அறிமுகம்
புலம்பெயர்ந்தோரின் தமிழ்ப்படைப்புக்களில் ‘அந்நியமாதல்’ என்ற உணர்வுநிலை புனைவிலக்கியங்களிலும் ஆற்றுகைக் கலைகளிலும் கருப்பொருளாக எடுத்தாளப்பட்டு வருகின்றது. 80 களின் பின்னர் இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து இனவுணர்வுச் சூழல்களின் தாக்கத்தால் புலம்பெயர்ந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அவுஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் பெருமளவான தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் படைப்புக்களில் அந்நியமாதல் உணர்வுநிலை தொடர்ச்சியான பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக தனிமை, அந்நியமாதல் ஆகிய இரண்டு பதங்களும் இலக்கியத்தில் எடுத்தாளப்படுகின்றன. சமூகத்தால் தனித்துவிடப்பட்டோர் பல்வேறுவிதமான உள – உடல் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனால் அவர்கள் பாரதூரமான விளைவுகளையும்கூட எதிர்கொள்கின்றனர். யுத்தத்தாலும் குடும்பங்களின் பிரிவாலும், சூழலாலும் தனித்து விடப்பட்டவர்களின் கதைகள் இவ்வாறு அதிகமாக இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த உணர்வு நிலையை தமிழ்ச்சூழல் தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அசோகமித்திரனின் ‘ஆகாயத்தாமரை’ நாவல், மற்றும் நா. சுந்தரலிங்கத்தின் ‘அபசுரம்’ என்ற அபத்த நாடகம் ஆகியவை சில உதாரணங்கள். இவை குறித்து ஏற்கெனவே தமிழ்ச்சூழலில் உரையாடல்கள் நிகழ்ந்துள்ளன.