21-ம் அத்தியாயம்: குருடனுக்குத் திருமணமா?
சிவநேசர் ஆங்கில நூல்களை வாசித்தறிவதில் எவ்வளவு ஆர்வம் காட்டி வந்தாரோ, அவ்வளவு ஆர்வம் தமிழ் நூல்களையும் வட மொழி நூல்களையும் கற்பதிலும் காட்டி வந்தார். சிறு வயதில் அவரது தந்தையார், அன்று வாழ்ந்த பெரிய இடத்து மனிதரின் வழக்கப்படி தமது வாழ்க்கையையே முற்றிலும் ஆங்கிலமயமாக்கி இருந்தார். அதன் பயனாக வீட்டில் ஆங்கிலத்திலேயே எல்லோரும் பேசினார்கள். பிள்ளைகளின் படிப்பிலும் ஆங்கிலத்துக்கே இடம் தரப்பட்டது. தமிழ்க் கலாசாரத்தின் சின்னங்களான தலைப்பாகை போன்றவற்றுக்கு ‘அமராவதி’யில் என்றும் முக்கிய இடமிருந்த போதிலும் தமிழ் மொழிக்கு இரண்டாவது இடமே தரப்பட்டது. தலைப்பாகை அந்தஸ்தைத் தருவதாகவும், தமிழ் மொழி அந்தஸ்தைக் குறைப்பதாகவும் கருதப்பட்டதே இதற்குக் காரணம். தலையில் தலைப்பாகையும் வாயில் ஆங்கிலமுமே ‘ஒண்ணாந்தர’ அந்தஸ்து என்று எண்ணப்பட்டது. இந்நிலையை மாற்ற அவர்கள் குடும்பத்தில் முதல் நடவடிக்கை எடுத்துக் கொண்டவர் சிவநேசரே.