1. வழிகாட்டி!
சமுதாயத்தை மூடி இருக்கும் பகட்டை நீக்கி, உண்மை நிலைகளை அம்பலப்படுத்தும் ஒரு புதுமை எழுத்தாளன் போல, இரவின் இருள் திரையை நீக்கி உலகின் சோக நாடகத்தை வெளிக்காட்ட ஆரம்பித்தான் உதயசூரியன். அவன் ஒளியில் முதலில் உயர் மரங்களின் பொன் கொம்புகள் அசைந்தாடின. மாரிக் காலம். ஆனால் வசந்தத்தின் செந்தளிர்கள் பெற்றவை போல் மரங்களெல்லாம் அவன் மந்திர ஸ்பர்ஸத்தில் மாயஞ் செய்தன. இரவு பெரு மழையிலே குளித்திருந்த உலகம் ஒரு புதுமை எழில் கொண்டு ஸ்நானம் முடித்து வந்த ஒரு கன்னிப் பெண்ணின் அழகு கொண்டு விளங்கிற்று.ஆனால் போலிக் கலைஞர் போல உலகை ஒரு முகப் பார்வையில் சித்தரிப்பவனல்ல சூரியன். நாட்டைச் சூழ்ந்துள்ள சகதி, சேறு, வறுமை, துன்பம் எல்லாவற்றையும் எடுத்துக் காட்ட ஆரம்பித்தான். அந்தக் குட்டிப் பட்டணத்தின் செல்வ மாளிகைகளின் பக்கத்திலே ஒடிந்து கிடக்கும் குடிசைகளையும், குமைந்து கிடக்கும் ஏழைகளையும் தன் ஒளிக்கரத்தினால் சுட்டிக் காட்டினான். இரவு மழையினாலும் புயலினாலும் சின்னா பின்னப் படுத்தப் பட்டு சிதறிக் கிடந்த ஓலைக் கூரைகளையும், , அவற்றைக் கொண்ட வீடுகளின் சில்லிட்ட ஈரத்தன்மையயும் அவன் கதிர்கள் கெளவிப் பிடித்தன.