அறிமுகம்
பார்த்திபன் 1984 செப்டம்பரில் இலங்கையிலிருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். புகலிடத்திலிருந்து எழுதிய ஆரம்பகாலப் படைப்பாளிகளில் முதன்மையானவர். இவர் எழுதிய நாவல்களையோ சிறுகதைகளையோ படைப்புக்கள் சார்ந்த கூற்றுக்களையோ ஈழத்தில் மிகச் சாதாரணமாகப் பெற்றுவிடமுடியாத நிலையே தற்போது பார்த்திபனைப் பொறுத்தவரையில் உள்ளது. இதுவரை பார்த்திபனின் படைப்புக்களுக்கு எழுதப்பட்ட விமர்சனங்களில் 14 சிறுகதைகளை மையமாகக் கொண்டு யமுனா ராஜேந்திரன் ‘கிழக்கும் மேற்கும்’ மலரில் எழுதியதே ஓரளவு விரிவான பதிவாக இருந்தது. மேலைத்தேயப் படைப்பாளிகளில் நைஜீரிய எழுத்தாளர் பென் ஒக்ரி, குர்திஸ் எழுத்தாளரான ஸோரக்லி போன்றோரின் படைப்புக்களின் கருத்துலகமும் பார்த்திபனின் கருத்துலகமும் ஒன்றுதான் என ஒப்பிட்டுக் கூறுமளவுக்கு அவரது சிறுகதைகளின் பேசுபொருள் இருக்கின்ற நிலையில் பார்த்திபனைத் தேடவேண்டும் என்ற சிந்தனை உதித்தது. இந்த வகையில் இக்கட்டுரையானது அவரது முழுப்படைப்புக்களையும் ஒரு வாசகனுக்கோ ஆய்வாளனுக்கோ தமிழ்ச்சூழலில் அறிமுகம் செய்தவற்கான ஆரம்ப நிலையாகவே அமைந்துள்ளது.