3-ம் அத்தியாயம்: களிப்பும் கலக்கமும்
[ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்]
ஸ்ரீதரின் திட்டப்படி அன்று மாலை தான் அவன் பத்மா வீட்டுக்குப் போக வேண்டும். அநேகமாக நாலரை மணிக்குப் பிறகு போனால் போதுமானது என்று அவன் முடிவு செய்திருந்தான். எனினும், காலையிலிருந்தே அதற்குரிய வேலைகளை ஆரம்பித்துவிட்டான். அவன் இது சம்பந்தமாகச் செய்த முதல் வேலை, கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட்டில் 48/17ம் இலக்க வீடு எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிந்ததாகும். உண்மையில் ஸ்ரீதருக்கு அன்று இருப்பே கொள்ளவில்லை. பத்மா வீட்டுக்கு முதன் முதலாகப் போகப் போகிறோம். அவளுக்கும் தனக்குமுள்ள தொடர்புகள் இதன் மூலம் மேலும் வலுவடையும் என்ற எண்ணம், அவனுக்குப் பத்மா வீட்டுக்குச் செல்வதில் அதிக ஆர்வத்தை உண்டு பண்ணியது.