உலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)

- மார்க் ட்வைன் -முனைவர் ஆர்.தாரணிகுறிப்பு: ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளர்களின் அடிமைக் கதைகூற்றுகள் (Slave Narratives) அமெரிக்காவின் சரித்திரத்தில் அடிமைகள் அனுபவித்த பல கொடுமைகளை அடிமைகளாக இருந்தவர்கள் வாயிலாகவே விளக்கும் ஒரு வகை இலக்கியம். தற்போது அடிமைத்தனம் என்பது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டாலும், தற்போதைய ஆப்ரிக்க -அமெரிக்க எழுத்தாளர்கள் மனதிலும் அவர்களின் முன்னோர்கள் மனதிலும் உடலிலும் பட்ட காயங்களின் வடுக்கள் மிச்சம் இருக்கத்தான் செய்கிறது.

இந்தச் சிறுகதையும் அடிமைத்தனத்தின் ஒரு கொடூர முகத்தை விளக்கும் விதமாக இருந்தாலும், இதன் ஆசிரியர் மார்க் ட்வைன் கறுப்பினத்தவர் அல்லர். அவர் ஒரு அமெரிக்கர் . எனினும், இக்கதையில் அவர் ஒரு பாத்திரமாகவே மாறி (மிஸ்டோ சி) தன் வீட்டின் கறுப்பின மூதாட்டிப் பணிப்பெண்ணின் கதையைக் கேட்டு தான் அதை வார்த்தைக்கு வார்த்தை விவரிப்பதாக தலைப்பிலேயே குறிப்பிடுகிறார். மேலும், கதை முழுதும் ஆசிரியர் மார்க் ட்வைன் ஆப்ரிக்க -அமெரிக்கர்கள் (கறுப்பினத்தவர்) பயன்படுத்தும் பேச்சு வழக்கு வகையை சிறப்பாக பயன்படுத்தி உள்ளது இந்தக் கதையின் தனித்தன்மை

இந்த சிறுகதை பல கல்லூரிகளில் பாடபுத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கதையை வகுப்பில் எடுக்கும்போது மட்டும் கண்டிப்பாக என் கண்களில் தூசு விழுந்து விடும். கண்ணீர் சொரியும். ஒரு ஆசிரியராக, ஒரு மனுஷியாக என்னை மிகவும் பாதித்த கதை. மொழிபெயர்த்தல் மூலம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பது எனது விருப்பம். –


அது ஒரு கோடைகால அந்திவேளை. நாங்கள் அனைவரும் மலையின் உச்சியில் அமைந்திருக்கும் எங்களின் பண்ணைவீட்டின் முகப்பு வாயிலில் அமர்ந்திருந்தோம். நாங்கள் அத்தை என அன்புடன் அழைக்கும் எங்களின் பணிப்பெண்ணான ரேச்சல் கறுப்பினத்தவர் மற்றும் பணிப்பெண் என்ற காரணத்தினால் நாங்கள் அமர்ந்திருந்த முகப்புப்படிகளில் ஒருபடி கீழ் இறங்கி மிகவும் பவ்யமாக அமர்ந்திருந்தார். மிகவும் வலிமையான உடலும் , எடுப்பான தோற்றமும் கொண்டவர் அவர். அறுபது வயதாகி இருப்பினும் அவரது கண்களில் உள்ள ஒளி சிறிதும் குன்றாமலும், மன உறுதி குறையாதவராகவும் என்றுமே காணப்படுவார். மனநிறைவோடு கூடிய உற்சாகம் ததும்பி வழியும் மனுஷியான அவருக்கு சிரிப்பு என்பது ஒரு பறவை கீதம் இசைப்பதைப்போன்றே மிகவும் இலகுவான விஷயம்.

எப்போதும் போலவே அன்றைய நாளின் முடிவில் எங்களின் வார்த்தைத் தாக்குதலுக்கு ஆளாகி அன்றும் அமர்ந்திருந்தார். அதாவது எங்களின் கொஞ்சம் கூட கருணை காட்டாத விளையாட்டுத்தனமான கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்காகினாலும், அதை மிகவும் இலகுவாக எடுத்துக்கொண்டு ரசித்தவாறே இருந்தார். சுவாசத்திற்க்கான காற்றைக் கூட தொடர்ந்து வெளியிட இயலாத அளவுக்கு, உரத்த சிரிப்பொலியை தொடர்ந்து அலை அலையாய் எழுப்பிய அவர், அந்த இன்ப அதிர்வலை கொடுத்த அசைவின் காரணாமாக தனது முகத்தை இரு கரங்களிலும் தாங்கியவாறே அமர்ந்திருந்தார். அவ்வாறான ஒரு தருணத்தில் என் மனதில் திடீரென உதித்தது அந்த எண்ணம். நான் கூறினேன்:

“ரேச்சல் அத்தை! அறுபது வருட கால உங்கள் வாழ்வில் எவ்வித துயரையும் நீங்கள் எதிர்கொள்ளவே இல்லையா?”

அக்கணமே சிரிப்பலையின் அதிர்வை சடாரென நிறுத்தினார். ஏனோ சிறிது தயங்கினார். அங்கே மெல்லியதாய் ஒரு மௌனம் தேவையற்று நிலவியது. தன் தோள்பட்டையின் மேலாக தனது முகத்தைத் திருப்பி, என் பக்கம் நோக்கி குரலில் சிறிதளவு சிரிப்பு கூடதென்படாமல் கூறினார்:

Continue Reading →

வாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி

தேனருவி சஞ்சிகைஅருண்மொழி தேவன் (அருண்மொழி) இவர் ஓர் எழுத்தாளர்; நாடக நடிகர். சஞ்சிகையொன்றினை 1962- 1964 காலகட்டத்தில் நடத்தியிருக்கின்றார். இவ்விதழின் உதவி ஆசிரியராகவிருந்தவர் பா.மகேந்திரன். இவரே பின்னர் தமிழ்த்திரையுலகில் புகழ் பெற்ற இயக்குநரும் , ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா என்று , இப்பதிவுக்கான முகநூல் எதிர்வினையொன்றில் பிரபல கலை,இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் சுட்டிக்காட்டியிருந்தார். அவருக்கு என் நன்றி.

அக்காலகட்டத்தில் வெளியான மேற்படி சஞ்சிகையின் நான்கு இதழ்களையே நூலகம் எண்ணிம நூலகத்தில் காண முடிந்தது. அவற்றைப் புரட்டிப்பார்த்தேன். எனக்கு மிகவும் வியப்பாகவிருந்தது. காரணம்? இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த இலக்கியத்தின் பல்துறைகளையும் நேர்ந்த படைப்புகள் (கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை அவ்விதழ்களில் என்னால் காண  முடிந்தது. ஆனால் இதுவரையில் நானறிந்த வரையில் இதழாசிரியரைப்பற்றியோ அல்லது சஞ்சிகை பற்றியோ எங்கும் வாசித்ததாக நினைவிலில்லை.. கலாநிதி சி. மௌனகுரு, கலாநிதி சித்திரலேகா மெளனகுரு & கலை,இலக்கிய விமர்சகரும், கவிஞனுமான எம். ஏ. நுஃமான் ஆகியோர் இணைந்து எழுதிய ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்’ என்னும் நூலிலும் தேடிப்பார்த்தேன். தேனருவி பற்றியோ அதன் ஆசிரியர் அருண்மொழி தேவன் (அருண்மொழி)  பற்றியோ தகவல்கள் எவற்றையும் அறிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை இவர்களுக்கெல்லாம் தேனருவி பற்றியோ அதன் படைப்புகள் பற்றியோ தெரிந்திருக்காமல் இருக்கக்கூடுமோ என்றெண்ணியவாறு ‘தேனருவி’ சஞ்சிகையையின் சேமிக்கப்பட்டிருந்த இதழ்களைப் புரட்டியபோதுதான் அதன் இலக்கியப் பங்களிப்பினைப் புரிந்துகொண்டேன். அப்பொழுது எனக்கு எழுந்த முக்கியமான கேள்வி இதுதான்: “எதற்காக? எதற்காக ‘தேனருவி’ சஞ்சிகையும், அதன் ஆசிரியரும் கலை, இலக்கிய  விமர்சகர்களாள் இருட்டடுப்பு செய்யப்பட்டார்கள்? இத்தனைக்கும் இளஞரான  நுஃமானின் ‘எச்சில் எனினும்…’ என்னும் காதற் சிறுகதை கூடத் ‘தேனருவி’ இதழொன்றில் வெளியாகியுள்ளது.  

அருண்மொழிதேவன் அவர்கள் ‘தேனருவி’ சஞ்சிகையை மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் வெளியிட்டுள்ளார். பலருக்குக் களமமைத்துக்கொடுத்துள்ளார். * தேனருவி சஞ்சிகையின் ஆசிரியரான அருண்மொழி  தேவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரென்று கலை, இலக்கிய விமர்சகரான கே.எஸ்.சிவகுமாரன் இப்பதிவுக்கான தனது முகநூல்எதிர்வினையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.  அவருக்கு நன்றி. உண்மையில் அருண்மொழி தேவன் (அருண்மொழி) இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்புகள் பலவற்றை வெளியிட்டு ஆக்கபூர்வமான பங்களிப்பினைச் செய்துள்ளார். ‘வானொலி நாடகக்  குழு’ நாடக அமைப்பினருடன் இணைந்து தமிழ் நாடகத்துறைக்கும் பங்களிப்பு செய்துள்ளார். அவை பாராட்டப்பட வேண்டியவை. ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை.

இவ்விதமான இருட்டடிப்புகளுக்கு முக்கிய காரணங்களிலொன்று. கலை, இலக்கிய விமர்சகர்கள் பாரபட்சமாகச் செயற்படுவது. இவர்கள் எழுதுவதன் அடிப்படையிலேயே ஏனையோரும் ஆய்வுகள் செய்வதால் இவர்களால் தவற விடப்படும் எழுத்தாளர்கள், சஞ்சிகைகள், படைப்புகள் பல தொடர்ந்தும் இவை பற்றி ஆய்வு செய்யும் ஏனையவர்களாலும்  தவறவிடப்படுகின்றன. ஆனால் இன்று இணையத்தின் வருகையும், எண்ணிம நூலகங்களின் உருவாக்கமும் இவ்விதம் தவற விடப்பட்டவர்களையெல்லாம் இனங்காண்பதற்கு மிகவும் உதவியாகவிருக்கின்றன. ‘நூலகம்’ என்னும் எண்ணிம நூலகத்தில் இவ்விதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதால்தானே என்னால் இவற்றைப்பற்றி அறிய முடிந்தது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: ‘அமிர்த கங்கை’

சஞ்சிகை அமிர்த கங்கை; ஆசிரியர்: செம்பியன் செல்வன் -

‘நூலகம்’ தளத்தில் சஞ்சிகைகள் பகுதியை மேய்ந்துகொண்டிருக்கையில் கண்களில் பட்ட சஞ்சிகை ‘அமிர்த கங்கை’. எழுத்தாளர் செம்பியன் செல்வனை கெளரவ ஆசிரியராகக்கொண்டு வெளியாகிய சஞ்சிகையின் 12 இதழ்கள் ( ஜனவரி 1986 தொடக்கம் ஜூன் 1987 வரையிலான காலகட்டத்துக்குரிய) சேகரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஏப்ரில் 1986, செப்டெம்பர் 1986, டிசம்பர் 1986, ஜனவரி 1987, பெப்ருவரி 1987 ஆகிய இதழ்களைக் காணவில்லை. ஜனவரி 1986 வெளியான இதழே முதலாவது இதழ்.


இதழில் சிறுகதைகள், தகவல்கள், குட்டிக்கதைகள், செம்பியன் செல்வனின் உருவகக்கதைகள், ஓவியர் ரமணியின் ஓவியங்களுடன் கூடிய ‘ரமணி’என்னும் சிறுவர் பகுதி, கட்டுரைகள், செங்கை ஆழியானின் ‘தீம்தரிகிட தித்தோம்’ தொடர் நாவல், புதுமைப்பித்தனின் பேஸிஸ்ட் ஜடாமுனி (பாஸிச வரலாறு) என்னும் தலைப்பிலான முசோலினி பற்றிய தொடர், சத்ஜித்ரேயின் வங்காள நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பின் (லீலா றே மொழிபெயர்த்தது) தமிழ் மொழிபெயர்ப்பு ‘பக்திக் சந்த்’ தலைப்பில் வெளியான தொடர், கேலிச்சித்திரங்கள் இவற்றுடன் சஞ்சிகையின் இறுதிப்பகுதியில் சோதிடம் (இராசி பலன்) ஆகியவை காணப்பட்டன. சத்ஜித்ரேயின் தொடரைத் தமிழாக்கம் செய்தவர் எழுத்தாளர் சொக்கன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

மலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு

மலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 32 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் இலங்கை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் தெரிசெய்யப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான முதல் கட்ட நிதிக்கொடுப்பனவு அண்மையில் வழங்கப்பட்டது.

Continue Reading →

இடம் பெயர்வும் என் நாவல் அனுபவங்களும் (- சாகித்ய அகாதமி கருத்தரங்கில் படித்தது.)

 - சுப்ரபாரதிமணியன் -

நானும் இடம் பெயர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு வேலைக்குச் சென்றேன்.  தொலைத்தொடர்புத்துறையில் பொறியாளர் பணி அங்குதான் எனக்குக் கிடைத்தது எங்கள் குடும்பத்தலைமுறையே மைசூரில் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் . ஏதோ காரணத்திற்காக கோவை மாவட்ட வந்து குடியேறியவர்கள்.நாங்கள் குடியேறிகளா என்று பல சமயங்களில் கேட்டுக் கொள்வேன். திப்புசுல்தான் படையெடுப்பு, குல அவமரியாதை  என்று அப்போதைய இடம் பெயர்வுக்குக் காரணம் சொல்வார்கள்.

செகந்திராபாத்தில் வசிக்கும் போது சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் திவோலி ,லிபர்ட்டி திரையரங்குகளில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் .

. தொலைக்காட்சி தொலைபேசி துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து லிபர்டி தியேட்டரில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவாக நான் என் வேலை திட்டத்தை மாற்றி வைத்துக் கொள்வேன். அல்லது பிறரின் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்காக மாற்றி அமைத்துக் கொள்வேன். அப்படித்தான் லிபர்டி பிரத்தியேக திரையரங்கில் பல முக்கியமான பரிசு பெற்ற இந்தியத் திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். அது ஒரு தனி ஆர்வமாக இருந்தது .காலை வேலை என்பதை மாற்றி மதியம் என்று மாற்றிக்கொள்வேன் காலை வேலை முடிந்து இரண்டு மணிக்கு அந்த படங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வேன் அல்லது மாலை பணி என்றால் காலையில் இருக்கும் காட்சிக்கு செல்வேன் பெரும்பாலும் அந்த வகை பரிசு பெற்ற படங்கள்,  தேசிய விருது படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை காட்சிகளில் திரையிடப்படும். அதற்கேற்ப நான் என் பணி நேரத்தை தொடர்ந்து பிறரிடம் சொல்லி மாற்றிக் கொள்வேன். பலருக்கு இது பிடிக்கவில்லை. திரைப்படம் பார்க்க இப்படி தொந்தரவு செய்கிறானே என்பார்கள் . சத்யஜித்ரே,  மிருணாள் செண் உட்பட பலரின் படங்களை அப்படித்தான் நான் லிபர்ட்டி  திரையரங்கில் பார்த்தேன் .இது ஒரு வகை அனுபவம் .

Continue Reading →

காலத்தை வென்ற சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரங்கள்

1. சுந்தரின் ‘கொரோனா’ கேலிச்சித்திரம் (ஒரு கற்பனை)

கொஞ்ச நேரம் கொரோனாவை மறந்து விட்டு சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரத்தில் சிரித்து சந்தோசமாகவிருப்போமென்று ‘நூலகம்’ தளத்திலுள்ள சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திரங்கள் அடங்கிய தொகுப்பு நூலான ‘சிரித்திரன் சித்திரக்கொத்து’ நூலைப் புரட்டினேன். முதலில் கண்களில் பட்டது இந்தக் கேலிச்சித்திரம்.

தற்போது தேர்தல் காலம். கொரோனா வந்து எல்லாவற்றையும் தடுத்து விட்டதே என்று நினைத்தேன்.

இந்தக் கேலிச்சித்திரம் சிறு மாற்றத்துடன் இக்காலகட்டத்துக்கும் பொருந்துமேயென்று தோன்றியது.

படத்தில் நோயால் படுக்கையிலிருக்கிற முதியவரை நாடி தேர்தல் வேட்பாளர் வந்து நிற்கிறார். அவரைப்பார்த்து அந்த முதியவர் “தம்பி அழாதை. வோட்டுப்போடுற நாள் வர கால் சுகப்பட்டுப்போம். நான் ஓடி வந்து உனக்கு வோட்டுப் போடுறன்” என்கின்றார்.

முதியவர் கூறுவதை “”தம்பி அழாதை. வோட்டுப்போடுற நாள் வர கொரோனா சுகப்பட்டுப்போம். நான் ஓடி வந்து உனக்கு வோட்டுப் போடுறன்” என்று மாற்றினால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன் சிரிக்கப் போன இடத்திலும் சிந்தனையில் கொரோனாதான்

Continue Reading →

இன்ஸான் சிறுகதைகள்

[எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் இன்ஸான் முஸ்லிம் வாரப்பத்திரிகையில் வெளியான சிறுகதைகளைப்பற்றிய ஆவணச்சிறப்புள்ள இப்பதிவினை எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அதனை நான் இங்கு பதிவு செய்கின்றேன். – வ.ந.கி -]


21.6.1967 தொடக்கம் 4.7.1969 வரை இலங்கையில் வெளிவந்த வாரப் பத்திரிகை ‘ இன்ஸான் ‘ .அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக , முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கில் இப்பத்திரிகை வெளியானது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ( ரஷ்ய சார்பு ) நிதியுதவியில் இப்பத்திரிகை வெளியிடப்பட்டதாயினும் தன்னையொரு கம்யூனிஸ்ட் பத்திரிகையாக அது இனங்காட்டிக்கொள்ளவில்லை. இதன் ஆசிரியர் அபூதாலிப் அப்துல் லதீஃப் . துணை ஆசிரியர் பண்ணாமத்துக்கவிராயர் பாரூக். எனினும் , அவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளிப்படுத்தப்படவில்லை. அப்பத்திரிகையில் எழுதியவர்களுக்கோ அதன் வாசகர்களுக்கோ தெரியாத இரகசியங்களாகவே இவை இருந்ததெனலாம். ‘ கௌரவ ஆசிரியர் : எஸ்.எச்.ஏ. வதூத் ‘ என நண்பர் ஒருவரின் பெயர் பின்னாள்களில் பொறிக்கப்பட்டது. இலங்கை முஸ்லிம்களின் பேச்சு வழக்குச் சொற்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பத்திரிகை முஸ்லிம்கள் மத்தியில் அன்று பிரபலம் பெற்றிருந்தது.

இன்ஸான் ஓர் அரசியல் பத்திரிகையாக இருந்தபோதிலும் ( மொழி பெயர்ப்பு உட்பட ) சிறுகதை , கவிதை , கட்டுரைகள் என கலை – இலக்கிய ஆக்கங்களுக்கும் முக்கியத்துவமளித்தது. பின்னாளில் புகழ் பெற்ற பல எழுத்தாளர்கள் , ‘ தாம் இன்ஸான் பண்ணையில் வளர்ந்தவர்கள் ‘ என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் அளவுக்கு அவர்களின் பயில்களமாக இன்ஸான் அமைந்தது.

Continue Reading →

அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘யூத -அரபு உறவு பற்றி பேட்ரண்ட் ரஸல்’ என்னும் ‘இன்ஸான்’ பத்திரிகைக் கட்டுரை பற்றி..

அ.ந.கந்தசாமியின் 'யூத -அரபு உறவு பற்றி பேட்ரண்ட் ரஸல்' என்னும் 'இன்ஸான்' பத்திரிகைக் கட்டுரை பகுதி 1  அறிஞர் அ.ந.கந்தசாமி

அறிஞர்  அ.ந.கந்தசாமி அவர்கள் இன்ஸான் பத்திரிகையில் ‘யூத -அரபு  பற்றி பேட்ரண்ட் ரஸல்’என்றொரு கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரையானது இன்ஸான் பத்திரிகையில் 21.7,1967 , 28.7.1967 ஆகிய திகதிகளில் ‘யூத – அரபு உறவு பற்றி பேட்ரண்ட் ரஸல்’ என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது.  பேட்ரண்ட் ரஸலின் நூல்களிலிருந்து யூத அராபிய உறவு பற்றிய பேட்ரண்ட் ரஸலின் கருத்துகளை ஆராய்ந்து அ.ந.க எழுதிய கட்டுரை.

Continue Reading →

இலங்கை தினகரனுக்கு 88 வயது! இலங்கையில் தினகரனும் பாரதியும்!

கலாநிதி கைலாசபதிஏரிக்கரை பத்திரிகை ( Lake House) என வர்ணிக்கப்படும் தினகரன் 1932 ஆம் ஆண்டு முதல் நாளிதழாக வெளியாகிறது. 23-05-1948 ஆம் திகதியன்று தனது முதலாவது தினகரன் வாரமஞ்சரியை தமிழ் வாசகர்களுக்கு  அறிமுகப்படுத்தியது. ஆங்கில, சிங்கள ஏடுகளையும் சஞ்சிகைகளையும் வெளியிட்டுவரும் ஏரிக்கரையிலிருந்து இயங்கும் Lake House  என்ற  பெரிய நிறுவனத்தின் ஒரே ஒரு தமிழ்த்தினசரி  தினகரன். அது வெளிவரத்தொடங்கிய காலகட்டத்தில் மற்றும் ஒரு இந்திய ஊடகம் என்ற மாயைதான்  இலங்கை வாசகர்களிடம் உருவாகியிருந்தது.   தினகரனை இலங்கையின் தமிழ்த் தேசியப்பத்திரிகையாக்கிய  பெருமை பேராசிரியர் க. கைலாசபதியையே சாரும். இவருக்கு முன்னர் கே.க.ப. நாதன் தினகரன் ஆசிரியராக பணியாற்றினார். பின்னாளில் இவர் கொழும்பில் தினபதி, சிந்தாமணி,  வெளியிட்ட  சுயாதீன பத்திரிகை சமாஜத்தின் தந்தி மாலைத்தினசரியின்  ஆசிரியரானார். பாரதி ஆய்வாளராகவும் அறியப்படும் பேராசிரியர் க. கைலாசபதியின்  தினகரன் ஆசிரியப்பணி குறித்தும் இருவேறு கருத்தியல்கள்  இலக்கிய உலகில் நிலவியதை அறிவோம்.

” பல்கலைக்கழகத்திலிருந்து  தமிழ்ச்சிறப்பு  பட்டதாரியாக  அவர் முதல் வகுப்பில்  சித்தியெய்திய பின்னர், அன்று உயர்வாக மதிக்கப்பட்ட அரச நிர்வாகப்பதவியொன்றினைத் தேடியிருக்கவோ  அல்லது  உயர் கல்வி  ஆராய்ச்சித்துறையில் இந்நாட்டிலோ   வெளிநாடு சென்றோ, மேலுக்கு வந்திருக்கவோ கூடும்.  ஆனால், கைலாஸ் அவ்வாறு செய்யாது பத்திரிகையுட் புகுந்தார். அதனை வருவாய்க்கு வழியாக அன்றி, அதன் வாய்ப்புகளை  உகந்தவாறு  பயன்படுத்துவதில்  கைலாஸ் குறியாயிருந்தமை  தெளிவாகும்.

Continue Reading →