வாசிப்பும், யோசிப்பும் 179: வழக்கறிஞர் செந்தில்நாதன் என்றொரு வானியல் ஆர்வலரும், ‘கட்டைச்சுப்பரும்’…….

வாசிப்பும், யோசிப்பும் 179: வழக்கறிஞர் செந்தில்நாதன் என்றொரு வானியல் ஆர்வலரும், 'கட்டைச்சுப்பரும்'.......எழுதுபதுகளில் யாழ் கஸ்தூரியார் வீதியில் (நாவலர் வீதிக்கு அண்மையில்) செந்தில்நாதன் என்னும் வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவரது வீடு மூன்று தளங்களை உள்ளடக்கிய (மொட்டை மாடியையும் உள்ளடக்கி) வீடு. இவர் தனது தொழிலான சட்டத்துறையில் எவ்விதம் மிளிர்ந்தார் என்பது தெரியாது. ஆனால் ஒரு விடயத்தில் இவர் என் கவனத்துக்குரியவரானார். தனது வீட்டின் மொட்டை மாடியில் இவர் தொலைக்காட்டியொன்றினை வைத்து இரவுகளில் நட்சத்திரங்களை ஆராய்வது வழக்கம். யாழ்ப்பாணத்தில் வானியற் கழகமொன்றினையும் இவர் நிறுவி நடாத்தி வந்ததை பத்திரிகைச்செய்திகள் வாயிலாக (அநேகமாக ஈழநாடு பத்திரிகை) அறிந்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில் வானியலில் ஈடுபாடு கொண்டிருந்த இந்த வழக்கறிஞர் மாணவர்களாகிய எமக்கு வியப்புக்குரியவராக இருந்தார்; வித்தியாசமானவராகவுமிருந்தார்.

எனக்கு வானியல், வானியற்பியல் ஆகியவற்றில் என் மாணவப் பருவத்திலேயே மிகுந்த ஈடுபாடு. எனக்கு வானியற்பியல் பற்றிய ஆர்வத்துக்கு முக்கியமான காரணங்களில் சில: யாழ் பொது நூலகத்தில் நான் வாசித்த விஞ்ஞான நூல்களும், அப்பாவும்தாம். என் குழந்தைப்பருவத்தில் இரவுகளில் அப்பாவின் சாறத்தைத்தொட்டிலாக்கி, அப்பாவுடன் சேர்ந்து இரவு வானையும், அங்கு கொட்டிக்கிடக்கும் சுடர்களையும் இரசிப்பதுண்டு.

வானியற்பியல் என்றதும் இன்னுமொருவர் ஞாபகமும் வருகின்றது. யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில், உயிரியல் என்னும் பாடத்துக்கு ஆசிரியராக வந்தவர் ‘கட்டைச்சுப்பர்’ என்ற பட்டப்பெயருக்குரிய ஆசிரியர். பிறவுண் வீதியில் இருந்தவர். நீண்ட ‘தேர்மாஸ் பிளாஸ்கி’ல் ‘கோப்பி’ கொண்டு வருவார். அவருக்கு வானியலென்றால் உயிர். எங்களுக்கு உயிரியல் படிப்பிக்க வந்தவர், உயிரியல் பாடத்துக்கான நூலின் முன்னுரையில் இருந்த வானியல் பற்றிய ஒரு வசனத்தை எடுத்து, வானியல் பற்றி விரிவாக உயிரியலுக்குப் பதில் படிப்பிக்கத் தொடங்கி விட்டார். இரவு வானில் தெரியும் நட்சத்திரங்களை , நட்சத்திரக் கூட்டங்களைப் பற்றியெல்லாம் படிப்பிக்கத்தொடங்கியதால் எமக்குக் கற்பிக்க வேண்டிய உயிரியல் பாடத்தைத்தவற விட்டு விட்டார். இறுதியில் இதன் காரணமாக அவரை மாற்றி சகாதேவன் மாஸ்ட்டரை உயிரியல் பாடத்துக்குக்கொண்டு வந்தார்கள்.

‘கட்டைச்சுப்பர்’ இவ்விதம் வானியல் பற்றிப்படிப்பித்ததை நான் உண்மையிலேயே விரும்பிப் படித்தேன். ஏனெனில் எனக்கு மிகவும் அத்துறையில் ஆர்வமிருந்ததால்தான். அதன் காரணமாகவே இன்றும் அவர் என் நினைவில் பசுமையாக இருக்கின்றார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 178: நூல் அறிமுகம்: ‘தோழர் பால’னின் ‘இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு’ பற்றி….

பாலன் தோழர்தோழர் பாலனின் ‘இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு’ என்னும் சிறிய நூல் தோழர் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. ‘கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது ‘ என்பார்கள். அதற்கொப்ப அளவில் சிறியதானாலும், கூறும் பொருளில் காத்திரமானதாக, புரட்சிகரமானதாக அமைந்துள்ள நூலிது. இலங்கை மீதான இந்தியாவின் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவரீதியிலான தலையீடுகளை விபரிப்பதும், இவற்றால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்களை வெளிப்படுத்துவதும், எவ்விதம் இந்தியத்தலையீட்டிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கு இலங்கையின் மக்கள் அனைவரும் இன, மத , மொழி ரீதியிலான பிரிவுகள் ஏதுமற்று , ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதையும் தர்க்கரீதியாக விபரிப்பதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும். இது தன் நோக்கத்தில் வெற்றியே அடைந்திருக்கின்றது என்பதை இதனை வாசிக்கும்போது உணர முடிகின்றது.

பொதுவாக இந்தியாவின் தலையீடு இலங்கையிலுள்ளது என்பது யாவரும் அறிந்ததே. இந்தியாவை மீறி இலங்கையால் எதுவுமே செய்ய முடியாது என்பதும் யாவரும் அறிந்ததே. இந்தியாவைப்பொறுத்தவரையில் அதன் அயல் நாடுகளுடனான வெளிநாட்டுக்கொள்கை அதன் தேசிய நலன்களுக்கு அமையவே அமைந்துள்ளது. அயல் நாடுகள் அதன் தேசிய நலன்களுக்கு முரணாகச் செயற்படும்போது அது அந்நாடுகளை ஆக்கிரமிக்கவும் தயங்காது என்பதை வரலாறு காட்டி நிற்கிறது. அயல் நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தனது நலன்களுக்குச் சார்பாகப் பயன்படுத்துவதில் இந்தியா ஒருபோதுமே தயங்கியதில்லை. இதனை இந்நூல் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இதுவரை காலம் இலங்கையின் மீதான இந்தியத்தலையீட்டினை வரலாற்றுக்கண் கொண்டு , சுருக்கமாக ஆராயும் இந்நூல், , இந்தியா எவ்விதம் தன் அயல்நாடுகளில் தன் நலன்களுக்காகத்தலையிடுகின்றது என்பதையும் புள்ளி விபரங்களுடன் வெளிப்படுத்துகிறது

அண்மைக்காலமாகவே , குறிப்பாக இலங்கையில் யுத்தம் மெளனிக்கப்பட்ட காலகட்டத்திலிருந்து இந்நாள் வரையில் உபகண்ட அரசியலைக்கூர்ந்து நோக்கினால், இந்தியா இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளைத்தன் மாநிலங்களைப்போலவே பயன்படுத்தி வருவதைப்போன்றதொரு நிலையினை அவதானிக்க முடிகின்றது. தன் நலன்களுக்கேற்ப அது ஈடுபட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் பார்க்கும்போது (காங்கேசன் துறைத்திட்டம், பலாலி விமான நிலையத்திட்டம், புகையிரத்தப்பாதை மீளமைப்புத்திட்டங்கள், சம்பூர் அனம் மின்சார நிலையத்திட்டம், திருகோணமலை எண்ணெய்ச்சுத்திகரிப்பு நிலையத்திட்டம் என இவை போன்ற பல திட்டங்கள்) எவ்வளவு தூரம் இந்தியாவின் தலையீட்டில் இலங்கை அகப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது.

Continue Reading →

மீள்பிரசுரம்: நாய் கற்பித்த பாடம்!

[ எமக்கு பிலோ இருதயநாத் அவர்களது பயணக்கட்டுரைகள் மிகவும் பிடிக்கும். கானுயிர் பயணங்கள் மற்றும் மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடியாகக் கருதப்படுபவர். அவர் ஞாபகமாக ‘எங்கள் புளக்’ (engalblog.blogspot.com) வலைப்பதிவில் 1965இல் வெளியான மஞ்சரி இதழில் வெளியான ‘நாய் கற்பித்த பாடம்’ மீள்பிரசுரமாகியிருந்தது மகிழ்ச்சியினைத்தருகின்றது. அந்தக் கட்டுரையினை இங்கு மீள்பதிவு செய்கின்றோம் பதிவுகள் -.]


நாய் கற்பித்த பாடம் - பிலோ இருதயநாத்.பிலோ இருதயநாத்ஆபத்தில் உதவாத நண்பர்களிடம் நாயானாலும் ஆத்திரம் வராதா?

அன்று மைசூரிலிருந்து சென்று கூடலூரில் ஒரு நண்பரின் இல்லத்தில் தங்கினேன்.  மறுநாள் காலையில் சுல்தான்பத்திரி, தேவர்சோலை ஆகிய இடங்களுக்குச் சென்றேன்.  தேவர் சோலையில் என்னை நீண்ட நாட்களாக அழைத்துக் கொண்டிருந்த நண்பரான ரூப் சிங் என்பவருடைய இல்லத்தில் தங்கினேன்.  அவர் சிறந்த வேட்டைக்கார்.  அவரிடம் கன்றுக்குட்டியைப்போல ஒரு வேட்டை நாய் உண்டு.  வேட்டைக்கு ரூப் சிங் செல்லும்போதெல்லாம் அந்த நாயும் அவருடன் செல்லும்.

“இந்த நாயை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்?” என்று அவரிடம் கேட்டேன்.ரூப் சிங் சொல்லலானார். “அது ஒரு பெரிய கதை.  இந்த நாயின் குடும்பத்தைச் சேர்ந்த முன்னூறு நாய்கள் என் நண்பருள் ஒருவரிடம் இருக்கின்றன.  அவர் ஒரு செல்வர்.  இந்த நாயை அவர்தான் எனக்குக் கொடுத்தார்.  அவர் நல்ல வேட்டைக் காரர்.  அது மட்டுமல்ல; நாய் வளர்ப்பிலும் அவருக்கு அளவு கடந்த ஆசை.  நாய்களைக் கவனிப்பதற்கு மட்டும் சுமார் இருபது ஆட்களுக்கு மேல் வைத்திருக்கிறார்.  இரவில் அந்தச் செல்வர் தமது பங்களாவில் எந்தக் கதவையும் மூடுவதே இல்லை. எந்த எந்தக் கதவுகளின் மூலம் அந்தச் செல்வரின் இல்லத்துக்குள்ளும், காம்பௌன்டுக்குள்ளும் அந்நியர் வர இயலுமோ, அந்தக் கதவு வாயிற்படிகளை எல்லாம் நாலு நாலு நாய்கள் காவல் புரியும்.   இரவு 7 மணிக்குத் தம் காவல் நாய்களைச் செல்வர் தடவிக் கொடுப்பார்.  பிறகே உறங்கச் செல்வார்.  செல்வர் தடவிக் கொடுத்த பிறகு, நாய் வளர்ப்பு வேலைக்காரனுங்கூட எந்த வழியாகவும் உள்ளே புக முடியாது.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: கருத்தியல் போராட்டம் நடத்தி களைத்துப்போனவர் ஓய்வு பெறட்டும்! சிவாசுப்பிரமணியம் நினைவுப்பகிர்வு!

” இந்தக்கடிதத்தில்  குறிப்பிட்டுள்ள  பெயருக்குரியவனை உமக்குத்தெரியுமா ? “

” தெரியாது. “

” உமக்கு எத்தனை மொழிகள் தெரியும் ?”

” தமிழ், ஆங்கிலம், சிங்களம் தெரியும்.”

” எப்படி  உம்மால்  இந்த  மூன்று  மொழிகளிலும் சரளமாகப்பேசமுடிகிறது”

” நான்  இலங்கையன்.  இம்மூன்று  மொழிகளும்  இங்கே பேசப்படுபவை.   அதனால்  கற்றேன்.  பேசுகின்றேன்”

” எவ்வாறு  இந்த  மொழிகளில்  உமக்கு  பேசும்  ஆற்றல்  வந்தது.”

”  நான்  தமிழன்.   அதனால்  தமிழ்  பேசுகின்றேன். சிங்கள இலக்கியவாதிகளைத்தெரியும்.  சிங்கள  இலக்கியமும் தெரியும். சிங்கள  நண்பர்களும்  எனக்கு  இருக்கிறார்கள்.  ஆங்கிலத்திலும் படித்திருக்கின்றேன். அத்துடன்   நான்  ஒரு  அரசாங்க  ஊழியன்”

” உமக்கு  மொழிபெயர்க்கத் தெரியுமா?”

Continue Reading →

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603)
அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா

* 28/6/16 செவ்வாய், மாலை 5 மணி. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர், திருப்பூர்
* சிறப்பு விருந்தினர்: திரு. அம்சன் குமார் , சென்னை

( திரைப்பட இயக்குனர், இவ்வண்டின் சிறந்தத் தமிழ் ஆவணப்படத்திற்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய தேசிய  விருது பெற்றவர்)

Continue Reading →

திருப்பூர் இலக்கிய விருது 2016 விழா!

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!திருப்பூர் இலக்கிய விருது 2016  விழா! (94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, காந்திநகர்,   திருப்பூர்   641 604 .)

* 28/6/16 செவ்வாய், மாலை 7 மணி. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர், திருப்பூர்
* சிறப்பு விருந்தினர்: திரு. அம்சன் குமார் , சென்னை

திரைப்பட இயக்குனர், இவ்வண்டின் சிறந்தத் தமிழ் ஆவணப்படத்திற்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய தேசிய  விருது பெற்றவர்)
விருது பெறுவோர்:

1. ஜெயசாந்தி ( நாவல்) – சங்கவை
2. சுபசெல்வி ( சிறுகதைத் தொகுதி )- புளியமரத்தாணி
3. பூரணா ( கவிதைத்  தொகுதி ) – ஆகாயத்தோட்டிகள்
4. உடுமலை ரவி ( கட்டுரை ) – முழு மது விலக்கு
5. கொ.மா.கோ.இளங்கோ ( சிறுவர் இலக்கியம் ) – ஜீமாவின் கைபேசி

Continue Reading →

நூல் அறிமுகம்: அம்மாவின் கண்கள் ;ஒரு பார்வை!

நூல் அறிமுகம்: அம்மாவின் கண்கள் ;ஒரு பார்வை! - முல்லைஅமுதன் -தமிழின்  வரப்பிரசாதம்  தமிழர்  வாழும்  பரப்பெல்லை  விரிவுபட்டுள்ளது.  இன  முரண்பாடு உள்ளக  வெளியக இடப்பெயர்வுகளை  அதிகமான  மக்களை  பெயர்த்திருக்கிறது  அல்லது வேரோடு  பிடுங்கி  எறிந்திருக்கிறது. ஆதலினால்  மக்களின்  பரப்பளவின்  அதிகமும் அதிகமாக  அவர்களுக்கிடையேயான  மொழி  வளம் ஆளுமை கற்றுக்கொள்ளும் வல்லமை கல்வியின்  மேலோங்கிய  பயிற்சி கைகளுக்குள்  உலகையே  கொண்டு வரும்  கணினியியல் நெறிகளின்  கற்கைகள்  ஒவ்வொரு வரும்  தங்களின்  திறமைகளை  வெளிக்கொணரும் துணிச்சலையும்  கொண்டு வந்துள்ளமை கண்கூடு.

இங்கு  பன்முக  அளுமை மிக்க  படைப்பாளிகளும்  அபரிமிதமாக  தங்களை  இனங்காட்டியே வந்துமுள்ளனர். இப்போது நமக்குப் புதிதாய் அறிமுகமாகிறார் திருமதி.வத்சலா ரமேஷ். சொல்வதை சுவை படச் சொல்வதில் தன் கவிதை மூலம் சாத்தியமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்தபடி எழுதியிருக்கிறார்.வாசகனிடம் அழைத்துச் செல்லும் கவிதைகளுக்குள் நாமும் மூழ்கிபோவது அதிசயம் தான்.தமிழ் மீதான அளப்பரிய பிரியம் தமிழை அழகாகாவும் எழுத முடிந்திருக்கிறது. வாழ்க்கை மீதான நம்பிக்கைகள்,விருப்புக்கள்,கனவுகள்,தன் மீதான கழிவிரக்கம்,தன்னையே உரசிப்பார்க்கும் சமூகவெளி தருகின்ற அனுபவம்,தாயின் ஸ்பரிசம்,கற்பனை வெளியில் தானே துள்லி ஓடுகின்ற ஆட்டுக்குட்டி போலவும்,பதுமையாய் ஒதுங்கிப்போகிற பெண்ணாய், உறவை,உலகை உற்றுப்பார்க்கிற அனுபவஸ்தியாக படைப்பைத் தந்திருக்கிற வத்சலா அவர்களின் கவிதைகள் ஒரு விசாலமான உலகைத் தரிசிக்க முனைந்து நிற்கின்றன.

“ஏகாந்த காற்றில்
பறக்கும்
பால்யத்தின் நினைவுகள்
றெக்கை முளைத்த சருகுகளாய்.”
ஒரு சோறே பதம்பார்க்க உதவுகிறது.
“ஒரு கோப்பைத் தேநீரை
என் இதழ் கேட்கும் சூட்டோடு
சினேகிதமாய் பருகிக் கொண்ருந்தேன்.
வெளியில் பொழிகிறது மழை
என் தேநீர்க் கோப்பையை
நிறைக்கும் வரை”

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 177: எழுத்தாளர் டொமினி ஜீவாவுக்கு வயது எண்பத்தியொன்பது! நவீன ஈழத்தமிழ் நாடகமும், க.பாலேந்திராவும்!

எழுத்தாளர் டொமினி ஜீவாவுக்கு வயது எண்பத்தியொன்பது!

எழுத்தாளர் டொமினிக் ஜீவா!ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்கள் ஜூன் 27 அன்று தனது  எண்பத்தியொன்பதாவது வயதில் காலடியெடுத்து வைக்கின்றார். ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில்  எழுத்தாளராக, இதழாசிரியராக, பதிப்பாளராக மற்றும் சமூகப்போராளியாக இவரது பன்முகப்பட்ட பங்களிப்பு எப்பொழுதும் நினைவு கூரப்படும். பெருமைப்படத்தக்க பங்களிப்பு அது. வளமுடன், நலமுடன் நீண்ட காலம் வாழ்ந்திட வாழ்த்துகிறோம்..

இது பற்றி எழுத்தாளர் மேமன்கவி அவர்கள் பின்வரும் தகவலை முகநூலில் பகிர்ந்துள்ளார். அதனை நாம் இங்கு மீள்பதிவு செய்கின்றோம்.

“எதிர்வரும் 27.06.2016 அன்று தனது 89வது பிறந்த தினத்தை கொண்டாடும் டொமினிக் ஜீவா அவர்களை அன்று காலை 9.30 முதல் 11.30 வரை COLOMBO15. MATTAKULIYA CROW ISLAND BEACH PARK. யில் சந்தித்து நண்பர்கள் அவரை வாழ்த்தலாம். தொலைபேசி யில் வாழ்த்த விரும்பும் நண்பர்கள் அல்லது குறுஞ்செய்தி(தமிழிலோ ஆங்கிலம் இரண்டிலும்) அனுப்பி வாழ்த்த விரும்பும் நண்பர்கள் 94778681464 இலக்கத்திற்கு தொடர்புக் கொள்ளலாம்.” –
மேமன்கவி-

Continue Reading →

சண்முகம் சிவலிங்கம் அவர்களது காண்டாவனம் குறித்து ……..

எழுத்தாளர் க.நவம்சண்முகம் சிவலிங்கம் அவர்களது காண்டாவனம் குறித்து ……..போர் பழம்பெரும் உலக மகா காவியங்கள், இதிகாசங்கள் பலவற்றின் பிரதான பேசுபொருளாக இருந்து வந்திருக்கின்றது. இராமாயணம், மகாபாரதம் முதற்கொண்டு, இலியட், ஒடிஸ்ஸி வரை இதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளார்களான லியோ ரோல்ஸ்ரோய், ஃப்ரான்ஸ் காஃப்கா, எர்னெஸ்ற் ஹேர்மிங்வே, ஜோசெஃப் கிப்ளிங் போன்றோர் உட்பட, அண்மைக்காலப் பலஸ்தீனியப் படைப்பாளிகளான சமி அல்-காசிம், ஸியாட் கட்டாஷ் போன்றோர் பலரும் தமது போர்க்கால அனுபவங்களை இலக்கியங்களாக்கிப் புகழ் பெற்றவர்கள். தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்தவரை, காதலையும் வீரத்தையும் விதந்து பேசும் சங்க இலக்கிய காலத்தில் போர் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. அதன் பின்னர்  மிக நீண்ட காலமாகத் தமிழிலக்கியத்தின் ’பிரதான பேசுபொருளாக’ இடம்பெறாதிருந்த போர், கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஒரு மாறுபட்ட வடிவத்தில் மீண்டும் தமிழிலக்கியத்தினுள் தடம் பதித்துக்கொண்டது. ஈழத்தமிழரது தமிழ்த் தேசிய விடுதலை எழுச்சியே அதற்கு வழிகோலிக் கொடுத்தது.

ஈழப்போர்க்கால இலக்கியத்தின் புதுவரவாக, சண்முகம் சிவலிங்கம் அவர்களது ‘காண்டாவனம்’ எனும் சிறுகதைத் திரட்டின் முதல் (வட அமெரிக்க) பதிப்பு, அவரது புதல்வர்கள் வித்தியானி, மகரிஷி ஆகியோரது முயற்சியில், கலிஃபோர்னியாவிலுள்ள iPMCG Inc. வெளியீடாக மார்கழி 2014இல் வெளிவந்திருக்கிறது. அண்மையில் பிரதி ஒன்று எனது கையை வந்தடையக் காரணமாயிருந்தவர், பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள். ‘சசி’ என்று நண்பர்களாலும், ’ஸ்டீஃபன் மாஸ்ரர்’ என்று மாணவர்களாலும், பெற்றோர்களாலும், உறவினர்களாலும், ஊரவர்களாலும் அழைக்கப்பட்டுவந்த சண்முகம் சிவலிங்கம் எனது நண்பர்; சக ஆசிரியர். இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தின் கல்முனை நகரிலுள்ள ஸாஹிரா கல்லுரியில் கடந்த எழுபதுகளில் இருவரும் அறிவியல் ஆசிரியர்களாகப் பணியாற்றினோம். அறிவியல் ஆசிரியர்களாக இருந்தபோதிலும், மாணவர்களுக்கு நவீன தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்தோம். மாணவர் மன்றம் அமைத்து, இலக்கியம் தொடர்பான வாசிப்புக்கள், உரையாடல்கள், சந்திப்புக்களை நிகழ்த்தினோம். நாடகங்களைத் தயாரித்தோம். கலை இலக்கிய நிகழ்ச்சிகளை இணைந்து நடத்தினோம். சமூகம், அரசியல், இலக்கியம் உட்பட, பல்வேறு விடயங்கள் குறித்து எமக்குள் விவாதித்தோம், உரையாடினோம்; உடன்பட்டோம், முரண்பட்டோம் – நல்ல நண்பர்களாக.  

இலங்கையின் வடபிரதேசத்தில் நான் பிறந்து வளர்ந்த ஊரைத் தவிர, கிழக்கு மாகாணத்தையும், கண்டி, பேராதனை நகரங்களை உள்ளடக்கிய மத்திய மாகாணத்தையுமே எனக்கு மிகவும் பிடித்தமான பிரதேசங்களெனக் குறிப்பிட்டுச் சொல்வேன். கிழக்கு மாகாணத்தின் முக்கிய நகரங்களில், நான் கடமையின் நிமித்தம் சில வருடங்கள் வாழ்ந்துவந்த கல்முனையும் ஒன்று. காண்டாவனம் கதைத் திரட்டினூடாக, சுமார் 40 வருடங்களின் பின்னர், மீண்டும் ஒருமுறை கல்முனை போய்வந்தேன். வங்கக் கடலும், கரைமணலும், வானுலவும் வட்ட நிலவும், வாடிவீடும், வயல்வெளியும், சம்பா அரிசியில் சமைத்த சோறும், கஜுவும், கட்டித் தயிரும், கைத்தறி ஆடைகளும், வேற்றுமைகளுக்குள்ளும் ஒற்றுமையாய் வாழும் சனசமூகங்களும் மீண்டும் என் மனக்கண் முன்னே வந்து போயின. எனக்குப் பிடித்தமான, கிழக்கு மாகாணப் பேச்சுமொழி, கலை, பண்பாடு, விருந்தோம்பல், வாழ்க்கைமுறை என்பன மீண்டும் என் மனத்திரையில் தோன்றி மறைந்தன. எனக்குத் தெரிந்தவர்கள், என்னோடு பழகியவர்கள், எனது  நண்பர்கள் சிலர்கூட, காண்டாவனம் கதை மாந்தர்களாக வந்து போயினர்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 176: அ.யேசுராசாவின் ‘தெரிதலும்’ , புரிதலும். மற்றும் வெகுசனப்படைப்புகளும்!

வாசிப்பும், யோசிப்பும்ழகரம் 5 இதழ் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் அ.யேசுராசா அவர்கள் தனது ‘தெரிதல்’ என்னும் செய்திக்கடித வடிவமைப்பில் கடந்த பல வருடங்களாக வெளியாகி வரும் சிற்றிதழினைத்தந்தார். ‘இளைய தலைமுறைக்கான இரு திங்கள் கலை, இலக்கிய இதழ்’ என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகும் இதழ் ‘தெரிதல்’.


‘தெரிதல்’ மூலம் பல கலை, இலக்கிய விடயங்களை தெரிந்துகொள்ள முடிகின்றது என்பதை இதழைப்புரட்டியபோதுதான் புரிந்தது. 12 பக்கங்களில் எவ்வளவு விடயங்களைத் தர முடியுமோ அவ்வளவு விடயங்களையும் தருகின்றது ‘தெரிதல்’. உதாரணத்துக்கு நிகழ்வில் யேசுராசா அவர்கள் வழங்கிய தெரிதல் வைகாடி- ஆனி 2016 இற்குரிய இதழ். மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கை: 12. இதழில் மூன்று கவிதைகள் (மஞ்சுளா வெடிவர்த்தனாவின் ‘சப்பாத்து’ என்னும் சிங்களக் கவிதை எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில், லதுரு மதுசாங்க லியனாராய்ச்சியின் ‘நண்பா..’ லறீனா அப்துல் ஹைக் மொழிபெயர்ப்பில், மற்றும் தீபிகாவின் ‘நகரம்’ ஆகியவை வெளியாகியுள்ளன.


இவை தவிர இதழிலுள்ள முக்கியமான படைப்புகள் பற்றிய விபரங்கள் கீழே பட்டியலிடப்படுகின்றன:


1. நயநீக்கப் புனைவால் திரவநேர அழகியல் – இ.சு.முரளிதரன் –

2. மிக்கயீல் ஷோலக்கவ் – சோ.பத்மநாதன்

3. சீறி ஓயாத வருங்கால மனிதநதி – சோலைக்களி

4. எஸ்.பொ. என்னும் ஆளுமை: இலக்கிய ஆய்வரங்கு – இறமணன் –

5. சிறுகதை: நிழல் தேடி – பைந்தமிழ்க்குமரன் –

6. சிறுகதை: ஒளி – மருதூர்க்கொத்தன் –

7. எழுகையும் – நா.நவராஜ்

8. அறிதலுக்கான புதியதோர் வாசல்: இலங்கை சமகால கலை, கட்டட வடிவமைப்பு – கிருபாலினி பாக்கியநாதன்

9. தகவற் களம் : பல கலை, இலக்கியத்தகவல்களின் சுருங்கிய வடிவிலான தொகுப்பு


செய்திக்கடிதமளவில் தரமான கலை, இலக்கிய விடயங்களைத்தாங்கி வெளிவந்திருக்கும் ‘தெரிதல்’ நிச்சயம் நம் ;புரிதலை’ அறிதலை அதிகரிக்கவே செய்யுமென்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமேயில்லை. கீழுள்ள இணைய இணைப்பில் ஏனைய இதுவரை வெளிவந்த இதழ்களைப் படிக்கலாம்:

Continue Reading →