பண்டைத் தமிழ்ச் சான்றோர் தம் வாழ்வியலை ‘அகம்’ எனவும் ‘புறம்’ எனவும் இரு கூறாக வகுத்து இயற்கை வழி நின்று பெருவாழ்வு வாழ்ந்து, தம்மவரும் பின்னவரும் பின்பற்ற வழிவகுத்துச் சென்றுள்ளனர். புறம் புறவாழ்வியலோடு இணைந்த ஆண்மை, வீரம், இனப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, அறநெறிப்பற்று, போரியல்மரபு ஆகியவை இப் புறத்தின்கண் நன்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மட்டும் ஈடுபடுவர். அகம் அகவாழ்வான இன்ப உணர்வுகளோடு இணைந்த இல்வாழ்வு பற்றிய தகைமையை எடுத்துக் கூறுகின்றது. இதில் தலைவன் தலைவியர் ஆகிய இருவரும் ஈடுபடுவர். அன்புறு காமம் சார்ந்த இப் பகுதியை ஒருதலைக் காமம் எனவும், அன்புடைக் காமம் எனவும், பொருந்தாக் காமம் எனவும் மூன்று நிலைபற்றிப் பகுத்துக் காட்டப்பட்டுள்ளது. இவற்றை முறையே கைக்கிளை என்றும், அன்பின் ஐந்திணை என்றும், பெருந்திணை என்றும் ஒருமித்து ஏழு திணைகள் என்றும் சான்றோர் கூறியுள்ளனர். இதைத் தொல்காப்பியர் (கி.மு. 711) சூத்திரத்தில் இவ்வண்ணம் அமைத்துள்ளார்.
‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.’ – (பொருள். 01)
இதில், அன்புடைக் காமம் என்றும், அன்பின் ஐந்திணை என்றும் கூறப்படுவது ஐவகையான நெறி பற்றிய கூற்றாம். அவை ஐவகை நிலங்களிற்கேற்ப ஒட்டிய சூழல், சுற்றாடல் ஆகியவற்றோடு இணைந்தனவாய் நிகழ்வனவாம். இவற்றை ஐந்திணைகளான குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை எனவும், ஐவகை நெறிபற்றி வகுத்தும், அவற்றைப் பற்பல துறைகளில் நின்று உள்ளத்து உணர்வெழுச்சிகளை நயம்படச் செய்யுள் அமைப்பது பண்டைத் தமிழர் மரபாகும்.