– இக்கட்டுரைகள் பேராசிரியர் க.பஞ்சாங்கத்தினுடைய நவீன இலக்கிய கோட்பாடுகள் நூல் குறித்த சிறு அறிமுகமே அன்றி முழுமையாகாது. ஆசிரியர் நூலைப் படிப்பதொன்றே அவரது கட்டுரைகளின் முழுப்பயன்பாட்டினைப் பெறுவதற்கான வழி –
பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் எடுத்துரைப்பியல் கட்டுரைகளில் “கதையும் கதைமாந்தர்களும் – கதை மாந்தர்கள் உருவாக்கமும்” ஆகியவற்றைப்பற்றி இப்பகுதியில் காண்போம். இத்தொடரை எழுத பேராசிரியர் எடுத்துக்கொண்ட கடுமையான முயற்சிகள் இப்பகுதியிலும் பிரதிபலிக்கின்றன. பிற துறைகளைப்போலவே மொழித்துறையிலும் இலக்கியத்திலும் மேற்கத்தியர்கள் ஓடிக்கொண்டிருக்க நாம் நொண்டிக்கொண்டிருக்கிறோம். ஓடிக்கொண்டிருக்கிறவர்கள் இடறி விழமாட்டார்கள் என்பதென்ன நிச்சயம்? கதைமாந்தர்களைப் பற்றிய பார்வைகளில் குறையிருக்கலாம். ஆனாலும் நொண்டுபவனைக் காட்டிலும் ஓடுபவன் கூடுதல் தூரத்தில் இருக்கிறான். எல்லையைத் தொட்டு மீண்டும் ஓடுகிறான். அதன் தொடர்ச்சிதான் எடுத்துரைப்பு குறித்த ஆய்வு முடிவுகள், எதிர்வினைகள். நவீன கதையாடல்கள் – (குறிப்பாக மேற்கத்திய நாடுகளில்) அவர்களின் கருத்தியங்களுக்கு வலு சேர்க்கின்ற வகையில் இன்றிருப்பதும் அதற்குக் காரணம்.
1. கதையும் கதைமாந்தர்களும்
எப்பொழுது கதையென்று ஒன்றை சொல்லநினைத்தோமோ அப்பொழுதே கதை மாந்தர்கள் இடம்பெற்றுவிட்டார்கள். ஒரு சும்பவத்தை விவரிப்பதற்கு ஒரு மையப்பொருள் தேவையாகிறது அப்பொருள்சார்ந்த நடவடிக்கைககள் தேவையாகின்றன. கதை மாந்தர்கள் நடவடிக்கைகளே கதையை ஆரம்பிக்கவும், முன்னெடுத்து செல்லவும், முடித்துவைக்கவும் உதவுகின்றன. அந் நடவடிக்கைகளைக்கொண்டு கதைமாந்தர்களைப் பற்றிய சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. அவர்கள் நல்லவர் அல்லது கெட்டவர் என கடந்த காலத்தில் (தொன்ம இலக்கியங்களில்) உறுதிபடவும், தற்போதைக்கு (நவீன இலக்கியத்தில்) இவை இரண்டுமான தெளிவற்றதாகவும் அப்புரிதல் இருக்கிறது. க.பஞ்சாங்கத்தின் கதைமாந்தர்களைப்பற்றிய கட்டுரையின் சாரத்தை விளங்கிக்கொள்வதற்கு முன்பாக கதை மாந்தர்கள் ஏன்? நேற்றைய கதை மாந்தர்கள் யார்? பனுவலில் அவர்களுக்கான இடமென்ன? இன்றைய கதை மாந்தர்கள் யார்? பனுவலில் அவர்கள் இன்னமும் முக்கியம் பெறுகின்றனரா? என்பதைக்குறித்த குறைந்த பட்ச புரிதல் நமக்கு கட்டாயமாகிறது.