(103) – நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -சினிமா பார்த்துவிட்டு ஹோடடலுக்குத் திரும்பி வந்தேன். பயப்படும்படி ஒன்றும் நேரவில்லை. ஹோட்டலும் ரூமும் தான் பத்திரமாகத் தான் இருந்தன. பூட்டு உடைக்கப்படவில்லை. உடைப்பதற்கு அறையில் ஏதும் இல்லை. முதல் தடவையாக தனியாக வந்துள்ள அனுபவமும் தான் சற்று பயப்பட வைத்துள்ளது என்று மனம் சமாதானம் சொன்னாலும் ஹோட்டல் ஒன்றும் அப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் இல்லை. இருப்பினும் படுத்துக்கொண்டேன். இரவு முதலில் கொஞ்ச நேரம் மனம் அமைதியின்றி கழிந்தாலும் எப்படியோ தூக்கம் வந்து கவலையைத் தீர்த்தது. தூங்கினால் காட்டில் தனிமையில் இருந்தாலும் நகரச் சந்தடியில் கூட்டத் தோடு இருந்தாலும் தூக்கம் எல்லாவற்றையும் அழித்து விடுகிறது. சுய நினைவே இல்லையென்றால் எது எப்படி இருந்தால் என்ன?  காலையில் எழுந்ததும் காசிக்குப் போனால் என்ன என்று தோன்றியது. இவ்வளவு தூரம் வந்து விட்டு காசிக்குப் போகவில்லையென்றால்…? பின், எப்போது இந்தப் பக்கம் வரும் காசிக்கு இவ்வளவு அருகில் வரும் சந்தர்ப்பம் ஏற்படுமோ? அதிலும் என் காசியாத்திரைக்காகும் செலவு அலாஹாபாதில் லிருந்து காசிக்குப் போய் வரும் செலவு தான். யார் யாரெல் லாமோ நிறைய பணம் வாழ்நாளெல்லாம் சேர்த்துக்கொண்டு, சொத்துக்களை நிர்வகிக்க ஏற்பாடு செய்து,  உயில் எழுதி வைத்து விட்டுப் போவார்களாம். எனக்கு அந்த கஷ்டம் இல்லையே. அதோடு அப்பா அம்மாவுக்கு காசியிலிருந்து கங்கை ஜலச் செம்பு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால் இன்னும் சந்தோஷப்படுவார்களே. அத்தோடு புள்ளையாண்டானுக்கு அபூர்வமா காசிக்குப் போகணும், கங்கை ஜலம் வாங்கிக் கொடுக்கணும்னு அக்கறையும் பக்தியும் வந்து விட்டது என்றால் சந்தோஷம் தானே. நான் சொன்னால் நம்ப மாட்டார்கள். ஆனால் கங்கைச் செம்பு சாட்சி சொல்லுமே.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் -6: Jerzey kosinskiயின் Being There!

இந்தக் கட்டுரை சுபமங்களா, மார்ச் 1995 இதழில் வெளிவந்த போலிஸ் அமெரிக்கரான எழுத்தாளர் ஜேர்சி கொசின்ஸ்கியின் புகழ்பெற்ற நாவலான Being There பற்றிய அறிமுகக் கட்டுரை. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. ஜேர்சி கொசின்ஸ்கியின் இன்னுமொரு புகழ்பெற்ற நாவல் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்' (The Painted Birds). இது நவீன அமெரிக்க இலக்கியத்தின் முக்கியதொரு படைப்பாகக் கருதப்படுகிறது.  இரண்டாம் உலக யுத்தக் காலகட்டத்தில் , யூதச் சிறுவனான ஜேர்சி கொசின்ஸ்கி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அலைந்து திரிந்திருக்கின்றார். அக்காலகட்டத்தில் அவரடைந்த அனுபவங்களை மையமாக வைத்து எழுதிய நாவல் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்'. ஜேர்சி கொசின்ஸ்ஜியின் வாழ்வும் தற்கொலையிலேயே முடிந்து போனது சோகமானது. - வ.ந.கி]வாசிப்பும் யோசிப்பும்![ இந்தக் கட்டுரை சுபமங்களா, மார்ச் 1995 இதழில் வெளிவந்த கட்டுரை. ‘போலிஸ் அமெரிக்க’ரான எழுத்தாளர் ஜேர்சி கொசின்ஸ்கியின் புகழ்பெற்ற நாவலான Being There பற்றிய அறிமுகக் கட்டுரை. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. ஜேர்சி கொசின்ஸ்கியின் இன்னுமொரு புகழ்பெற்ற நாவல் ‘நிறமூட்டப்பட்ட பறவைகள்’ (The Painted Birds). இது நவீன அமெரிக்க இலக்கியத்தின் முக்கியதொரு படைப்பாகக் கருதப்படுகிறது.  இரண்டாம் உலக யுத்தக் காலகட்டத்தில் , யூதச் சிறுவனான ஜேர்சி கொசின்ஸ்கி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அலைந்து திரிந்திருக்கின்றார். அக்காலகட்டத்தில் அவரடைந்த அனுபவங்களை மையமாக வைத்து எழுதிய நாவல் ‘நிறமூட்டப்பட்ட பறவைகள்’. ஜேர்சி கொசின்ஸ்ஜியின் வாழ்வும் தற்கொலையிலேயே முடிந்து போனது சோகமானது. – வ.ந.கி]  அண்மையில் Jerzy kosinski எழுதிய Being There என்ற கைக்கடக்கமான சிறியதொரு நாவலைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. கடுகு சிறிது காரம் பெரிது என்பதற்கொப்ப அளவில் சிறியதானாலும் இந்நாவல் உள்ளடக்கத்தில் கனதியானது. மனிதனைப் பாதிக்கும் நிலைமைகளை ஒருவித கிண்டல் பாணியில் நோக்கி விமர்சிக்கும் வகையிலமைந்த நாவலை ‘சட்டயர்’ (Satire) என்போம். Being There அந்த வகையான நாவல்களில் குறிப்பிடத்தக்கதொன்று. உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில் இச்சிறுநாவல் இன்றைய மனிதனைப் பலமாகப் பாதிக்கும் உலக, உள்நாட்டு அரசியல் மற்றும் குறிப்பாகத் தொலைகாட்சி பற்றிப் பலமாகவே விமர்சனத்தை முன்வைக்கின்றது. உருவத்தைப் பொறுத்த வரையில் கிறிஸ்த்தவ தத்துவ சமயநூலான பைபிளினது பாதிப்பு மிக அதிகமாகவே தெரிகின்றது.

Continue Reading →

வாசிப்பும் யோசிப்பும் – 5: சங்கச் செய்யுள் – நண்டுவிடு தூது.

வாசிப்பும் யோசிப்பும்!சங்க காலத்துச் செய்யுள்கள் எப்பொழுதுமே என்னைப் பிரமிப்பில் ஆழ்த்துபவை. ஆறுதலாக அவற்றை அவ்வப்போது வாசித்து அனுபவிப்பதில் எனக்குப் பெரு விருப்புண்டு. பொதுவாக அவை என்னைக் கவர்வதன் காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: அவற்றில் காணப்படும் வளம் நிறைந்த சொற்செறிவு, கூர்ந்த நோக்கு மிக்க இயற்கை மீதான அவதானிப்பு,  படைப்பாற்றல், கற்பனைச் சிறப்பு, மற்றும் அன்றைய கால கட்டச் சமுதாய அமைப்பு பற்றிய தகவல்கள். அண்மையில் வாசித்த சங்ககாலச் செய்யுளொன்று வாசித்தபொழுது என்னை மிகவும் கவர்ந்தது. அதன் மீதான யோசிப்பின் பதிவுகளை சிறிது பகிர்ந்துகொள்ள விழைந்ததின் விளைவே இச்சிந்தனைக்குறிப்புகள்.  இந்தச் செய்யுளினை இயற்றியிருப்பவர்  மதுரைக் கள்ளிற் கடையத்தன்  வெண்ணாகனார். திணை:  நெய்தல். தன் காதலுக்குரிய தலைவனை நீண்ட காலமாகக் காணாத தலைவி, அவனுடன் திரிந்த இடங்களையெல்லாம் சென்று பார்த்து வருந்துகிறாள். அவனைக் காணாததால் ஏற்பட்ட துயர் அவளை வருத்துகிறது. தன் துயரை அவள் தன் காதலனுக்குத் தெரியப்படுத்துவதற்காக அவள் தெரிவு செய்த உயிரினம் ஆச்சரியத்தை விளைவிக்கிறது. நளன் தமயந்திக்கு அன்னத்தைத் தூது விட்டதை நாம் படித்திருக்கின்றோம். வெண்முகிலைத் தூதுவிட்ட தலைவிமாரைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் யாராவது நண்டினைத் தூது விட்டிருக்கின்றார்களா? அது பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இந்தச் செய்யுளில் வரும் தலைவி அதனைத்தான் செய்திருக்கின்றாள். ஆம், நண்டினைத் தூது விடுகின்றாள்.

Continue Reading →

வாழத் துடிக்கும் உயிர்கள்: சுப்ரபாரதிமணியனின் ‘நீர்த்துளி’ நாவல் ஒரு மதிப்பீடு)

வாழத் துடிக்கும் உயிர்கள்: சுப்ரபாரதிமணியனின் 'நீர்த்துளி' நாவல்  ஒரு மதிப்பீடு)  சுப்ரபாரதிமணியன்வாழ்க்கை ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களின் ஊடாக மனிதர்கள் உள்ளும் புறமுமாக உருமாறிக் கொண்டே இருக்கிறார்கள். இருப்புக்கும் மாற்றத்திற்கும் இடையில் வெளிப்படையான, மறைமுகமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் ஊடாக மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த மோதல்களில் ஆக்க ரீதியான விளைவுகளைப் பெறுபவர்களைப் போலவே அழிவிற்கும் உள்ளாகிறார்கள். ஆக்கமும் இல்லாமல் அழிவும் இல்லாமல் வாழ்க்கையை இன்னொரு தளத்திற்கு நகர்த்திச் செல்லும் மனிதர்களையும் அன்றாட வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. கடைசியாகக் குறிப்பிட்ட வாழ்க்கை முறைதான் பெருமளவிற்கு எல்லோருக்கும் சாத்தியமாகிறது. அதைத் துல்லியமாக, மனம் நெகிழும் படியாக, ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக, எதார்த்தத்தை மீறாத ஒன்றாகத் தன்னுடைய நாவலான ‘நீர்த்துளியை’ வடிவமைத்திருக்கிறார், சுப்ரபாரதிமணியன்.

Continue Reading →

தீயில் கருகிய சில உன்னத உறவுகள் நினைவுகள்

வாழ்வின் சில உன்னதங்கள்: விட்டல் ராவ்- வெங்கட் சாமிநாதன் -இப்படியும் ஒரு புத்தகம் இந்நாட்களில் தமிழில் எழுதப்படும், அதுவும் அதற்குரிய கௌரவத்தோடும் ஆர்வத்தோடும் பிரசுரிக்கப்படும் என்பதைப் பார்க்க மிகவும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது. கண்முன் இருப்பது விட்டல்ராவ் எழுதியுள்ள  வாழ்வின் சில உன்னதங்கள் என்னும் பழம் நினைவுக் குறிப்புகள். மூர்மார்க்கெட் தீக்கு இரையானதோடு (அல்லது இரையாக்கப்பட்டதோடு?) கருகிச் சாம்பலானது, பழையன கழிதல் ஆகாது, அந்த இடத்தை  ஒரு புதிய ரயில் நிலையம்தான்  பறித்துக் கொண்டது என்றாலும், மூர்மார்க்கெட் தன் நிழலில் வாழ்வு கொடுத்தது பழம் புத்தகக் குவியல்களுக்கும், கிராமஃபோன் ரிகார்டுகளுக்கும் மட்டுமல்ல. பழம் தட்டு முட்டு சாமான்களின் குவியல் அல்ல அவை. அப்படியான தோற்றத்தின் பின் அதைத் தேடுபவர்களுக்கும், பார்க்கத் தெரிந்தவர்களுக்கும் உணர்ந்தறிகிறவர்களுக்கும், அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்துத் தரக் காத்திருக்கும் பாரம்பரியம் அது… இன்றைய சந்தை ஏற்க மறுத்த பாரம்பரியம் அது. தமிழர்களும் சென்னையும் இப்படியும் ஒரு ஸ்தாபனத்தை, மனிதர்களை உருவாக்கியிருக்கிறதே என்று மலைக்கத் தோன்றுகிறது. அது இப்போது இல்லை. தமிழன் திரும்ப தன் இயல்பு நிலைக்கு வந்துவிட்டான்.

Continue Reading →

இணையத்தள அறிமுகம் (பூ வனம்) : நினைவு நதியில் வண்ணதாசன்

எழுத்தாளர் வண்ணதாசன்[எழுத்தாளர் ஜீவி தனது வலைப்பதிவான ‘பூ வனத்தில்’ எழுதிய கட்டுரை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றது. இந்த மீள்பதிவின் மூலம் ஜீவியின் ‘பூ மனம்’ வலைப்பதிவினைப் ‘பதிவுகள்’ தன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றது.  http://jeeveesblog.blogspot.ca/ – ‘பதிவுகள்’] நெருங்கிய வட்டத்தில் கல்யாணியாகிறவர், கவிதைகள் எழுதும் பொழுது, கல்யாண்ஜி ஆவார். சொந்தப் பெயர் கல்யாணசுந்தரம் வேலை பார்த்த பாரத ஸ்டேட் வங்கியோடு சரி போலிருக்கு. சகோதரர் வல்லிதாசனிடமிருந்து எடுத்துக் கொண்ட வண்ணதாசன் கதைகளுக்காகவும், கல்லூரி நண்பர் அழைத்த கல்யாண்ஜி கவிதைகளுக்காகவும் ஆயிற்று. ஆனால் வண்ணதாசனைத் தெரிந்த அளவுக்கு ரொம்ப பேருக்கு கல்யாண்ஜியைத் தெரியாது; அதாவது இவர் தான் அவர் என்று தெரியாது. வண்ணதாசனும் எந்த காலத்தும் இலக்கிய உலகில் தன்னைப் படாடோபமாகக் காட்டிக் கொண்டதில்லை. எழுத்திலும் அப்படித்தான். எல்லாமே அவரைப் பொருத்த மட்டில் இயல்பாகிப் போன விஷயங்கள்.

Continue Reading →

‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற எனது உரைக்கட்டின் மீதாக ‘யோசிப்பும் வாசிப்பும்’ பகுதியில் வந்த வ.ந.கிரிதரனின் எதிர்வினைக்கான எனது பதில்மறுப்பு…

எழுத்தாளர் தேவகாந்தன்வணக்கம், கிரிதரன். ‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற எனது உரைக்கட்டின் மீதாக நீங்கள் எழுதிய எதிர்வினையை ‘பதிவுக’ளில் பார்த்தேன். பொதுவாக உரைக்கட்டுசார் விடயங்களுக்கான எதிர்வினைகள் வருவது ஆரோக்கியமானது என்பதே எனது கருத்தாக என்றும் இருந்துவருகின்றது. அது குறித்து என்வரையில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் எதிர்வினையாக மட்டுமே அது இருந்திருந்திருந்தால் அதற்கு இவ்வாறான ஒரு பதில்மறுப்பு என்னளவில் அவசியமில்லாமலே இருந்திருக்கும். ஆனால் நீங்கள் சுமத்தியது ஒரு குற்றச்சாட்டு அல்லவா? என் வாசிப்பின் மீதான உங்களது அவநம்பிக்கையை என்மேல் சுமத்திய ஒரு குற்றச்சாட்டாகவே அதை என்னால் பார்க்க முடிகிறது. அக் குற்றச்சாட்டின் பதில்மறுப்பிற்காக உரைக்கட்டினைவிட கடித வடிவம் சிலாக்கியமாகப்பட்டதில் இவ்வாறு எழுத நேர்ந்திருக்கிறது. என் வாசிப்பின் போதாமையை எவ்வாறு அறிந்துகொண்டீர்கள், கிரிதரன்?

Continue Reading →

நான்கு வேறுபட்ட சூரியன்களின் ஒளி பெற்றுப் பவனி வரும் ஒரு புதிய கோள்

Ph1 planet orbits the larger of the two stars. In the distance are the second pair of stars. நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)பெரும்பாலான கதிரவன் மண்டலங்கள் (எங்கள் கதிரவன் மண்டலம் உட்பட) பல கோள்களை உடையனவாய் அமைந்து, அக் கோள்கள் மையத்திலுள்ள விண்மீனைச் (சூரியன்) சுற்றி வருகின்றன. ஆனால் தனியான ஒரு கோள் பல விண்மீன்களைச் சுற்றி வரும் செய்தியானது இயல்பாக நிகழக்கூடியதென்பதை விஞ்ஞானப் புனைகதைகள் மூலம் அறிகின்றோம். இச் சமயத்தில் கதிரவன் மண்டலத்துக்கு அப்பாலுள்ள பிரபஞ்சத்தில் தனிச் சிறப்பு வாய்ந்த புதுக் கோள் ஒன்றை ஓர் அருங்கலை வான்கணிப்பாளர் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இக் கோளுக்கு நான்கு (04) வேறுபட்ட விண்மீன்கள் (சூரியன்கள்) உள்ளன.  இக் கோளுக்கு பி.ஏச்1 ( PH1 =Planet   Hunters1) என பெயரிடப்பட்டுள்ளது. இக் கோள்  பூமியிலிருந்து 3,200 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இது சேண்மம் (நெப்தியூன் – Neptune)  கோளையொத்த ‘ஆவி இராட்சதன்’ என்றும் கூறுவர். இக் கோள் நம் பூமிக் கோளை விட 6.2 மடங்கு பெரியதாகும்.

Continue Reading →

102) – நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -தினசரி செய்தித் தாள் வாங்கிப் படிக்கும் பழக்கம் இங்கு ஹிராகுட் அணைக்கட்டுக்கு வேலைக்கு சேர்ந்து நானே சம்பாதிக்க ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்டது. இருந்த போதிலும், அதில் Wanted பகுதியையும் படிக்கும் கால கட்டம் ஒன்று புதிதாக ஆரம்பித்துவிட்டது. வேலை தேடவேண்டும் என்ற முனைப்பு இருந்தாலும் அது எத்தகைய கவலையும் தோய்ந்ததாக என்ன ஆகுமோ, என்னவோ, வேலை கிடைக்குமோ கிடைக்காதோ, கிடைக்காவிட்டால் என்ன செய்வது, பெற்றோருக்கு எப்படி பணம் அனுப்புவது என்ற கவலைகளில் பீடிக்கப்பட்டதாக உணரவே இல்லை. எப்படி நான் அதை ஏதோ சினிமா விளம்பரம் பார்ப்பது போல எவ்வித கலவரமும் இல்லாது வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன் என்பது தெரியவில்லை. அதிக நாட்கள் இங்கு இருக்கப் போவதில்லை, ஒரு சில மாதங்கள், அல்லது அதிகம் போனால் ஒரு வருடம் இங்கு காலம் தள்ள முடியும். அதன் பின்? சிக்கல் தான். நிச்சயமின்மை தான். ஆனாலும் எப்படி ஒரு அமைதியான மனத்துடன் அந்த நாட்களில் இருந்தேன் என்பது இப்போது எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏதோ வீரன், தீரன் என்றும் மனத்திடம் என்றும் எல்லாம் என்னைச் சொல்லிக் கொள்வதற்கும் இல்லை.

Continue Reading →