– அண்மையில் எனது கண்ணம்மாக் கவிதைகள் ஐந்தினைத் தனித்தனியாக இங்கு பதிவு செய்திருந்தேன். அவை அனைத்தையும் தொகுத்து இங்கு தந்துள்ளேன். ‘காலவெளி’ நம் இருப்பின் யதார்த்தம். இச்சொற்றொடரைக் காணும் போதெல்லாம், கேட்கும் போதெல்லாம், வாசிக்கும் போதெல்லாம் நெஞ்சில் களி பொங்குகின்றது; சிந்தனைக்குருவி சிறகடித்துப்பறக்க ஆரம்பித்து விடுகின்றது. காலவெளியற்று இங்கு எதுவுமேயில்லை. காலவெளி பற்றிய என் உணர்வுகளின் பிரதிபலிப்புகள் இக்கவிதைகள். –
1: காலவெளிச்சித்தனின் மடலொன்று!
ஒளிக்கூம்புக்குள் விரிந்து , சுருங்கி,
மீண்டும் விரிந்து
கிடக்குமென் அண்டம்.
அடியே! அண்டத்தில் நீ இங்கெங்கு சென்றிடினும்
உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து
மறைந்துவிடவே முடியாதடி.
ஏனென்று கேட்கின்றாயா?
நீயே அறிந்துகொள்
நீயே புரிந்துகொள்
என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை.
உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை
வைக்கப்போவதில்லை.
நானே கூறுகின்றேன் விளக்கம் கண்ணம்மா!
உன்னால் புரிந்துகொண்டிட முடிந்தால்
புரிந்துகொள்.
ஏனென்றால் இப்பிரபஞ்சத்துடனான என் உறவு
ஏன் உன் உறவும் கூடத்தான்
ஒருபோதுமே பிரிக்கப்பட முடியாதடீ.
இருந்தாலும் கவலையை விடு.
இன்னும் சிறிது விளக்குவேன்.
நீ, நான் , இங்குள்ள அனைத்துமே
துகள்களின் நாட்டியம்தாம்.
சக்தியின் வடிவம்தான்.
புரிந்ததா சகியே!