அநீதங்களிலிருந்து நாட்டுமக்களைக் காக்கவும், அவர்களுக்கு சேவை செய்யவெனவும் உருவாக்கப்பட்டவையே பொலிஸ் எனப்படும் காவல்துறை. தேசத்தின் எந்த மூலையிலும் தனியொரு நபருக்கோ, பொதுமக்களுக்கோ ஏதேனுமொரு இன்னல் ஏற்படுமிடத்து அங்கு சமூகமளித்து அமைதியை நிலைநாட்டுவதுவும், இன்னலுக்குக்கான காரணத்தை ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி உரிய தண்டனையை வாங்கிக் கொடுப்பதுவும் கூட காவல்துறையின் கடமையே. அந்த நம்பிக்கையில்தான் மக்கள் தங்களுக்கொரு அநீதி நிகழுமிடத்து காவல்துறையை நாடுகின்றனர். தனக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்குமென்ற நம்பிக்கையோடு அநீதிக்கெதிராக முறைப்பாடு செய்கின்றனர். முறைப்பாட்டை விசாரிக்கும் காவல்துறை, சம்பந்தப்பட்டவர்களை கூண்டிலேற்றி நீதத்தை நிலைநாட்டுகிறது. இது உலகளாவிய ரீதியில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவு.
கலாபூஷணம் பாலமுனை பாறூக்கின் எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு… என்ற நவீன குறுங்காவிய நூல் அண்மையில் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் 88 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே பதம் (1987) கவிதைத் தொகுதி, சந்தனப் பொய்கை (2009) கவிதைத் தொகுதி, கொந்தளிப்பு (2010) குறுங்காவியம், தோட்டுப்பாய் மூத்தம்மா (2011) குறுங்காவியம் ஆகிய நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இலங்கை அரச சாஹித்திய மண்டல சான்றிதழ் பெற்ற நூல் கொந்தளிப்பு குறுங்காவியம் ஆகும். அதுபோல் இலங்கை அரச சாஹித்திய மண்டல விருது, கொடகே சாஹித்திய மகாகவி உருத்திரமூர்த்தி விருது, இலங்கை இலக்கியப் பேரவை (யாழ்ப்பாணம்) சான்றிதழ் ஆகியவந்றை தனதாக்கிக் கொண்ட நூல் தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியம் ஆகும். இனவாதிகளின் வெறியாட்டத்தில் எதுவும் தெரியாமல் மாட்டிக்கொண்டு பலியாகிப்போன அப்பாவிகளுக்கே எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு.. என்ற இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் காரணமாக முஸ்லிம் தமிழ் இனங்களுக்கிடையே இருந்த உறவுநிலை, அதனால் ஏற்பட்ட விரிசல், மனமுறிவுகள், இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு, இடர்பாடுகள், விளைவுகள், ஒற்றுமை வாழ்வுக்கான சமாதான முயற்சி போன்றவற்றைப் பற்றிப் பேசுவதாகவே இந்த நூல் அமைந்திருக்கிறது.
‘எரிந்து கொண்டிருக்கும் நேரம்’ என்னும் கவிஞர் சேரனின் கவிதைகளை லக்சுமி ஹாம்ஸ்றம் (Laksmi Holmstrom) அவர்களின் மொழிபெயர்ப்பில் ‘ஆர்க்’ வெளியீட்டகம் வெளியிட்டிருந்தது. இதற்காக அப்பதிப்பகத்துக்கு இங்கிலாந்துப் பேனா அமைப்பினரின் (PEN – UK) மொழிபெயர்ப்பு நூல்களுக்கான 2012ற்குரிய விருது கிடைத்துள்ளது. லக்சுமி ஹாம்ஸ்றம் அவர்களுக்குக் கனடாவின் 2007ற்கான இயல்விருது கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்த விருது கிடைத்தபோது எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் கடுமையாக அந்த விருதினையும், லக்சுமி ஹாம்ஸ்றம் அவர்களின் அதற்கான தகுதி பற்றியும், அவரை அவ்விருதுக்குத் தேர்ந்தெடுத்த நடுவர்கள் பற்றியும் விமர்சித்துத் தனது வலைப்பதிவில் எழுதியிருந்தார். அந்நடுவர்களில் நானுமொருவனாக இருந்ததனால் அது பற்றி பதிவுகள் இணைய இதழில் எழுதிய பதில் கட்டுரைகளிலொன்றினை ஒரு பதிவுக்காக இம்முறை வாசிப்பும், யோசிப்பும் பகுதியில் பகிர்ந்துகொள்கின்றேன்.
என்னைப் பொறுத்தவரையில் கவிதையென்பது உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒருவரின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிவருவது. அவ்விதம் வெளிவரும் கவிதையினைப் படைக்கும் கவிஞரின் மொழி ஆற்றல், படைப்புத் திறன், வாசிப்பறிவு, வாழ்வனுபவம், அவற்றால் அவரடையும் பாதிப்பு , இவ்விதம் பல விடயங்களுக்கேற்ப அக்கவிதை சிறக்கிறது அல்லது சிறுக்கிறது. பெரும்பாலான இன்றைய கவிஞர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால் தங்களது கவிதை பிறரால் பாராட்டப்பட வேண்டும், விமர்சகர்களால் விதந்துரைக்கப்பட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு சொற்களைத் தேடித்தேடி எடுத்துக் கவிதைகளைக் கோர்க்கின்றார்கள். இவ்விதம் கோர்க்கப்படும் கவிதைகளில் மொழி அழகாக இருக்கும். ஆனால் அவ்விதமான கவிதைகள் அவற்றை ஆக்கும் கவிஞர்களின் உள்ளத்தின் உண்மையான உணர்வுகளிலிருந்து வெளிவராததால் வாசிப்பவரின் உள்ளத்தை அசைப்பதில்லை; தொடுவதில்லை. இவ்விதமான கவிஞர்களுக்கும் அன்றைய பண்டிதக் கவிஞர்களுக்கும் வித்தியாசமில்லை. இரு சாராரும் தமது வித்துவச் செருக்கைக் காட்டுவதற்காகவே கவிதைகளை உற்பத்தி செய்கின்றார்கள்; கவிதைகளைப் படைப்பதில்லை.
லாங்ஸ்ரன் ஹியூஸ் கவிதைகள் [தமிழில் : அ. யேசுராசா]
அமெரிக்காவில் மிஸூரியிலுள்ள ஜோப்லின் என்ற சிறிய நகரத்தில் 1902 இல் பிறந்த கறுப்பினத்தவர். “இரவைப் போன்று கறுப்பானவன் / எனது ஆபிரிக்காவின் ஆழங்களைப் போன்று கறுப்பானவன்” என்பவை அவரது வரிகள்.ஆங்கிலத்தில் எழுதியவர். கறுப்பர்களுக்காய்ப் புலம்பல் மற்றும் கவிதைகள், ஒருபுதிய பாடல், அன்புக்குரிய அழகிய மரணம் முதலிய அநேக கவிதைத் தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன. புனைகதை,நாடகம், சுயசரிதை நூல்களையும் எழுதியுள்ளார். 1967இல் மரணமானார்.
சமகால அரசியல் நாவலில் எழுத்தாளர்கள் அக்கறை கொள்ளாததற்கு பல காரணங்களை யூகிக்க முடியும். ஆனால், மக்கள் சார்ந்த இயக்கங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் சமகால அரசியல், சமூக நடைமுறை பற்றிய முன்னெடுப்புகளிலும், போராட்டங்களிலும் ஈடுபடுகிற அவசியம் காரணமாக அது படைப்புகளிலும் விஸ்தாரமாக இடம் பெறுவதுண்டு. பொன்னீலன் போன்றவர்கள் பொதுவுடைமைக் கட்சி சார்ந்த இலக்கிய இயக்கங்களோடு தொடர்ந்து செயல்படுவதால் அவர் படைப்பு சார்ந்த அனுபவங்களுக்கு சமகால அரசியலை, தொடர்ந்து எடுத்து இயங்கி வருகிறார். அவரின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ‘புதிய தரிசனங்கள்’ நாவல் நெருக்கடி காலத்தையொட்டிய ஒரு யதார்த்த படைப்பாகும். ’மறுபக்கம்’ நாவலில் மண்டைக்காட்டுச் சம்பவம் முதல் 2002 வரையிலான குமரி கிராமங்களின் பல்வேறு வகை ஜாதிகள், மதங்களைச் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. சேதுமாதவன் என்ற இளைஞன் கன்னியாகுமரியின் பசுவிளை என்ற நாஞ்சில் நாட்டு கிராமத்திற்கு மண்டைக்காடு பற்றிய கள ஆய்வுக்காகச் சென்று தரவுகளைச் சேகரிக்கிறான். அந்தத் தரவுகளின் சேகரிப்பே இந்த நாவலாகியிருக்கிறது. அந்த கிராம மனிதர்களின் வாழ்க்கையூடே தோள்சீலை கலகம், வைகுண்ட சாமியின் ஆன்மீகப் பணி, அடிமை ஒழிப்பு, கன்னியாகுமரி தமிழ்நாடு இணைப்புப் போராட்டம், மண்டைக்காடு சம்பவம் போன்றவற்றின் தரவுகளும், அதில் பங்கு பெற்ற, சாட்சியாய் இருந்தவர்களின் வாக்குமூலங்களும் பதிவாகியிருக்கின்றன. இவை ஆவணப் பதிவுகளாக வெவ்வேறு அடுக்குகளில் அமைந்திருக்கின்றன. அந்தக் கால மனிதர்களின் வாழ்க்கை மத, ஜாதிப் பிரச்சனைகளால் அல்லலுறுவதை நாவல் விவரிக்கிறது. அதற்கு தரவுகளும் வாக்கு மூலங்களும் தவிர பழைய மரபுக் கதைகள், நாட்டுப்புற தொன்மங்கள், நாட்குறிப்புகள், உரைகள் போன்றவையும் பயன்படுகின்றன. விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையாக அவை விரிகின்றன. விழிப்பு நிலையிலான மாயத் தோற்றம் ஒரு அடுக்காகிறது. கனவு சார்ந்து யதார்த்த வாதம் இன்னொரு அடுக்காகிறது.
– அவ்வப்போது வாசிக்கும் விடயங்களின் யோசிப்பு, மற்றும் யோசிப்பு (நனவிடை தோய்தல்) பற்றிய சிறு குறிப்புகளிவை. –
என் வாழ்க்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகைக்கும் , குறிப்பாக அதன் ‘மாணவர் மலர்’ பகுதிக்கும் முக்கியத்துவமுண்டு. அப்பொழுது நான் வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். ஈழநாடு மாணவர் மலரில் ‘தீபாவளி இனித்தது’ என்றொரு கட்டுரைப் போட்டியினை உயர்தர மாணவர்களுக்காக அறிவித்திருந்தார்கள். அதற்கு நானுமொரு கட்டுரையினை …’தீபாவளி இனித்தது’ என்னும் தலைப்பில் அனுப்பினேன். அப்போட்டியில் தெரிவான கட்டுரை கண மகேஸ்வரனின் கட்டுரை. அவர் அப்பொழுது உயர்தர மாணவராகப் படித்துக்கொண்டிருந்தார். எனது கட்டுரை பிரசுரமாகவில்லையென்றாலும், வவுனியா மகா வித்தியாலயத்து ஆறாம் வகுப்பு மாணவன் கிரிதரனின் கட்டுரை நன்றாக இருந்தது என்னும் அர்த்தத்தில் குறிப்பொன்றினை ஈழநாடு மாணவர் மலர் வெளியிட்டிருந்தது. அந்த வயதில் அது எனக்கு மிகவும் ஊக்கத்தைத் தந்தது. அதன் பின்னர் சுதந்திரனுக்குப் பொங்கல் கவிதையொன்றினை எனது ஏழாம் வகுப்பு மாணவனாக இருந்த சமயம் அனுப்பினேன். அது தான் முதன் முதலாகப் பத்திரிகையொன்றில் வெளியான எனது கவிதை. இதன் பின்னர் அவ்வப்போது ஈழநாடு மாணவர் மலருக்குக் கவிதைகள், கட்டுரைகள் அனுப்பியிருக்கிறென். அவற்றையும் ஈழநாடு மாணவர் மலர் பிரசுரித்து என்னை ஊக்கப்படுத்தியிருந்தது. பீன்னர் எனது பதின்ம வயதில் எனது சிறுகதைகள் நான்கு ஈழநாடு வாரமலரில் பிரசுரமாகியிருந்தன. கட்டுரைகள் சிலவும் ,’நல்லூர் இராஜதானி நகர அமைப்பு’, மற்றும் ‘பழைமையின் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதன் அவசியம்’ பற்றி எழுதியவை, ஈழநாடு வாரமலரில் பிரசுரமாகியுள்ளன. அப்பொழுது ஈழநாடு வாரமலரின் ஆசிரியராகப் பெருமாள் என்பவர் இருந்தார். அவரை நான் ஒருமுறையும் சந்தித்ததில்லை. ஆனால் அவர்தான் என் சிறுகதைகளைப் பிரசுரித்து ஊக்குவித்தவர். அண்மையில் எழுத்தாளர் செங்கை ஆழியானின் ‘ஈழநாடு சிறுகதைகள்’ பற்றிய ஆய்வுக் கட்டுரையினை ‘மல்லிகை ஆண்டு மலரொன்றில் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதில் அவர் என்னை ஈழநாடு பத்திரிகையின் ஏழாவது தலைமுறைப் படைப்பாளிகளிக்லொருவராகக் குறிப்பிட்டு, எனது ‘மணல்வீடுகள்’ என்னும் சிறுகதை பற்றியும் குறிப்பிட்டிருந்தார். ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் ஈழநாடு பத்திரிகையின் பங்களிப்பை இன்னும் நினைவு வைத்து இதுபோன்றதொரு கட்டுரையினை எழுதிய செங்கை ஆழியான் பாராட்டுக்குரியவர். இது போல் ‘இலங்கையில் வெளியான ஏனைய பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான புனைகதைகள் பற்றியும் (சிறுகதை, நாவல் போன்ற) யாராவது எழுதினால் நல்லது. அவை பயனுள்ள ஆவணப் பதிவுகளாகவிருக்கும்.
எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை 74 ஆண்டுகள் வாழ்ந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளவர். தான் செயலாற்றியது எத்துறையானாலும் அத்துறைக்கு வளம் ஊட்டி சிறப்பித்தவர். தேசீய போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றவர். எவ்வளவு சிறப்பான ஆளுமையான போதிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர். அடக்கம் மிகுந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக, மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். பட்டங்களோ, விருதுகளோ பணமுடிப்புகளோ அவரை வந்தடைந்ததில்லை. அவர் எதிர்பார்த்ததுமில்லை. அக்காலத்தில் அவரைச் சூழ்ந்த பலரையும் போல தம் இயல்பில் இயல்பில் வாழ்ந்தவர். நாடு சுதந்திரம் பெற்றதும் தியாகிகளுக்கு ஐந்து ஏக்கம் நிலம் மாதாந்திர ஊதியம் என்றெல்லாம் தரப்பட்ட போதிலும், காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் எல்லோரையும் நன்கு தெரிந்த போதிலும் தம் இயல்பில் வாழ்ந்த வாழ்வுக்கு தியாகம் என்று பெயர் சூட்டி அங்கீகாரமும் பிரதிபலனும் கோரவில்லை.
– அவ்வப்போது வாசிக்கும் விடயங்களின் யோசிப்பு, மற்றும் யோசிப்பு (நனவிடை தோய்தல்) பற்றிய சிறு குறிப்புகளிவை. –
இன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம். நாகரிகத்தின் உச்சியிலிருப்பதாகக் கூறிப் பெருமிதமுறும் மனித இனமே நாணித்தலை குனிய வேண்டிய தினம். நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதிகளெல்லாம் நெருப்போடு நெருப்பாக அழிந்தே போய்விட்டன. இவற்றின் அழிவினைத் தாங்க மாட்டாத பாதிரியார் ஒருவரும் , தாவீது அடிகள், மாரடைப்பால் இறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இந்த யாழ் பொதுசன நூலகம் என்னைப் பொறுத்தவரையில் என் வாழ்க்கையில் ஒரு அங்கமே என்று கூறிக்கொள்ளும் வகையில் ஆகியவொன்று. ஒவ்வொரு வாரமும் பல தடவைகள் அங்கு செல்வதுண்டு. என்னைப் பொறுத்தவரையில் நான் வணங்கும் ஆலயங்கள் என்றால் அவை நூலகங்களே. அதிலும் இந்த யாழ் நூலகத்துக்குத் தனி முக்கியத்துவமுண்டு. சிறுவர் நூல்கள், அறிவியல் நூல்கள், வெகுசன நாவல்கள், கவிதைகள், நாடகங்கள், இலக்கிய நூல்கள் … என எத்தனை வகையான நூல்கள். நான் ஒன்பதாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது இந்த நூலகத்தில் எத்தனையோ அறிவியல் நூல்களைப் படித்திருக்கின்றேன். மிகவும் அழகாக விஞ்ஞானத்தின் பல்வேறு பிரிவுகளிலும் நூல்களை அக்காலகட்டத்தில் சென்னையிலுள்ள பதிப்பகமொன்று வெளியிட்டுக்கொண்டிருந்தது. பெளதிகத்தின் வரலாறு, கடலின் வரலாறு, உயிரினங்களின் வரலாறு,.. என்பது போன்ற தலைப்புகளிருக்கும். பெளதிகத்தின் வரலாறு என்னுமந்த நூலில் ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற சக்திக்கும், பொருளுக்குமிடையிலான தொடர்பினை வெளிப்படுத்தும் சூத்திரத்தை, ஒளித்துகளுக்கு உந்தம் மற்றும் இயக்கச்சக்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய சூத்திரங்களை ஒன்றிணைப்பதன் மூலம் நிறுவியிருந்தது இன்னும் பசுமையாக மனதிலுள்ளது. ‘நீங்களும் விஞ்ஞானியாகலாம்’ என்றொரு நூல் மிகவும் அழகான சித்திரங்களுடன் வெளியாகியிருந்தது. அக்காலகட்டத்தில் மிகவும் பிடித்த புத்தகங்களில் அதுவுமொன்று. அதில் உருப்பெருக்கும் கண்ணாடியுடன் சிறுவர்கள் வீட்டின் பின்புறத்தே ஆய்வில் ஈடுபட்டிருக்கும் காட்சியினைச் சித்திரிக்கும் வகையில் சித்திரங்களிருந்தன. மாணவர்களுக்கு விளங்கும் வகையில் விஞ்ஞானப் பரிசோதனைகள் பல அந்நூலில் விபரிக்கப்பட்டிருந்தன. அவை எங்கள் ஆர்வத்தைத் தூண்டி விட்டன. மேற்படி விஞ்ஞான நூல்களில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் பிரசுரமான அறிவியல் நூல்களின் தரமான மொழிபெயர்ப்புகளே. இவை போன்று ஏன் இன்று தரமான நூல்கள் மாணவர்களுக்காக வெளிவருவதில்லை?