– எழுபதுகளில் இலங்கை வானொலியில் தன் இலக்கிய பயணத்தை ஆரம்பித்துப்பின் பத்திரிகை, சஞ்சிகை எனத் தன் பயணத்தை விரிவு படுத்தியவர் எழுத்தாளர் தமிழ்ப்பிரியா (முத்தையா புஷ்பராணி). இலங்கையில் ஏழாலை , சுன்னாகத்தைச் சேர்ந்தவர். சிந்தாமணி, சுடர், சிரித்திரன், ஈழநாடு , வீரகேசரி போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் இவரது படைப்புகள் வெளியாகின. குங்குமம் (தமிழகம்) வெளியிட்ட அக்கரைச்சிறப்பு மலரைத்தயாரித்தவர் இவரென்று எங்கோ வாசித்த நினைவு. அதிலும் இவரது சிறுகதையொன்று வெளியாகியுள்ளது. சுடரில் சிறுகதைகளுடன் இவரது நாவலொன்றும் தொடராக வெளியானது. சுடரின் ‘சந்திப்பு’ பகுதிக்காகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன், எழுத்தாளர் குறமகள் ஆகியோருடன் இவர் நடாத்திய நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. புலம் பெயர்ந்து பாரிசில் வாழ்ந்து வந்த இவரது மறைவுச் செய்தியினை முகநூலில் இவரது நெருங்கிய தோழிகளிலொருவரான எழுத்தாளர் தாமரைச்செல்வி பகிர்ந்திருந்தார். எழுத்தாளர் முல்லை அமுதன் இவர் நினைவாகப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்குக் கட்டுரையொன்றினை அனுப்பியிருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். – பதிவுகள் –
உலகம் கைகளுக்குள் வந்தமை ஆச்சரியம் தான். வாழ்வில் பலரைச் சந்திக்கமுடியாமலேயே போய்விடுமோ என்கிற ஆதங்கம் மனதில் எழுந்துகொண்டே இருக்கும்.சிலசமயம் எல்லாம் கைகூடி வந்திருக்கும்.பலதடவைகள் கைகளுக்கு எட்டாதவையாகவே காலம் முடிந்திருக்கும். ஊரில் ஒவ்வொரு மாலைப்பொழுதுகளையும் ஆக்கிரமித்திருந்த பல நிகழ்ச்சிகளை வழங்கிக்கொண்டிருந்த இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் சிறு நாடகங்கள்,தொடர் நாடகங்கள் இவற்றுக்கப்பால் என் போன்றவர்களை அதிகம் வசீகரித்த நிகழ்வு எதுவெனில் ‘இசையும் கதையும்’ நிகழ்ச்சியாகும்.கதைக்கேற்ற பாடல்களுடன் மனதுள் இறங்கி நாளெல்லாம் அசைபோடவைக்கும்.பல நாட்கள் அவை பற்றியே பேசுவோம்.நண்பர்களின் வீட்டில் அல்லது யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவிலோ உட்கார்ந்து கேட்போம்.பொழுது போவதே தெரியாது..வேறு தெரிவுகளும் இல்லாத நாட்கள்.
அதே சமயம் யார் என்கிற தேடலும் நண்பர்களிடையே எழும். அந்த வேளையில் தான் ஈழநாடு, சுடர், கலாவல்லி, இலங்கை வானொலி, வீரகேசரி, சிந்தாமணி, அமிர்த கங்கை, மல்லிகை, சிரித்திரன் , குங்குமம்(இந்தியா), இதயம் பேசுகிறது போன்ற இதழ்களில் எழுதிய கதைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்படப் பலரும் வாசிக்கும் படைப்பாளராக நாம் கண்டோம்.சுடரில் வெளிவந்த ‘வீணையில் எழும் ராகங்கள்‘ மறக்கமுடியாத தொடராகும். அதே போலத் தினகரன் போன்ற பத்திரிகைகளிலும் எழுதத்தொடங்கினார். அப்போது ‘நெஞ்சில் வரைந்த ஓவியம்‘, ‘உண்மை அன்பிற்கு ஊறு ஏற்படாது’, ‘இறைவன் கொடுத்த வரம்‘ போன்ற தொடர்களை எழுதி எம்மை வியப்பில் ஆழ்த்தினார்.நாமும் எழுதத்தொடங்கிய காலம். அதே சமயம் கவிதைகள், கட்டுரைகள் எனவும் எழுதினார். குங்குமம் இலங்கைச் சிறப்பிதழுக்குத் தொகுப்பாசிரியராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ்வேளையில் தான் தமிழ்ப்பிரியாவின்(புஸ்பராணி இளங்கோவன்) ரசனைமிக்க பாடல்களுடன் இசையும் கதையும் கேட்போம்.அடுத்து எப்போது ஒலிபரப்பும் என்றும் காத்திருப்போம்.