வாசிப்பும், யோசிப்பும் 242: நனவிடை தோய்தல்: க.பாலேந்திரா பற்றிய சிந்தனைகள் சில…..

பாலேந்திராயூலை 9, 2017 அன்று ‘டொராண்டோ’வில் பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brect) எழுதிய புகழ் பெற்ற நாடகங்களிலொன்றான The Exception and The Rule என்னும் நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘யுகதர்மம்’ நூலின் வெளியீடு நடைபெறவுள்ளது. அன்று மாலை 3800 Kingston Road , Toronto என்னும் முகவரியில் அமைந்துள்ள Scarborough Village Community Centre மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்காகத் திரு. பாலேந்திரா அவர்கள் தற்போது ‘டொரோண்டோ’ வருகை தந்திருக்கின்றார். அவரது நூல் வெளியீடு வெற்றியடைய வாழ்த்துகள். பாலேந்திராவின் வருகை அவர் பற்றிய சிந்தனைகளை ஏற்படுத்திவிட்டது. அது பற்றிய நினைவுப்பதிவே இது.


உலகத்தமிழர்கள் கலை, இலக்கிய வரலாற்றில் , நாடகக் கலையைப்பொறுத்தவரை க.பாலேந்திராவுக்கு முக்கியமானதோரிடமுண்டு. இலங்கையிலும் , புகலிடத்தமிழச்சூழலிலும் அவரது குழுவினரின் அவைக்காற்றுக்கழகத்தின் பங்களிப்பு முக்கியமானது. இத்தருணத்தில் அவரைப்பற்றிச் சிறிது என் சிந்தனையினையோட்டுகின்றேன்.

நான் அவரை முதன் முதலில் சந்தித்தது மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில்தான். அப்பொழுதுதான் நான் அங்கு கட்டடக்கலைப்பிரிவுக்குத் தெரிவாகியிருந்தேன். அவர் பொறியியற் கல்வி கற்று, பொறியியலாளராக வெளியேறியிருந்தார். இருந்தாலும் அவர் அடிக்கடி பல்கலைக்கழகத்துக்கு வருவார். பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்துக்காக அவரது நாடகங்கள் பல அக்காலகட்டத்தில் மேடையேறின. நான் நாடகங்களை இரசிப்பவனாகவிருந்தேன். நடிப்பவனாக இல்லாத காரணத்தால் அச்சமயத்தில் அவருடன் நெருங்கிப்பழக முடியவில்லை. ஆயினும் காணும் தருணங்களில் எப்பொழுதும் அவருக்கேயுரிய , இதழ்க்கோடியில் மலரும், அனைவரையும் ஈர்க்கும் புன்னகையுடன்தான் தோன்றுவார். எனக்கு அவரைப்பற்றி நினைத்தவுடன் முதலில் தோன்றுவது அந்தப்புன்னகை தவழும் முகமும், அதனைத்தொடர்ந்து அவர் இயக்கி , ஈழத்தமிழ் நாடக உலக்குக்கு அறிமுகப்படுத்திய நவீன நாடகங்களும்தாம்.

Continue Reading →

நூல் அறிமுகம்: லாரி ஓட்டுனர்களின் செலவுக்கணக்கு

நெடுஞ்சாலை வாழ்க்கை –கா.பாலமுருகன்  நூல்

சுப்ரபாரதிமணியன்ஓட்டுனர் ( லாரி ) சமூகத்தோடு பழகி 2 ஆண்டுகள் 12,000 கிமீட்டர்கள் பயணித்த அனுபவங்களை கா. பாலமுருகன்   இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். சின்னவயது அனுபவங்களில்,  ஆசைகளில் அவருக்கு ஓட்டுனர் ஆகவேண்டும் என்று மனதில் ஆழப்பதிந்திருக்கிறது. அதை நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு முகமாய் இப்பயணங்களை வட மாநிலங்களுக்கு ஓட்டுனர் ( லாரி ) சிலருடன்  மேற்கொண்டிருக்கிறார். குப்பியில் அடைத்த மருந்து குலுங்குவது போல் லாரி பயணங்கள் இருந்ததாகச் சொல்லும் பாலமுருகன்  அப்படித்தான்  படிப்பவர்களையும் குலுக்கி விடுகிறார்.அப்படி குலுக்கி எடுக்கும் சமாச்சாரங்கள் தான் எத்தனை எத்தனை.

1. ஓட்டுனர்களுக்கு   ( லாரி ) காவல்துறை ஆள் யார், . காவல்துறைக்காரர் யார்,  காவல்துறை ஆள் என்று சொல்லிக் கொண்டு பணம் பறிப்பவர் யார் என்று கண்டுபிடிக்கமுடியாமல் அவர்கள்  திணறுவதைப் பார்க்கும்போது சிரமமாக இருக்கிறது.

2. விதவிதமான டோல் பூத் காணிக்கைகள்… சாமிகள்,   பூசாரிகள் யார் என்றே தெரியாது. ஆனால் கட்டாயக் காணிக்கைகள். காணிக்கை தருவதில் ஒரு பவ்யம் வேண்டும் . இல்லாவிட்டால் பலிதான்   செக்போஸ்ட்டுகள், மாநில எல்லைகள், பெருநகர எல்லைகளில் இந்த பலி பீடங்கள் உள்ளன.

3. லாரிகளில் கொண்டு  செல்லும் பொருட்களை  திருடுவதில் கூட பலவிதங்கள். தந்திரங்கள்.அதைக்கண்டுபிடித்து ஜாக்கிரதைப் பண்ணீக்கொள்ள பெரிய பிரயத்தனங்கள். ஆள் நடமாட்டமில்லாத இடங்கள் அவர்களுக்குச் சொர்க்கம்.

Continue Reading →

மல்லிகைஜீவா என்ற டொமினிக்ஜீவாவுக்கு 90 வயது (பிறந்த திகதி 27-06-1927)! இலக்கிய உலகில் கனவுகளை விதைத்தவரின் கனவுலகம்!

– ‘மல்லிகை’ ஆசிரியர் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு ஜூன் 27 அன்று வயது தொண்ணூறு. அதனையொட்டி எழுத்தாளர் முருகபூபதி எழுதிய இக்கட்டுரை வெளியாகின்றது. –


எழுத்தாளர் டொமினிஜக் ஜீவா

நான்  அவரை முதல் முதலில் பார்க்கும்போது எனக்கு 13 வயது.  அவருக்கு அப்போது 37 வயது. காலம் 1964 ஆம் ஆண்டு. யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரியின் ஆண்கள் விடுதியிலிருந்து படிக்கும் காலம். விடுதியில் பாரதி, வள்ளுவர், கம்பர் என்று மூன்று மாணவர் இல்லங்கள். எனக்கு அந்த வயதிலும் பாரதிதான் மிகவும் பிடித்தமானவர். அவரது பாடல்கள் இலகுவாகப்புரிந்ததும் ஒரு காரணம். பாரதி இல்லத்திலே சேர்ந்துகொண்டேன். என்னுடன் படிக்க வந்திருந்த எனது மாமா மகன் முருகானந்தன்  வள்ளுவர் இல்லத்திற்குச்  சென்றுவிட்டான். ஆண்கள் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மத்தியில் கிரிக்கட், உதைபந்தாட்டம், கிளித்தட்டு போட்டிகளை இல்லங்களின்  மட்டத்தில் நடத்துவார்கள். அவ்வப்போது மூன்று இல்லங்களும் இணைந்து கலை நிகழ்ச்சிகளும், ஒன்றுகூடல் விருந்துகளும்  நடத்தும். அத்துடன் யாராவது ஒரு பெரியவரை அழைத்து கல்லூரி பிரதான மண்டபத்தில் பேசவைப்பார்கள். அன்று ஒருநாள் வந்தவர் வெள்ளை வேட்டி, வெள்ளை நேஷனல் அணிந்திருந்தார். சிவந்ததேகம். அவர்தான் பிரபல பேச்சாளர் டொமினிக்ஜீவா என்று ஒரு இல்லத்தின் தலைவர் அறிவித்தார். அப்பொழுது அவர் மல்லிகை என்ற இலக்கிய இதழை தொடங்கியிருக்கவில்லை.  அவர் மேடையில் பேசும்போது ஆத்திரத்தில் பேசுவதுபோலவே எனக்குப்புரிந்தது. அதனைத்தான் பின்னாட்களில் தர்மாவேசம் எனப்புரிந்துகொண்டேன். அவருக்கு எமது தமிழ் சமூகத்திடம் ஏதோ கோபம், ஆழ்ந்த வருத்தம் இருப்பதாகவே அந்த வயதில் தெரிந்துகொண்டேன். சங்கானை என்னும் இடத்தில் நடந்த சாதிக்கலவரம் பற்றி அவர் பேசினார். சாதி என்றால் என்னவென்று தெரியாமல்தான் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தேன். விடுதியில்தான் அதன் அர்த்தம் எனக்கும் முருகானந்தனுக்கும் தெரிந்தது.

டொமினிக்ஜீவா,  அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் பற்றியும் பேசினார். அவர், ஒரு விறகுவெட்டிப்பிழைக்கும் தொழிலாளியின் மகன் என்ற தகவலும், தெருவிலிருந்த மின்கம்பத்தின் கீழே அமர்ந்து படித்திருக்கிறார் என்ற செய்தியும் டொமினிக்ஜீவா அன்று சொல்லித்தான் எனக்குத் தெரியும். டொமினிக்ஜீவா அன்று பேசும்போது அவரது நெற்றி நரம்புகள் புடைத்திருந்தன. பேசி முடித்த பின்னர் அவருக்காக மேசையில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானப்போத்தலை எடுத்து அருந்தினார். மிச்சமும் வைத்தார். அதனை அருந்துவதற்கு இரண்டு மாணவர்கள் போட்டியிட்டனர். அதுதான் நான் டொமினிக்ஜீவாவை முதல் முதலில் கண்ட காட்சி. அவரை பின்னாட்களில் சந்திப்பேன் என்றோ, அவர் வெளியிட்ட மல்லிகையில்தான் எனது முதலாவது இலக்கியப்பிரதி வெளியாகும் என்றோ, அவர் எனது குடும்ப நண்பராவார் என்றோ, அவர் பற்றி கட்டுரைகளும் நூலும் எதிர்காலத்தில் எழுதுவேனென்றோ அந்தச் சிறிய வயதில் நான் கனவுகூட காணவில்லை. ஆனால், நான் அன்று காணாத கனவெல்லாம் பிற்காலத்தில் கனவாக வந்து நனவாகியிருக்கின்றன. அவருடன் நெருங்கிய பின்னர்.  அவரும் என்னுள் கனவுகளை விதைத்தார். அவற்றை நனவாக்கியிருக்கின்றேன் என்ற மனநிறைவுடன்,  தமது 90 ஆவது அகவைக்கு வந்திருக்கும் அவரை வாழ்த்துகின்றேன்.

Continue Reading →

பூங்காவனம் 28 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை

பூங்காவனம் 28 ஆவது இதழ் மீதான ஒரு பார்வைபூங்காவனத்தின் 28 ஆவது இதழ் ஓய்வு பெற்ற அதிபரும், இலக்கிய ஆர்வலருமான திருமதி மர்ளியா சித்தீக் அவர்களின் புகைப்படத்தை அட்டைப்படமாகத் தாங்கி வந்திருக்கிறது.

இதழின் பிரதம ஆசிரியர் தனது ஆசிரியர் கருத்துப் பக்கத்தில் குடிநீரின் முக்கியத்துவத்தைப் பற்றிய கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மார்ச் மாதம் 22 ஆம் திகதி குடிநீர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் நீரின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து நீர்ப்பாவனையை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் முற்று முழுதான நீரின் 03 சதவீதமே மனிதனது பாவனைக்கு உள்ள நீரின் அளவான படியினால் நீரின் பாவனை எந்தளவுக்கு சிக்கனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனை எடுத்து விளக்கியிருக்கின்றார். நீர் போட்டிப் பொருளாகவும், வியாபாரப் பொருளாகவும் இன்று மாறியிருப்பதால் சில வேளைகளில் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள மென்பானங்களை உட்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன என்பதனையும் நினைவுபடுத்தியிருக்கிறார். எனவே வாசகர்களாகிய நாமும் அவரது கருத்துக்களை மனதில் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லலாம்.

இனி பூங்காவனத்தின் உள்ளே வழமைபோன்று நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப்பூங்கா ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

நேர்காணலில் இம்முறை திருமதி மர்ளியா சித்தீக் அவர்களின் நேர்காணல் இடம் பெற்றிருக்கிறது. அதேபோன்று பதினொரு கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிதைகளை பதுளை பாஹிரா, ஆ. முல்லைதிவ்யன், மருதூர் ஜமால்தீன், எம்.எஸ்.எம். சப்ரி, ஷப்னா செய்னுள் ஆப்தீன், டாக்டர் நாகூர் ஆரீப், ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, எம்.எம். அலி அக்பர்,  ஆர். சதாத், எச்.எப். ரிஸ்னா, குறிஞ்சி தென்றல் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

இந்த இதழில் நான்கு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை வெலிப்பன்னை அத்தாஸ், சூசை எட்வேட், சுமைரா அன்வர், எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோரும், உருவகக் கதையை எஸ். முத்துமீரானும் எழுதியிருக்கின்றனர். கவிஞர் ஏ. இக்பால், கா. தவபாலன், ஆஷிகா ஆகியோர் கட்டுரைகளைத் தந்திருக்கின்றார்கள். கிச்சிலான் அமதுர் ரஹீமின் நூல் மதிப்பீடும் நூலில் இடம் பிடித்திருக்கிறது.

Continue Reading →

நூல் அறிமுகம்: “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம்

நூல் அறிமுகம்: “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம்சமூகமொன்றின் இயக்கத்துக்கும் நீடித்து நிலைபெறலுக்கும், வரலாறு என்பது அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. ஆனால் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, ஒரு ஆய்வாளன் ஆராய்கின்ற வழக்கிழந்த நடைமுறை ஒன்று, புவியியலால் தனித்த வேறொரு பகுதியில் இன்றும் மருவிய நிலையில் வழக்கில் இருக்கலாம். ஆனால், விரிவான தளத்தில் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளும் போது அந்த மிகச்சிறு அம்சம் கவனிக்கப்படாமல் போக வாய்ப்புகள் உண்டு.

இந்த இடத்தில் தான் நுண்வரலாறுகள் (Micro histories) கைகொடுக்கின்றன. ஒரு ஆய்வுப்பொருள் பரந்த எல்லைக்குள் அடங்கும்போது, அதை தனிநபர் அல்லது தனிச்சமூகம் அல்லது குறித்த புவியியல் பிராந்தியம் சார்ந்து வரையறை செய்து கட்டியெழுப்புவதே, நுண்வரலாறு எனப்படுகின்றது. இத்தகைய நுண்வரலாறுகளின் தொகுப்பாக முழு வரலாறு உருவாக்கப்படும்போது, அது ஐயத்துக்கிடமற்ற நம்பகத்தன்மையையும் துல்லியத்தையும் கொண்டிருக்கும். அண்மையில் சொ.பிரசாத், க.சபாரெத்தினம் ஆகியோரால் எழுதப்பட்டு, மறுகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” நூலை, இத்தகைய ஒரு நுண்வரலாறு என்ற கண்ணோட்டத்தில் தான் அணுகவேண்டும்.

கண்ணகி வழிபாட்டுக்கும் கிழக்கிலங்கைக்கும் இடையேயான பிரிக்கமுடியாத பந்தம், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. சிங்களவர், வடபகுதித் தமிழர் என்போரிடமும் கண்ணகி தெய்வமாக விளங்கினாலும், கீழைத்தமிழருடனான அவளது நெருக்கத்துக்கு விடை தேடும் ஆய்வுகள், அறிவார்ந்த பார்வையில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. கீழைக்கரையின் ஒவ்வொரு கண்ணகி ஆலயங்களும் தத்தம் நுண்வரலாறுகளை முறைப்படிப் பதிவு செய்யும் போது, இக்கேள்விக்கு நம்மால் இலகுவாகப் பதில்காண முடியும் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே 1985களில், “செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வரலாறும் வழிபாடும்” எனும் நூல், அவ்வாலய பரிபாலன சபையினரால், வெளியிடப்பட்டிருந்தது. அதேபோல், 1998இல் ந.நவநாயகமூர்த்தியால் “தம்பிலுவில் கண்ணகி வழிபாடு” எனும் நூல் வெளியிடப்பட்டது. இன்னொரு முக்கியமான நூலாக, 2014இல் வெளியான காரைதீவுக் கண்ணகி அம்மன் ஆலயக் கும்பாபிஷேக மலரைக் குறிப்பிடலாம். இந்த வரிசையில் அடுத்ததாக வந்து இணைந்திருக்கிறது “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” நூல்.

Continue Reading →

ஐரோப்பியப்பயணத்தொடர் (5): ஒளிரும் மாய நகரம் – பாரிஸ்

– முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின்  ஐந்தாவது அத்தியாயம் ‘ஒளிரும் மாய நகரம் – பாரிஸ் “என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. – பதிவுகள் –


அத்தியாயம் ஐந்து: ஒளிரும் மாய நகரம் – பாரிஸ்

“பாரிஸ் என்ற வார்த்தையுடன் மூன்று எழுத்துக்கள் சேர்த்தால் அது பாரடைஸ் ஆகிறது’ . (Paris – Paradise )

ஏப்ரல் 23, 2017

முனைவர் ர. தாரணிஐரோப்பியப்பயணத்தொடர்இந்த நாள் யுனைடெட் கிங்டோம் விட்டு விலகி அண்டை நாடான பிரான்சு நோக்கி புறப்படத் தயாரானோம். எங்கள் பயண திட்டத்தில் அடுத்து நாங்கள் ரசிக்கப்போகும் நிலம் உலகப்புகழ் பெற்ற பாரிஸ் நகரம். உலகின் அதிசயம் என முதலில் ஆராதிக்கப்பட்ட ஐஃபெல் டவர் அமைந்துள்ள நகரம். அதிகாலையிலே எழுந்து புறப்பட்டு காலை உணவை முடித்து பேருந்தில் ஏறி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பயணம் செய்து நூறு மைல்கல் தொலைவில் இருந்த டோவர் துறைமுகத்தை அடைந்தோம். செல்லும் வழியில் எல்லாம் கண் கொள்ளா அழகிய வண்ணம் மிக்க சிறுசிறு பூக்கள் அதிலும் ஒரு மஞ்சள் நிற பூ கொல்லென்று எல்லா பகுதியிலும் பூத்துக்கிடக்கிறது. பேருந்து வேகமாக சென்றதால் சரியான முறையில் அப்பூக்களை நிதானமாக ரசிக்க இயலவில்லை. பெயர் தெரியாவிட்டாலும் மனத்தில் நிறைந்த மலர் அது.

வானத்தில் மலர்தேவதைகள் சுமந்து சென்ற பூக்கூடைகள் அனைத்தும் கொட்டி சிதறி மஞ்சள் பாய் விரித்தது போன்ற ஒரு தோற்றம். நம் ஊரில் எல்லாம் இப்படி, இவ்வளவு கண்கவர் அழகுகளை வழிகளில் பார்த்தாக கொஞ்சம் கூட நியாபகம் இல்லை. வட இந்தியாவில் டெல்லியில் இருந்து ஆக்ரா செல்லும் வழியில் வழியெங்கும் இருக்கும் கடுகு செடியில் அமைந்த மஞ்சள் மலர்கள் நம்மூரில் அழகுதான். எனினும், இந்த மஞ்சள் மலர்கள் கொள்ளை அழகு. அதன் பெயர் காமன் ராக்ரோஸ் என்பதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். என் யூகம் தவறாகவும் இருக்கக்கூடும். இதுபற்றி விசாரித்து அறியவேண்டும்.

டோவர் துறைமுகம் தெற்கு இங்கிலாந்தில் கென்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரு பரபரப்பான துறைமுகம். அங்கிருந்து பிரான்ஸ் வெறும் 21 மைல்கல் மட்டும்தான் என்பதால் தினமும் படகு சேவை இக்கரையில் இருந்து அக்கரைக்கு மக்களை சுமந்து செல்கிறது. Ferry Service என்றே அந்த படகுகளைக் குறிப்பிடுகிறார்கள். காரணம் படகுகள் (Boats) சிறிய வகையை சார்ந்தவை. கப்பல்கள் (Ships) மிகவும் பெரியவை. கப்பல்களிலும் சேராமல், படகென்றும் ஒதுக்கிவிட முடியாமல் நடுத்தர வகைக்ச் சேர்ந்தவையே Ferry என அறியப்படுகின்றன. இந்த வகை Ferry Service பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும் மற்றும் கார்கோ (Cargo) எனப்படும் பொருட்கள் கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. நிறைய Ferry Service பேருந்துகள், பெரிய கன்டைனர் வகை லாரிகளையும் எடுத்து செல்லும் அளவு திறன் படைத்தவை.

Continue Reading →

சுப்ரபாரதிமணியனின் ‘ஓ.. செகந்திராபாத்’ : தனக்கேயான முகம்

சுப்ரபாரதிமணியனின் 'ஓ.. செகந்திராபாத்' : தனக்கேயான முகம்மனிதன்பேசித்திரியும் விலங்கு என்றொரு பழமொழி உன்டு. இடம்பெயர்தல் ஆங்கிலத்தில் மைகிரேசன் என்பார்கள் காக்கை தன் ஊரைவிட்டு வெகுதொலைவு செல்லாது.புறா,கொக்கு,நாரை, பல கிலோமீட்டர் சென்று திரும்பும்.சுப்ரபாரதிமணியன் மைகிரேசன் கொண்ட மனிதர்.திருப்பூரில் பிறந்து குன்னூர் , ஹைதராபாத் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை என பல ஊர்களில் பணி செய்த அனுபவம் கொண்டவர் ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் உண்டு அது தனக்கேயான முகம்.எனினும் பின்னால் பல முகங்கள் கொண்டவர்கள் என்பதே உண்மை.

சுப்ரபாரதிமணியனின் தொலைநோக்குப்பார்வை இந்த நூலில் தெளிவாய்த் தெரிகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கைப் பயணத்தில் உடன் நடக்கும் மனிதர்களோடு தனக்கேயான உறவை அளவிட்டு வைத்துக் கொள்வார்கள்.தனக்கும் தன் நண்பர்களுக்குமான உறவைத் தன் தனித்தன்மையான எழுத்தில் வெளிப்படுத்தியிருப்பதில் அவர் வெற்றியடைந்திருக்கிறார் என்பது இந்நூலை படிக்கும்போது தெறிகிறது.அவர்களை நினைவு கூர்ந்து கொள்கிறார்,

ஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறந்திருக்கிறது..சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது  கிடைத்த  அனுபவங்களைத் தந்திருக்கிறார்.

அனைவருக்கும் அனுபவம் இருக்கிறது,தன் அனுபவத்தை எழுத்தில் கொண்டுவரும் திறமை சுப்ரபாரதிமணியனுக்கு இருக்கிறது என்பதற்கு இந்நூல் உதாரணம். தன் எண்ணங்களை இவர்கள் படிப்பார்கள் என்று தெரிந்தும் ராசி சிமெண்ட் அமிர்தனோ,ராமாநாயுடுஸ்டுடியோ மணியோ,நா.கதிர்வேலனோ,அவர்களின் குணங்களை பட்டியலிட்டிருக்கிறார் நாளை அவர்களை நேரில் சந்திக்கும் போதும்எதிர்கொள்ளும் துணிவு இவர் எழுத்தில் திடமாய்த் தெரிகிறது.அதி லேசாக எடுத்துக் கொண்டிருக்கிறாரோ என்று படுகிறது.

Continue Reading →

நூல் அறிமுகம்: ஒரு சகலகலாவல்லவனின் ஆடுகள வித்தை: யமுனா ராஜேந்திரனின் ‘உத்தமவில்லன்- The Anti Hero’ நூல் குறித்த சில பார்வைகளும் குறிப்புக்களும்

ஒரு சகலகலாவல்லவனின் ஆடுகள வித்தை:  யமுனா ராஜேந்திரனின் ‘உத்தமவில்லன்- The Anti Hero’ நூல் குறித்த சில பார்வைகளும் குறிப்புக்களும்“இந்த இராவணனின் எந்த தலை உண்மையானது?” – இது மூன்றாவது மனிதன் பெப்ரவரி 2003 இதழில் பாலு மகேந்திரா குறித்து உமா வரதராஜனால் எழுதப் பட்ட ஒரு கட்டுரையின் தலைப்பு. மேற்குறித்த கேள்வி பாலு மகேந்திரா மீது மட்டும் தொடுக்கப்படும் கேள்வி அல்ல.  இப்படியான கேள்விகளை  பன்முகத்தன்மை கொண்ட  ஒவ்வொரு கலைஞனும் தன் படைப்பிலும் வாழ்விலும் மக்களிடமிருந்து தினந்தோறும் எதிர்கொண்ட வண்ணமே இருக்கின்றான். மேலும் அவனது படைப்புக்கும் வாழ்விற்கும் இடையேயான இடைவெளிகள் அதிகரிக்கும் பட்சத்தில் இது போன்ற கேள்விகளின் வீச்சு இன்னும் பலமானதாகவும் வீரியம் மிக்கதாகவும் விளங்கும். இதே போன்ற  பல்வேறு விதமான கேள்விகளை உள்ளடக்கி, அன்று தொடக்கம் இன்றுவரை  தனது திரைப்படங்களிலும் நிஜவாழ்க்கையிலும் என்றுமே சர்ச்சைகளை உருவாக்கி வரும்  நடிகர் கமல்ஹாசன் மீதும் அவர் உருவாக்கிய பாத்திரங்கள்,படைப்புக்கள்  மீதும் யமுனா ராஜேந்திரனால் வைக்கப்பட்ட விமர்சனக்கட்டுரைகளின் தொகுப்பாக ‘உத்தமவில்லன் – The Anti-Hero ‘  என்னும் 12௦ பக்கங்கள் அடங்கிய சிறு நூலொன்று பேசாமொழி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.

யமுனா ராஜேந்திரன் தமிழக-ஈழ, புகலிட அரசியல் கலாச்சாரத் தளத்தில் பன்முகத்தன்மையுடன் இயங்கும் ஒரு படைப்பாளி, இடதுசாரி செயற்பாட்டாளர், சிந்தனையாளர். இதுவரை முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் சினிமா குறித்த விமர்சங்களையும் ஆய்வுகளையும் முன்னெடுப்பதில் எப்போதும் முழு மூச்சாக உழைப்பவர். ஒரு இடதுசாரி செயற்பாட்டாளராக இருந்தபோதிலும் வரட்டுத்தனமான கொள்கைகளினாலும் வரட்சி நிறைந்த கருத்துக்களினாலும் தனது நிலைப்பாட்டினை முன்னெடுக்காமல், உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மூன்றாம் உலகம் குறித்த கலை, இலக்கிய, பண்பாட்டுக் கூறுகளை தமிழிற்கு அறிமுகம் செய்ததில் முதன்மையானவர். இன்று பல்வேறு விதமான பிற்போக்கு சக்திகளின் ஊடாக கொந்தளிப்புக்குள்ளாகி வரும் ஈழ-தமிழக அரசியல் சூழலில் தனது எழுத்துக்களின் மூலம் ஒரு கருத்துமையமாகத் திகழும் இவர், இத்தளத்தில் ஒரு அசைவியக்கமாகத் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். இத்தகைய பல்வேறு பரிமாணங்களில் தொடர்ந்தும் செயலாற்றி வரும் யமுனா ராஜேந்திரன், தமிழக அரசியல் கலாச்சாரத் தளத்தில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிவரும் கமல்ஹாசனை தனது கவன வட்டத்திற்குள் எடுத்துக் கொண்டது ஒன்றும் வியப்பான விடயம் இல்லை.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 241: நான் மதிக்கும் இலக்கிய ஆளுமைகள்: எழுத்தாளர் நந்தினி சேவியர்

எழுத்தாளர் நந்தினி சேவியர்!அண்மைக்காலமாக எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூற் பதிவுகளை ஆர்வத்துடன் படித்து வருகின்றேன். அதிகமான இவரது முகநூல் பதிவுகள் இவரது கலை, இலக்கியம் மற்றும் சமூக நீதி, பொதுவுடமை சமுதாய அமைப்பு ஆகியவை பற்றிய, ஆளுமைகள் பற்றிய விமர்சனக் குறுங்குறிப்புகளாக அமைந்திருக்கின்றன. இலங்கை அரசின் சாகித்திய விருது, கொடகே அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்ற ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளிகளிலொருவர்.


இவரது படைப்புகள் பலவற்றை நான் இன்னும் விரிவாக வாசிக்கவில்லை. ஆயினும் அவற்றை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன இவரது முகநூற் குறிப்புகள். இவரது முகநூற் குறிப்புகள் மூலம் நான் இவரைப்பற்றி அறிந்து கொண்ட இவரது ஆளுமை பற்றிய பிரதான அம்சங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்:


1. மானுட சமூக விடுதலைக்காக இவர் வரித்துக்கொண்ட கோட்பாடு மாரக்சியக் கோட்பாடு. இலங்கையில் சீனசார்புக் கம்யூனிச அமைப்பினூடு, மானுட சமூக, பொருளாதார விடுதலைக்காக, கட்சியில் இணைந்து செயற்பட்ட இலக்கியப்போராளிகளிலொருவர் இவர். இவ்விடயத்தில் , தான் பின்பற்றும் கோட்பாடு விடயத்தில் இவர் மிகவும் தெளிவாக இருக்கின்றார். தீண்டாமை போன்ற சமூகப்பிரச்சினைகளுக்கு மார்க்சியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட கட்சியொன்றினூடு இணைந்து போராடுவதே ஒரே வழி என்பதில், வர்க்கப்போராட்டமே ஒரே வழி என்பதில் உறுதியாக இருக்கின்றார். இந்த அடிப்படையில் இவர் அரசியல் ஸ்தாபனங்களைப்பற்றி, ஆளுமைகளைப்பற்றித் தன் விமர்சனங்களை முன் வைக்கின்றார்.


2. அடுத்த இன்னுமொரு விடயம். இவர் யாருக்காகவும் தனக்குச் சரியென்று பட்டதை எடுத்துரைக்கத் தயங்குவதில்லை. தான் தெளிவுடன் அணுகும் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் தன் வாதங்களை ஆணிதரமாக முன் வைப்பவர் இவர்.


3. தன் தனிப்பட்ட உடல்நிலை, பொருளியல் நிலை போன்ற விடயங்கள் தன் கலை, இலக்கியச் செயற்பாடுகளை, எண்ணங்களைத் திசை திருப்பி விடாதவாறு பார்த்துக்கொள்கின்றார்.


4. முகநூலை ஆக்கபூர்வமாகத் தொடர்ச்சியாகப் பாவித்துத் தன் எண்ணங்களை எடுத்துரைத்து வருகின்றார்.


5. கடந்த காலக் கலை, இலக்கிய மற்றும் அமைப்புகளின் செயற்பாடுகளை அவ்வப்போது இவ்விதமான குறிப்புகள் மூலம் பதிவு செய்வதோடு, அவை பற்றிய தன் விமர்சனங்களையும் முன் வைக்கின்றார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 240 : தேவை அ.ந.க.வின் ‘மனக்கண்’ நாவலின் அத்தியாயம் முப்பது; ;புறம் கூறுதல் பற்றி….

தேவை அ.ந.க.வின் ‘மனக்கண்’ நாவலின் அத்தியாயம் முப்பது.

'மனக்கண்' நாவலிலிருந்து..1967இல் தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளிவந்த , அறிஞர் அ.ந.கந்தசாமியின் நாவல் ‘மனக்கண்’. இந்நாவல் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களிலொன்று. அதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்: சுவையாகப் பின்னப்பட்ட கதை, அ.ந.க.வின் துள்ளுதமிழ் மொழி நடை மற்றும் நாவலில் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கும் பல்வேறு தகவல்கள். இந்நாவல் பற்றி விரிவானதொரு கட்டுரை எழுதியிருக்கின்றேன். அது ‘ழகரம்’ சிறப்பிதழில் மற்றும் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகியுள்ளது. அதற்கான இணைய இணைப்பு: http://www.geotamil.com/index.php…

இந்நாவலுக்கு நாவல் பற்றிச் சிறப்பானதொரு ஆய்வுக் கட்டுரையினையும் அ.ந.க எழுதியுள்ளார்.
அ.ந.க.வின் ‘மனக்கண்’ நாவலைப் ‘பதிவுகள்’ இணைய இதழிலிலுள்ள அ.ந.க பக்கத்தில் வாசிக்கலாம்: அதற்கான இணைப்பு: http://www.geotamil.com/index.php…

மேற்படி ‘மனக்கண்’ நாவலின் அத்தியாயம் முப்பது இன்னும் எமக்குக் கிடைக்கவில்லை. அதனை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம். இந்நாவல் தொடராகத் தினகரனில் வெளியாகியபோது தொடராக நாவலைச் சேகரித்து யாராவது வைத்திருந்தால் அந்த அத்தியாயத்தை எமக்குத் தந்தால் நன்றியாகவிருப்போம். மே 31, 1967 தினகரன் பத்திரிகையில் ‘மனக்கண்’ நாவலின் அத்தியாயம் 29 வெளியாகியுள்ளது. ஜூன் 13, 1967 தினகரன் பத்திரிகையில் அத்தியாயம் 31 வெளியாகியுள்ளது. ஆக, அத்தியாயம் 30 மே 31 , 1967 – ஜூன் 13, 1967 காலகட்டத்தில் வெளியான தினகரன் பத்திரிகையில் வெளியாகியிருக்க வேண்டும்.

இந்த அத்தியாயத்தை எற்கனவே இலங்கைச் சுவடிகள் திணைக்களத்தில் தேடிப்பார்த்திருக்கின்றோம். ஏனைய அத்தியாயங்களையெல்லாம் அங்கிருந்து பெற முடிந்தது. இதனை மட்டும் பெற முடியவில்லை.

யாராவது இலங்கை லேக் ஹவுஸ் நிறுவனத்துடன் தொடர்புகொண்டு , இந்த அத்தியாயத்தைப் பெற்றுத்தந்தால் அவ்வுழைப்புக்குரிய சன்மானம் வழங்கவும் தயாராகவிருக்கின்றோம். ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com.

Continue Reading →