திரும்பிப்பார்க்கின்றேன்: நடமாட முடியாத காலத்திலும் நடமாடும் நூலகமாகத் திகழ்ந்த இரசிகமணி கனகசெந்திநாதன் இலக்கியத்தையும் இனிப்பையும் நேசித்தார்.

1_kanaka-senthinaathan.jpg - 7.27 Kbமுருகபூபதிசிட்னியிலிருந்து 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் வானொலியில்  எழுத்தும் எழுத்தாளரும் என்ற  நிகழ்ச்சிக்காக ( நேரடி  ஒலிப்பதிவு – நேரடி ஒலிபரப்பு )   என்னை   பேட்டிகண்ட   குறிப்பிட்ட வானொலி ஒலிபரப்பு ஊடகவியலாளர் நண்பர்   செ.பாஸ்கரன்   பேட்டியின்    இறுதியில்  ஒரு   கேள்வி – ஆனால் ஒரே  பதில்  தரவேண்டும் என்றார். கேளுங்கள்   என்றேன். உங்களுக்குப் பெரிதும் பிடித்தமான   தமிழ்   எழுத்தாளர்   யார்?  –   இதுதான் கேள்வி. என்னை மிகவும்  தர்மசங்கடத்திற்குள்ளாக்கிய   கேள்வி.   உடனடியாக  பதில்   சொல்ல   சற்று   தயங்கினேன். கருத்துமுரண்பாடுகளுக்கு அப்பாலும்   எனக்குப்பிடித்தமான   பல எழுத்தாளர்கள்    இருக்கிறார்கள்.எனது  திரும்பிப்பார்க்கின்றேன்   தொடரில் இடம்பெறும் பல எழுத்தாளர்கள்   எனக்கு   பிடித்தமானவர்கள்தான். ஆனால் – எனக்குப்பிடித்த   ஒரு   எழுத்தாளரின்   பெயரையும்  ஏன்   அவரை  எனக்குப்பிடித்தது  என்றும்   சொல்ல  வேண்டும்.  சில கணங்கள்  யோசிக்கவைத்த  கேள்வி  அது. எனது  மௌனத்தைப்பார்த்துவிட்டு  மீண்டும்  –  உங்களுக்குப்பிடித்தமான   தமிழ்   எழுத்தாளர்   யார்?  சொல்லுங்கள்   என்றார்     பாஸ்கரன். எனக்குப் பெரிதும் பிடித்தமான  எழுத்தாளர்   குரும்பசிட்டி  இரசிகமணி கனகசெந்திநாதன்    எனச்சொன்னேன். உடனே  அவர்  தனக்குப்பிடித்தமான  எழுத்தாளர்  மு. தளையசிங்கம் என்றார். எனக்கும்   அவரை  நன்கு  பிடிக்கும்   என்றேன்.

Continue Reading →

என்னோடு வந்த கவிதைகள்—2 & 3

என்னோடு வந்த கவிதைகள்- 2 

- பிச்சினிக்காடு இளங்கோ “இட்டதோர் தாமரைப்பூ
 இதழ்விரிந் திருத்தல் போலே
 வட்டமாய்ப் புறாக்கள் கூடி
 இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
 வெட்டில்லை; குத்து மில்லை;
 வேறுவே றிருந்த ருந்தும்
 கட்டில்லை;கீழ்மேல் என்னும்
 கண்மூடி வழக்க மில்ல.”    பாரதிதாசன்

அந்த இளமைப்பரவத்தில் பாடிய இன்னொரு பாடல் உலகநாதர் இயற்றிய, உலக நீதியில் இடம்பெற்ற

“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
 ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
 வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
 போகவிட்டுப் புறம்சொல்லித் திரிய வேண்டாம்” என்ற பாடல்.

இதுபோன்ற பாடல்களைச் சின்னவயதில் எந்தச்சிந்தனையுமில்லாமல் படித்தகாலம் நினைவுக்குவருகிறது. நீதியை; அறத்தை;வாழ்வியல் உண்மைகளைச் செய்யுளாகப் பாடிய நினைவுகளன்றி கவிதைபற்றிய எந்த ஈர்ப்பும்; நினைப்பும் இல்லாமலிருந்ததுதான் நினைவுக்கு வருகிறது.

Continue Reading →

நினைவேற்றம்: முனை 1

முனை 1

 -தேவகாந்தன்-   நீண்டு நெடும் பாம்பாய்க் கிடக்கிறது மக்கித் தெரு. சோளகம் சருகுகளை உருட்டிச் சென்றுவிட்ட கான்கள், புல்களும் புதர்களும் காய்ந்து சுருங்கிய நிலையில், வெறுமையாய்க் கிடக்கின்றன. காற்றினால் அகற்றப்பட முடியாது எஞ்சிப்போன சுள்ளிகளும் தடிகளும், பிறகொருநாள் கோடை பிறந்துவிட்ட அந்தப் பருவகாலத்தில்  தீ வைத்துச் சாம்பலாக்கப்படலாம். மாரியில் வெட்டப்பட்ட வேலி மரங்களில் பசுமை செறித்து வளர்ந்திருந்த இலைகளில் மக்கி அப்பி பழுப்பாய்த் தோன்றுகின்றது. கோடையினை அக் கிராமத்தின் வெறித்த பருவமாய் உணர்விலெழுப்ப, மக்கித் தெரு இணைத்து மேற்கிலும் கிழக்கிலுமாய்க் கிடந்த வயல்வெளிகளின் தரிசு மட்டுமில்லை, வயல்வெளிகளில் ஒழுங்கைகளில் தம்பாட்டுக்கு  காய்ந்த புல் சருகுகளில் தம் பசியாற்ற அவிழ்த்துவிடப்பட்டிருந்த ஆடுகள் மாடுகளின் அலைவும் மட்டுமில்லை, தெருக்கள் ஒழுங்கைகளில் அரிதுபற்றிப் போன மனித நடமாட்டமும், இன்னும் அடுக்களைகளின் கூரைகளைத் துளைத்துக்கொண்டு அடுப்புப் புகை மேற்கிளம்பாத  அசைவிறுக்கமும்கூட பொருந்திய காட்சிகளாக இருந்தன.  யாழ்ப்பாணம் கிடுகு வேலிக் கலாசாரத்தைக் கொண்டிருந்தாய்ச் சொல்லப்படுகிறது. அதை நிரூபிப்பதற்கான அச்சொட்டான காலமாகவிருந்தது அது. அதை அண்ணளவாக ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளின் ஆரம்பகாலம் என்கலாம்.  கிடுகு வேலிக் கலாசாரமென்பது மாற்றங்களை உட்புக விடாததும், மரபின் இறுக்கங்களைத் தளர விடாததுமான வாழ்நிலைமையை முப்புற வேலிகளைக்கொண்டு உறுதியாக்கி அங்கே கட்டப்பட்டிருந்தது.

Continue Reading →

முகநூல் குறிப்புகள்: ஒரு நூற்றாண்டு தனிமையின் மரணம்

கப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ் கப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ் என்ற பெயரை விட ஒரு நூற்றாண்டு தனிமை (One Hundred Years of Solitude )என்பதே அதிகமான பரிச்சயப்பட்ட பெயராகவே இருக்கிறது. 1967ல் வெளிவந்த இந்த நாவல் பல பதிப்புகள் கண்டு 30மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன.ஆனால் இவரது அறியப்படாத தடை செய்யப்பட்ட நாவல் ஒன்றும் உண்டு. Memories of My Melancholy Whores நாவல் ஈரானில் முதற்கட்டமாக ஐயாயிரம் பிரதிகள் விற்ற நிலையில் தடை செய்யப்பட்டது . உலக வாசகர்களின் கவனிப்பிற்கும் கொண்டாட்டத்திற்கும் ,நேசிப்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த லத்தின் அமெரிக்க, கொலம்பியா படைப்பாளி கப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ் நேற்று தனது 87வது வயதில் மறைந்தார். தனது எழுத்துக்களை மேஜிக்கல் ரியலிசம் என்னும் ஜால யதார்த்த பாரம்பர்ய கதை சொல்லும் முறையில் நாவலை படைத்துக் காட்டியவர். 1982களில் நோபல்பரிசினை பெற்ற மார்க்யுஸ் காலனிய ஆட்சிக்கால குரூரங்களைஎழுதிப் பார்த்தவர். தனது மூதாதைகளின் கதை சொல்லல் முறையினையும் மார்க்வெஸ் தனது எழுத்தின் உயிரோட்டத்தில் இணைத்தவர். துவக்கத்தில் பத்திரிகையாளராக இருந்த மார்க்யுஸ் கதையற்ற எழுத்துக்களில் தனது பயணத்தை துவக்கி கதையுலகிற்குள் நுழைந்தார். 1967 களில் வெளிவந்த ஒரு நூற்றாண்டு தனிமை(One Hundred Years of Solitude) நாவல் படைப்புலகின் புது மாதிரியான மேஜிக்கல் ரியலிசத்தை அறிமுகப்படுத்தியது. யதார்த்த வாழ்வை புனைவின் ரூபத்தில் புதிர்மைகளோடு படைப்பாக்கம் செய்த அவரது உத்தி பிரபலமானது.ஏறத்தாழ 47 ஆண்டுகளுக்கு பிறகு கவி சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் இந் நாவல் சென்ற ஆண்டு தமிழுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்பும் மார்க்யுஸின் மொழிபெயர்ப்புகள் தமிழின் மிகத் தீவிர எழுத்தாளர்களால் அறிமுகம் ஆகியிருந்தது.

Continue Reading →

ஜோ.டி.குரூசும் ஹேமமாலினியும் ஜெயமோகனும்

யமுனா ராஜேந்திரன்கருத்துக்களைக் கட்டமைப்பது என்பது விவாதங்களில் ஒரு முக்கியமான கருத்தமைவு. விவாத அடிப்படைகளையே திசைமாற்றவது எவ்வாறு என்பதை இதனை முன்வைத்து நாம் விளக்க முடியும். ஜோ.டி.குரூஸ் விஷயத்தில் இடதுசாரிகள் அல்லாது தமிழில் எழுதுகிற எந்த எழுத்தாளனும் தமது சொந்தக் கருத்துக்களை இதுவரை எழுதவில்லை. அரவிந்தன் நீலகண்டன் எழுதுவதற்கு ‘லைக்’ போடுகிறார்கள். அல்லது சித்தார்த் வரதராஜன் இதுபற்றி எழுதியதை ‘ஷேர்’ செய்கிறார்கள். ஓன்று சொந்தக் கருத்துக்கள் இவர்களுக்கு இல்லை. எழுதுவதற்கான தர்க்கம் இல்லை அல்லது வெளிப்படையான மனம் இல்லை. இவர்கள் செய்கிற வேலை மோடிக்கு ஆதரவான மனநிலையைக் கட்டமைப்பது எனும் கள்ளத்தனமான வேலைதான். அரவிந்தன் நீலகண்டன் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் அறிவித்துக் கொண்ட இந்துத்துவவாதி, ஆர்.எஸ்.எஸ்.செயல்பாட்டாளர். அவரை நண்பராகவும் உடன்பயணியாகவும் கொண்டவர்களைப் பார்த்து நம்மால் பரிதாபப்பட மட்டுமே முடியும். சித்தார்த் வரதராஜனை அப்படிச் சொல்லிவிடமுடியாது. குஜராத் படுகொலைகள் பற்றிய முழுமையான நூலொன்றின் தொகுப்பாளர் அவர். இலக்கியமும் திரைப்படமும் அறிந்தவர் அவர். ஷோலேவில் நடித்த ஹேமமாலினி பிஜேபியை ஆதரிப்பதால் நாம் ஷோலேவை நிராகரிக்க முடியுமா என்கிறார் அவர். பால்தாக்கரேவையும் சிவசேனாவையும் பின்னாளில் ஆதரித்த தலித் கவிஞரான நாமதேவ் தசலைப் பதிப்பித்த நவயானா ஜோ.டி.குருஸைப் பதிப்பிக்க மறுப்பது என்ன நியாயம் என்று கேட்கிறார் அவர். சாரம்சமாக, படைப்பாளியின் அரசியலுக்காகப் படைப்பை நிராகரிக்க முடியுமா? என்பது சித்தார்த் வரதராஜனின் கேள்வி.

Continue Reading →

நூல் அறிமுகம்: கலை இலக்கியப் பார்வைகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

நூல் அறிமுகம்: கலை இலக்கியப் பார்வைகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புகலை இலக்கியப் பார்வைகள் என்ற இந்தத் தொகுதி மீரா பதிப்பகத்தினூடாக வெளிவரும் கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் பதினைந்தாவது நூலாகும். மீரா பதிப்பகத்தின் 102 ஆவது வெளியீடாக 122 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் இலக்கிய விடயங்களுக்கு அப்பால் நாடகம், சினமா, உலக இலக்கியங்கள், தொடர்பாடல் என பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. நவீன இலக்கியத்தின் ஆரம்பகால செல்நெறி பற்றி அறிய முனையும் இன்றைய மூத்த இலக்கியவாதிகளுக்கும், புதியதலைமுறை இலக்கியவாதிகளுக்கும் இந்நூல் ஓர் உசாத்துணையாக திகழும் என்பதை உறுதியாகக் கூறமுடியும். 26 தலைப்புக்களில் தேசிய இலக்கியம், சர்வதேச இலக்கியம் பற்றி இந்த நூல் அலசி ஆராய்கிறது.   1989 – 2000 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் தான் பத்திரிகைகளில் எழுதி பிரசுரமான பல்வேறுபட்ட ஆக்கங்களின் தொகுப்பாகவே நூலாசிரியர் இந்த நூலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று இசைத்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு விடயம் என்றால் அது இசை என்று உறுதியாக கூறலாம். இசைக்கு கட்டுப்படாத மனங்கள் இல்லை. சினமாப் பாடல்கள் எல்லோரையும் வசியப்படுத்துபவை. சில பாடல்கள் காலத்தால் அழியாதவை. மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பவை. அது போல் சில பாடல்கள் பொப் இசைப்பாடல் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. பொப் என்ற ஆங்கிலச் சொல்லை ஏன் பாவிக்கின்றோம் என்ற கேள்வியை தொடுக்கின்றார் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். சினமாப் பாடல்களையும் ‘பொப்’ என அழைக்கலாமே (பக்கம் 09) என்ற தலைப்பில் அவர் தனது கருத்துக்களைத் தெளிவாக பின்வருமாறு முன்வைத்துள்ளார்.

Continue Reading →

“மதமாற்றம்”

நாடக விமர்சனம்: "மதமாற்றம்" - அ.ந.கந்தசாமி -1_kavaloor_rajadurai[ அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம்’ தயாரிப்பாளரும் , பிரபல எழுத்தாளருமான காவலூர் ராசதுரையின் நாடகம் பற்றிய குறிப்பிது. ஒரு பதிவுக்காக இங்கே மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள்]

இலங்கை வானொலியின் ‘கலைக்கோலம்’ என்னும் நிகழ்ச்சிக்காக, தமிழ் நாடக்மொன்றினை விமரிசிக்கும்படி திரு.சீ.வி.ராஹசுந்தரம் ஒரு முறை என்னைக் கேட்டுக் கொண்டார். அதற்கமைய அந்த நாடகத்தை விமரிசித்தபொழுது, இலங்கையில் நாடகத்துறையை வர்த்தக அடிப்படையில் மூலதனம் போட்டு ஸ்தாபனரீதியாகக் கட்டி வளர்த்தல் சாத்தியம் என்ற கருத்தினை வெளியிட்டிருந்தேன். நண்பர் அ.ந.கந்தசாமியுடன் தமிழ் நாடத்துறை பற்றி ஒருநாள் பேசிக் கொண்டிருந்தபொழுது மேற்சொன்ன என் கருத்தை அவரிடம் சொல்லி அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டேன். “வர்த்தக ஆற்றலுடையவர்களுக்குக் கலையார்வம் இல்லை; கலையார்வமுள்ளவர்களுக்கு வியாபாரம் செய்யத் தெரியாது’ என்று சொன்ன அவர் , ‘என்னுடைய ‘மதமாற்றத்தை’ உமக்குத்த்தருகிறேன்; பணம் எதுவும் வேண்டாம்; உம்முடைய கருத்துச் சரியானதுதானவென்று பரீட்சித்துப் பார்க்க விரும்பினால் அதை மேடையேற்றும்” என்றார். அவ்வளவுடன் நில்லாது குறிப்பிட்ட ஒரு தொலையை என்னால் புரட்ட முடியுமானால், நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்குத் தம்மால் இயன்ற சகல் உதவிகளையும் செய்து தருவதாகவும் சொன்னார்.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: மௌனமே மொழியாக முதியோர் இல்லத்தில் படைப்பாளி காவலூர் ராசதுரை வருங்காலத்தில் நாம் கடக்கவிருக்கும் பாதையில் பயணிக்கும் ஆளுமை

1_kavaloor_rajaduraiமுருகபூபதிஇதுவரையில்     நான்   எழுதிய  திரும்பிப்பார்க்கின்றேன்    தொடர்பத்தியில்  பெரும்பாலும்   மறைந்தவர்களைப் பற்றித்தான்  எழுதிவந்திருக்கின்றேன். நெஞ்சில்  நிலைத்த  நெஞ்சங்கள்  தொடரிலும்   மறைந்த 12 ஆளுமைகளை    பதிவுசெய்துள்ளேன்.    இந்தத் தொடர்  பாரிஸ் ஈழநாடுவில் வெளியானபொழுது   ஒரு   இலக்கிய   சகோதரி  என்னிடம்   ஒரு  வினாவைத் தொடுத்தார்.   குறிப்பிட்ட   தொடரில்  நான்  மறைந்த  ஆண் படைப்பாளிகளைப்பற்றி   மாத்திரம்   எழுதியதாகவும்   பெண்களைப்பற்றி எழுதவில்லை   என்றும்   புகார்    எழுப்பியிருந்தார். பெண்களுக்கு   ஆயுள்   அதிகம்   என்று   மாத்திரம்   பதில்   சொன்னேன். அந்தத்தொடரில்   இடம்பெற்றவர்கள்   அனைவரும்   மறைந்துவிட்ட ஆண் படைப்பாளிகள்தான். அவுஸ்திரேலியாவுக்கு  நான்   புலம்பெயர்ந்து  27 வருடங்களாகின்றன. கால்நூற்றாண்டுக்கும்  அதிகமான   காலப்பகுதியில்   நான்   நேசித்த – என்னை  நேசித்த   பலரும்   விடைபெற்றுவிட்ட சோகம்   தனிப்பட்ட   ரீதியில் என்னை   தொடர்ந்து    வந்துகொண்டுதானிருக்கிறது. திரும்பிப்பார்க்கின்றேன்   தொடரில்   தற்சமயம்   எம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்களைப்பற்றியும்   எழுதவேண்டும்   என்ற  எண்ணம் கடந்த   சில   நாட்களாக   எனது   மனதில்   உருவாகிவருகிறது. காரணம்   சில   நாட்களுக்கு   முன்னர்   அவுஸ்திரேலியா    –  குவின்ஸ்லாந்து மாநிலத்தில்    எமது   தமிழ்   இலக்கிய   கலைச்  சங்கம்  நடத்திய  கலை இலக்கிய    கருத்தரங்கு   நிகழ்ச்சியில்   கலந்துகொண்ட  பின்னர் மெல்பனுக்கு   திரும்பும்    வழியில்    சிட்னியிலும்  சில  நிகழ்ச்சிகள் சந்திப்புகளில்    கலந்துகொண்டேன்.   எனது   பயணத்தில்  நான்  சிட்னியில் சந்திப்பதற்கு   பெரிதும்    விரும்பியிருந்த   ஒருவர்   நண்பர்   எழுத்தாளர் வானொலி – திரைப்படக்   கலைஞர்    காவலூர்  ராசதுரை. சிட்னிக்கு    செல்லும்    சந்தர்ப்பங்களிலெல்லாம்   அவரைப்பார்க்காமல் திரும்புவதும்    இல்லை.   இந்தப்பயணத்தில்   ஒருநாள்   அவரை சந்திக்கச்செல்வதற்கு    முன்னர்   அவரது   வீட்டுக்கு  தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.

Continue Reading →

இலங்கு நூல் செயல் வலர்: க.பஞ்சாங்கம் -3 : பெண்ணியல் கோட்பாடுகள்

k_panjangakm.jpg - 6.46 Kbநாகரத்தினம் கிருஷ்ணாசிமொன் தெ பொவ்வார் எழுதிய ‘இரண்டாம் பாலினம்’ 1949ம் ஆண்டே வெளிவந்திருந்தது, எனினும் 1970 ஆண்டிலேதான் பெண்கள் விடுதலைக்கான இயக்கம் பிரான்சு நாட்டில் தொடங்கியது.  பிற மேற்கத்திய நாடுகளைப் போன்றே அறிவியலிலும்; பெரும் புரட்சியை நடத்திக்காட்டி ஆண்டவர்களைச் சிரச்சேதம் செய்வித்து இனி நாங்கள் அடிமை இல்லையென வெகுண்டெழுந்த மக்களை அரசியலிலும், மனித வாழ்க்கையை நேர்த்தியாகச் சொல்வதுமட்டுமல்ல அதனை மரபுகளிலிருந்து விடுவிக்கவும் தெரிந்திருக்கவேண்டும் என கலை இலக்கியத்திலும் மெய்ப்பித்து காட்டிய பிரான்சு நாட்டில் கூட பெண்கள் எழுபதுகள்வரை அடிமைகளாக நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்றே இதற்குப் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது. பிரான்சுபோன்ற ஒரு வளர்ந்த நாட்டில், தனி மனிதச்சுதந்திரத்தை உயிர் மூச்சாக கொண்டிருக்கிற நாட்டில் எழுபதுகளில் ஆரம்பித்துவைத்த பெண் விடுதலைக்கான இயக்கம் அவர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டிருக்கிறதா என்றால் இல்லை. இருபத்தோராம் நூற்றாண்டிலும்பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது, இன்றும்கூட தங்கள் உரிமைகளை வற்புறுத்த, பாசாங்கு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் சமுதாயத்தை தட்டி எழுப்ப சற்று தீவிரமான வழிமுறைகளை சில பெண்ணியக்கங்கள் பின்பற்றுகின்றன. கடந்த அரைநூற்றாண்டாக அவர்கள் கையாண்ட வழிமுறைகள் எவ்வித பலனையும் தர இல்லை, இந்நிலையில் சில பெண்கள் சற்று முகம்சுளிக்கும் வகையில் போராடினால்கூட அதனை நியாயம் என கொள்ளவேண்டியிருக்கிறது. 

Continue Reading →

சில நினைவுகள் – குஷ்வந்த் சிங் மறைவைத் தொடர்ந்து.

khuswant singh- வெங்கட் சாமிநாதன் -சில உறவுகள், சந்திப்புகள், நிகழ்வுகள் எப்படியெல்லாம் நேர்ந்து விடுகின்றன என்று பின்னர் நினைவுக்கு வரும்போது எண்ணிப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பின்னர் என்று சொன்னேன். அதுவும் இரண்டு தலைமுறைகளுக்குப் பின் எண்ணிப்பார்க்க சந்தர்ப்பங்கள் நிகழ்ந்தாலோ, வியப்புதான். இரண்டு நாட்களாக இப்படித்தான் மனம் ஒரு சுழலுக்குள் ஆட்பட்டு சலித்து வருகிறது. அது எந்த நி்கழ்வு பற்றி, யாரைப் பற்றி என்பதைப் பின்னர் சொல்கிறேன். இந்த சமயத்திய சந்தர்ப்பத்தில், இப்போதே சொல்லிவிட்டால், ஏதும் சொல்ல இருப்பவர்கள் எல்லாம் தனக்குத் தெரிந்ததைச் சொல்வதை ஒரு வழக்கமாகவோ, கடமையாற்றலாகவோ சொல்வதாக வாசிப்பவர் களுக்குத் தோன்றிவிடும். எனக்கு அந்த தகுதி இல்லாததால், என் விஷயத்தில் அப்படி அல்ல இது. இதில் என் சுபாவமும், அன்றைய என் கோபமும், அன்று சற்றுப் பொறுமை காத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்றும் தோன்றினாலும், இதன் விளைவு இப்படி இருக்கும் என்று யாருக்குத் தெரிந்திருக்கும்? என்றும், ஒரு வேளை என் எதிர்வினை வேறு எப்படியாக இருந்திருக்கக் கூடும், நான் நானாகத் தானே இருந்திருக்க முடியும் என்றும் தோன்றுகிறது. மனம் இப்படியெல்லாம் சலனிப்பதையும் இப்போது தவிர்க்க முடியாது தான். ஆனாலும் என் மனத்தில் கொஞ்சம் வருத்தம் இருந்தது தான். லாபிரிந்த் என்பார்களே அப்படித்தான். இது ஒன்றும் அப்படி எண்ணற்ற சிக்கலான பாதைகள் கொண்டதல்ல. ஆனால் இது எங்கு இட்டுச் செல்லும் என்று தெரியாத இடத்திற்கு இட்டுச் சென்றது அதிக சிக்கல் இல்லாமல்.

Continue Reading →