின்றார். இன்னும் விடியவில்லை, கண்ணாடி முகங்கள், கவிதைகள் பேசட்டும் ஆகிய நூல்களிலும் இவரது கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 1990 இல் கலைப்பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்ற இவர், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கு தமிழ்ப் பாடத்தை கற்பிப்பவர் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

இனத்தின் விடியலுக்காய் இன்னுயிர்த் துணை இழந்து மனதில் உறுதியுடன் சுமைதாங்கும் மாதருக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்து ஆறுதலடைகிறார் நூலாசிரியர். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் தனது உரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“மரபுக் கவிதை வடிவங்களில் கவிதை எழுதுவோர் பெருகிய முன்னைய காலங்களில் கூட, கவிஞைகள் அவற்றைப் பின்பற்றி எழுதுவது அரிதாகவே இருந்தது. எழுபதுகளில் புதுக் கவிதை வடிவம் முக்கியம் பெற ஆரம்பித்தபோதுதான் கவிஞைகளும் கவிதை உலகில் பிரவேசிக்கத் தொடங்கினர். எனினும் எண்பதுகளில் கவிதை எழுதத் தொடங்கிய ஜெகா அன்று முதல் இன்று வரை மரபுக் கவிதை வடிவங்களை எழுதுகின்றார். அதேவேளை புதுக்கவிதை வடிவத்தையும் கையாளும் திறன் இவரிடம் சிறப்பாக மிளிருகின்றது. இவ்வாறு மரபுக் கவிதை, புதுக் கவிதை எனும் இருவெறு வடிவங்களையும் கையாளும் ஆற்றல் கிழக்கிலங்கைக் கவிஞைகளான மண்டூர் அசோகா முதலான ஓரிருவரையே குறிப்பிடலாம். இப்பட்டியலில் தம்பிலுவில் ஜெகாவின் பெயரும் இணைந்துகொண்டமை எனக்கு மகிழ்வைத் தருகிறது” என்கிறார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 128: தமிழினி (சிவகாமி) ஜெயக்குமாரனின் கொண்டாடப்பட வேண்டிய இருப்பு!

தமிழினி (சிவகாமி) ஜெயக்குமாரனின் கொண்டாடப்பட வேண்டிய இருப்பு! அண்மையில் மறைந்த தமிழினியின் வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டியதே தவிர , அநுதாபத்துக்குரியதல்ல. யுத்தம் முடிவடைந்த பின்னர் சுமார் நான்கு…

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: தாமரைக்கு ஒரு செல்வி வன்னிமக்களுக்கு ஒரு வன்னியாச்சி. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் போர்க்கால இடப்பெயர்வு வாழ்வை அழுத்தமாகப் பதிவுசெய்த ஆளுமை

தாமரைச்செல்விமுருகபூபதிஎங்கள் நீர்கொழும்பில்  நான்  அறிந்தவரையில்  இற்றைக்கு  70 ஆண்டுகளுக்கு  முன்னர்  தோன்றிய  முதலாவது  சைவ உணவகம் கணேசன்  கபேதான்  நீர்கொழும்பில்  வீரகேசரி  பத்திரிகையின் முதலாவது   ஏஜன்ட்.   வீரகேசரிக்கு தற்பொழுது 85 வயது. கணேசன் கபே   இன்றும்   இருக்குமானால்  அதன் வயது  75. இந்த கணேசன்  கபேயில்தான்   ஆளுமையும்   ஆற்றலும்  நிரம்பப்பெற்ற  சாதனைப்பெண்மணி      தாமரைச்செல்வியின்  முதல்  நாவல் –  வீரகேசரி  பிரசுரம்  சுமைகள்  எனக்குக்  கிடைத்தது.  அதனை தாமரைச்செல்வி   எழுதியகாலத்தில்   அவருக்கு 24  வயதுதான்  என்ற தகவல்   நண்பர்  புலோலியூர்   ரத்தினவேலோன்  எழுதிய குறிப்பிலிருந்து   தெரிகிறது. சுமைகள்   நாவலுக்கு   பின்னாலும்  ஒரு  கதை  இருக்கிறது. அதனைப்பின்னர்  சொல்கின்றேன்.

1970 களில்   ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இடதுசாரிக2ளும் கூட்டணி அமைத்து அரசாங்கம் அமைத்தபொழுது , இந்தியாவிலிருந்து புற்றீசலாக   வந்து குவிந்த  தரமற்ற  வணிக  இதழ்கள்  மீது கட்டுப்பாடு  வந்ததை  வீரகேசரி  நிறுவனம்தான்  தக்கமுறையில் பயன்படுத்திக்கொண்டு  வீரகேசரி  பிரசுரங்களை  வெளியிட்டது. முதலில்  திருகோணமலையிலிருந்து  எழுதிக்கொண்டிருந்த  நா. பாலேஸ்வரியின்  பூஜைக்கு  வந்த  மலர்  வெளியானதாக  நினைவு. அதனைத்தொடர்ந்து  இலங்கையின்  முன்னணி  எழுத்தாளர்கள் பலரின்  நாவல்கள்  வீரகேசரி  பிரசுரமாக  வந்தன.   செங்கை ஆழியான்,   டானியல்,  பால மனோகரன்  (நிலக்கிளி)  தெணியான், அருள். சுப்பிரமணியம்,   செ. கதிர்காமநாதன்,  வ.அ.இராசரத்தினம், யாழ்நங்கை,  செம்பியன் செல்வன்,   தெளிவத்தை ஜோசப்…. இவ்வாறு சுமார் 60  இற்கும்  மேற்பட்ட  படைப்பாளிகளின்  நாவல்கள் வெளியானது. இந்தியாவிலிருந்து  வந்து  இலங்கையில்  மலையகத்தில்  முன்னர் வாழ்ந்த  கோகிலம்  சுப்பையாவின்  தூரத்துப்பச்சை    நாவலும் வெளியிடப்பட்டது.    இந்த  வரிசையில்  நான்   பார்த்த  நாவல் தாமரைச்செல்வி   எழுதியிருந்த  சுமைகள்.

Continue Reading →

இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே ராமானுஜம் வெங்கட் சாமிநாதனுடனோர் உரையாடல்.

[ ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு கலை, இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் 18.10.2015 அன்று அனுப்பிய இறுதிக்கட்டுரையிது. இதன் முடிவில் தொடரும் என்றிருந்தாலும் திரு.வெ.சா.வின் மறைவு காரணமாக இக்கட்டுரை தொடராது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். – பதிவுகள்-]

- வெங்கட் சாமிநாதன் -–  1983 – ல் முல்லைத் தீவில் பிறந்த ஜெயபிரகாஷ்  கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரியில் கல்வி கற்று, அந்த  கல்லூரியிலேயே நாடகம் அரங்கியல் துறையில் ஆசிரியராகப் பணியாற்றுபவர். கடந்த இரண்டு வருஷங்களாக பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் ஒரு முதுநிலை பட்ட ஆய்வாளராக இருக்கிறார்.. நடிகர். பரதமும் கற்று பட்டம் பெற்றவர். இந்திரா பார்த்த சாரதியின் இராமானுஜர் நாடகத்தில் ராமானுஜராக நடித்தவர். பின் வரும் பேட்டி இரண்டு நிலைகளில் நிகழ்ந்தது. முதலில் பங்களூரில் நேரில் பேட்டி கண்டும் பின் பாண்டிச்சேரியிலிருந்து எழுதி அனுப்பிய கேள்விகளுக்கு எழுதித் தந்த பதில்களுமாக ஒன்றிணைந்தது. –

வெங்கட் சாமிநாதன்: எனக்கு இப்போது வயது  82.  முடிந்து, இரண்டு மாதங்களுக்கு முன் தான் 83- ம் வயதுக்கு  காலடி எடுத்து வைத்திருக்கிறேன்.  இதில் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலம் மிகக் கொஞ்சம்.  பள்ளிப் படிப்பு முடிந்ததுமே, 16-ம் வயதில் தமிழ் நாட்டுக்கு வெளியே வந்துவிட்டேன். வேலை தேடி. பிழைக்க வேண்டும் மூத்த பிள்ளை, குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஆக, என்னை உருவாக்கியது தமிழ் நாட்டுக்கு வெளியே எனக்குக் கிடைத்த அனுபவங்கள் தான். அவற்றை நான் உள்வாங்கியதும், எதிர்கொண்டதுமான உறவு தான். ஆக, பொது வாழ்க்கையில் காலடி வைத்து என் மனதுக்குப் பட்ட கருத்துக்களைச் சொல்ல ஆரம்பித்தது, ஒரு பெரியவர் தன் பத்திரிகையில் எனக்கு இடம் கொடுத்ததால் வந்த வினை, இது தொடங்கியது  1959 – லிருந்து. அன்றிலிருந்தே, கிட்டத்தட்ட ஐம்பது ஐம்பத்தைந்து வருட காலமாக, .   நிறைய  அடிபட்டிருக்கிறேன்.  எனக்கு சில  விசயங்களில்  ஈடுபாடும்  ஒரு  தெளிவும்  இயல்பான  அக்கறையும்    இருந்தது – அந்த விழிப்பும் தெளிவும் தோன்றத் தொடங்கியது  தில்லியில் வாழத் தொடங்கிய 1956 லிருந்து.  என் இருபத்து மூன்றாவது வயதிலிருந்து. . சின்ன வயதிலேயே நான்  தமிழ் நாட்டை விட்டு  வெளியில் வந்து விட்டதினால், தமிழ் நாட்டில் அந்த வாய்ப்பு  எனக்குக்  கிடைக்க  இல்லை.  ஏதோ தமிழ் நாட்டிலேயே இருந்திருந்தால் அது கிடைத்திருக்கும் என்பது போல் இது தொனிக்கிறது. இல்லை. தமிழ் நாட்டில் தொடர்ந்திருந்தால், ஒரு வேளை நான் மாறியிருக்க மாட்டேன்.எல்லாருக்கும் நல்ல பிள்ளையாக இருந்திருப்பேன். அத்தோடு ஒரு உதாரணத்துக்கு, ரஜனிசாரின் காபாலி பட ரிலீஸ் அன்றைக்கு அவர் ஃப்ளெக்ஸ் போர்ட் விளம்பரத்துக்கு நடக்கும் பாலாபிஷேகம் பார்த்து மெய்சிலிர்த்து நின்றிருப்பேன். அல்லது, மேடையில் கொலு வீற்றிருக்கும் கலைஞரை நோக்கி, அவரது பராசக்தி படத்திலேயே, அன்றே தான் கண்ட சினிமா தொழில் நுட்பங்களைக் கண்டு வியந்ததையெல்லாம் உலக நாயகன் விவரிக்க மேடையில் நடுநாயகமாக வீற்றிருந்த கலைஞரும் சபையில் நிறைந்திருக்கும் ரசிகப் பெருமக்களூம்  அடைந்த புளகாங்கிதமும் பரவசமும் என்னையும் தொற்றி, மெய்மறக்கச் செய்திருக்கும். . அல்லது  ஒரு வேளை  வெறுப்புற்று  தலை தெறிக்க எங்காவது ஓடியுமிருக்கலாம்.  தெரியாது.  இப்படி எத்தனையோ விஷயங்கள். ஆக, இந்த இரண்டுவித கிறுக்குகளில் ஏதோ ஒன்றாக இருந்திருப்பேன். நிதான புத்தியோடு மாத்திரம் வளர்ந்திருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது.

Continue Reading →