ஒரு கேள்வி! ஒரு பதில்! இதழியல் ஆய்வு பற்றி…

எழுத்தாளர் டொமினிக் ஜீவா பற்றிய முகநூல் பதிவொன்றுக்கு எதிர்வினையாற்றிய எழுத்தாளர் மாலன் அவர்கள் பின்வருமாறு கேட்டிருந்தார்” இலங்கையின் இதழியல் வரலாறு பற்றி ஒரு நூல் எழுதப்பட வேண்டும்.எத்தனை பெரும் ஆளுமைகள்! ஏன் நீங்களோ முருகபூபதியோ முயற்சிக்கக் கூடாது?”

அதற்கு நான் பின்வருமாறு பதிலளித்திருந்தேன்: “முருகபூபதியே பொருத்தமானவர். அவர் ஏற்கனவே நிறைய எழுதியுள்ளார். நூல்கள் பல எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் பலருடன் அதிகமாகப்பழகியுள்ளார். வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் அவர் பணியாற்றியதும் அதற்கு அவருக்கு உதவியாகவுள்ளது. அவரிடம் இது பற்றித்தெரிவிக்கின்றேன்.”

இது  பற்றி முருகபூபதி அவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதற்கு முருகபூபதி அவர்கள் உடனடியாகவே பின்வருமாறு பதிலளித்திருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்:

“அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம்.  நீங்கள் அனைவரும் நலமாக இருக்கவேண்டும். இங்கு நாமும் வீட்டில்தான் முடங்கியிருக்கின்றோம்.  தங்களது அண்மைய இரண்டு பதிவுகள் (  காவலூர் ஜெகநாதன் – மல்லிகை ஜீவா ) படித்தேன். நல்ல பதிவு. தாமதிக்காமல், பிரான்ஸில் வதியும் ஈழநாடு ( டான் ரீவி)  குகநாதனுக்கும் ( காவலூர் ஜெகநாதனின் தம்பி ) அதனை பகிர்ந்துகொண்டேன்.

Continue Reading →

இலங்கைத்தமிழ் இலக்கியம்: தடம் பதித்த சிற்றிதழ்கள் – தீர்த்தக்கரை & நந்தலாலா

இலங்கைத்தமிழ் இலக்கியம்: தடம்  பதித்த சிற்றிதழ்கள் - தீர்த்தக்கரை & நந்தலாலாதீர்த்தக்கரை எண்பதுகளின் ஆரம்பத்தில் கண்டியிலிருந்து வெளியான சஞ்சிகை. எல்.சாந்திகுமாரை ஆசிரியராகக்கொண்டு காலாண்டிதழாக வெளியான பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் எஸ்.நோபேட் (இவர்தான் ‘புதியதோர் உலகம்’ எழுதிய ‘கோவிந்தன்’. ஏனைய புனைபெயர்கள்: ஜீவன், கேசவன். இயற்பெயர் சூசைப்பிள்ளை நோபேட். திருகோணமலையைச் சேர்ந்தவர்). . எம்.தியாகராம் & எல்.ஜோதிகுமார் ஆகியோர் அடங்கியிருந்தனர். நூலகம் தளத்தில் 1980-1982 காலகட்டத்தில் வெளியான ‘தீர்த்தக்கரை’யின் ஐந்து இதழ்களுள்ளன. தீர்த்தக்கரை சஞ்சிகை மொத்தம் ஐந்து இதழ்களே வெளிவந்ததாக அறிகின்றேன். இதன் பின்னர் 1992 தொடக்கம் 2014 காலப்பகுதியில் அவ்வப்பொது தடை பட்ட நிலையில் ‘நந்தலாலா’ சஞ்சிகை காலாண்டிதழாக வெளியானது. ‘நந்தலாலா’வை வெளியிட்டது நந்தலாலா இலக்கிய வட்டம். ஆனால் தீர்த்தக்கரையில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதுபோல் நந்தலாலா சஞ்சிகையில் நந்தலாலா இலக்கிய வட்டத்தில் உள்ளவர்கள் யார் யார், நந்தலாலாவின் ஆசிரியர், ஆசிரியர் குழுவினர் யார் யார் என்பவை போன்ற விபரங்களைச் சஞ்சிகையில் காண முடியவில்லை. ஆனால் தீர்த்தக்கரை குழுவினரே நந்தலாலாவையும் வெளியிட்டனர் என்பதை ஊகிக்க முடிகின்றது.

தீர்த்தக்கரை, நந்தலாவா இரண்டுமே  இலங்கைத்தமிழ் இலக்கியப்பரப்பில் வெளியான சஞ்சிகைளில் முக்கியமானவை. இவற்றைக் கலை, இலக்கிய சஞ்சிகைகள்  என்று மேலோட்டமாகக் கூறிக் கடந்து விடமுடியாது. சமூக, அரசியல் விடயங்களைத் தாங்கி வெளியான கலை, இலக்கிய சஞ்சிகைகள் இவை. இவற்றை வெளியிட்டவர்களுக்குக் குறிப்பிட்ட அரசியல் பார்வை இருந்தது. மார்க்சியக் கண்ணோட்டத்தில் மக்களின் பிரச்சினையை அணுகினார்கள். அவ்வணுகளில் அவர்களுக்குத் தெளிவான பார்வையிருந்தது. இலங்கையின் மலையக மக்களின் சமூக, அரசியல் பிரச்சினைகள், இலங்கைத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம், உலக அரசியல் இவை அனைத்தையுமே இவரகள் அணுகுவதில் இவர்கள் கொண்டிருந்த தெளிவான பார்வை சஞ்சிகைகளில் வெளியான படைப்புகள் எல்லாவற்றிலுமே புலப்படுகின்றன.

Continue Reading →

மணம் வீசிய மல்லிகை!

இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு எழுத்தாளர் ஒருவரின் பங்களிப்பு மகத்தானது மட்டுமல்ல பிரமிக்க வைப்பதும் கூட. இவரது எழுத்துலகப் பங்களிப்பும் முக்கியமானது என்றபோதும் பிரமிக்க வைப்பது இவர் இலக்கிய உலகுக்கு ஆற்றிய இன்னுமொரு முக்கியமான பங்களிப்புத்தான். இவர் முற்போக்கு இலக்கியத்தைத் தன் பாதையாக ஏற்றுக்கொண்டதுடன் , செயற்பட்டவரும் கூட, சுயமாக வாசித்துத் தன் எழுத்தாற்றலை, ஞானத்தினை வளர்த்துக்கொண்டவர். இவர் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தைச் சேர்ந்தவராகவிருந்தபோதும்கூட சகல பிரிவு எழுத்தாளர்களுக்கும் களமமைத்துக்கொடுத்தார். நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் உருவாக, வளர அவர் அமைத்துக்கொடுத்த களம் உதவியது. அதுதான் அவரது மிக முக்கியமான இலக்கியப்பங்களிப்பு. அவர்தான் எழுத்தாளரும், மல்லிகை சஞ்சிகை ஆசிரியருமான டொமினிக் ஜீவா.

ஓவ்வொரு தடவை மல்லிகை இதழ்களைப் புரட்டும்போதும் ஏற்படும் பிரமிப்புக்கு அளவில்லை. முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தில் அவர் இருந்தாலும், மல்லிகையில் அனைவருமே எழுதினார்கள். எழுத்தாளர் எஸ்.பொ. ஒருவரின் படைப்புகளைத் தவிர ஏனைய பல்வேறு இலக்கியக் குழுக்களைச் சார்ந்தவர்களின் படைப்புகளையெல்லாம் மல்லிகையில் காணலாம். எழுத்தாளர் மு.தளையசிங்கம் எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் சு.வில்வரத்தினம் எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் மு.பொன்னம்பலம் எழுதியிருக்கின்றார். கவிஞர் கந்தவனம் எழுதியிருக்கின்றார். கலாநிதி க.கைலாசபதி எழுதியிருக்கின்றார். அறிஞர் அ.ந.கந்தசாமி எழுதியிருக்கின்றார். ஒவ்வொரு காலகட்டத்திலும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கெல்லாம் மல்லிகையில் இடம் கிடைத்திருக்கின்றது. கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன், வடகோவை வரதராஜன், தாமரைச்செல்வி , கே.எஸ்.சுதாகர் என்று அன்று இளையவர்களாகவிருந்த பலர் எழுதியிருக்கின்றார்கள்.

Continue Reading →

இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாததோர் ஆளுமை: காவலூர் எஸ். ஜெகநாதன் (காவலூரான்)

காவலூர் எஸ். ஜெகநாதன்ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டக்காலத்தில் அமைப்புகளின் உள் முரண்பாடுகள், புற முரண்பாடுகள் பலரை பலி வாங்கியுள்ளன. இலங்கை அரசுக்கும், போராட்ட அமைப்புகளுக்குமிடையிலான மோதல்கள் பலரைப் பலியாக்கியிருக்கின்றது. போராட்டம் காரணமாக அமைப்புகளினால் பல்வேறு அரசியல் காரணங்களினால் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்விமான்கள், பொதுமக்கள் எனப்பலர் பலியாகியுள்ளனர். அவர்களின் இழப்புகள் ஈடு செய்யப்பட முடியாதவை. அவர்களில் ஒருவர்தான் எழுத்தாளர் காவலூர் எஸ்.ஜெகநாதன். எனக்குக் காவலூர் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் இவர்தான். காவலூருக்கு இவரைப்போல் பெருமை சேர்த்தவர் வேறொருவர் இலர். அவ்வளவுக்குப் பத்திரிகை, சஞ்சிகைகள், வானொலியிலெல்லாம் காவலூரின் பெயரை ஒலிக்க வைத்தவர் இவர். அண்மையில் நூலகம் தளத்தில் பழைய மல்லிகை போன்ற சஞ்சிகைகள், பத்திரிகைகளைத் தேடிக்கொண்டிருந்தபோது எங்கு தேடினாலும் என் கண் முன்னாள் வந்து நிற்கும் எழுத்தாளராக விளங்கியவர் இவரே. அவ்வளவுக்கு அவர் தீவிரமாக எழுத்துலகில் இயங்கிக்கொண்டிருந்தார். மல்லிகை, வீரகேசரி, சுடர் என்று அவரது படைப்புகள் வெளிவராத பத்திரிகை, சஞ்சிகைகளே இல்லையெனலாம்.

இலங்கையில் பட்டம் பெற்று  நல்ல பணியில் இருந்தவர் 83 ஜூலைக்கலவரத்தைத்தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாகத் தமிழகம் சென்றார். தன் குடும்பத்தாரைப் பாதுகாப்பாக அங்கு தங்க வைத்துவிட்டு அடிக்கடி இலங்கை வந்து போய்க்கொண்டிருந்தார். அவ்விதமானதொரு சூழலில் திடீரெனக் கடத்தப்பட்டுக் காணாமல் போனார். பின்னர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. அவர் கொல்லப்பட்டது பற்றிப் பலவிதமான தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இத்தகவல்களை காவலூர் ஜெகநதன் பற்றிய என் முகநூல் பதிவொன்றின்போது எதிர்வினையாற்றிய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களினால் பதிவு செய்யப்பட்டன. அவர் அமைப்பொன்றினால் கடத்தப்பட்டு இன்னுமோர் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், பின்னர் அவ்வமைப்பினால் கொல்லப்பட்டதாகவும் அத்தகவல்கள் கூறின. அதற்கு அவரைக் கைது செய்த அமைப்பின் தலைவர் கூறிய காரணம் அவர் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதுதான். அப்பதிவுக்கு எதிர்வினையாற்றியிருந்த காவலூர் ஜெகநாதனின் சகோதரரான எழுத்தாளர் எஸ்.எஸ்.குகநாதன் அக்காலகட்டத்தில் தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கை எழுத்தாளர் ஒருவர் காவலூர் ஜெகநாதன் தமிழகத்தில் குறுகிய காலத்தில் அடைந்த செல்வாக்கினைக்கண்டு பொறுக்க மாட்டாமல் அவர் மேல் அவ்விதமானதொரு பழியைப்போட்டதாகவும், அதன் காரணமாகவே அவரது நண்பரான அமைப்பின் தலைவர் அவரைக் கைது செய்ததாகவும் தன் கருத்தினைப் பதிவு செய்திருந்தார். ஆனால் இன்று அவரைக் கைது செய்த அமைப்பின் தலைவரும் இல்லை. கொன்ற அமைப்பின் தலைவரும் இல்லை. ஆனால் காவலூர் ஜெகநாதன் உயிருடன் இல்லாவிடினும் அவர் படைப்புகளூடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இனியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்துகொண்டுதானிருப்பார். அவ்வளவுக்கு அவர் படைப்புகள் தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்திருக்கின்றன. அப்படைப்புகள் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகளினூடு , அவர் வெளியிட்ட படைப்புகளூடு அவர் வாழ்ந்துகொண்டிருப்பார்.

Continue Reading →

கொரானோ (கோவிட்-19) சில பார்வைகள்

       முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.“கோவிட்-19 வந்தது
2019 இறுதியில்…
கொரானா நச்சுக் கிருமி
மனித உடலுக்குள்
புகுந்தது 2020இல்!…
மனிதனால் மனிதனுக்குப்
பரவியது…
கொரானோ!
கிருமி ஆக்கிரமித்தது
இவ்வுலகை…
எதிர்ப்புச் சக்தியற்றவர்கள்
மாண்டனர்…
எதிர்த்து நின்றவர்கள்
மீண்டனர்…
ஓய்வுக் கொடுத்தது
இயங்திர வாழ்க்கைக்கு…
வாழ்க்கைச் சூனியம்
உணர்த்தியது மனிதனுக்கு …
கற்றுக் கொடுத்தது மனிதத்தை
கொரானோ…”

இன்று கொரோனா நச்சுக் கிருமி உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. இக்கண்ணுக்குத்தெரியாத கிருமித்தொற்றால் நாம் பல விளைவுகளைச் சந்தித்து வருகிறோம். இந்த நச்சுக் கிருமி உருவாகி மக்களை வாட்டி வதைப்பற்கும், இக்கிருமி உலகெலாம் பரவி வருவதற்கும் மனிதன்தான் முழுதற்காரணமாவான். ‘கெட்டதிலும் நல்லது உண்டு’ என்பதை இக்கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி சொல்லுகிறது. இது குறித்து என் கருத்தை இங்குப் பதிவு செய்கிறேன்

இந்த நூற்றாண்டில் வாழுகின்ற உலகமுழுவதும் உள்ள மக்களுக்கு (லாக் டவுண் மற்றும் சோசியல் டிஸ்டன்சு) ஊரடங்கு சட்டம் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் தொடர்பாக அரசாங்கத்தால் பலநாட்களாக வீடுகளில் நாம் முடக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்,

Continue Reading →

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 8

- மார்க் ட்வைன் - என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் எட்டு

முனைவர் ஆர்.தாரணிநான் கண்விழித்து எழுந்த போது சூரியன் மேல்வானத்தில் இருப்பதைக் கண்டு அப்போது காலை எட்டு மணி ஆகியிருக்கும் என்று கணித்தேன். குளுமையான நிழல் கவிந்த புல்வெளியில் படுத்துக்கொண்டே நடந்த விஷயங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். நான் ஓய்வாக உணர்ந்தேன் என்பதைவிட வசதியாகவும், நிறைவாகவும் அதிகம் உணர்ந்தேன். இரண்டு அல்லது மூன்று ஓட்டைகளுக்கிடையேதான் பார்க்க முடிந்தாலும் சூரியன் முழுமையாகத் தென்பட்டது. என்னைச் சுற்றிலும் அடர்ந்த மரங்களும், அதனிடையே காணப்பட்ட கும்மிருட்டும்தான் இருந்தது. சூரியன் இலைகளுக்கு உள்ளே எட்டிப்பார்த்து ஜொலித்ததால் தரையில் ஆங்காங்கே புள்ளி புள்ளியாக ஒளிவட்டங்கள். மெல்லிய தென்றல் காற்று வீசிக்கொண்டிருப்பதை அங்கிருந்த இலைகள் மெதுவாகத் தலை அசைத்து உணர்த்திக்கொண்டிருந்தன. அணில் தம்பதி இருவர் மரக்கிளையில் அமர்ந்து என்னைப்பார்த்து நட்போடு கீச்சிட்டன.

சொல்லவொணாத வகையில் நான் மிகவும் வசதியான சோம்பேறித்தனத்தை அனுபவித்துக் கொண்டிருந்ததால் எழுந்து காலை உணவு தயாரிக்க மனமில்லாது அப்படியே கிடந்தேன்.. திரும்பவும் தூக்கத்தில் சொக்கிப்போய்க்கொண்டிருக்கும்போது தூரத்திலே நதியில் இருந்து பூம் என்று முழக்கம் போன்றதொரு ஒலி கேட்டது. நான் எழுந்து முழங்கைகளால் நிலத்தில் ஊன்றி அந்தச்சத்தத்தை கவனித்தேன். வெகு விரைவிலேயே மீண்டும் அதே சத்தம் கேட்டது. மெதுவாகத் தத்திக் கொண்டே இலைகளின் வழியாக வெளியே பார்த்தேன். தூரத்தில் நதியின் மேற்புறப் பரப்பில் புகைமூட்டம் ஒன்றைக் கண்டேன். அத்துடன் ஒரு படகு நிறைய மக்கள் நதியில் மிதந்து வருவதையும் கண்டேன். என்ன பிரச்சினை என்று இப்போது எனக்குப் புரிந்து விட்டது. “பூம்.” வெள்ளை நிறப்புகை அந்த படகில் இருந்து வெளியேற்றப்பட்டு வருவதைக் கண்டேன். அவர்கள் நதி நீர் மீது பீரங்கி கொண்டுவெடிக்கச் செய்து நதியினுள்ளே கிடக்கும் எனது உயிரற்ற உடல் நீர்ப்பரப்பின் மேலே வந்து மிதக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.

நான் மிகவும் பசியுடன் இருந்தேன். ஆனால் இப்போது அடுப்பு மூட்டுவது அறிவில்லாமை ஆகும். ஏனெனில் அதில் இருந்து வெளி வரும் புகையை அவர்கள் பார்த்துவிட்டால் வம்பாகி விடும். எனவே, பேசாமல் அமர்ந்து பீரங்கி வெளிவிடும் புகையையும், பூம் என்ற அந்த சத்தத்தையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். அந்த நதி அக்கணத்தில் பரந்து விரிந்ததாக காணப்பட்டது. அது எப்போதுமே கோடைகாலக் காலைவேளைகளில் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். நான் அவர்கள் எனது உயிரற்ற உடலைத் தேடிக்கொண்டிருப்பதை ஒரு குரூர திருப்தியுடன் ரசித்தேன். ஆயினும் கடிப்பதற்கு ஏதேனும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

பாதரசத்தை ரொட்டித்துண்டுகளில் வைத்து அவற்றைத் தண்ணீரில் விட்டால் அவை நேராக மூழ்கிப்போன உடலில் சென்று நிற்கும் என்று மக்கள் கடைப்பிடிக்கும் ஐதீகம் அப்போதுதான் எனது நினைவுக்கு வந்தது. எனவே, அந்த ரொட்டித்துண்டுகளைத் தேடிச் சென்று தீவின் இல்லினோய் பக்கம் நின்று கொண்டு என்னுடைய அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்த்தேன். எனக்கு ஏமாற்றம் நேரவில்லை. பெரிய இரட்டை துண்டுகள் ஒன்று அந்தப்பக்கமாக வந்தன. நான் ஒரு நீண்ட குச்சி வைத்து அதை என்பக்கம் இழுத்தேன். ஆனால், என் கால் வழுக்கியதால் அவை என்னைவிட்டு தூரத்தில் அகன்று விட்டன. நீரின் விசை கரையோரம் எதையும் அடித்து வந்து சேர்க்கும்படிதான் நான் நின்ற இடம் இருந்தது. எனக்கு அது நன்கு தெரிந்துதான் இருந்தது. விரைவிலேயே இன்னொரு ரொட்டித்துண்டு வந்தது. இந்த முறை அதை நான் பிடித்து விட்டேன். அந்தத் திடப்பொருளை எடுத்து கொஞ்சம் குலுக்கி மேலிருந்த பாதரசக் கலவையை நீக்கி, ஒரு கடி கடித்தேன். மிகப்பெரிய பணக்காரர்கள் சாப்பிடும் வகையான பேக்கர்ஸ் ரொட்டிகள் அவை. ஏழைகள் சாப்பிடும் மக்காச்சோளத்தில் செய்யப்படும் மலிவான பொருள் அல்ல.

நல்ல சௌகரியமான இடத்தில் இலைகளின் இடையில் மரக்கட்டையின் மேல் அமர்ந்து ரொட்டியை மென்றுகொண்டே அந்தப் படகை கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் நான் மிகவும் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். அதன் பின்தான் திடீரென எனக்கு அது உறைத்தது. அந்த விதவையோ, பாதிரியாரோ அல்லது வேறு யாரெனுமாவது இந்த ரொட்டித்துண்டு என்னைக் கண்டுபிடிக்கும் என்று பிரார்த்தனை செய்து போட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அது என்னைக் கண்டு பிடித்தே விட்டது இல்லையா!. எனவே பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதாவது, அந்த விதவை, பாதிரியார் போன்ற நல்ல மனிதர்களின் பிரார்த்தனைகளுக்கு ஏதோ சக்தி உண்டு போலும். எனக்கு அது சரிப்பட்டு வரவில்லை. அது ஒரு சில நல்ல இதயங்களுக்குத்தான் சரிவரும் போல.

Continue Reading →

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 7

- மார்க் ட்வைன் -– என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் ஏழு

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 8முனைவர் ஆர்.தாரணி“எழுந்திரு. என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

நான் கண்களை விழித்து சுற்றிலும் பார்த்து எங்கே இருக்கிறேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சூரியன் மேலே எழும்பிவிட்டது. நான் அயர்ந்து உறங்கி விட்டேன் போலும். கோபமும் சோர்வும் முகத்தில் தெரிய அப்பா என் முன்னே நின்று கொண்டிருந்தார். அவர் கேட்டார். “இந்த துப்பாக்கியை வைத்துக் கொண்டு என்ன செய்கிறாய்?”

கடந்த இரவு அவர் நடந்துகொண்டது அவர் நினைவில் இல்லை என்பதை உணர்ந்தேன். எனவே நான் சொன்னேன் “யாரோ கதவை உடைத்து உள்ளே நுழைய முயற்சித்தார்கள். எனவே அவன் வரும்வரை அவனுக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன்.

“ஏன் என்னை எழுப்பவில்லை?”

“நான் மிகவும் முயற்சித்தேன். நீங்கள் அசையக்கூட இல்லை.”

“நல்லது. சரி. முழுநாளும் அசட்டுத்தனமாக ஏதும் செய்துகொண்டே நிற்காதே. வெளியே சென்று மீன் வலையில் மீன் ஏதேனும் உள்ளதா என்று பார்த்து எடுத்து வா. அப்போதுதான் நாம் காலை உணவு சாப்பிட முடியும். இன்னும் சில நிமிடங்களில் நான் வெளியே சென்று விடுவேன்.”

அவர் கதவைத் திறந்ததும் நான் நதியின் கரை நோக்கிச்சென்றேன். நதியில் மரக்கிளைகள் மற்றும் குப்பைகளுடன் மிதந்த மரப்பட்டைகள் துள்ளிக்கொண்டு செல்வதை கண்ட எனக்கு நதியின் நீரோட்டம் அதிகரிப்பது தெரிந்தது . நான் மட்டும் இப்போது ஊருக்குள் இருந்திருந்தால், அதிகமான சேட்டைகள் செய்து மகிழ்ந்திருப்பேன். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் நீரின் வரத்து அதிகரிப்பது எனக்கு எப்போதுமே நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் நேரமாக இருக்கும். ஏனெனில் நதியில் விடப்படும் மரக்கட்டைகள் அப்போதுதான் மிதந்து வரும். சில சமயங்களில் டஜன் மரக்கட்டைகளை ஒன்றிணைத்து செய்யப்பட்டிருக்கும் மரக்கலம் மிதந்து வரும். நான் அதைப் பிடித்துச் சென்று மரஅறுவை மில்களுக்கும், மரக்கட்டைகளை வாங்கும் நிலையத்திற்கும் விற்று விடுவேன்.

கரையின் கூடவே சென்ற நான் ஒரு கண்ணால் அப்பாவைக் கண்காணித்துக் கொண்டும், இன்னொன்றால் ஏதேனும் உபயோகமானது மிதக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டே சென்றேன். அப்போதுதான் ஒரு குறுகிய மரத்தோணி மிதந்து வருவதைக் கண்டேன். பதிமூணு பதினாலு அடி நீளத்தில், குழிந்த உட்புறத்துடன் ஒரு அன்னம் போன்று மிக அழகுடன் இருந்தது. தலை குப்புற தவளை போன்று அணிந்திருந்த உடையுடனே நீரினில் பாய்ந்து அந்த மரத்தோணி நோக்கி நீந்திச் சென்றேன். அதன் உள்ளே யாரேனும் மறைந்து படுத்திருக்கக்கூடும் என்று நான் எதிர்பார்த்தேன். சில சமயங்களில் குறும்பு செய்வதற்காக உள்ளே மறைந்திருந்து, யாரேனும் அவர்கள் அருகில் சென்றால், திடீரென எழுந்து பயப்படுத்திச் சிரிப்பது போன்ற விளையாட்டு இருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் இந்த முறை அப்படி ஏதும் நடக்கவில்லை. உண்மையாகவே அது ஒரே நல்ல மரத்தோணி. எனவே நான் அதில் இறங்கி துடுப்பை வலித்து கரையை நோக்கிச் செலுத்தினேன். இதனது மதிப்பு ஒரு பத்து டாலருக்குத் தேறும் என்பதால் எனது கிழவன் இதைப் பார்த்தால் மிகுந்த மகிழ்ச்சி கொள்வான்.

Continue Reading →

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 6

- மார்க் ட்வைன் -– என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’ –


அத்தியாயம் ஆறு

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 6முனைவர் ஆர்.தாரணிநல்லது. திரும்பவும் எனது கிழவன் பழையபடி முருங்கை மரம் ஏறி விட்டான். நீதிபதி தாட்சர் மீது அந்தப் பணத்திற்காக வழக்குப் போட்டான். நான் பள்ளிக்குச் செல்கிறேனா என்று என் பின்னால் வந்து உளவு பார்க்கவும் ஆரம்பித்தான். சில சமயங்களில் என்னைக் கைப்பிடியாகப் பிடித்து, கடுமையாக அடித்தான். ஆனால் நான் பள்ளிக்குச் செல்வதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன். ஒன்று அவனைத் தவிர்த்து விடுவேன் அல்லது அவன் என்னைப் பிடிக்கமுடியாத அளவு வேகமாக ஓடி விடுவேன். உண்மையில் பள்ளிக்குச் செல்வது எனக்கு முன்பெல்லாம் பிடிக்காத ஒன்று. ஆனால் இப்போது பள்ளிக்குச் செல்வது என் அப்பாவை கடுப்பேத்தும் என்பதை உணர்ந்து தவறாமல் செல்ல ஆரம்பித்தேன்.

என் அப்பா போட்ட வழக்கோ மிகவும் மெதுவாக நடந்து கொண்டிருந்தது. அவர்கள் வழக்கு நடத்தும் செயல்முறையை ஆரம்பிப்பதாகவே தெரியவில்லை. எனவே, அவ்வப்போது நான் நீதிபதி தாட்சரிடம் இரண்டு அல்லது மூன்று டாலர்கள் கடன் வாங்கி என்னை அடிக்காமல் இருக்க அப்பாவுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொருமுறையும் அவனுக்குப் பணம் கிடைக்கும்போதும் கண் மண் தெரியாமல் குடிப்பது மட்டும் அல்லாது கலாட்டா செய்து ஊரையே இரண்டாக்குவான். அப்படி ஊரில் கலாட்டா செய்யும் ஒவ்வொரு முறையும், அவனைச் சிறையில் அடைப்பார்கள். இந்த மாதிரி ஒரு வாழ்கை முறை அந்த மனிதனுக்கு மிகவும் சரியாகப் பொருந்தியது – அவனது பாதையைப் பொறுத்த வரை அவனுக்கு சரியாகப் பட்டது போலும்..

அந்த விதவையின் வீட்டைசுற்றியே அப்பாவின் நடமாட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், அந்த விதவை கடும் எரிச்சலுடன் இவ்வாறு தொந்தரவு செய்தால் அவன் வாழ்க்கையை கடினமாக மாற்றிவிடப்போவதாக கடைசியாக அவரை எச்சரித்தாள். அது அவனை மிகவும் கடுப்படையச் செய்தது. ஹக் ஃபின்னுக்கு யார் உண்மையான பாதுகாவலர் என்று அவளுக்குக் காட்டப்போவதாகத் தெரிவித்தான். எனவே, ஒரு வசந்த கால நாளில் மறைந்திருந்து எனக்காகக் காத்திருந்து என்னைப் பிடித்துவிட்டான். என்னை இழுத்துக்கொண்டு ஒரு தோணியில் மேல் நோக்கி ஓடும் ஆற்றின் திசையில் மூன்று மைல்கள் கூட்டிச்சென்றான். அதன் பின் இல்லினோய் மாகாணத்தை நாங்கள் கடந்து சென்றோம். அடர்ந்த மரங்களால் மறைக்கப்பட்ட மரத்தினாலான தனித்திருக்கும் சிறிய குடிலுக்கு அழைத்துச் சென்றான். அப்படி ஒரு இடம் அங்கே உள்ளது முன்னமே அறிந்திருக்காத பட்சத்தில், நீங்கள் அதை ஒருபோதும் கண்டுபிடிக்கவே இயலாது.

எல்லா நேரமும் அப்பா என்னை தன்னுடனே இருத்தி வைத்துக்கொண்டான். எனவே, தப்பி ஓட எனக்கு வாய்ப்புக் கிட்டவே இல்லை. நாங்கள் அந்த பழைய சிற்றறையில் வசித்தோம். அவன் எப்போதும் அந்த அறையைப் பூட்டி அதன் சாவியை இரவு வேளைகளில் தனது தலைமாட்டில் வைத்துக்கொள்வான். அவனிடம் ஒரு துப்பாக்கியும் இருந்தது. எங்கேயோ அதை அவன் திருடி இருக்கக்கூடும் என்று நான் யூகித்திருந்தேன். வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் அதைப் பயன்படுத்தினோம். கொஞ்ச நாட்களுக்கு ஒரு முறையாவது என்னை அந்த அறையில் விட்டுப் பூட்டிவிட்டு தோணியை எடுத்து கீழ்த்திசை நோக்கி செலுத்தி அங்குள்ள கடையில் மீன் விற்று , மது வாங்கும் விளையாட்டுக்குச் சென்று விடுவான். நன்கு மூக்கு முட்டக்குடித்து விட்டு, கையிலும் மது பாட்டில் வாங்கி கொண்டு வந்து பழைய காலம் மாதிரியே பொறுப்பற்ற ஊதாரியாக வாழ்ந்து கொண்டிருந்தான், அந்த சமயங்களில் என்னைச் சரமாரியாக அடிப்பான், இதற்கிடையில் என் இருப்பிடத்தை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த விதவை ஒரு ஆள் மூலம் என்னை திருப்பிக் கொண்டு செல்ல முயற்சி செய்தாள். ஆயினும், அந்த ஆளை அப்பா கையில் இருந்த துப்பாக்கி கொண்டு ஓட அடித்துவிட்டான். அங்கே குடியமர்ந்து நீண்ட நாள் ஆகவில்லை எனினும், எனக்கு அந்த இடம் பழக்கமாகி விட்டது. என் அப்பாவிடம் அடி வாங்கும் பகுதியைத் தவிர மற்றபடி அந்த வாழ்க்கை எனக்குப் பிடித்துத்தான் போனது.

Continue Reading →

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 5

- மார்க் ட்வைன் -– என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’ –


அத்தியாயம் ஐந்து

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 5முனைவர் ஆர்.தாரணிஅறைக்கதவை அடைத்துவிட்டு நான் திரும்பிப்பார்க்கும் வேளை, அங்கே அவர், என் அப்பா. என்னை அவர் அதிகம் அடித்துத் துன்புறுத்துவதால், அவரைக் கண்டு எல்லாக்காலங்களிலும் நான் பயம் கொண்டிருந்திருக்கிறேன். .அதே போல்தான் அன்றும் பயந்தேன். ஆனால், ஒரு நிமிடத்திற்குப் பிறகு, அவரைப் பார்த்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் பயத்தின் தன்மை சிறிது மாறியவுடன், எனது மூச்சைக் கொஞ்சம் இழுத்துப் பிடித்துத்தளர்த்தினேன். அங்கே பயப்பட ஏதுமிலை என்பதை நான் உணர்ந்தேன்.

அவருக்கு வயது ஐம்பது இருக்கும். வயதுக்கேற்ற தோற்றத்தில்தான் அவரும் காணப்பட்டார். ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து, வழுவழுப்புடன், நீண்டு கீழே விழும் தலைமுடி வழியாக பளபளத்த கண்கள் திராட்சைக்கொடியினூடே கூர்ந்து நோக்குவதைப் போல் இருந்தது. அவரது தலைமுடியும், முடிச்சு விழுந்து நீண்டிருந்த அவரது தாடியும், கொஞ்சம் கூட நரைக்காமல் கருகருவென இருந்தது. அந்த முடிக்கற்றைகளினூடே வெளிப்பட்ட அவரது முகம், நோயுற்று வெளுத்துப் போயிருக்கும் வெண்மை நிறத்தில், மரத்தின் வெள்ளைத் தேவாங்கு அல்லது நீரின் ஆழத்தில் இருக்கும் மீன் போன்றவைகளின் நிறத்தில் இருந்தது. உங்களை கடும் பீதியில் ஆழ்த்த அதுவே போதுமானது. அவரின் ஆடைகள் கந்தலாக இருந்தன. அவர் தனது ஒரு காலை எடுத்து அதன் கணுக்காலை இன்னொரு காலின் முட்டியின் மீது வைத்து அமர்ந்திருந்தார். அவர் மேலே வைத்திருந்த காலின் பூட் கிழிந்து, காலின் இரண்டு விரல்பகுதிகள் அந்த ஓட்டை வழியே வெளியே தெரிவதை நீங்கள் நன்றாகக் காண முடியும். அந்த விரல்பகுதிகளை அவர் சிறிதாக அசைக்கவும் செய்தார். மேல்பக்கம் உள்ளே குழிந்து, தளர்ந்து இருக்கும் அவரது தொப்பியானது கீழே தரையின் மீது கிடந்தது.

நான் அங்கே நின்று அவரை உற்றுப்பார்த்துக்கொண்டிருக்க, அவரும் நாற்காலியில் இருந்துஅமர்ந்தவாறே, சுழன்று திரும்பி என்னை நோக்கிக்கொண்டிருந்தார். மெழுகுவர்த்தியைக்கீழே வைக்கும் வேளையில்தான் ஜன்னல் திறந்து கிடப்பதை, நான் கவனித்தேன். அப்படியானால் அவர் அந்த கூரைக்கொட்டகை வழியாக ஏறி ஜன்னல் வழியாக உள்ளே வந்திருக்க வேண்டும். அவர் என்னை மேலும் கீழும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கடைசியில் கூறியதாவது: “சலவை செய்யப்பட ஆடைகள் உனக்கு!. நீ மிகவும் மேலிடத்தை சார்ந்ததாக உன்னை எண்ணிக்கொள்கிறாயோ?”

Continue Reading →

‘சுட’ரில் சுடர்ந்த ஓவியர்கள் சிலர்..

சுடர் இதழொன்றின் அட்டைப்படம். ஓவியர் - இந்துஎண்ணிம நூலகமான ‘நூலக’த்தில் எழுபதுகளில் சுதந்திரன் பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட ‘சுடர்’ சஞ்சிகையின் ஆடி 1975 தொடக்கம் ஜூன்/ஆடி 1983 வரைக்குமாக 32 இதழ்களைக் காண முடிந்தது. அவற்றை மேலோட்டமாகப் பார்த்தபோது வரதர், இரசிகமணி கனக செந்திநாதன், கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை , எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் தொடக்கம், அனலை இராசேந்திரம், காவலூர் ஜெகநாதன், தாமரைச்செல்வி, தமிழ்ப்பிரியா, மண்டைதீவு கலைச்செல்வி, கோப்பாய் சிவம், கே.எஸ்.ஆனந்தன், இளவாலை விஜேந்திரன், வாகரைவாணன், கே.ஆர்/டேவிட், தென்மட்டுவில் கண்ணன், மங்கை கங்காதரம் என்று மேலும் பலரின் பல்வகைப் படைப்புகளையும் காண முடிந்தது. கலாமோகனின் இலக்கியக் கட்டுரகளையும் காண முடிந்தது.

கலை, இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்த ‘சுடர்’ சஞ்சிகையும் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு மிகவும் வளம் சேர்த்த சஞ்சிகைகளிலொன்றாகக் கருதலாம். ‘சுடர்’ சஞ்சிகையில் மேலுள்ள எழுத்தாளர்களுடன் மேலும் புதிய எழுத்தாளர்கள் பலர் பங்களித்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. ‘சுடர்’ சஞ்சிகை மரபுக்கவிதை, புதுக்கவிதைக்கென பக்கங்களை ஒதுக்கியிருந்தது. புதுக்கவிதைப் பக்கத்தில் பல இளையவர்கள் எழுதியிருந்தனர். பக்கங்களில் ஆங்காங்கே நறுக்குக் கவிதைகளையும் கவிஞர்கள் பலர் எழுதியிருந்தனர். குறிப்பாகக் கவிஞர் காசி ஆனந்தனின் ‘கணைக் கவிதை’களைக் குறிப்பிடலாம். இவை தவிர ஆரத்தியின் ‘இலக்கியச் சோலை’ பத்தியில் எழுத்தாளர்கள் பலரைப்பற்றிய அறிமுகக் குறிப்புகள், வாழ்த்துக்குறிப்புகள் நிறைந்திருந்தன. வடகோவை வரதராஜன், தாமரைச்செல்வி, அ.செ.முருகானந்தன், சாரதா சண்முகநாதன், தமிழ்ப்பிரியா என்று பலரைப்பற்றிய குறிப்புகள் காணப்பட்டன. மேலும் இளம் எழுத்தாளர்கள் பலரை அறிமுகப்படுத்தும் பகுதியையும் சுடர் உள்ளடக்கியிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

Continue Reading →