அஞ்சலி: தமிழினி மறைவு!

தமிழினி ஜெயக்குமாரன்நண்பர் கற்சுறா முகநூலில் அனுப்பியிருந்த தமிழினியின் மறைவு பற்றி அனுப்பியிருந்த தகவல் உண்மையிலேயே அதிர்ச்சியினைத்தந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. சிறிது நாள்களுக்கு முன்னர் கூட எழுத்தாளர் தாமரைச்செல்வி பற்றி நான் எழுதிய முகநூல் பதிவினைத்தனது முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன்  பின்வருமாறும் எழுதியிருந்தார்:

“அக்காவின் எழுத்துக்களை சிறு வயதிலிருந்தே நான் ஆர்வத்துடனும். ஆசையுடனும் வாசிப்பதுண்டு. வளர்ந்த பின்பும் அக்காவின் வன்னி மண்ணினதும் அதன் மக்களின் இயல்புகளையும் பற்றிய புரிதலை எனக்குள் ஏற்படுத்தியவை அக்காவின் எழுத்துக்கள் தான். அவை பற்றி அருமையான குறிப்பொன்றைத் தந்தமைக்கு சகோதரன் கிரிதரனுக்கு எனது மனமார்ந்த நன்றி.”

தமிழினி விடுதலைப்புலிகளின்  மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். யுத்தத்தின் பின்னர் சிறிது காலம் சிறை வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர். அதன் பின்னர் அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியத்தில் தன் பங்களிப்பினை ஆற்றத்தொடங்கியிருந்தார். தமிழினி எழுதுவதில் திறமை மிக்கவர். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்துக் கவிதைகள், சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். பதிவுகள் இணைய இதழுக்கும் அவர் தன் படைப்புகளை அவ்வப்போது அனுப்புவார். பதிவுகள் இணைய இதழ் மேல் மிகுந்த மதிப்பு கொண்டிருந்ததோடு அல்லாமல் தன் முகநூல் பக்கத்தில் பதிவுகளில் அவரது படைப்புகள் பற்றி வெளியாகியுள்ள குறிப்புகளை பிரசுரிப்பதுடன் அதற்காக நன்றியும் கூறியிருப்பார். அவர் நோய் வாய்ப்பட்டிருந்த விடயம் அவரது மறைவின் பின்னர்தான் தெரிந்தது.

அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்து இன்னும் பல படைப்புகளைத்தருவார் என்றெண்ணியிருந்த சமயத்தில் அவரது மறைவுச்செய்தி வந்திருக்கின்றது. ஆனால் அவர் எழுதிய அனைத்துமே தமிழ் இலக்கியப்பரப்பில் முக்கியமானவையாக விளங்கப்போகின்றன என்பது மட்டும் நிச்சயம்.

Continue Reading →

வாசகர் கடிதம்

வாசகர் கடிதங்கள் சில.Dear Mr. Giritharan,  Good day, We read your Pathivugal when ever we get time. You are publishing really valuable information and we spare time to read,even we are so busy in our regular job. Recently i read research articles of  Dr. C. Ravisankar., M.A. Phd, Professor of Madurai Kamarajar University, Madurai, India.  Really awesome researches. I felt along with my friends who are here in Kingdom of Bahrain that really you are doing great job for our great, ancient Tamil language. I wish you all the best your team and all the writers.  Keep rocking…

Your sincerely, Engineer.C.KARUPPIAH,
Al – Manama, Kingdom of Bahrain

kailaikarup@gmail.com

Continue Reading →

கவிதை: அலைந்து ‘திரி’யும் பாணன்!

வரலாற்றினைத் திரிப்பது பற்றிக்கூறினேன். அதற்குக் கவிஞர் கூறினார் ‘திரிப்பதற்கு வரலாறு ஒன்றும் கயிறல்ல’. இன்னுமொரு இலக்கியவாதி கூறினார் ‘திரிப்பதற்கு வரலாறு ஒன்றும் உளுத்தம் மாவுமல்ல’. இடையில் புகுந்து…

Continue Reading →

தமிழ்த்திரையுலகின் ‘பொம்பிளை சிவாஜி’ மனோரமா ஆச்சி.

ஆச்சி மனோரமாதிரையுலகில்  நடிக்கும்பொழுது  தான்  இணைந்து  நடிக்கப்பயந்த மூன்று  கலைஞர்களைப்பற்றி  நடிகர்திலகம்  சிவாஜி கணேசன்  ஒரு சந்தர்ப்பத்தில்  கூறியிருந்தார். அம்மூவரும்:  நடிகையர்  திலகம்  சாவித்திரி,   நடிகவேள்  எம்.ஆர். ராதா,   சகலகலா  ஆச்சி  மனோரமா.   இன்று இவர்கள்  அனைவரும் திரையுலகை   விட்டு  விடைபெற்றுவிட்டனர்.   இறுதியாக  கடந்த  10 ஆம்  திகதி  சென்றவர்  ஆயிரம்  படங்களுக்கு  மேல்   நடித்து சாதனைகள்   பல  நிகழ்த்திய  மனோரமா. தமிழ்சினிமா  மிகைநடிப்பாற்றலுக்கு  பெயர் பெற்றது. நாடக மேடைகளிலிருந்து  அந்தக்காலத்தில்  வந்த  நடிகர்,  நடிகைகளும் அவர்களுக்கு  உணர்ச்சியூட்டும்  வசனம்  எழுதிக்கொடுத்தவர்களும் சினிமா  என்றால்  இப்படித்தான்  இருக்கும் –  இருக்கவேண்டும்  என்ற   கற்பிதம்  தந்தவர்கள். அதனால்   யதார்த்தப்பண்புவாத  தமிழ்ப்படங்களின்  எண்ணிக்கை தமிழ்  சினிமாவில்  குறைந்தது. இந்தக்கருத்தை   இலங்கைப் பேராசிரியர்  கா. சிவத்தம்பி  அவர்களும் கனடா  மூர்த்தி  சிவாஜி  கணேசன்  மறைந்தபொழுது  தயாரித்த ‘சிவாஜிகணேசன்   ஒரு  பண்பாட்டுக்குறிப்பு’  என்ற  ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார்.

மனோரமா  1937  ஆம்  ஆண்டு  மே  மாதம் 26 ஆம்  திகதி   தமிழ்நாட்டில்  தஞ்சாவூரில்  மன்னார்க்குடியில்  பிறந்தவர். ஏழ்மையான  குடும்பத்தில்  பிறந்த  இவர்  கற்றது  ஆறாம்  தரம் வரையில்தான்.   வறுமையில்  வாடிய  இவருடைய  குடும்பம் காரைக்குடிக்கு   அருகில்  பள்ளத்தூர்  என்ற  இடத்திற்கு இடம்பெயர்ந்தது. கோபி  சாந்தா  என்ற  இயற்பெயர்கொண்டிருந்தவருக்கு  கற்றலில் ஆற்றல்  இருந்தபோதிலும்,  மேலும்  கற்பதற்கு  குடும்பத்தின் பொருளாதார    நிலைமை  இடம்கொடுக்கவில்லை.   சிறுமியாக இருக்கும்பொழுதே  துடிப்போடு  பேசும்  ஆற்றல் இவருக்கிருந்தமையினால்   அவருடை  12  வயதில்  நாடக சபாக்களின் நிகழ்ச்சிகளில்   தோன்றினார். பள்ளத்தூரிலிருந்து   நாடக  சபா  மேடைகளுக்கு  இவர்  வந்தமையால்  அந்த  வட்டத்தில்  இவர்  பள்ளத்தூர்  பாப்பா  என்றே முதலில்   அழைக்கப்பட்டார்.   பின்னர்  இவருக்கு –  இவர் ஆரம்ப காலங்களில்  நடித்த  நாடக   இயக்குநர்  ஒருவர்  மனோரமா  என்ற புதிய    பெயரைச்சூட்டினார். இவர்போன்று  தமது   இயற்பெயர்களை   தமிழ்  சினிமாவில் மாற்றிக்கொண்ட   நடிக,   நடிகையர்    ஏராளம்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 127 : டேவிட் ஐயா பற்றிய சில நினைவுகள்…..| ‘ஆச்சி’ மனோரமா மறைவு!

டேவிட் ஐயா அவர்கள்டேவிட் ஐயா கிளிநொச்சியில் காலமானார் என்ற செய்தியைக்கேட்டபோது அவரது பெருமைமிகு வாழ்வையெண்ணி மனது அசை போட்டது. தன் சொந்த நாட்டில் அவர் ,மறைந்தது ஒருவித நிறைவினைத்தந்தது. ஒரு காலத்தில் சர்வதேசரீதியாகப்புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கியவர் டேவிட் ஐயா என அன்பாக அழைக்கப்பட்ட எஸ்.ஏ.டேவிட் (சொலமன் அருளானந்தம் டேவிட் ) அவர்கள். அவர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சமயம் அவர் தங்கியிருந்த கொழும்பு Y.M.C.A கட்டடம் அவரால் வடிவமைக்கப்பட்ட கட்டடங்களிலொன்று என்பதால், அதன் காரணமாக அந்த நிறுவனத்தால் அவர் இருக்கும் வரையில் அங்கு தங்கியிருப்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். யாழ் பல்கலைக்கழக நூல் நிலையக்கட்டடம் அவரது வடிவமைப்பில் உருவான கட்டடங்களிலொன்று என்றெண்ணுகின்றேன்.

இவரைப்பற்றி நான் விரிவாக அறிந்து கொண்டது எண்பதுகளின் ஆரம்பத்தில் மருத்துவர் ராஜசுந்தரம் மூலம்தான். மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்தினர் அக்காலகட்டத்தில் காந்தியம் அமைப்புடன் இணைந்து தன்னார்வத்தொண்டினை ஆற்றிவந்தார்கள். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த நாவலர் பண்ணைக்கு மருதோடை என்னுமிடத்திலிருந்து இலகுவாகச்செல்வதற்கேற்ற வகையில் பாதையொன்றை உருவாக்குவதும் அத்தொண்டுகளிலொன்று. அதற்காக வார இறுதி நாள்களில் மாணவர்கள் பலர் செல்வதுண்டு. அவ்விதம் செல்லும் சமயங்களில் புகைவண்டி வவுனியாவை அடைய நள்ளிரவாகிவிடும். வவுனியாவில் இறங்கி மருத்துவர் இராஜசுந்தரத்தின் வீட்டில் தங்கி, மறுநாள் காலை அவரது ஜீப்பில் நாவலர் பண்ணைக்குச்செல்வது வழக்கம். செல்லும் வழியெல்லாம் இராஜசுந்தரம் அவர்கள் வாய்க்கு வாய் டேவிட் ஐயா என்று கூறிக்கொண்டே அவரது சேவைகளைப்பற்றிக்கூறிக்கொண்டு வருவார். அப்பொழுதுதான் விரிவாக அவரைப்பற்றி அறிந்து கொண்டது. அதற்கு முன்னர் சில தடவைகள் அவரைப்பற்றிக்கேள்விப்பட்டிருந்தாலும் அவராற்றும் பல்வகையான சேவைகளின் தன்மையினை அறிந்திருக்கவில்லை.

Continue Reading →

வாசிப்பும்,, யோசிப்பும் 126: தாமரைச்செல்வியின் படைப்புகள் பற்றி…..

தாமரைச்செல்விஈழத்துப்பெண் எழுத்தாளர்களில் தாமரைச்செல்வியின் கதைகளுக்கு முக்கிமானதோரிடமுண்டு. அந்த இடத்துக்கு முக்கிய காரணங்களிலொன்று இவர் தான் வாழ்ந்த காலகட்டத்து சமூக, அரசியல் பின்புலத்தில் தன் கதைகளைப்புனைந்திருப்பதுதான். இவரது கதைகள் பலவற்றில் தொண்ணூறுகளில் ஏற்பட்ட ஈழத்துத்தமிழ் மக்களின் இடப்பெயர்வுகள், நிலவிய போர்க்காலச்சூழல் மற்றும் இயற்கை அழிவுகள் அதிக அளவில் விபரிக்கப்படுகின்றன. இவரது கதைகள் பொதுவாக பரந்தன், கிளிநொச்சி மட்டும் வன்னிபிரதேசத்தை மையமாக வைத்துப்பின்னப்பட்டவை. போர்ச்சூழல் மக்களுக்கு, பல்வேறு வயதினருக்கும் ஏற்படுத்திய பாதிப்புகள், குறிப்பாக உளவியற் பாதிப்புகள் பற்றியெல்லாம் வெளிப்படுத்துபவை. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து , ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துத் தமிழ் மக்களின் இருப்பினை, அவர்கள காலகட்டத்துச் சமூக, அரசியற் சூழல் ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாகவும் இவரது படைப்புகள் இருக்கின்றனவென்றும் கூறலாம்.

அண்மையில் என் சேகரிப்பிலிருந்த புத்தகங்கள் மத்தியில் தேடிக்கொண்டிருந்தபொழுது இவரது ‘வீதியெல்லாம் தோரணங்கள்’ குறுநாவல் மற்றும் ‘வன்னியாச்சி’ (சிறுகதைத்தொகுப்பு) ஆகியவை மீள அகப்பட்டன. அவற்றை வாசித்தபொழுதே மேற்படி எண்ணங்கள் முகிழ்த்தன. மேற்படி ‘வீதியெல்லாம் தோரணங்கள்’ குறுநாவல் வீரகேசரி நிறுவனம் யாழ் இலக்கிய வட்டத்துடன் இணைந்து நடாத்திய கனகசெந்திநாதன் குறுநாவல் போட்டியில் இரண்டாவது இடத்தைப்பெற்ற குறுநாவல்.

இந்தக் குறுநாவல் கூறும் கதை இதுதான்: வெளிநாட்டில் வாழும் தமிழ் இளைஞனொருவனுக்கு ஊரில் தாயார் சீதனத்துடன் திருமணம் பேசுகின்றார். இரு குடும்பத்தாரும் சம்மதிக்கின்றார்கள். மணப்பெண்ணின் சகோதரன் வெளிநாட்டு இளைஞனின் நண்பன் கூட. யாழ்நகரில் நடைபெற்ற இராணுவத்தாக்குதலொன்றில் அந்த நண்பன் இறந்து விடுகின்றான். அவன் இறந்ததால் இனி யாரும் அந்த மணப்பெண்ணுக்குரிய சீதனத்தைத்தரமாட்டார்கள் என்பதால் வெளிநாட்டு இளைஞனின் தாயார் அந்தத்திருமணத்தை நிறுத்திவிடத்திட்டமிடுகின்றார். இன்னுமொரு காரணமும் உண்டு. படையினரின் தேடுதல்கள் அந்த மணப்பெண்ணிருந்த பகுதியில் நடைபெற்றதால் அந்த மணப்பெண்ணுக்கு என்னவெல்லாமோ நடந்திருக்கலாம் என்று வேறு சந்தேகத்தைக்கிளப்பி விடுகின்றாள் அந்தத்தாயார். ஆனால் ஊர் திரும்பும் வெளிநாட்டு இளைஞனோ இவ்விதமான சூழலில்தான் நண்பனின் குடும்பத்துக்குக் கை கொடுக்க வேண்டுமென்று கைவிடக்கூறிய தாயாரிடம் கூறிவிட்டு, நண்பனின் வீடு செல்வதுடன் குறுநாவல் முடிவடைகின்றது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 125 : திருமாவளவனின் கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு பற்றி…

1. திருமாவளவனின் ‘தமிழ்க்கனேடியனும் நானும்’ மற்றும் இருப்பு பற்றி….

வாசிப்பும், யோசிப்பும் 125 : திருமாவளவனின் கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு பற்றி...இருப்பு நிரந்தரமானதல்ல. இருக்கும் மட்டும் பலர் இதனை உணர்வதில்லை. மனிதர் உருவாக்கிய அமைப்பானது பொருளுக்கு முதலிடம் தருகிறது. அதுதான் இருப்பின் பயன் என்பதாக இருப்பினைச் சித்திரிக்கிறது. விளைவு? பொருள் தேடுவதே வாழ்க்கையாகப் பலருக்குப் போய் விடுகிறது. அதிலும் பொருள்மயமான மேற்குலகு நாடுகளின் சமுதாய அமைப்பு மானுட இருப்பினை அந்த அமைப்பின் சிறைக்கைதியாகவே ஆக்கி விடுகிறது. உழைப்பது இருப்புக்கு என்பதாக மாறி விட்டது. அவ்விதம் இருக்க விரும்புவோர், அதுதான் இருப்பின் நோக்கம் என்போர், அதுவே இருப்பின் பயன் என்போர் அவ்விதமே இருந்து போகட்டும். அது அவர்தம் உரிமை. ஆனால் உண்மைக்கலைஞர்கள், இலக்கியவாதிகள் இருப்பினை இவ்விதம் எண்ணுவதில்லை. இவர்களை பொருள்மயமான இருப்பு என்றுமே சிறைப்பிடிப்பதில்லை. இந்த இருப்பினை இவர்கள் தம் இருப்புக்கேற்றபடி மாற்றிவிடுவதில் வல்லவர்கள்.

இவர்களைச்சுற்றி இருப்பவர்களுக்கு இவர்களைப்பார்த்தால் பரிதாபம். இவர்களைப்பார்க்குபோதெல்லாம் ‘இந்தக் கலை, இலக்கியமெல்லாம் சோறு போடுமா? இவற்றால் எவ்வளவு உழைக்கிறாய்?’ என்பதாகவே அவர்களது கேள்விகள், அனுதாபங்கள் மற்றும் ஆலோசனைகளெல்லாமிருக்கும்.

எனக்குத்தெரிந்த பலர் இங்கு வந்து பொருளியல்ரீதியில் உயர்ந்து தொழிலதிபர்களாக விளங்குகின்றார்கள். இன்னும் பலர் சொத்துகளைச்சேர்ப்பதிலேயே குறியாகவிருக்கிறார்கள். அவ்விதமிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியினைத்தருகிறது. பாராட்டுகள். ஆனால் அவ்விதம்தான் எல்லாரும் இருப்பார்களென்று அவர்களெண்ணுவதுதான் நகைப்புக்கிடமானது.

Continue Reading →

செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு!

செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு!ஒரு மொழிக்குச் செம்மொழிச் சான்று வழங்க இந்திய அரசு சில நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதில் ஒரு மொழியின் பழைய இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமை மிக்கதாய் இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இதுகாறும் 1) தமிழ்  2) சமற்கிருதம்  3) கன்னடம்   4) தெலுங்கு   5) மலையாளம் அதோடு 6) ஓடியா என ஆறு மொழிகள் இந்திய அரசால் செம்மொழிகளாக ஏற்று அறிவிக்கப்பட்டுள்ள கன்னட மொழியின் பழமைக்குச் சான்றாக கருநாடகத்து அசன் மாவட்டத்தில் உள்ள பேளூர் வட்டத்தில் அமைந்த ஹல்மிடி என்ற ஊரின் கண் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் முன் மைசூர் அரசின் தொல்லியல் துறை இயக்குநராக இருந்த திரு எம். எச். கிருஷ்ணாவால் 1936 இல் கண்டறியப்பட்ட காலம் குறிப்பிடாத கல்வெட்டு ஒன்றை ஆவணமாகக் காட்டி கன்னட மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுள்ளனர். இக்கல்வெட்டு இக்கால் மைசூர் அருங்காட்சியக பாதுகாப்பில் உள்ளது.

இக்கல்வெட்டு 2.5 அடி உயரமும் 1 அடி அகலமும் மேலே விஷ்ணு சக்கரமும் கொண்ட செவ்வக மணற்கல்லில் 16 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 450 என அறிஞர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காலம் குறித்து பல்வேறு அறிஞரிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இதில் பயிலும் மொழி முது பழங்கன்னடம் எனப்படுகிறது.

இக்கல்வெட்டு முதலில், கன்னடத்திற்கே உரித்தான பகர > ஹகர திரிபின்படி பல்மடியம் என அழைக்கப்பட்டு ஹல்மிடி எனத் திரிந்த ஊரின் மேற்கு வாயிலில் வைக்கப்பட்டிருந்தது அல்லது ஹல்மிடி மண் கோட்டையின் முன் வைக்கப்பட்டு இருந்தது எனவும் பின்பு வீரபத்திரன் கோவில் முன் வைக்கப்பட்டது என்றும் இருவேறு வகையில் சொல்லப்படுகிறது. இனி, அக்கல்வெட்டின் பாடம்:   
​​
1. jayati śri-pariṣvāṅga-śārṅga vyānatir-acytāḥ dānav-akṣṇōr-yugānt-āgniḥ śiṣṭānān=tu sudarśanaḥ
ஜயதி ஸ்ரீ பரிஸ்வாங்க ஸாரங்க வ்யானதிர் அச்ய்தா: தானவக்ஷ்னோர் யுகாந்தாக்னி சிஸ்தானான் து ஸுதர்ஸன: 
जयति श्री परिस्वाङ्ग स्यार्ङ्ग व्यानतिर् अच्युतः दानवक्स्नोर् युगान्तग्निः सिस्टान्तु सिस्टानान्तु सुदर्सनः

ಜಯತಿ ಶ್ರೀ ಪರಿಷ್ವರ್ಙ್ಗ ಶ್ಯಾರ್ಙ್ಗ [ವ್ಯಾ]ನತಿರ್ ಅಚ್ಯುತಃ ದಾನಕ್ಷೆರ್ ಯುಗಾನ್ತಾಗ್ನಿಃ [ಶಿಷ್ಟಾನಾನ್ತು ಸುದರ್ಶನಃ

jayati –  வெற்றி;  pariṣvāṅga – சங்கு; śārṅga – வில்; vyānatir – நீர்மேல் ஓய்வு; acytāḥ-  திருமால்; dānav-akṣṇōr – அரக்கரை அழித்து தாக்கி; yugānt-āgniḥ – ஊழிமுடிவுத்தீ; śiṣṭānān=tu – நன்மை காத்து தீமை அழித்து முறை வழங்குதற்கோ

Continue Reading →

திருமாவளவன் கவிதைகள்: முதுவேனில் பதிகம் (2013) தொகுதியை மையப்படுத்திய ஒரு பார்வை.

கவிஞர் திருமாவளவன்dr_n_subramaniyan.jpg - 12.37 Kb(05-10-2013 அன்று ஸ்காபரோ ஸிவிக் சென்டர் மண்டபத்தில் திரு. க. நவம் அவர்களின் தலைமையில் நிகழ்ந்த கவிஞரின் முதுவேனில் பதிக அறிமுகவிழாவில்  என்னால்  நிகழ்த்தப்பட்ட உரையின் கட்டுரை வடிவம் இது. கவிஞர் நீண்டநாள்கள் வாழ்ந்து  எமது நெஞ்சை நிறைவிப்பார் என்பதான ஆர்வத்துடன் மேற்படி உரை  நிகழ்த்தப்பட்டது. அதனைஇன்று அவர் நம்மைப் பிரிந்துவிட்ட சோகச் சூழலில் அவரது நினைவைப் பதிவுசெய்யும் நோக்கில் வாசகர்கள் பார்வைக்கு முன்வைத்து எனது இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

தோற்றுவாய்

கனகசிங்கம் கருணாகரன் என்ற இயற்பெயர் தாங்கியவரான  திருமாவளவன் அவர்கள் தமிழ்க் கலை இலக்கியத் துறைகளில்  கடந்த ஏறத்தாழ  இருபதாண்டுகளாக  தொடர்ந்து இயங்கிவருபவர். பனிவயல் உழவு (2000)அஃதே இரவு அஃதே பகல் (2003)இருள்- யாழி (2008) மற்றும் முதுவேனில்  பதிகம் (2013) ஆகிய தொகுதிகள் ஊடாக தமது கவித்துவ ஆளுமையை நமது கவனத்துக்கு  இட்டுவந்துள்ள இவர், சேரன், சி.சிவசேகரம், வெங்கட்சாமிநாதன் , மோகனரங்கன், இராஜமார்த்தாண்டன் மற்றும் கருணாகரன் ஆகிய சமகால இலக்கிய வாதிகளால் தரமான ஒரு கவிஞராக அடையாளம் காட்டப்பட்டவருமாவார்.  கனடா இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான விருதை 2010இல் இருள் யாழி தொகுதிக்காக இவர் பெற்றுக்கொண்டவர். ஒரு படைப்பாளியாக மட்டுமன்றி இதழியலாளராகவும் நாடகக்கலைஞராகவும்கூடத்  திகழ்பவரான திருமாவளவன் அவர்கள் (1995—1997காலப்பகுதியில்) கனடா  எழுத்தாளர் இணையத்துக்குத் தலைமைதாங்கி அதனை வழிநடத்தியவருமாவார். இவ்வாறு கடந்த ஏறத்தாழ  இருபதாண்டுகளாக கலை இலக்கியத் துறைகளில் செயற்பட்டுநிற்கும் திருமாவளவனின் ‘கவித்துவப் ஆளுமை’ தொடர்பான எனது அவதானிப்பு இங்கே முன்வைக்கப்படவுள்ளது. அவரது அண்மை வெளியீடாக இங்கு அறிமுகமாகும் ‘முதுவேனில் பதிகம்’ (2013) என்ற தொகுதியை முன்னிறுத்தி அமையும் இவ்வுரையானதுஅவரது ஒட்டுமொத்த கவித்துவப் பயணத்தையும் கருத்துட்கொண்டதாகும் .

Continue Reading →

சாதேவி – நம்மிடையே வாழும் கன்னடத்தமிழ் உலகம்!

- வெங்கட் சாமிநாதன் -ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு புத்தகம், சிறுகதைத் தொகுப்பு ஒன்று படிக்கக்கிடைத்ததில் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சந்தோஷம் என்று சொன்னது பின்னர் இதைப்பற்றி எழுதிச்செல்லும் போது எனக்கு கொஞ்சம் சிக்கலான காரியமாக ஆகப்போகிறது. ஆனாலும் எழுதியதை அழிக்க விரும்பவில்லை. சந்தோஷம் என்று சொன்னது உண்மை.

சந்தோஷம் திறமையாக எழுதும் ஒரு சிறு கதைக்காரரைக் கண்டு கொண்டதில்.. ஆமாம், கண்டு கொண்டதுதான். இதுதான் அவரது முதல் தொகுப்;பு. நன்றாக எழுதியிருக்கிறாரே தவிர அவர் அதிகம் அலட்டிக்கொண்டவராகவோ,  தமிழ்ச் சிறுகதை வானில் ஒரு புதிய நக்ஷத்திரம் உதயமாகி விட்டதாகவோ ஏதும் பேச்சில்லை. சில காலமாக தெரிந்த ;பெயர்தான். இணையத்திலும் புத்தக ;பிரசுரத்திலும் சம்பந்தப்பட்ட பெயராக, எழுத்தாளராக அல்ல. தன்னைப் பற்றி அப்படி அவர் அறிவித்துக் கொண்டதில்லை. எனக்குத் தெரிந்து யாரும் அவரை ஒரு சிறுகதைக்காரராக பிரஸ்தாபிக்க வில்லை. ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. அதுவும் தமிழ் நாட்டில். இங்கு தெருவுக்குத் தெரு கவிஞர்கள் ஜனத்தொகை கொஞ்சம் அதிகம். சிறுகதைக்காரர்கள் கணிசமாக இருந்தாலும் கொஞ்சம் குறைவு தான்.

இக்கதைத் தொகுப்பில் 34 கதைகள் இருக்கின்றன. இதில் தரப்பட்டுள்ள  இக்கதைகள் 2003 லிருந்து 2013 வரை எழுதி அவர் தன் ப்ளாகில் வெளியிட்டுக்கொண்டவை.  இந்த விவரத்தை இத்தொகுப்பிலிருந்து தான் நான் தெரிந்து கொள்கிறேன். அவ்வப்போது தன் கவிதைகள், சினிமா விமர்சனங்கள் என அவர் தன் ப்ளாகில் எழுதிக்கொண்டிருந்தாலும், அவரையும் அவரது ப்ளாக் பற்றியும் நான் மிக தாமதமாகத் தான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.  ஒரு சிலவற்றைப் படித்துமிருக்கிறேன். எதுவும் ஒரளவு கணிசமான எண்ணிக்கையில் ஒட்டு மொத்தமாகக் கையில் கிட்டுமானால் தான், எழுத்தின் பின் இருக்கும் ஆளுமையைப் பற்றியும். அந்த எழுத்து நமக்கு பரிச்சயப்படுத்தும் உலகு பற்றி ஏதும் சித்திரமும் பதிவும் நமக்குக் கிடைக்கும்.

Continue Reading →