கவியரசு கண்ணதாசன் பற்றி ஒருசமயம் கலைஞர் கருணாநிதி கவிதை எழுதியபொழுது ” யார் அழைத்தாலும் ஓடிப்போகும் செல்லப்பிள்ளை ” என்று வர்ணித்தார். எனக்கும் இலக்கியத் தோழன் வி.ரி. இளங்கோவன் குறித்து நினைக்கும்தோறும் அந்த வரிகள் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாதது. கவிஞர்கள் இயல்பிலேயே மென்மையானவர்கள்தான். அதனால் அவ்வப்பொழுது எவருக்கும் செல்லப்பிள்ளையாகிவிடுவார்கள். இளங்கோவனை நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்த காலப்பகுதியில் அவர் சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் முகாமிலிருந்தார். கொழும்பிலிருந்த தோழர் சண்முகதாசன், யாழ்ப்பாணத்திலிருந்த மூத்த எழுத்தாளர் கே. டானியல் மற்றும் கட்சித்தோழர் இக்பால் ஆகியோருடன் மிக நெருக்கமான தோழமையுடன் இயங்கிக்கொண்டிருந்தார். இத்தனைக்கும் இவர் ஆயுர்வேதம் படித்தவர். அத்துடன் பிலிப்பைன்ஸில் நடந்த ஆயுர்வேத வைத்தியர்களின் மாநாட்டிலும் கலந்துகொண்டவர். இயற்கை வைத்தியத்துறையில் பல நூல்களையும் எழுதியிருந்தவர். மூலிகைகள் பற்றிய நுண்ணறிவு கொண்டிருந்தவர். அத்துடன் சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்துக்கள், விமர்சனங்கள் எழுதியவர். கட்சியின் தொண்டனாகவே தோழர்களுடன் ஊர்சுற்றி பணியாற்றியவர். தனக்கென ஒரு கிளினிக்கை அவர் யாழ்ப்பாணத்தில் தொடங்கியிருந்தாலும் பெரும்பாலன நேரங்களில் அவர் நோயாளருடன் நேரத்தை செலவிடவில்லை. அவரது வாழ்க்கை கட்சி சார்ந்த தோழர்களுடனும் இலக்கியவாதிகளுடனுமே நகர்ந்தது.
இளங்கோவன் கலை, இலக்கியக் குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடைய அண்ணன் மூத்த எழுத்தாளர் நாவேந்தன். துரைசிங்கம் மற்றும் ஒரு எழுத்தாளர். சட்டத்தரணி தமிழ்மாறன் அரசியல் ஆய்வாளர். இளங்கோவனின் மனைவி பத்மா சிறுவர் இலக்கியம் படைப்பவர். பல நூல்களை எழுதியிருப்பவர். இளங்கோவனின் புதல்வி ஓவியா திரைப்படத்துறையில் ஒரு எடிட்டர். 1983 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாடாளாவிய ரீதியில் பாரதி நூற்றாண்டு விழாவையும் பாரதி நூல்கள் கண்காட்சியையும் ஈழத்து எழுத்தாளர்களின் ஒளிப்படக்கண்காட்சியையும் ஏற்பாடு செய்திருந்தது. இக்கண்காட்சிக்குழுவில் நான் இருந்தேன். முதல் விழா கொழும்பில் தொடங்கியது.