“இந்தியா போன்ற கொந்தளிப்பான தேசத்தில் இது போன்ற நூறு தொகுப்புகள் வரவேண்டிய அவசியம் இருகின்றது” மேற் கூறிய எடுகோளுடன் கீரனூர் ஜாகீர் ராஜாவின் முயற்சியில் எதிர் வெளியீடாக ‘காபிர்களின் கதைகள்’ என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பொன்று வெளிவந்துள்ளது. இன்று இந்திய உபகண்டத்தில் கொழுந்து விட்டெரியும் இந்து-முஸ்லிம் பிரச்சினையானது சிக்கலும் நெருக்கடியும் மிகுந்த காலகட்டங்களை எல்லாம் கடந்து அபாயகரமானதோர் காலகட்டத்திற்குள் பிரவேசித்துள்ளது. இந்தியப் பெருந்தேசியம் என்ற கட்டமைப்பை செயலுறுத்த இந்துமதம் என்ற பேரமைப்பை பிணைப்பு சங்கிலியாக வலியுறுத்தும் அதிகார வர்க்கம், அதற்கு இந்திய தேசத்திற்கு உள்ளும் புறமுமாக இஸ்லாமியர்களை ஒரு எதிர்சக்தியாக பகைமுரனாக காட்டி வருகினறது. பாபர்மசூதி தகர்ப்பும், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் அதைத் தொடர்ந்து வந்த தொடர் கலவரங்களும் இதை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றன. ஈழத்திலும் இத்தகைய பதற்றமான ஒரு சூழ்நிலையே இன்று நிலவுகின்றது. அங்கு பல நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்த தமிழ்-முஸ்லிம்களின் சகோதரத்துவ உறவானது, முஸ்லிம் ஊர்காவல் படையினரின் உருவாக்கத்துடன் முறுகல் நிலையை அடைந்து, பின்பு விடுதலைப் புலிகளின் முஸ்லிம் மக்கள் வெளியேற்றம், காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் எனும் சம்பவங்களின் ஊடாக மாபெரும் விரிசல் நிலையை அடைந்துள்ளது. இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் மற்றைய சமூகங்களின் எதிர்ப்புணர்வுகளின் மத்தியில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு முஸ்லிம் சமூகங்களும் மற்றவர்களில் இருந்து தம்மைத் தாமே தனிமைப்படுத்தியும் வேறுபடுத்திக் காட்டும் முகமாகவும் ஆடை அணிகலங்கலிருந்து மற்றைய பழக்க வழக்கங்கள் வரை வித்தியாசமாக தம்மை அடையாளப்படுத்திக் காட்டுவதும் மத அடிப்படைவாதிகளாகவும் வஹாபிகளாகவும் மாறும் போக்கும் இன்று அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தகைய காலமும் சூழலும் உவப்பாக இல்லாத ஒரு கால கட்டத்தில் காலத்தின் தேவை கருதியும் சூழலின் அவசியத்தை உணர்ந்தும் ஜாகீர் ராஜா அவர்கள் இத்தொகுப்பினை வெளிக்கொணர்ந்துள்ளார்.
ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமான சிவா சுப்பிரமணியம் கடந்த 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில், கோண்டாவிலில் தமது இல்லத்தில் காலமானார். ஆரம்பத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்திருந்த இவர், கட்சியின் உத்தியோகபூர்வ இதழ்களான புதுயுகம், தேசாபிமானி ஆகியவற்றில் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார். ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் சிறந்த புலமை இவருக்கிருந்தமையால் அரசியல் மற்றும் இலக்கிய மேடைகளில் மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் இவர் இயங்கிய காலத்தில் சங்கத்தின் மாநாடுகள், கருத்தரங்குகளில் பல சிங்களத்தலைவர்கள், எழுத்தாளர்களின் உரையை அழகாக தமிழில் மொழிபெயர்த்தவர்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து அதிருப்தியுற்று வி.பொன்னம்பலம் வெளியேறி செந்தமிழர் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கிய வேளையில் வி. பொன்னம்பலத்துடன் இணைந்து இயங்கியவர். இலங்கை அரசசேவையில் பணியாற்றியிருக்கும் சிவா சுப்பிரமணியம் சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் முதலானவற்றையும் சிங்களச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளையும் மல்லிகை இதழில் எழுதியவர். குணசேனவிதான என்ற பிரபல சிங்கள எழுத்தாளரின் பாலம என்னும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திய பிரபல்யமான சிங்களச் சிறுகதையை தமிழில் மொழிபெயர்த்தவர். இதே சிறுகதையை ஆங்கில மூலத்திலிருந்து தமிழ்நாட்டில் ஜெயகாந்தன் மொழிபெயர்த்து தமது கல்பனா இதழில் வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தகுந்தது.
1. போராளிகளின் வீடுகளைக் கையளிக்காத அரச அதிபர்! எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மாவின் முகநூற்பதிவு!
எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மா தனது முகநூலில் பின்வருமாறு பதிவொன்றினையிட்டிருந்தார்.
“கிளி நொச்சியில் மு்னனாள் போராளிகளின் வீடுகளை இராணுவம் கையளித்த ஓருமாதமாகியும் அங்கு குடியேறவோ காணியுள் பிரவேசிக்கவோ அரச அதிபர் தடை விதித்துள்ளார். காணியை பார்க்கச் சென்றவர்களை பொலீசை வைத்து மிரட்டி வெளியேற்றியுள்ளனர். அத்தனை குடும்பங்களும் குடும்பத்தலைவரை இழந்த குடும்பங்கள் என்பதும் தனித்து பெண்களும் குழந்தைகளுமே உள்ள குடும்பங்களாகும். பல லட்சம் செலவளித்து கட்டிய வீடுகள் இவை என்பதுடன் ஆதரவற்ற நிலையில் இவர்கள் அல்லல் படுகிறார்கள் என்பதும் உண்மை ஒவ்வொரு காரியாலயங்களாக இழுத்தடிக்கப்பட்டு அலைக்களிந்தாலும் காணிகளை தர மறுக்கிறார்கள். இக்காணிகளை யாராவது ஆட்டையப் போட நினைக்கிறாங்களா? சாக்குப்போக்குகள் சந்தேகமாகத்தான் உள்ளன…இச் செய்தியை ஊடகங்களும் ஏனைய வலைத்தளங்களும் பகிர்ந்து கொள்வதன்மூலம் அநாதரவான பெண்களுக்கு உதவமுடியும் நண்பா்களே”
உதவிதான் செய்யவில்லை. உபத்திரவமாவது செய்யாமலிருக்கலாம். பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்த கதைதான். முன்னாள் போராளிகள் அனைவரின் நல்வாழ்வுக்காகத்தானே போராடினார்கள். எல்லாவற்றையும் இழந்து, எல்லாவற்றையும் துறந்து போராடினார்கள். யுத்தம் மெளனிக்கப்பட்டு அவர்கள் அநாதரவாகவிடப்பட்டபோது சமூகம் அவர்களைப்புறக்கணிக்கிறது. இது வருந்தத்தக்கது.
முகநூல் செய்துள்ள பல நன்மைகளிலொன்றாக என் வாழ்வில் சந்திக்கவே சந்தர்ப்பங்கள் அரிதாகவிருந்த என் பால்ய காலத்து நண்பர்கள் சிலருடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தித்தந்ததைக் குறிப்பிடுவேன். குறிப்பாக சண்முகராஜா , திருநாவுக்கரசு, சிவகுமார், விக்கினேஸ்வரன் மற்றும் ராஜரட்னம் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களில் முதல் மூவரும் ஏழாம் வகுப்பு வரையில் வவுனியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர்கள். மற்றவர் ராஜரட்னம் யாழ் இந்துக்கல்லூரியில் 9, 10ஆம் வகுப்புகளில் படித்தவர்.
விக்கினேஸ்வரன் தற்போது திருநெல்வேலி (தமிழகம்) நகரில் வசிக்கிறார். புகைப்படக்கலைஞரான இவர் அங்கு புகைப்பட ஸ்டுடியோ நடாத்தி வருகின்றார். அண்மையில் முகநூல் மூலம் மீண்டும் என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்திய விக்கினேஸ்வரன் (முகநூலில் Srirham Vignesh என்னும் பெயரில் அறியப்படுபவர்) தனது முகநூல் பக்கத்தில் தன்னைப்பற்றிய அறிமுகத்தைபகிர்ந்திருக்கின்றார்.
அந்த அறிமுகத்தின் மூலம் இவர் எழுத்துத்துறையிலும் ஈடுபட்டு வருவதை அறிந்தேன். மகிழ்ச்சி தருவது. அந்த அறிமுகக்குறிப்பின் இறுதியில் இவர் கூறிய விடயம் என்னை ஆச்சரியபட வைத்ததுடன் மகிழ்ச்சியையும் தந்தது. அந்த அறிமுகக் குறிப்பின் இறுதியில் இவர் குறிப்பிட்டிருந்தது இதுதான்:
“எனது இலக்கியத்துறை ஆர்வத்துக்கு அடிப்படைக் காரணமாயிருந்தவர் வவுனியா மகா வித்தியாலயத்தில் 3 – 6ம் வகுப்புவரை என்னோடு படித்த சக மாணவர் ஒருவர்தான்.அவர் 4ம் வகுப்பு படிக்கும்போதே கவிதை,கதை என எழுத ஆரம்பித்துவிட்டார். அதுபோல எழுதவேண்டும் என எழுந்த ஆர்வம் நிறைவேறியது, நான் 11ம் வகுப்பு (+1) படிக்கும்போதுதான். அந்த மாணவர் வேறு யாருமல்ல….கனடாவிலிருந்து வெளிவரும், பிரபல இலக்கிய (இணைய) இதழான ”பதிவுகள்” இதழின் ஆசிரியர் ”கிரி” (Navratnam Giritharan) அவர்கள்தான். சமீபத்தில்தான் அவருடைய தொடர்பு (முக நூலில்) கிடைத்தது.”
1. இரும்புப்பெண்மணி இரோம் சானு சர்மிளா!
நாம் வாழும் இக்காலகட்டத்தில் வாழும் மானுட உரிமைப்போராளியான இரோம் சானு சர்மிளாவின் உண்ணாவிரதப்போராட்டம் மனித உரிமைகளுக்காகப்போராடும் அனைவரும் அறிந்திருக்க வேண்டியதொன்று. 2.11.2000ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து வருகின்றார் இரோம் சானு சர்மிளா.
2.11.2000 அன்று மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கிலுள்ள மலோம் என்னும் ஊரில் இந்தியப்படைத்துறையின் துணைப்படையான ‘அசாம் ரைபிள்சி’னால் பத்துப் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை எதிர்த்து இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்ட் இரோம் சானு சர்மிளா. இன்றுவரை தன் முடிவில் எந்தவிதத் தளர்வுமில்லாமல் இருந்து வருகின்றார்.
இவரைப்பற்றி இரா.கலைச்செல்வன் அண்மைய விகடனொன்றில் நல்லதொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அதிலவர் எவ்விதம் அவரை அவரிருக்கும் மருத்துவ மனையில் சந்தித்தது என்பது பற்றியும், இரோம் சானு சர்மிளாவின் தனிப்பட்ட அந்தரங்கள் உணர்வுகள் பற்றியும் (காதல் போன்ற) அவர் எழுதியிருக்கின்றார். அவரது காதல் (இன்னொரு தேசத்தைச் சேர்ந்த ஒருவருடான) காரணமாகப் பல எதிர்ப்புகளை அவர் சந்தித்திருக்கின்றார். அவர் யாருக்காகப் போராடுகின்றாரோ அந்த மக்களில் பலருக்கே அவரது போராட்டம் பற்றித் தெரியாமலிருக்கின்றது. ஆனால் இவற்றாலெல்லாம் மனம் சோர்ந்து விடாமல், தன் கொள்கைகளுக்கேற்பத் தன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகின்றார் இரோம் சானு சர்மிளா.
இவருக்கு வலுக்கட்டாயமாக, மூக்கு குழாய் வழியே உணவு வழங்கப்படுகின்றது. ஆனாலும் இவரது உடலுறுப்புகள் இவரது தொடர்ச்சியான உண்ணாவிரதப்போராட்டம் காரணமாகப் பழுதடைந்து போய் விட்டன. மாதவிடாய் கூட இதன் காரணமாக நின்று போய் விட்டது.
போராளி எனச்சந்தேகிக்கப்படும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்க உதவும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 (AFSPA) மீளப்பெற வேண்டுமென்பதே இவரது முக்கியமான கோரிக்கை.
சி.சு. செல்லப்பா – பழுப்பு நிறப் பக்கங்களில் சாரு நிவேதிதா
நவீன இலக்கியம் (கவிதை கதைகளில் நவீனத்துவம்), விமர்சன இலக்கியம், வணிக இதழ்களுக்கு மாற்றான தீவிர இலக்கியம் இவற்றை ‘எழுத்து’ என்னும் பத்திரிக்கை மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்த சி.சு.செல்லப்பா சுதந்திரப் போராட்டதில் பங்கேற்று சிறை சென்றவர். அவர் இன்று தமிழில் தீவிர இலக்கியம் வணிக இலக்கியத்தைத் தாக்குப் பிடித்து நிமிர்ந்து நிற்கும் காலத்துக்கு அடித்தளமிட்ட முன்னோடி. சாரு நிவேதிதா அவரது பணி, ஆளுமை, படைப்புகள் மற்றும் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் யாவற்றையும் விரிவாக ஒன்பது பகுதிகளில் தினமணியின் இணையதளத்தில் எழுதி இருக்கிறார். எட்டாம் பகுதியில் அவருடைய சாதனைகள் என்ன என்னும் சாருவின் பார்வையைக் கீழே பகிர்கிறேன்:
மேற்கு நாடுகளில் பல்கலைக்கழக மொழியியல் துறையில் பணிபுரிபவர்கள் அனைவருமே சிந்தனையாளர்களாகவும், விமரிசகர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு நிலைமை வேறு. இங்கே விமரிசனம் என்றால் என்னவென்றே தெரியாது. வியாக்கியானமும் உரை விளக்கங்களும் மட்டுமேதான் இங்கே உண்டு. இப்படிப்பட்ட சூழலில் விமரிசனம் என்ற புதிய விஷயத்தை ஆரம்பித்த சி.சு. செல்லப்பாவின் விமரிசனப் பயணம் அவர் காலத்திலேயே – அதுவும் ‘எழுத்து’ பத்திரிகையிலேயே பெரும் விபத்துக்குள்ளாகியது. அவருடைய மாணாக்கர்களான வெங்கட் சாமிநாதனும் தர்மு சிவராமுவும் செல்லப்பாவின் பாணியிலேயே சென்று விமரிசனக் கலையை வம்புச் சண்டையாக மாற்றினர். ‘நமக்கு நட்பாக இருந்தால் நல்ல எழுத்தாளர்; இல்லாவிட்டால் போலி’ என்பதுதான் இவர்களது விமரிசனப் பாணியாக மாறியது. அவர்களின் விமரிசனத்தில் வேறு எந்தவித இலக்கியக் கோட்பாடுகளோ ரசனையோ இருந்ததில்லை. க.நா.சு. பரவாயில்லை. தன்னுடைய ரசனைக்கு ஏற்றபடி அவர் உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். ஆனால் விமரிசனக் கலைக்கு அவர் பங்காற்றவில்லை. உலக இலக்கியத்தை வாசித்தால் நம்மால் நல்ல இலக்கியத்தை இனம் காண முடியும் என்று மட்டுமே குறிப்பிட்டார். அதன்படியே வாழ்நாள் முழுதும் வாசித்தார்; நமக்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் செல்லப்பாவும் சாமிநாதனும் சிவராமுவும் விமரிசனக் கலைக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்யவில்லை.
அசோகமித்திரனை மட்டுமல்ல; ஞானக்கூத்தன் உட்பட அவர்கள் காலத்திய பல எழுத்தாளர்களைப் போலி என்றார்கள் சாமிநாதனும் சிவராமுவும். ந. பிச்சமூர்த்தியின் இலக்கியத் தகுதியை சந்தேகித்து எழுதினார் நகுலன். அதுவும் ‘எழுத்து’ பத்திரிகையில். ஆக, மேற்குலகைப் போல் ஓர் ஆரோக்கியமான இலக்கிய வடிவமாக ஆகியிருக்க வேண்டிய விமரிசனக் கலை அடிதடி சண்டையாக மாறியது.
பெரியார் ஈ.வே.ராமசாமி தமது குடியரசு இதழ் விநியோகத்திற்கு முதலில் தேர்வு செய்த இடங்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் இருந்த சிகை அலங்கார நிலையங்கள்தான் என்று சொல்லப்பட்டதுண்டு. காரணம்; இங்கு வரும் வாடிக்கையாளர்களின் கண்களில் குடியரசு இதழ்கள் தென்படும். எடுத்துப்படிப்பார்கள். அவ்வாறு தமது சமூகச்சீர்திருத்தக் கருத்துக்களையும் பகுத்தறிவுவாத சிந்தனைகளையும் பெரியார் அக்காலத்தில் சாதாரண மக்களிடம் பரப்பினார். எங்கள் மல்லிகை ஜீவாவுக்கும் பெரியார் ஆதர்சமாகத் திகழ்ந்தவர். அவரை முன்மாதிரியாகக்கொண்டு, தாம் வெளியிட்ட மல்லிகையை இலங்கையில் பல தமிழ் அன்பர்கள் நடத்திய சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கும் விநியோகித்தார். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இவ்வாறு மல்லிகையை அவர் விநியோகம் செய்ததை நேரில் பார்த்திருக்கின்றேன். தொடக்கத்தில் அவருடைய யாழ்ப்பாணம் கஸ்தூரியார் விதியில் அமைந்த ஜோசப்சலூனின் பின்னறையிலிருந்து மல்லிகையின் பக்கங்கள் அச்சுக்கோர்க்கப்பட்டன. காலப்போக்கில் ராஜா தியேட்டருக்குப்பின்னால் மல்லிகைக்கென தனியாக அலுவலகம் அமைத்து வெளியிட்டார். வடக்கில் போர் நெருக்கடியினாலும் இயக்கத்தின் நெருக்குவாரங்களினாலும் கொழும்புக்கு இடம்பெயர்ந்து, மல்லிகையை வெளியிட்டார். கடந்த சில வருடங்களாக மல்லிகை வெளிவரவில்லை.
மல்லிகை ஜீவாவுடனும் மல்லிகையுடனும் மல்லிகையின் நண்பர்களுடனும் தொடர்ச்சியாக இணைந்திருந்த முன்னாள் தபால் அதிபர் ரத்தினசபாபதி, அவர்கள் மல்லிகையில் பல ஆக்கங்களை எழுதியிருந்தபோதிலும் அவருடைய முகம் அட்டையில் பிரசுரமாகவேயில்லை. அட்டைப்பட அதிதி என்ற மகுடத்தில் இலங்கை, இந்திய மற்றும் புலம்பெயர்ந்த படைப்பாளிகள், கல்விமான்கள், கலைஞர்கள், சமூகப்பணியாளர்கள், முற்போக்கான அரசியல் தலைவர்கள் பலரும் அட்டைப்பட அதிதிகளாக மல்லிகையில் கௌரவிக்கப்பட்டுள்ளனர். பழைய மல்லிகை இதழ்களை பார்த்தால், எத்தனைபேர் அவ்வாறு கனம் பண்ணப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும். பின்னாளில் அக்கட்டுரைகளை தனித்தனி தொகுதிகளாகவும் மல்லிகைப்பந்தல் வெளியிட்டுள்ளது. அட்டைப்பட ஓவியங்கள் (1986) மல்லிகை முகங்கள் (1996) அட்டைப்படங்கள் (2002) முன்முகங்கள் (2007) முதலான தொகுப்புகள்தான் அவை. இந்த வரிசையில் முதல் வெளியீடான அட்டைப்பட ஓவியங்கள் நூல், தமிழ்நாட்டில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தினால் மற்றும் ஒரு பதிப்பையும் கண்டிருக்கிறது. ஆனால், மல்லிகையின் வளர்ச்சிக்கு பல ஆண்டுகாலம் பக்கத்துணையாக விளங்கிய ரத்தினசபாபதி அவர்களின் படம்தான் மல்லிகையின் முகப்பு அட்டையை அலங்கரிக்கவில்லை. கண்களுக்கு கண்ணின் இமைகள் தெரிவதில்லை. ஆயினும் – ஜீவா ஆரம்பத்தில் வழக்கமாக எழுதும் மல்லிகையின் கொடிக்கால்கள் என்ற பத்தியில் இவரைப்பற்றிய குறிப்பினை பதிவுசெய்துள்ளார்
நூல் வெளியீடுகள் எங்கும் நடக்கின்றன. முதல் பிரதி, சிறப்புப்பிரதி வழங்கும் சடங்குகளுக்கும் குறைவில்லை. அவற்றை அவ்வாறு பெற்றுக்கொள்பவர்கள் படிக்கிறார்களா ? என்பது வேறு விடயம். இவ்வாறு நூல்களின் அரங்கேற்றங்கள் கோலம்கொண்டிருக்கையில், ஒரு எழுத்தாளரின் நூலை முகத்திற்காக விலைகொடுத்து வாங்காமல், எதிர்பாராத தருணத்தில் ஒரு சைவஹோட்டல் வாயிலில் அந்த எழுத்தாளரின் கைப்பையிலிருக்கும் நூலைக் கண்டுவிட்டு பணம் கொடுத்து வாங்கிய முகம் மறந்துபோன ஒரு வாசக அன்பர் இன்றும் அழியாதகோலமாக அந்த எழுத்தாளரிடம் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
அந்த எழுத்தாளர் தமது முதலாவது நூலை 1974 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் கொழும்பில் ஒரு அச்சகத்தில் அச்சடித்துவிட்டு, அவற்றில் 25 பிரதிகளை எடுத்துக்கொண்டு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள பிரபல சைவஹோட்டலுக்குச்செல்கிறார்.
அங்கு தமது புதிய நூலின் பிரதிகளை விற்பனைக்கு வைக்கமுடியுமா ? எனக்கேட்கிறார். இத்தகைய விற்பனைக்காக அந்த ஹோட்டலுக்கு அவர் கமிஷனும் கொடுக்கத்தயார். ஆனால், அங்கு மறுத்துவிடுகிறார்கள். சொல்லப்பட்ட பதில் “இலங்கை நூல்கள் விற்பனை செய்வதில்லை.”
அங்கிருந்த கண்ணாடி அலுமாரியில் தமிழகத்தின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேசையில் தமிழக வணிக இதழ்கள் வண்ணம் வண்ணமாக விற்பனைக்கு இருந்தன.
அந்த எழுத்தாளர் ஏமாற்றத்துடன் படி இறங்கியபோது, அந்த ஹோட்டலில் உணவருந்திவிட்டு கையை காகிதத்தால் துடைத்துக்கொண்டு வந்த ஒரு தமிழ் அன்பர், அந்த எழுத்தாளரை நிறுத்தி ” உங்கள் புத்தகத்தின் விலை என்ன ? என்று கேட்கிறார்.
” மூன்று ரூபா தொன்னூறு சதம்.”
அந்த அன்பர் நான்கு ரூபாவை நீட்டி நூலைப்பெற்றுக்கொள்கிறார்.
முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
மானுடத்தின் கோர முகத்தை
மானுடத்தின் தீராச்சோகத்தினை
வெளிப்படுத்துமொரு நினைவுச் சின்னம்.
முள்ளிவாய்க்காலில் தர்மம்
அன்று.
தலை காத்திருக்கவில்லை.
தலை குனிந்திருந்தது.
அதர்மத்தின் கோலோச்சுதலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?
பதாகை இணைய இதழில் ‘எதற்காக எழுதுகிறேன்?’ தொடர்
‘காசுக்குப் பிரயோஜனமில்லாத காரியம்’ என்று நிச்சயமாக எந்த ஒருவருமே ஒப்புக் கொள்வார்கள் என்றால் அது கட்டாயமாக பேனா பிடித்து எழுதுவது தான். தமிழ்ச் சூழலில் இது மிகவும் கேவலமான போக்கத்த தனமான கிறுக்கு வேலை என்றே கருதப்படுகிறது. குடும்பத்தினரால் காயப்படுத்தப் படாத எழுத்தாளர் ஆணாயிருந்தால் ஆயிரத்தில் ஒருவர். பெண்ணாயிருந்தால் யாருமே இல்லை. பதிப்பாசிரியர்களால் விமர்சகர்களின் புறக்கணிப்பால் மனச்சோர்வடையாத எழுத்தாளரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
இத்தனையையும் மீறி சமகாலத்தில் எழுதுபவர்கள் எதற்காக எழுதுகிறார்கள்? அவர்களின் தரப்பை ஒரு தொடராக பதாகை இணைய தளம் வெளியிடத் துவங்கி இருக்கிறார்கள். இந்தத் தொடரைத் தொடங்கத் தூண்டுதலாயிருந்த ஒரு சிறு நூலின் பகுதிகளை மேற்கோள் இடுகிறார் நரோபா. அது கீழே:
அண்மையில், சந்தியா வெளியீடாக வந்துள்ள “எதற்காக எழுதுகிறேன்” என்ற சிறு நூலை வாசிக்க நேர்ந்தது. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சி,சு,செல்லப்பா, க,நா.சு, ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, லாசரா, ஆர்.ஷண்முகசுந்தரம் உட்பட அக்காலகட்டத்து எழுத்தாளர்கள் பலரும் இந்த கேள்வியை எதிர்கொண்டு எழுதி (பேசி) இருக்கிறார்கள். அன்றைய காலத்தில் பிரபலமாக இருந்த தொடர்கதை எழுத்தாளர் ஆர்.வியின் கட்டுரை கூட இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு தொனி.
“எனக்கே எனக்காக எழுதுவதைப்பற்றி என்ன சொல்ல முடியும்? விஸ்தாரமாக சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதிலிருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை- எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியை காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன.,“ என்று எழுத்து அளிக்கும் கிளர்ச்சியை, அதனால் தனக்கு கிடைக்கும் இன்பத்தை, அந்த நிலையை மீண்டும் மீண்டும் அடைந்து நிலைத்திருக்கும் வேட்கையை எழுதுகிறார் தி. ஜானகிராமன்..
ஜெயகாந்தன் அவருக்கே உரிய முறையில் தனது தரப்பை வலுவாக வைக்கிறார். எழுத்தாளன் தனக்குள் சுருண்டுகொள்ளும் குகைவாசி அல்ல என்று அவனை இழுத்து கொண்டுவந்து நிறுத்துகிறார்-