அத்தியாயம் இருபத்தி ஒன்று
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’
சூரியன் உதித்து வெகு நேரம் ஆகி விட்டது. ஆனால் இன்னமும் தோணியைக் கரையில் கட்டாது அப்படியே அது போன போக்கிலேயே நதியில் மிதந்து கொண்டிருந்தோம். ராஜாவும், பிரபுவும் காலை கண்விழித்த பிறகும் இரவு குடித்த மதுவின் போதையால் தள்ளாடிக் கொண்டே இருந்தனர். ஆயினும் தோணியிலிருந்து நதியில் குதித்து நல்லதாக ஒரு நீச்சல் போட்டபிறகு அவர்களின் போதை தெளிந்து உற்சாகமாகி விட்டார்கள். காலை உணவிற்குப் பிறகு தோணியின் ஒரு மூலையில் அமர்ந்த ராஜா அவரின் கால் பூட்சுகளை கழற்றினார். கால் சாராயின் கால் பகுதிகளை முட்டிவரை உயர்த்தி விட்டுக்கொண்டு கால்களை நீரில் தொங்க விட்டு வசதியாக அமர்ந்தார்.
பின்னர் புகை பிடிக்கும் குழாயில் புகையிலை அடக்கிப் பற்றவைத்து புகை இழுத்துக் கொண்டே ரோமியோ ஜூலியட் நாடகத்தின் வரிகளை மனப்பாடம் செய்தார். அவர் அவ்வாறு செய்து முடித்தவுடன் ராஜாவும், பிரபுவும் ஒன்று சேர்ந்து அந்தக் காட்சிகளைப் பயிற்சி செய்து பார்த்தனர். பிரபுவானவர் ஒவ்வொரு வரியையும் எவ்வாறு பேசவேண்டும் என்று ராஜாவுக்கு சொல்லித் தர வேண்டியிருந்தது. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு தனது கரத்தை தன் நெஞ்சில் வைத்துக் கொண்ட பிரபு சிறிது நேரம் கழித்து ராஜா நன்கு நடிக்கிறார் என்றார்.
“இருந்தாலும்” அவர் கூறினார் “எருமை மாடு அல்லது அதைப் போன்றதொரு மிருகம் கத்துவது மாதிரி “ரோமியோ” என்று கத்திக் கூப்பிடக்கூடாது. மிக மென்மையாக, இனிமையாக நீங்கள் மயங்கி விழும்போது சக்தியில்லாது மெதுவாகச் சத்தமிடுவதைப் போன்று ரோ ..மி ….யோ…. என்று அழைக்க வேண்டும். இப்படி, இப்படித்தான் கூப்பிடவேண்டும். ஜூலியட் என்பவள் ஒரு அழகான மருளும் மான்குட்டியாக இருக்கவேண்டும். கழுதை மாதிரி அவள் கனைக்கக் கூடாது.”
அடுத்ததாக அவர்கள் இரண்டு நீண்ட மரப்பட்டைகளால் செய்யப்பட்ட வாள்களை எடுத்துக் கொண்டார்கள். அதை வைத்து கத்திச் சண்டை பயிற்சி செய்தார்கள். அந்தச் சண்டை முழுக்க பிரபு தன்னை மூன்றாம் ரிச்சர்ட் என்று கூறிக் கொண்டார். அவர்கள் இருவரும் தோணியின் இந்தப் புறம், அந்தப் புறம் என மாறி மாறி குதித்து தங்களின் வாள்களைச் சுழற்றியது பார்க்க மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே, ராஜா கால்தடுக்கி நதியினுள் விழுந்து விட்டார். எனவே, அதன் பிறகு அவர்கள் அதை நிறுத்திவிட்டு, ஓய்வாக அமர்ந்து தங்கள் வாழ்வில் நதியின் மேல்புறப் பகுதியிலும் கீழ்புறப் பகுதியிலும் தாங்கள் வாழும்போது எதிர்கொண்ட விதவிதமான சாகசங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
Continue Reading →