வாசிப்பும், யோசிப்பும் – 15: பிரமிளின் ‘காலவெளி’: ‘கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு’

பிரமிள்[பதிவுகள் இணைய இதழின் ஆகஸ்ட் 2007 இதழ் 92  இதழில் வெளியான பிரமிள் பற்றிய கட்டுரையினை இம்முறை வாசிப்பும், யோசிப்பும் பகுதிக்காகப் பதிவு செய்கின்றோம். எம்மைப் பொறுத்தவரையில் மகாகவி பாரதிக்குப் பின்னர் தமிழ் இலக்கிய உலகில் பாரதியைப் போன்றதொரு தேடல் மிக்க படைப்பாளிகளில் முதன்மையானவராகப் பிரமிளையே காண்கின்றோம். பிரமிளும் பாரதியைப் போல் தான் வாழ்ந்த சமூகத்தின் பல்வேறு சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த அதே சமயம் இருப்பு பற்றிய தேடலிலும் தனது கவனத்தைச் செலுத்தியவர். அவரது கருத்துகள் எதுவாகவிருந்தபோதிலும் அவரது பன்முக வாசிப்பும், தேடலும், அவற்றை வெளிப்படுத்தும் அவரது படைப்புகளும் முக்கியமானவை. – பதிவுகள் -] அண்மையில் பிரமிளின் ‘வானமற்ற வெளி’ (கவிதை பற்றிய கட்டுரைகள்) என்னும் தொகுதியினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. தமிழில் புதுக்கவிதையென்றால் படிமங்களுக்குப் பெயர் போன பிரமிளின் கவிதைகளைக் குறிப்பிட யாரும் மறுப்பதில்லை. குறிப்பாக ‘பூமித்தோலில் அழகுத் தேமல், பரிதிபுணர்ந்து படரும் விந்து’ என்னும் கவிதையினைக் குறிப்பிடாத விமர்சகர்களே இல்லையெனலாம். இத் தொகுதியிலுள்ள கட்டுரைகள் பிரமிளின் எழுத்துச் சிறப்பினைப் புலப்படுத்துவன. அவரது ஆழ்ந்த சிந்தனையினையும், வாசிப்பினையும் கூடவே புலமைத்துவத்துடன் கூடியதொரு கர்வத்தினையும் வெளிப்படுத்துவன. அந்தக் கர்வம் அளவுமீறி சில சமயங்களில் அணையுடைத்துப் போவதுமுண்டு என்பதற்கும் சான்றாக சில கட்டுரைகளில் வரும் கூற்றுக்கள் விளங்குகின்றன. அவ்விதம் கர்வம் அளவு மீறி விடும்போது, ‘தனக்கு எல்லாமே தெரியுமென்ற அதிமேதாவித்தனத்தினைக் காட்ட முற்படும்பொழுது’  அதுவே அவர்மேல் எதிர்மறைவான விளவுகளை ஏற்படுத்தி விடுவதற்கு இத்தகைய கூற்றுகள் காரணமாகிவிடுகின்றன. இந்தக் கட்டுரை பிரமிளின் மேற்படி ‘வானமற்ற வெளி’ நூல் பற்றிய மதிப்புரையோ அல்லது விரிவான் விமரிசனமோ அல்ல. இது பிரமிளின் கவிதைகள் பற்றிய விரிவான விமரிசனமுமல்ல. மேற்படி நூலிலுள்ள சில கருத்துகள் ஏற்படுத்திய என் மன உணர்வுகளின் வெளிப்பாடாகவே இதனைக் குறிப்பிடலாம்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் -14: கலாநிதி இ.பாலசுந்தரத்தின் ‘புகலிட மண்ணில் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்’ கட்டுரை பற்றி….

வாசிப்பும், யோசிப்பும் -14: கலாநிதி இ.பாலசுந்தரத்தின் 'புகலிட மண்ணில் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்' கட்டுரை பற்றி...கனடாவிலிருந்து வெளிவரும் ‘தமிழர் தகவல்’ மாத இதழின் 22வது ஆண்டு மலரை அண்மையில் வாசிக்க முடிந்தது. அந்த மலரைப் பற்றிய விமர்சனமல்ல இது. அதில் வெளிவந்திருந்த இரு கட்டுரைகள் பற்றிய சில குறிப்புகளே இநத என் எண்ணப்பதிவு. பொன்னையா விவேகானந்தன் ‘கனடியத் தமிழர் வாழ்வும் வளமும்’ என்றொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அக்கட்டுரையின் தலைப்பு இதே தலைப்பில் தமிழகத்திலிருந்து ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட ‘தமிழ்க்கொடி 2006’ ஆண்டு மலரில் நான் எழுதிய கட்டுரையான ‘கனடாத் தமிழர் வாழ்வும் வளமும்’ என்னும் கட்டுரையின் தலைப்பினையே எனக்கு ஞாபகப்படுத்தியது  மேற்படி எனது கட்டுரையினைக் கனடாவிலிருந்து ஆண்டுதோறும் வெளிவரும் ‘தமிழர் மத்தியில்’ வர்த்தகக் கையேடும் சில வருடங்களுக்கு முன் தனது கையேட்டில் மீள் பிரசுரம் செய்திருந்தது. இது போன்ற கட்டுரைகளை எழுதுபவர்கள் ஏற்கனவே அத் தலைப்புகளில் கட்டுரைகள் வெளிவந்திருந்தால் இயலுமானவரையிலும் தவிர்ப்பது நல்லதென்பதென் கருத்து. மேற்படி மலரில் கலாநிதி இ.பாலசுந்தரம் ‘புகலிட மண்ணில் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்’ என்றொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அக்கட்டுரை பற்றிய சில கருத்துகளே எனது இந்தப் பதிவு.

Continue Reading →

தலிபான் வசமிருந்து தப்பித்தல்

“தலிபான் எமது காலத்தின் பிற்போக்குத் தனத்திற்கு சாட்சி. சிலவேளைகளில் தலிபான் என்பது நம் சமகாலத்தின் அரசியலைத் தெரிவிக்கும் வரலாறு. தலிபான் என்பது நாம் பெற்ற கல்வியையும் பயிற்சியையும் எமக்கு ஞாபகமூட்டுவது. எமது வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தும் சட்டங்களுக்கு மற்றொரு பெயர் தலிபான். சொர்க்கத்தினை அடையும் ஆசையின் பொருட்டும,; கடவுள் நம்பிக்கையின் பொருட்டும் நாம் சுமந்து திரியும் பயத்தில் விளைந்த எழுதப்படாத சட்டத்தின் பெயர் தலிபான். மதவெறிகொண்ட எந்த அரசும் தலிபானின் தன்மை படைத்ததுதான். அமெரிக்க ஜனநாயக சமூகத்தில் பாசிசவாதியான ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸினைச் சுற்றியிருக்கும் குழவினர் தலிபான்கள்தான். பின்லேடன் ஒரு தலிபான். ஜார்ஜ் புஸ் ஒரு தலிபான். ஸமீரா மக்மல்பாவ் ஒரு தலிபான். தலிபான் எனும் வார்த்தையைப் பிறவற்றுடன் இணைத்துப் பொறுத்திச் சொல்ல என்னை அனுமதியுங்கள். நான் தலிபான். நீங்கள் தலிபான். அவர் தலிபான். நாங்கள் தலிபான்கள். அவர்கள் தலிபான்கள். நாம் எல்லோரும் தலிபான்கள்.”  – ஸமீரா மெக்மல்பாவ், ஈரானிய திரைப்பட இயக்குநர் –

1.

யமுனா ராஜேந்திரன் -திரைப்படம் வழி வரலாற்தை தேடிச் செல்பவன் எனும் அளவில், தலிபான் குறித்துச் சிந்திக்கிறபோது பல்வேறு முன்வரலாற்று அனுபவங்களும், திரைப்படப் பதிவுகளும் உடனடியாகவே ஞாபகம் வருகிறது. இருபதாம் நூற்றாண்டு வரலாற்றை எடுத்துக் கொண்டால் பாசிசத்தைக் கருத்தியலாக நிறுத்திய இனக்கொலை வரலாறு, அதிகாரவர்க்கத்திற்கும் பழமைவாதிகளுக்கும் எதிரானது எனக் கோரப்பட்டு அறிவுஜீவிகளுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் அப்பாவி மக்களுக்கும் எதிராகத் திரும்பிய கலாச்சாரப் புரட்சி, ஸ்டாலின் காலத்துச் சைபீரியப் பாலைவன சித்திரவதை முகாம்கள், அதீத மானுடக் கனவில் விளைந்து பிற்பாடு மனிதக் கபாலங்களின் எண்ணிக்கையைக் குவித்த கொடூரமாக மாறிய போல்பாட் காலத்திய பூஜ்யவரலாற்று மானுட விரோத நடவடிக்கைகள் என கருத்தியல்களுக்கும் வன்முறைக்குமான சாட்சியமாக வரலாறு நம் முன் இருக்கிறது. சின்ட்லர்ஸ் லிஸ்ட், கில்லிங் பீல்ட்ஸ், பாஸ்டர்நாக், டுலிவ், புளு கைட், பேர்வல் மை காங்குபைன் போன்ற திரைப்படங்கள் முறையே பாசிசம், போல்பாட் படுகொலைகள், ஸைபீரிய முகாம் சித்திரவதைகள், கலாச்சாரப் புரட்சி காலத்து அத்துமீறல்கள் போன்றவற்றின் திரைச் சாட்சிகளாக நமக்கு முன் இருக்கின்றன.

Continue Reading →

ஒரு புதிய அறிமுகம் – இரண்டு பழையவர்கள்

- வெங்கட் சாமிநாதன் -க. சட்டநாதன், தன் மூன்று சிறுகதைத் தொகுதிகளை சில மாதங்கள் முன் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் எழுபதுகளிலிருந்து எழுதிவருபவர், யாழ்ப்பாணக்காரர். இது காறும் இவரது சிறுகதைகள் ஐந்து தொகுப்புகளாக வெளிவந்துள்ளன எனத் தெரிகிறது. எனக்கு அவர் அனுப்பி வைத்தவை சமீத்திய மூன்று தொகுப்புகள்,  2010-ல் வெளியான முக்கூடல் என்னும் தொகுப்பையும் சேர்த்து. நாம் அறுபதுகளில் முதன் முதலாக சரஸ்வதி பத்திரிகையில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய மௌனிவழிபாடு என்ற கட்டுரை மூலம் தெரிய வந்த ஏ.ஜெ. கனகரத்னா சட்டநாதன் கதைகளைப் பாராட்டி எழுதியிருக்கிறார். சட்ட நாதனின்  புதியவர்கள் என்னும் தொகுப்பு ஒன்றும் நான் பத்து வருடங்களாகத் தங்கியிருந்த சென்னைப் புறநகர் மடிப்பாக்கத்தின் பொன்னி என்னும் பிரசுரம் 2006 – ல் வெளியிட்டுள்ளது. ஆனால் எனக்கு அந்த பிரசுரத்தின் இருப்பே தெரிந்திருக்க வில்லை.  சட்டநாதனும் அவர் சிறுகதைத் தொகுப்புகளை அனுப்பி வைத்த பிறகுதான் எனக்கும் சட்டநாதனையே தெரியவந்துள்ளது. சட்ட நாதனின் சமீபத்திய தொகுப்பான முக்கூடலுக்கு குப்பிழான் ஐ சண்முகம் என்னும் இன்னொரு சிறுகதை எழுத்தாளர் சட்டநாதனின் படைப்பு வெளி என்ற தலைப்பில் ஒரு பாராட்டுரையையும் அறிமுகமாகத் தந்திருக்கிறார். குப்பிழான் ஐ சண்முகமும் 1946- பிறந்த, எழுபதுகளிலிருந்து சிறுகதைகள் எழுதிவரும் அறுபத்து ஏழு வயதினர். அவருடைய தொகுப்பு ஒன்றை, ஒரு பாதையின் கதை, காலச்சுவடு வெளியிட்டுள்ளது சில மாதங்கள் முன்பு. சொல்லி வைத்தாற்போல் அதுவும் ஓரிரு மாதங்கள் முன்பு எனக்குக் கிடைத்துள்ளது. நாற்பது வருடங்களுக்கு மேலாக எழுதி வரும் இவ்விருவரை பற்றி நான் அறிந்தவனில்லை. நாம் அறிந்தவர் இல்லை என்று என் அறியாமையைப் பொதுமைப் படுத்த முடியுமோ என்னவோ தெரியவில்லை. உலகில் எது ஒன்று பற்றியும் அறியாதவர் களேயாயினும், அறியாதவர்கள் என்று யாரும் சொல்லி விட்டால் நம்மவர்களுக்கு அசாதாரண கோபம் வருமாதலால், இந்த அறியாமையை என்னுடனேயே நிறுத்திக்கொள்கிறேன். இவ்விருவர் பற்றியுமோ, அவர்கள் எழுத்துக்கள் பற்றியுமோ இங்கு எந்த தமிழ் பத்திரிகையிலும் படித்ததாக எனக்கு நினைவில்லை. இருந்தாலும். ஒரு பெரும் குற்றச் சாட்டு அறுபதுக்களில் எழுந்ததுண்டு. இலங்கை தமிழ் எழுத்தாளர்களை நாம் அங்கீகரிப்பதில்லை என்று. நியாயமான குற்றச் சாட்டு தான் என்று நான் அப்போது நினைத்ததுண்டு. அதற்குப் பதில் சொல்லும் வகையில் தானோ என்னவோ அறுபதுகளிலிருந்து கலாநிதிகள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, பின் இவர்களுக்கு எதிர்முனையாக, எஸ் பொன்னுத்துரையும்  ஒரு பெரும் புயலாக நீண்ட காலம் தமிழ் இலக்கிய வெளியில் மிகுந்த  செல்வாக்குடன் பவனி வந்தார்கள்.  அனேகமாக இன்னமும் கூடத்தான்.

Continue Reading →

வாசிப்பும் , யோசிப்பும் – : கா.சிவத்தம்பியும் ’50 வருட ஈழத்துத் தமிழ் இலக்கியமும்’

 பேராசிரியர் கா.சிவத்தம்பிபேராசிரியர் கா.சிவத்தம்பியின் பிறந்த தினமான மே 10 அன்று அவரை நினைவு கூரும் முகமாக நிகழ்வுகள் பல நிகழ்ந்தன. தமிழ் இலக்கியச் சூழலில் தவிர்க்க முடியாத முக்கியமான ஆளுமைகளிலொருவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். எழுத்தாளர் ஜெயமோகன் தனது கட்டுரையான ‘கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு’ என்னும் கட்டுரையில் பேராசிரியர் பற்றிய தனது கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருப்பார். அதில் அவர் பேராசிரியர் கா.சிவத்தம்பியை இலக்கியத் திறனாய்வாளராக இனங்காண்பதற்குப் பதில் இலக்கியக் கோட்பாளராகவே இனங்கண்டிருப்பார். மேலும் பேராசிரியரின் தேடல் பற்றிய கேள்வியினையும் பேராசிரியரின் ‘தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்’ நூலிலுள்ள் இறுதிக்கட்டுரையினை ஆதாரமாகக் கொண்டு எழுப்பியிருப்பார். அதில் ஜெயமோகன் கீழ்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

Continue Reading →

சவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும், மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்!

சவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும், மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்!தன்னை விடவும் 75 வயதுகள் கூடிய ஒரு முதியவரைத் திருமணம் செய்ய நேர்ந்த 15 வயது இளம்பெண் மற்றும் அனைத்து நாடுகளினதும் கெஞ்சல்களை மீறி சிரச்சேதம் செய்யப்பட்ட இளம்பெண் ரிஸானா நபீக். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த இரண்டு இளவயதுப் பெண்கள் தொடர்பான செய்திகளே சவூதி அரேபிய ஊடகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாக அமைந்தன. தாம் இந்தளவுக்குப் பிரபலமாகப் போகிறோமென கிஞ்சித்தேனும் நினைத்துக் கூடப் பார்த்திராத இப் பெண்கள் முழு உலகத்தினதும் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள்.  90 வயது முதியவரைத் திருமணம் முடிக்க நேர்ந்த சிறுமியின் பெயர் ஊடக தர்மத்தின் காரணமாக எந்த ஊடகங்களாலும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் அவரது வயது பதினைந்து எனக் குறிப்பிட்டுள்ளது. சவூதியரான தாய்க்கும், யெமனைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்த இந்தச் சிறுமியின் குடும்பம் மிகவும் வறியது. வறுமையிலிருந்து மீளும் வழியை, 90 வயது முதியவரொருவர் இவரது தாயிடம் எடுத்துக் கூறியிருக்கிறார். அதாவது 17,500 அமெரிக்க டொலர்கள் தந்து அப் பெண்ணைத் தான் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறியதும், வேறு வழியின்றி பெற்றோர் சம்மதிக்க வேண்டியதாயிற்று. தனது எதிர்காலத்தை இருளுக்குள் தள்ள வேண்டாமென பெற்றோரிடமும், உறவினர்களிடமும் அழுது புலம்பிய சிறுமியின் கதறல்கள் பலனற்றுப் போயின. பணத்தினைப் பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் சிறுமியை முதியவரின் வீட்டில் கொண்டுபோய் விட்டனர்.

Continue Reading →

மீள்பிரசுரம்: பேராசிரியர் கா. சிவத்தம்பியுடன் ஒரு நேர்முகம்

 பேராசிரியர் கா.சிவத்தம்பி[ பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பிறந்த தினம் மே 10. அதனையொட்டி உயிர்நிழல் சஞ்சிகையில் வெளியான இந்த நேர்காணல் மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள் ]

ய.ரா: நாங்கள் இந்த நேர்காணலிலை முழுக்க மார்க்சியம், மார்க்சியத்தினுடைய எதிர்காலம் இவை தொடர்பான விடயங்கள் குறித்துப் பேசலாம் என்று எண்ணுகிறேன். சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கான காரணங்களை நீங்கள் எப்படி assess(மதிப்பீடு) பண்ணுகிறீர்கள்?

கா.சி : சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கான காரணக்களை நான் இப்படிப் பார்க்கிறேன். இந்த மார்க்சியத்திற்கு ஏற்பட்ட முக்கியமான பிரச்சினை என்னவென்றால் சோவியத் stateஇனுடைய, சோவியத் அரசினுடைய development-உம் சோவியத் அரசு ரஷ்யப் பேரரசினுடைய பகுதிகளை சோவியத் அரசுக்குள் கொண்டு வரவேண்டிய– கொண்டு வந்த நிர்ப்பந்தமும் இதன் காரணமாக, தொடக்கம் முதலே காணப்பட்ட ஒரு சமனற்ற வளர்ச்சியும, சோவியத் ரஷ்யப் புரட்சியை, ரஷ்யப் பேரரசின் மாநிலங்கள் முழுவதற்கும் புதுமையாக ஆக்க முனைந்ததில் எற்பட்ட வரலாற்றுப் பிரச்சினைகள் அடிப்படையில் உள்ளன என்று நான் கருதுகிறேன். புரட்சி ஏற்பட்டது ரஷ்யாவில்தான், மொஸ்கோவில்தான். ஆனால் ரஷ்யப் பேரரசு, கசாக்ஸ்தான் வரை துருக்கிஸ்தான் வரை நீண்டு கிடந்தது. லெனின் காலத்திலே படிப்படியா இவையெல்லாம் அதாவது 27, 28 இலை தான் வந்து சேருது. இங்கெல்லாம் பெரிய ஒரு revolution உடைய தன்மைகள் பற்றியோ புரட்சி பற்றியோ அதற்கான சிந்தனைகளே இருந்தது கிடையாது.

Continue Reading →

(9) – செல்லப்பா: தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு!

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -நான் முதன் முதலாக 1961-ல் செல்லப்பாவைப் பார்க்கச் சென்ற போது, அங்கு திரிகோணமலையிலிருந்து வந்திருந்த தருமு சிவராமுவை, செல்லப்பாவின் வீட்டில் சந்தித்ததைப் பற்றிச் சொன்னேன். அது எனக்கு எதிர்பாராத  மகிழ்ச்சி தந்த ஒரு சந்திப்பு. திரிகோணமலையிலிருந்து வந்தவருக்கு தமிழ் நாட்டில், சென்னையில் யாரைத் தெரியும்? எழுத்து பத்திரிகையைத் தெரியும். அதன் ஆசிரியர் செல்லப்பாவைத் தெரியும். செல்லப்பா அப்போது என்ன, எப்போதுமே சம்பாத்தியம் என்பது ஏதும் இல்லாத மனிதர். வத்தலக்குண்டுவிலிருந்து சென்னைக்கு எழுத்தாளராகவே வாழ வந்தவர். க.நா.சு பத்திரிகை ஒன்று வெளியிட்டுக் கொண்டிருந்த போது அவருக்கு உதவியாக ஆசிரியர் குழுவில் இருந்தவர். சிறு பத்திரிகைகள் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும்? தினமணி கதிரில் சில காலம் வேலை செய்து வந்தார். பின்னர் அங்கு ஆசிரியராக இருந்த துமிலனோடு ஒத்துப் போக முடியவில்லை என அதையும் விட்டு வெளியே வந்தவர். அப்போது பிறந்தது தான், “நமக்கு மரியாதை இல்லேன்னா, ஒருத்தர் வீட்டு வாசற்படியை என்னத்துக்கு மிதிக்கறது?” என்ற மந்திரச் சொல் அறச்சீற்றமாக அவ்வப்போது அவரிடமிருந்து வெளிவரும். அந்த சமயத்தில் தான் சிவராமூவை, செல்லப்பா தன்னுடனேயே வீட்டில் தங்கச் செய்தார்.  சிவராமூ தான் வேறு எங்கு செல்லக் கூடும்!

Continue Reading →

வ.ந.கிரிதரனின் கவிதைகள்!

1. சுடரும் இரகசியங்கள்!.

வ.ந.கிரிதரனின் கவிதைகள்!இருண்டு கிடக்கிறது இரவு வான்.
சுடரும் பெண்கள்; விரியும் வெளி.
தனிமையின் மோனம். இலயிப்பினில்
இருப்பு. பெண்களே! பெண்களே! பகர்ந்திடுவீரா உம்
இரகசியத்தை? ‘அஞ்சுதலற்ற கதிர்கள்.சூனியத்தைத்
துளைத்து வருமொளிக் கதிர்கள்.
அட, அண்டத்திலார்க்கும் அஞ்சுவமோ?
ஓராயிரம் கோடி ஆண்டுகள்
ஓடியே வந்தோம்; வருகின்றோம்;
வருவோம். காலப் பரிமாணங்களைக் காவியே
வந்தோம்; வருகின்றோம்; வருவோம்.
வெளியும் விரவிக் கிடக்கும்
சூனியமும் கண்டுதான் துவண்டோமோ?
அஞ்சுதலற்ற நெஞ்சினர் எம்முன்னே
மிஞ்சி நிற்பவர்தானெவருமுண்டோ?
தெரிந்ததா? விளக்கம் புரிந்ததா?
நொக்குங்கள்! நோக்குங்கள்!
நோக்கம்தான் புரிந்ததுவோ?’
புரிந்ததில் இனித்தது இரவுப்
பொழுது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 12: வர்த்தமான மகாவீரனின் (மாரப்பன்) ‘டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம்’

 வர்த்தமான மகாவீரனின் (மாரப்பன்) 'டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம்'அண்மையில் இளங்கோவின் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றபோது நிகழ்வு முடியும் நிலையிலிருந்தது. வன்முறையும் எழுத்தும் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இளங்கோவின் நூலினை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. வாசித்து முடித்ததும் பின்னர் அதுபற்றி எழுதுவேன். ஆனால் வாசித்த அளவில் இளங்கோவின் கதைகள் கூறும் பொருள் முக்கியமானதென்று உணர்ந்தேன். புலம்பெயர்ந்த சூழலில் நிலவிய இளைஞர் குழுக்கள் பற்றிய பதிவுகளை அவரது சிறுகதைகள் பல செய்துள்ளன. இவ்விதமான ஆவணப்பதிவுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானவை. இது போல் அண்மையில் வடலி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட கருணை ரவியின் ‘கடவுளின் மரணம்’ சிறுகதைத் தொகுப்பும், யோ.கர்ணனின் ‘சேகுவேராவின் வீடு’ தொகுப்பும் ஆவணப்படுத்தும் விடயங்கள் முக்கியமானவை. ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் காலகட்டத்தில் , சிறு துண்டு நிலத்தினுள் அடைந்து கிடக்கும் மக்கள் அடையும் துயர், அன்றாட அத்தியாவசியக் கடமைகளைச் செய்வதற்காக அவர்கள் (குறிப்பாகப் பெண்கள்) அடையும் சிரமங்கள் இவற்றையெல்லாம் கருணை ரவியின் சிறுகதைகள் ஆவணப்படுத்துகின்றன.  மேற்படி இளங்கோவின் நூல் வெளியீட்டில் ‘காலம்’ செல்வத்தின் ‘வாழும் தமிழ்’ புத்தகக் கண்காட்சியும் / விற்பனையும் நடைபெறறது. இம்முறை எனக்கொரு புதையல் அங்கு கிடைத்தது. வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்) எழுதி, தானே வெளியிட்ட ‘டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம்’ நெடுங்கவிதையின் மொழி பெயர்ப்பும், அது பற்றிய விரிவான திறனாய்வும் அடங்கிய நூல். நீண்ட நாட்களாக யாரும் வாங்காமல் இருந்திருக்கவேண்டும், செல்வம் அதற்கு $5 என்று விலையிட்டிருந்தார். 516 பக்கங்களை உள்ளடக்கிய நூலின் விலை $ 5.  அந்த நூலுக்காக, அந்த விலைக்காக,  ‘காலம்’ செல்வத்தைப் பாராட்டுகின்றேன். அந்த நூலுக்கு அந்த விலை மிகவும் குறைவு. ஆனால் வாசகர்களின் தேவையினைப் பொறுத்தவரையில் (Demand) அது குறைவாகவிருந்த காரணத்தினால் அவர் அந்த விலையினை நிர்ணயித்திருக்கவேண்டும்போல் படுகின்றது. ஏனெனில் பல அண்மைக் காலத்து நூல்களெல்லாம் மிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அதனால்தான் அவ்விதம் கருதினேன்.

Continue Reading →