வாசிப்பும், யோசிப்பும் 208 : டொராண்டோ: தமிழினி ஜெயக்குமரனின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ பற்றி ஜான் மாஸ்ட்டர்!

ஜான் மாஸ்ட்டர்அண்மையில் டொராண்டோவில் தேடகம் ஆதரவில் நடைபெற்ற தமிழினி ஜெயக்குமரனின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் பற்றிய நூல் வெளியீட்டில் அரசியற் செயற்பாட்டாளர் திரு.ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ட்டர்) ஆற்றிய உரை பற்றிய எனது சிந்தனைத்தெறிப்புகள் இவை. அவரது முழுமையான உரையினைக்கீழுள்ள காணொளியில் கேட்கலாம்.

எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து இவரை எனக்குத்தெரியும். ஆனால் புலம் பெயர்ந்து குடி புகுந்த நாடான கனடாவில்தான் இவரது முழுமையான ஆளுமையினை என்னால் , கடந்த பல வருடங்களாக இவரை , இவரது செயற்பாடுகளை அவதானித்ததன் மூலம் அறிய முடிந்தது. மிகுந்த தேடல் மிக்க இவரது சிந்தனையும், செயற்பாடும் எப்பொழுதும் உலகின் பல பாகங்களிலும் வாழும் மக்களின் மானுட உரிமைகளுக்காகத் தான் கற்று, உணர்ந்து, சிந்தித்துத் தெளிவடைந்த சமூக, அரசியல் தத்துவ நோக்கில் குரல் கொடுப்பதும், எழுதுவதும்தாம். இவ்வளவு வருடங்களாக அந்த விடயத்தில் இவர் மிகவும் தெளிவாகவே இருக்கின்றார். இவரது தான் நம்பும் சித்தாந்தம் பற்றிய தெளிவும், அதன் மீதான தொடர்ச்சியான இவரது தேடலும், புரிதலும், தெளிதலும் இவரது அத்தத்துவம் பற்றிய புரிதலைப் பண்படுத்துகின்றன. எனவே இவருடன் தர்க்கிப்பது மிகவும் இன்பமளிக்கக்கூடிய, பயன்மிக்க, ஆரோக்கியமானதொரு விடயமாக நான் உணர்வதுண்டு. ஆனால் அதிகம் பல்வேறு விடயங்களைப்பற்றித் தர்க்கிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் வருவதில்லை. இனிமேல் அவ்விதமான வாய்ப்புகளை அதிகம் உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்பதை இவரது இக்காணொளியிலுள்ள உரை தூண்டுகின்றது.

இங்கு இவர் தமிழினியின் நூல் பற்றிய விமர்சனத்தை ஏனையவர்களிடமிருந்து வித்தியாசமானதொரு கோண்த்தில் நடாத்துகின்றார். தமிழினியின் நூல் பற்றிய முக்கியமான கருத்துகள் பற்றி ஆரம்பத்திலும், இடையில் அவ்வப்போதும் கூறி விடுகின்றார். தமிழினியின் நூலைப் பல்வேறு சக்திகளும் பல்வேறு வழிகளில் தமக்குச் சார்பாகப் பாவிக்கும். தமிழினியின் நூலில் கூறப்பட்டுள்ள சில விடயங்களில் தனக்கும் உடன்பாடில்லை. ஆனால் அவ்விதம் கூறுவதற்குத் தமிழினிக்குள்ள உரிமையினை மறுக்க முடியாது. இவ்விதமாகத் தமிழினியின் நூல் பற்றிய கருத்துகளைக் கூறும் ஜான் மாஸ்ட்டர் அதன் பின் தான் நம்பும் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் நூலைப்பற்றி ஆராய்கின்றார். அந்த ஆய்வினைச் செவிமடுக்கும் ஒருவருக்கு இதென்ன இவர் தமிழினியின் நூலைப்பற்றி விமர்சிப்பதாகக் கூறி விட்டு., தனது அரசியல் கருத்துகளையெல்லாம் மடை திறந்த வெள்ளமென அள்ளி விடுகின்றாரே என்றொரு எண்ணம் தோன்றக்கூடும். ஆனால் சிறிது கூர்ந்து பார்த்தால் அவர் தமிழினியின் நூலில் கூறப்பட்டுள்ள விடயங்களைத்தாம் தான் புரிந்த ஏற்றுக்கொண்ட அரசியற் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்கின்றார் என்பது புரிய வரும்.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு – கற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்த தளத்தில் சமூகத்திற்காக பயன்படுத்திய பெண்ணிய ஆளுமை

பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு“பெண்களது  இலக்கிய மரபை நிறுவுதல் என்பது எப்பொழுதும் சவால்களை எதிர்கொள்வதாகவே  இருக்கிறது. பல  இடைவெளிகள், கேள்விகள் என்றும்  இருந்துகொண்டே  உள்ளன. சங்க  இலக்கியம் தொட்டு இன்றுவரை இந்நிலை தொடர்கிறது. சங்கப்பாட்டுகளில்  எத்தனை  பெண்களுடையவை…? சங்கப்புலவர்களில் எத்தனைபேர் பெண்கள்…?  என்ற  மயக்கம்  இன்னும்  முற்றாகத் தீர்ந்து விடவில்லை. பெயர் தொடர்பான மயக்கமே  இது. ஆணா? பெண்ணா? என்கிற மயக்கம் தற்காலம் வரை தொடர்கிறது.” பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, 2007 ஆம் ஆண்டு வெளியான பெயல் மணக்கும் பொழுது ( ஈழத்துப்பெண் கவிஞர்கள் கவிதைகள் – தொகுப்பு அ. மங்கை) நூலுக்கு எழுதியிருந்த பின்னுரையில்  மேற்கண்ட  வரிகளைப்பார்க்கலாம்.

எஸ்.பொ.வுடன் இணைந்து நாம் தொகுத்த பனியும் பனையும் -புலம்பெயர்ந்தவர்களின் கதைத்தொகுப்பு வேலைகளிலும் எமக்கு இந்த மயக்கம் வந்தது. பல ஆண் எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களில் இன்றுவரையில் எழுதிவருகிறார்கள். காலப்போக்கில் தொடர்ச்சியான வாசிப்பில் எழுதுவது பெண்களா, ஆண்களா என்பதை தெரிந்துகொள்கின்றோம்.

ஈழத்தில் பெண் எழுத்துக்களை குறிப்பாக இளம் தலைமுறை பெண்படைப்பாளிகளை  எமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும், எம்மத்தியில் இன்றும் அயர்ச்சியின்றி இயங்கும் ஆளுமையான சித்திரலேகா மௌனகுரு அவர்களை  சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் சந்தித்தேன்.  கலை, இலக்கியம், கல்வி மற்றும் ஊடகத்துறையில்  ஈடுபாடுகொண்டிருந்தவர்கள்  வாழ்ந்த ஒரு அழகிய மாடி வீட்டில்தான் சித்திரலேகா – மௌனகுரு தம்பதியரையும் கண்டேன். அந்த இல்லத்தை ஏற்கனவே எனது பத்திகளில் காவிய நயம் நிரம்பிய கலாசாலை என்றும் வர்ணித்துள்ளேன். கொழும்பு – பாமன் கடை என்னும் இடத்தில் அமைந்த அந்த வீட்டில் ‘அப்பல்லோ’ சுந்தா சுந்தரலிங்கம்,  மௌனகுரு, கவிஞர்கள் முருகையன், சிவானந்தன் குடும்பத்தினர் வசித்தனர். அடிக்கடி அங்கு இலக்கிய சந்திப்புகள் நடக்கும். நீர்கொழும்பில் ஏதும் இலக்கியக்கூட்டங்கள் ஒழுங்கு செய்யும்பொழுது அந்த இல்லத்திலிருப்பவர்களிடம் சென்றுதான் ஆலோசனைகள் பெறுவேன். அன்று முதல் இன்றுவரையில் அங்கிருந்தவர்களுடனான எனது நேசிப்புக்கு எந்தவொரு விக்கினங்களும் வந்ததில்லை. கலை இலக்கிய ஊடக உலகில் உறவுகள் ஆரோக்கியமாக  நீடித்திருப்பது அபூர்வம் என்பதனால்தான் அவ்வாறு சொல்கின்றேன்.  சித்திரலேகா அக்காலப்பகுதியில்   இலங்கை வானொலி கலைக்கோலத்தில்  இலக்கிய உரைகளை நிகழ்த்தியபோது கேட்டிருக்கின்றேன். இவரது வானொலி ஊடகப்பிரவேசம் குறித்து ஜோர்ஜ் சந்திரசேகரன் தமது நூலிலும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அந்தப்பதிவு சித்திரலேகாவின் ஆற்றல்களை மேன்மைப்படுத்தாமல், வளர்ந்துவரும்   ஆளுமையை  இனம்காணாமல்  ஆணாதிக்க மனோபாவத்தில் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து, அந்த நூலை எனக்கு வாசிக்கத்தந்த நண்பர்  காவலூர்   ராசதுரையிடமும்  சொல்லியிருக்கின்றேன்.

Continue Reading →

நீதி நெறியான நட்பியல் கூறும் திருக்குறள்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு (18) நூல்களைச் சேர்ந்த தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று.   அப் பதினெட்டு நூல்களையும்,

‘நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி – மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே 
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.’

இவ் வெண்பாவில் காண்கின்றோம். திருக்குறள் இப் பதினெட்டு நூல்களுள் ஒன்றாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்ற பதினொரு (11)  நூல்களும் நீதி/அற நூல்களாகும். கார் நாற்பது, ஐந்திணை  ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறு (06) நூல்களும் அகம் சார்ந்தவை. களவழி நாற்பது என்ற ஒரு (01) நூல் புறம் சார்ந்ததாகும்.

திருக்குறள் உலகப் பொதுமுறை என்னும் சிறப்பினைப் பெற்று உலாவுகின்றது. உலகத்திலுள்ள எல்லாச் சமயத்தாரும் திருக்குறளைப் போற்றுகின்றனர். மேனாட்டு அறிஞர்கள் திருக்குறளைத் தம் மொழிகளில் மொழிபெயர்துள்ளனர். இது அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பாலைக் கூறுகின்றது. அறத்துப்பால் மனிதன் வாழ்வியலின் மேன்மையைக் குறிக்கும். பொருட்பால் சமுதாய வாழ்க்கையைக் காட்டும். காமத்துப்பால் அகவாழ்வின் வெற்றியை எடுத்துக் கூறும். ‘கொல்லாமை’, ‘கள்ளுண்ணாமை’ என்னும் இரு அதிகாரங்களும் திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்த நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இவர் இதைத் தனித்து நின்று செயற்பட்டு வெற்றியும் கண்டுள்ளார். திருவள்ளுவ மாலையில், சீத்தலைச் சாத்தனார், திருக்குறளின் சிறப்பைக் கூறும் பாங்கினையும் காண்போம்.

‘மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் – மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தார்அன்றோ
யாமுரைதேர் வள்ளுவர்முப் பால்.’

இனி, பொருட்பாலில் வரும் நட்பியல் பற்றித் திருவள்ளுவர் கூறுவதை விரிவுபடுத்திக் காண்போம்.

Continue Reading →

ஆசாரச்சிமிழுக்குள் மலர்ந்த “புதுமைப்பிரியை” பத்மா சோமகாந்தன்! அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்தூழியத்தில் ஈடுபடும் இலக்கியவாதி!

"புதுமைப்பிரியை" பத்மா சோமகாந்தன்இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இன்றுவரையில் தீராதிருப்பதற்கு பலரும் பல காரணங்களைச்சொல்லி வருகிறார்கள். விதேசியர்கள் வந்து சூறையாட வேண்டியதையெல்லாம் அள்ளிக்கொண்டு,  இனி எக்கேடும் கெட்டுப்போங்கள் என புறப்பட்டார்கள்.  அவர்கள்  தந்த  சுதந்திரம்  எமது அரசியல்வாதிகளுக்கு  தந்திரமானதுதான்  மிச்சம். இந்தப்பின்னணியில்  முதல் பிரதமராக பதவிக்கு வந்த டீ.எஸ். சேனாநாயக்கா, 1952  இல் காலிமுகத்திடலில் குதிரை சவாரிக்குச்சென்று விழுந்து இறந்ததும், அடுத்த பிரதமர்  யார்…?  என்ற பதவிப்போட்டியில் வேரோடியிருந்த   இனப்பிரச்சினை இன்னமும் தீரவில்லை. சிங்களத்தலைவர்கள்  பதவிக்கு  வரவேண்டுமானால்  இலங்கை தேசிய  சிறுபான்மை  இனங்கள்  பலிக்கடாவாகவேண்டும். 1955 இல் பிரதமராக யாழ்ப்பாணம் சென்ற சேர். ஜோன் கொத்தலாவலை, வடபுலத்து மக்கள் வழங்கிய மாலை மரியாதை வரவேற்பினால் மனம் குளிர்ந்து, ” தமிழுக்கும் சிங்களத்திற்கும் சம அந்தஸ்து வழங்க சட்டம் கொண்டுவருவேன்” என்றார். இதனை தவறாகப்புரிந்துகொண்ட எச். எல். மேத்தானந்தா என்ற ஒரு பௌத்த மத தீவிரவாதி ” சரிதான், இனிமேல் சிங்களவர்களும் தமிழ்தான் படிக்கவேண்டிவரும் ” என்று தென்னிலங்கையில் வகுப்புவாதம் கக்கத்தொடங்கினார். அதனை தனக்குச்சாதமாக்கினார் பண்டாரநாயக்கா. இதனைப்புரிந்துகொண்ட கொத்தலாவலை, தாமதிக்காமல் ஒரு பல்டி அடித்தார். 1956 இல் களனியில் ஐ.தே.கட்சி மாநாட்டில், தனிச்சிங்களமே ஆட்சி மொழி என்றார். பண்டாரநாயக்கா அதன் பிறகும் சும்மா இருப்பாரா…? தாம் பதவிக்கு வந்தால் 24 மணிநேரத்தில் சிங்களத்தை ஆட்சிமொழியாக்குவேன் என்றார். ஐ.தே.க.வை தோற்கடிக்க ஐம்பெரும் சக்திகளை (பஞ்சமா பலவேகய) திரட்டிக்கொண்டு தேர்தலில் வென்ற பண்டாரநாயக்காவுக்கு உண்மையில் அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை. டீ.எஸ். சேனாநாயக்காவுக்குப்பிறகு தனக்கு வரவேண்டிய சந்தர்ப்பம் டட்லிக்கும் அவரையடுத்து கொத்தலாவலைக்கும் சென்றதுதான்  அவரை சிங்கள தீவிரவாதம் பேசக்காரணமாக இருந்திருக்கிறது. அதற்குப்பின்னாலிருந்து நெருப்பு மூட்டியவர்கள் மேத்தானந்தா, புத்தரகித்த தேரோ ஆகியோர்.

இன்றும் இந்தக்கதைதான் வேறு வேறு ரூபத்தில் இலங்கையில் நீடிக்கிறது. ஏறச்சொன்னால் எருதுக்குக்கோபம் இறங்கச்சொன்னால் முடவனுக்கு கோபம் என்பார்களே… அவ்வாறு யாராவது ஒரு சிங்களத்தலைவர் இனப்பிரச்சினைக்கு  தீர்வுகொண்டுவந்தால் மற்ற சிங்களத்தலைவர் எதிர்ப்பார். இன்று எதிர்ப்பவர் நாளை பதவிக்கு வந்து நல்ல தீர்வு சொன்னால், முன்னர் நல்ல தீர்வுகொண்டுவர விரும்பியவர், அதனை ஆதரிக்காமல் எதிர்ப்பார். இது முற்றுப்பெறாத கதை.

இது இவ்விதமிருக்க,  இந்த வரலாற்றில் வரும் மேத்தானந்தா போன்றதொரு இனவாதியை அதே பெயரில், சித்திரித்து 1956 இல் காலிமுகத்தில் தமிழ்த்தலைவர்கள் சத்தியாக்கிரகம் நடத்தியபோது இடம்பெற்ற  தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் ஒரு சிறுகதையை தமிழில் எழுதியிருப்பவர் யார் என்று பார்த்தால் எமக்கு அதிசயமாக இருக்கிறது. ஆனால், அது அதிசயம் அல்ல உண்மை.

Continue Reading →

குறமகள்: அன்புள்ளம் கொண்ட இராசாத்தி அக்கா

– எழுத்தாளர் அமரர் குறமகள் நினைவாக நினைவழியா நினைவுகள் என்ற நினைவு மலர் ஒன்று  சென்ற சனிக்கிழமை (12-11-2016)  குடும்பத்தினரால் கனடாவில் வெளியிடப்பட்டது. இந்த நினைவு மலரில் இடம் பெற்ற எனது நினைவுக் குறிப்பையும் இத்துடன் இணைத்திருக்கின்றேன். – குரு அரவிந்தன். –


திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களைப் பிரிந்து இன்று ஒரு மாதமாகிவிட்டது. இலக்கிய உலகில் குறமகள் என்று சொன்னாலே இவரைத் தெரிந்து கொள்வார்கள். சிலர் இவரைப் பெண்ணிய வாதியாகப் பார்த்திருந்தார்கள். ஆனால் பிறந்ததில் இருந்து இவருடன் கூட வளர்ந்ததாலோ என்னவே அன்புள்ளம் கொண்ட அக்காவாகவும், பாசமுள்ள தாயாகவும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட ஒருவருமாகத்தான் நான் எப்பொழுதும் இவரைப் பார்த்தேன். பொறுமையாக எதையும் ஏற்றுக் கொள்வதால், அக்கா தனது மரணத்தையும் சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டார். எப்பொழுதுமே கலகலப்பாக இருப்பதையே விரும்பினார். எங்கள் குடும்பங்களுக்குள் என்ன நடந்தாலும் எங்கள் அத்தான் அதிபர் கனகசபாபதியும், இராசாத்தி அக்காவும்தான் (குறமகள்) உடனே எங்களுக்கு அறிவிப்பார்கள். இவர்கள் இருவரும் எங்களுக்கு வழிகாட்டியாக மட்டுமல்ல, எங்களைத் தாங்கும் தூணாகவும் இருந்தார்கள்.

இவர் எனது தந்தையின் அண்ணாவின் முத்த மகள். எங்கள் இருவரின் வீடும் ஒரே காணியில் இருந்தது. நடுவில் ஒரு வேலிபோட்டு போய்வருவதற்கு வசதியாக இடம் விடப்பட்டிருந்தது. நாங்கள் வாழ்ந்த குருவீதியில், குரு விளையாட்டுக் கழகத்தை ஆரம்பிக்கும்வரை இராசாத்தி அக்கா வீட்டு முற்றமே எங்கள் விளையாட்டுத் திடலாக அமைந்தது. அவரிடம் தலைமைத்துவம் இருப்பதை அப்போதே கவனித்திருக்கின்றேன். எனது தந்தையார் குருநாதபிள்ளை காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி அதிபராகவும், காங்கேசந்துறை உள்ளுராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். அக்காவிற்குச் சிறியதந்தையான எனது தந்தையே பாடம் சொல்லிக் கொடுப்பதில் தனக்கு வழிகாட்டியாக இருந்ததாக அக்கா அடிக்கடி சொல்வார். தனது நூலான ‘மாலை சூட்டும் மணநாள்’ என்ற நூலை அவருக்கே சமர்ப்பணம் செய்து அதில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார். எங்கேயாவது வெளியே போவதானால் வீட்டிலே விடமாட்டார்களாம், அப்போதெல்லாம் எனது தந்தைதான் அனுமதி பெற்றுத் தருவதாகவும் சொல்வார். உறவு என்பதைவிட, வழிகாட்டி அறிவூட்டிய ஆசிரியர் என்பதற்கான நன்றிக்கடனே அவர் செய்த இந்தச் சமர்பணம்.

எனது பெரியப்பாவான மு.அ. சின்னத்தம்பியின் மூத்த புதல்விதான் இராசாத்தி அக்கா. அடுத்துப் பிறந்த நான்கு பெண் குழந்தைகளுக்கு ராணி, அரசி, தேவி, ரதி என்று பெயர் சூட்டினார்கள். கடைசி ஆண் குழந்தைக்கு நவநீதன் என்று பெயர் சூட்டினர். அருகே இருந்த குலதெய்வமான குருநாதசுவாமி கோயில் வீதியில் பக்தர்கள் தங்குவதற்காக ஒரு மடம் கட்டி அக்காவின் நட்சத்திரமான ரோகிணி என்ற பெயரிலே ‘ரோகிணிமடம்’ என்ற பெயரைச் சூட்டி, திருவிழாக் காலங்களில் வருடாவருடம் அந்த மடத்தில் அன்னதானமும் நடைபெற்றதை இன்றும் மறக்க முடியாது. இன்று இருந்த இடமே தெரியாமல் எல்லாமே தரைமட்டமாக்கப் பட்டு விட்டது. மூலஸ்தானத்திற்குப் பின்னால் இருந்த அரசமரம் மட்டும் அந்த இடத்தில் நிமிர்ந்து நிற்கின்றது.

Continue Reading →

தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?

தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி]- இன்று , நவம்பர் 13, 2016, டொராண்டோவில் தமிழர் வகைதுறைவள நிலைய ஆதரவில் நடைபெற்ற தமிழினி ஜெயக்குமரனின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் வெளியீடு மற்றும் கலந்துரையாடலில் நான் ஆற்றிய உரையின் முழு வடிவம். – வ.ந.கி ]


தமிழினி ஜெயக்குமரனின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ சுயசரிதை பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பினாலும், தமிழர் இலக்கிய உலகில் முக்கியமானதொரு நூலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இதனது சிங்கள மொழிபெயர்ப்பும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.

தமிழினியின் சுய விமர்சனம் பற்றிக்குறிப்பிடுகையில் தேசம் ஜெயபாலன் ‘இது கூர்வாளல்ல. மொட்டை வாள்’ என்று குறிப்பிட்டிருப்பார். அண்மையில் தமிழினியின் கணவர்ஜெயக்குமரனுடனான நேர்காணலொன்றில்தான் இவ்விதம் குறிப்பிட்டிருக்கின்றார். மேலோட்டமாகப் பார்த்தால் தமிழினியின் இயக்கம் பற்றிய விமர்சனங்கள் காரமாக இல்லாதிருப்பதுபோல் தென்பட்டாலும், சிறிது ஊன்றிக்கவனித்தால் மிகவும் கடுமையான விமர்சனங்கள் அவை என்பது தெரியவரும். ஆனால் அவர் முட்டி மோதிக்கொண்டு மோதும் விமர்சனத்தை இங்கு வைக்கவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவரைத் தனிப்பட்டரீதியில் விமர்சிக்கவில்லை. அதனால் ஜெயபாலன் அவ்விதம் நினைத்திருக்கக்கூடும். ஆனால் தமிழினி விமர்சனத்தை முன் வைக்கும்போது கோட்பாட்டு ரீதியில் முன் வைக்கின்றார். விடுதலைப்புலிகள் என்னும் அமைப்பு பின்பற்றிய கொள்கைகள் அடிப்படையில் அவற்றை விமர்சிக்கின்றார். அந்த அமைப்பில் போராடி, இறுதியில் நிராதரவாகக் கைவிடப்பட்டு, இராணுவத்திடம் சரணடைந்து,  சிறைவாழ்க்கை, தடுப்புமுகாம் வாழ்க்கை, புனர்வாழ்வு என்று பல படிகளினூடு சென்று மீண்டும் சமூகத்திற்குள் வருகின்றார். அவ்விதம் வந்தவரைச் சமூகம் எதிர்கொண்ட முறை அதிர்ச்சியூட்டுகின்றது. இந்நிலையில்  அவரது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் தமிழினி என்னும் முன்னாள் பெண் போராளியொருவருக்கு மனம் திறந்த நிலையில் நடந்தவற்றை ஆராய்ந்து முடிவுக்கு வருவதற்குப் பூரண உரிமையுண்டு. அவரது கருத்துகளை ஏற்கலாம். ஏற்காமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு அவர் தான் நினைத்தவாறு கருத்துகள் கூற உரிமையுள்ளது என்பதை ஏற்கவேண்டும்.

இச்சுயசரிதையில் தான் ஏன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையின் கீழ் ஆயுதம் தாங்கிப்போராடப்புறப்பட்டேன் என்பதிலிருந்து , 2009இல் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், அதன் பின்னரான அவரது தடுப்புமுகாம் அனுபவங்களின் பின்னர், சிறை வாழ்வின் பின்னர் அவர் தன் கடந்த கால வாழ்க்கையினை மீளாய்வு செய்தது வரை தோன்றிய உணர்வுகளை அவர் விபரித்திருக்கின்றார். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது இச்சுயசரிதை. அதே சமயம் தமிழினியின் எழுத்தாற்றல் இப்பிரதியை இலக்கியச்சிறப்புமிக்கதொரு பிரதியாகவும் உருமாற்றியிருக்கின்றது.

சுருக்கமாகக் கூறுவதானால் இந்நூலைப் பலவேறு கோணங்களில் வாசகர் ஒருவர் அணுகலாம்.

1. ஒரு நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் சூழல் காரணமாக ஒரு போராளி ஏன் உருவாகின்றார் என்பதற்கான உளவியல் காரணங்களை விபரிப்பதால் இந்நூல் அப்போராளியின் வாக்குமூலமாக முக்கியத்துவம் பெறுகின்றது. ஆரம்பத்தில் கல்வி கற்று சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்த தமிழினியை இராணுவத்தினரின் எறிகணைத்தாக்குதல்கள், இந்தியப்படையினரின் தாக்குதல்கள், போரில் மரணத்தைத்தழுவிக்கொண்ட ஆண், பெண் போராளிகளின் நிலை, ,,இவையெல்லாம் அவரது மனதைப்படிப்படியாக மாற்றுவதை நூல் விபரிக்கின்றது. பாடசாலையில் படிக்கும்போது புலிகளின் மாணவர் அமைப்பில் இணைந்து செயற்படுகின்றார். ஒரு கட்டத்தில் அவர் இவ்விதம் நினைக்கின்றார்:

Continue Reading →

தமிழினியும், பெண் விடுதலையும்!

தனது 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூலில் தமிழினி பெண் விடுதலை பற்றித்தெரிவித்திருந்த கருத்துகள் அந்நூலை வாசிக்கும்போது என் கவனத்தஈ ஈர்த்தன. அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். . குறிப்பாகக்கீழுள்ள சிலவற்றைக் கூறலாம்:தனது ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூலில் தமிழினி பெண் விடுதலை பற்றித்தெரிவித்திருந்த கருத்துகள் அந்நூலை வாசிக்கும்போது என் கவனத்தஈ ஈர்த்தன. தமிழினியின் இக்கருத்துகள்  ஓர் ஆயுதமெடுத்துப்போராடிய அமைப்பின் போராளி என்ற வகையில் முக்கியமானவை. அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். . குறிப்பாகக்கீழுள்ள சிலவற்றைக் கூறலாம்:

1. :” எனது பாடசாலைக் காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தனிப்பெரும் விடுதலை இயக்கமாகப் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தது. மகளிர் படையணிகள் கள முனைகளில் வீர, தீரச் சாதனைகளையும் , உயிர் அர்ப்பணிப்புகளையும் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். நான் இயக்கத்தில் இணைந்து கொண்டமைக்குப் பொதுவான போராட்டச்சூழ்நிலைகளே காரணமாக இருந்த போதிலும், ஒரு பெண் என்ற நிலையில் எனது குடும்பத்தினதும், என்னைச்சூழ்ந்திருந்த சமூகத்தினதும், எப்ண் சார்ந்த கருத்து நிலையை உடைத்து ஒரு புரட்சி செய்யக்கூடிய சந்தர்ப்பமாகவும் அதைக்கருதினேன். நான் இயக்கத்தில் இணைந்த பள்ளிப்பருவத்தில் ஒரு வேகமும், துடிப்பும் என்னிடம் இருந்ததே தவிர , அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் நிலைமைகள் மற்றும் சமூகம் பற்றிய எவ்விதமான புரிதலும் எனக்கிருக்கவில்லை.” (‘ஒரு கூர்வாளின் நிழலில்’: அத்தியாயம் 5 – ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்’, பக்கம் 73)

2. “பெண்கள்  ஆயுதப்பயிற்சி பெற்றபோது, அவர்களால் தமது உடல் வலிமையை நிரூபிக்கக்கூடியதாக இருந்த போதிலும், அவர்களுடைய அடிப்படைச்சிந்தனைகளில் எந்தளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருந்தது என்பது கேள்விக்குரியதாயிருந்தது.   குடும்பம் என்ற அமைப்புக்குள்ளிருந்து  வெளியே வந்து, இயக்கம் என்ற அமைப்பிற்குள் புகுந்து கொண்ட  புலிப்பெண்கள் அனைவருமே புரட்சிகரமான  புதிய சிந்தனை மாற்றத்திற்கு உட்பட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. எவ்வாறு  ஒரு கட்டுக்கோப்பான குடும்பப்பெண்ணாக  வீட்டில் வளர்க்கப்பட்டோமோ, அதேபோலக் கடினமான இராணுவப்பயிற்சிகளைப்பெற்ற, கட்டுக்கோப்பான மகளிர் படையணிப்போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம். ” (‘ஒரு கூர்வாளின் நிழலில்’: அத்தியாயம் 5 – ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்’, பக்கம் 75 & 76)

3. “பெண்களிடையே சுதந்திரமான ஒரு மனோபாவத்தை வளர்ப்பதற்குரிய தீர்க்கமான கொள்கைத்திட்டங்கள் எவையும் எங்களிடமிருக்கவில்லை.  பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்து ஆயுதமேந்துவதன் மூலம், சமூகத்தையே நாம் மாற்றி விடலாம் எனக்கனவு கண்டோம். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், பெண் போராளிகள் ஆயுதமேந்திப் போராடியதால், போர்க்களத்தின் பல வெற்றிகளுக்குக் காரணகர்த்தாக்களாக இருக்க முடிந்ததே தவிர, சமூகத்தில் பெண்கள் சார்ந்த கருத்தமைவில் எவ்விதமான மாற்றங்களையும் எங்களால் ஏற்படுத்திவிட முடியவில்லை. தமிழ் சமூகத்தில் பெண்களின் விடுதலைக்கான பாய்ச்சல் வளர்ச்சியானது ஆயுதப் பெண்களின் பிம்பமாகவே தொடங்கி ஆயுதப் போராட்டத்தின் தோல்வியுடனே அது முடிந்தும் போனது.” (‘ஒரு கூர்வாளின் நிழலில்’: அத்தியாயம் 5 – ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்’, பக்கம் 76)

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 207: ஹிலாரி கிளிண்டனின் கனவாகிய கனவும், டொனால்ட் ட்ரம்ப்பின் நனவாகிய கனவும்

வாசிப்பும், யோசிப்பும் 207: ஹிலாரி கிளிண்டனின் கனவாகிய கனவும், டொனால்ட் ட்ரம்ப்பின் நனவாகிய கனவும்நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை மக்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு அளித்துள்ளனர். விபரங்கள் வருமாறு:

ஹிலாரி ஹிளிண்டன்: 59,626,052 votes (47.7%) | டொனால்ட் ட்ரம்ப்: 59,427,652 votes (47.5%)

ஆனால் அமெரிக்கத் தேர்தலில் அதிகப்படியான மக்களின் வாக்குகளை ஹிலாரி கிளிண்டன் பெற்றுள்ளார்.

Hillary Clinton 228 | Donald J. Trump 279

ஆனால் அமெரிக்கத்தேர்தல் சம்பந்தமான சட்ட விதிகளின்படி அதிகளவு மக்களால் விரும்பப்படும் ஒருவர்தான் ஜனாதியாகவும் வரவேண்டும் என்பதில்லை. யாரும் 270 எண்ணிக்கையில் ‘எலக்டோரல் (Electoral) வாக்குகளை, குறைந்தது 270 வாக்குகளைப் பெற வேண்டும். அப்பொழுதுதான் அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலில் அவரால் வெற்றிபெற முடியும்.

இம்முறை தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை நிர்ணையித்தது சில தேர்தல் தொகுதிகள்தாம். அமெரிக்காவைப்பொறுத்தவரையில் குடியரசுக்கட்சியினருக்கு எப்பொழுதும் ஆதரவு தெரிவிக்கும் தொகுதிகளும், ஜனநாயகக் கட்சியினருக்கே ஆதரவு தெரிவிக்கும் தொகுதிகளும் உள்ளன. அவை தவிர்ந்த ஏனைய தொகுதிகள்தாம் எப்பொழுதும் ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி , தோல்வியை நிர்ணயிப்பவையாக எப்பொழுதும் விளங்குகின்றன. சில வேளைகளில் குடியரசுக்கட்சியினரின் தொகுதிகள் சில ஜனநாயகக் கட்சியினருக்கும், ஜனநாயகக் கட்சியினரின் தொகுதிகள் சில குடியரசுக்கட்சியினருக்கும் போவதுண்டு. அவ்விதம் நடப்பது அரிதாகத்தானிருக்கும். பெரும்பாலும் இரு கட்சியினரினதும் ஆதரவுத்தொகுதிகள் தவிர்ந்த ஏனைய தொகுதிகளான ஓகியோ, மிச்சிகன்,, புளோரிடா, போன்ற கடும் போட்டி நிலவும் தொகுதிகளை வென்றெடுக்கத்தான் இரு கட்சியினரும் கடுமையாகப்போட்டியிடுவார்கள். இம்முறையும் அவ்விதமே போட்டி நிலவியது.

ஹிலாரி கிளிண்டன் டொனால்ட் ட்ரம்பை விட அதிகளவு ஆதரவு பெற்றவராக தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்னர்வரையில் திகழ்ந்தார். அச்சமயம் பார்த்து அமெரிக்க மத்திய புலனாவுத்துறையின் இயக்குநர் ஏற்கனவே முடிவுக்கு வந்திருந்த , ஹிலாரி கிளிண்டன் தன் பதவிக்காலத்தில் அந்தரங்கமாகப் பாவித்த மின்னஞ்சல் சேர்வர் பற்றிய விசாரணையை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருந்தார். அதனையடுத்து குடியரசுக்கட்சியினரின் கடுமையான பிரச்சாரத்தினால் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவு அதிகரிக்கத்தொடங்கியது. அதுவரையில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராகப்பிரிந்திருந்த குடியரசுக்கட்சியினரை அவருடன் மீண்டும் ஒன்றுபட்டு தேர்தலைச் சந்திக்க ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணை பற்றிய அறிவிப்பு உதவியது. தேர்தலுக்கு ஓரிரு நாட்களின் முன்னரே மத்தியப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணையை மீண்டும் முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தார். இதற்கிடையில் தேர்தலில் முன்னதாக வாக்களிக்கும் சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி சுமார் 25 மில்லியன்களுக்கு அதிகமான வாக்காளர்கள் வாக்களித்து விட்டார்கள். மத்தியபுலனாய்வுத்துறை இயக்குநரின் ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணை பற்றிய அறிவிப்பும் இறுதி நேரத்தில் புளோரிடா போன்ற எந்தக் கட்சியினரினதும் கோட்டையாகக்கருதப்படாத தொகுதிகளைச்சேர்ந்த வாக்காளர்கள் மனம் மாறுவதற்குக் காரணமாக அமைந்து விட்டது.

Continue Reading →

ஆய்வு: பரிபாடல் காட்டும் தெய்வத்துவம்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

கடைச்சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானது பரிபாடல் என்ற நூலாகும். ‘பரிபாடல்’ என்னும் பாவினத்தால் ஆகிய பாடல்களின் தொகுதி இந்நூலாகும். அதனால், பரிபாடல் என்ற பெயரை இந்நூல் பெற்றது. பண்ணமைதியான இப்பாக்களைப் பயபக்தியோடு மனமுருகிப் பாடியும் பயின்றும் வந்தனர். அதனால் இப்பாடல்களை ‘ஓங்கு பரிபாடல்’  என்ற பெரும் புகழையும் பெற்றுக்கொண்டது. எட்டுத்தொகை நூல் விவரங்களை,

‘நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஓத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோ டகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.’

என்ற வெண்பா உணர்த்துகிறது.

இப் பரிபாடல், தொகுக்கப்பட்ட காலத்தில் எழுபது (70) பாடல்களுடன் இருந்துள்ளது. இதனை,

‘திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகிழாட் கொன்று – மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்.’

vன்னும் ஒரு பழம் செய்யுளால் அறியக்கிடக்கின்றது. இவற்றுள், இந்நாளில் 22 பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன. மற்றைய 48 பாடல்களும் காலத்தால் மறைந்து போயின. எஞ்சிய 22 பாடல்களையும் பண்களின் அமைப்பில் அமைத்துள்ளனர். இதன் முதற் பன்னிரு பாடல்களும் பாலையாழ் என்ற பண்ணிலும், அடுத்து வரும் ஐந்து பாடல்களும் நோதிறம் என்ற பண்ணிலும், அடுத்து வரும் நான்கு பாடல்களும் காந்தாரம் என்ற பண்ணிலும் அமைந்துள்ளன. இறுதிப்பாடலின் பண் தெரியவில்லை.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: கரிசல் காட்டிலிருந்து கட்டிடக்காட்டுக்குள் பிரவேசித்த தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்

- முருகபூபதி - அவுஸ்திரேலியா -கடந்த பதினொரு  ஆண்டுகளுக்குள் (2005 -2016) நான் மூன்று தடவைகள் சந்தித்த தமிழச்சியின் ஆற்றலும் ஆளுமையும் தோழமையும் அவரின் வளர்ச்சியினூடே எனக்குத் தென்பட்ட வியத்தகு அம்சங்கள்.  கட்டிடக்காட்டினுள் வாழத்தலைப்பட்டபோதிலும் உள்ளார்ந்தமாக நேசித்த கரிசல்காட்டின் நினைவுகளுடன் அந்த மண்ணின் மக்களை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் அவர் தற்கால தமிழக இலக்கிய சூழலில் நிரம்பவும் பேசப்படுபவர். 2005 இல் சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக அவுஸ்திரேலியாவுக்கு தனது முனைவர் பட்ட ஆய்விற்காக வந்தபோது முதல் முதலில் சந்தித்தேன். 2009  இல் தி.மு.க.வின் இளைஞர் அணி மாநாட்டை திருநெல்வேலியில் கொடியேற்றி தொடக்கிவைத்த அவரது அரசியல் பிரவேசத்தைக்கண்டேன். 2013 இல் கரிசல்காட்டின் வாசம் நிரம்பிய சில நூல்களின் படைப்பாளியாக பார்த்தேன். குறிப்பிட்ட  இந்த எட்டு ஆண்டுகளுக்குள் ஒரு  சந்தர்ப்பத்தில்  லோகசபைத்தேர்தலில் ஒரு எம்.பி.யாக நிற்பதற்கு வேட்புமனு தாக்கல்செய்யவேண்டிய தருணத்தில் எதிர்பாராதவிதமாக வேலூரில் கார்விபத்தில் சிக்கியதனால் அந்த வாய்ப்பையும் இழந்து, அதனால் சில மாதங்கள் படுக்கையிலிருந்தபோதிலும் மீண்டு எழுந்துவந்து கவிதைகள், கட்டுரைகள் படைத்தார். பாதியில் நின்ற ஆய்வேட்டை பூர்த்திசெய்து முனைவர் பட்டமும் பெற்றுக்கொண்டார்.

சென்னை திருவான்மியூர் அருகே நீலாங்கரையில் தமிழச்சி சுமதி தங்கபாண்டியனை அவரது அழகான இல்லத்தில் சந்தித்தபோது அவருடனான உரையாடலில் நானும் என்னைப்போன்று பலரும் தொலைத்துவிட்ட கிராமங்கள் படிமங்களாக வந்து நெஞ்சை உரசிக்கொண்டிருந்தன.

தமிழச்சி தான் பிறந்து தவழ்ந்த கரிசல் காட்டை தனது கவிதைகளில் கட்டுரைகளில் பதிவுசெய்வது ஜனநெரிசல் நிரம்பிய கட்டிடக்காட்டிலிருந்துகொண்டுதான். அவரது எஞ்சோட்டுப்பெண்ணும், வனப்பேச்சியும் அருகனும் மஞ்சனத்தியும் பாம்படமும் அவர் உளமாற நேசிக்கும் மல்லாங்கிணறு கிராமத்தையே உயிர்ப்புடன் சித்திரிக்கின்றன. 90 களில் இலக்கியப்பிரவேசம் செய்தவர். சென்னை ராணிமேரிகல்லூரியில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியிலிருந்தபோது தமிழ்நாட்டில் மித்ர பதிப்பகம் ஊடாக எஸ்.பொ.வின் அறிமுகம் கிடைத்து, கனடாவில் வதியும் அளவெட்டி சிறிசுகந்தராஜாவின் அனுசரணையுடன் தனது எஞ்சோட்டுப்பெண் கவிதை நூலை வெளியிட்டார். கணையாழி அவுஸ்திரேலியா சிறப்பிதழ் வெளியானபோது அதில் பிரசுரமான அருண். விஜயராணியின் தொத்துவியாதிகள் என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சென்னைப்பல்கலைக்கழகத்தில் அவுஸ்திரேலியன் ஸ்டடீஸ் சென்டரில் நடந்த கருத்தரங்கில் ஆய்வு செய்தார்.

Continue Reading →