என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’
அத்தியாயம் பதினைந்து
தெற்கு இல்லினோயில் உள்ள கைரோ நகருக்குச் சென்று சேர இன்னும் மூன்று இரவுகள் பிடிக்கும் என்று நாங்கள் கணக்கிட்டோம். அங்கேதான் ஒஹையோ நதி மிஸிஸிப்பி நதியில் வந்து கலக்கிறது. அங்கே செல்லத்தான் நாங்களும் விரும்பினோம். அங்கே இந்தத் தோணியை நல்ல விலைக்கு விற்று விட்டு, ஒரு நீராவிப்படகு எடுத்துக் கொண்டு ஒஹையோ நதியில் பயணம் செய்து, அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களுக்குச் செல்ல விரும்பினோம்.
இரண்டாம் நாளிரவு பனிமூட்டம் ஆரம்பித்தது. கடுமையான பனிமூட்டத்தினூடே படகைச் செலுத்திச் செல்வது அறிவீனமான செயல். எனவே சிறிய தீவு போன்ற பகுதிக்கு சென்று அங்கே காத்திருப்பது என்று முடிவு செய்தோம். தோணியை அந்தத் தீவில் கட்டக் கயிற்றுடன் துடுப்பை வலித்துக் கொண்டு செல்லும்போது அங்கே சிறு சிறு செடிகள் மட்டுமே இருந்தன. நதிக்கரையின் ஓரத்தில் இருந்த இளம் செடிகளை நோக்கி கயிற்றை வீசினேன். ஆனால் நதி நீரின் விசை மிகவும் வலுவாக இருந்ததால், தோணி இழுத்துக்கொண்டு கயிறு சுற்றியிருந்த செடிகளை வேரோடு அறுத்துக் கொண்டு வந்து விட்டது. கடுமையான பனிமூட்டம் முற்றிலும் சூழ்ந்து கொண்டுவர நான் பீதியில் வலுவிழந்தேன்.
தோணி கண்ணைவிட்டு மறைந்தது. இருபது அடிகளுக்கு முன் இருப்பது எனக்குத் தெரியாத அளவு பனிமூட்டம் மறைத்திருந்தது. ஒரு நிமிடம் அச்சத்தில் உறைந்து நின்ற நான், அடுத்த நொடி சுதாரித்துக் கொண்டு நான் இருந்த இலேசான படகிலிருந்த துடுப்பை இறுகப் பற்றி வேகமாய் வலிக்கலானேன். ஆனால் அது நகரவேயில்லை. அவசரத்தில் அந்த படகைக்கட்டியிருந்த கயிறை அவிழ்க்க மறந்திருக்கிறேன். வெளியே குதித்து அதன் கயிற்றை அவிழ்க்க முயற்சி செய்தேன். ஆனால் மிகுந்த பரபரப்பில் நடுங்கிக் கொண்டிருந்த எனது கரங்கள் அக்காரியம் செய்யப் பயனற்றுப் போயின.
கயிற்றை அவிழ்த்த உடனே, எங்களது தோணியை நோக்கி செலுத்தினேன். தீவின் கரையை ஒட்டி மிகுந்த சீற்றத்துடன் துடுப்பை வலித்தேன். அந்த விஷயம் சரியாகத்தான் சென்றது. ஆனால் அந்த சிறு தீவின் நீளம் அறுபது அடி கூட இல்லாததால் அதன் கடைசிப் பகுதிக்குச் சென்றவுடன், திடமான வெள்ளைப் பனி மூட்டத்தில் நான் சிக்கினேன். ஒரு இறந்த மனிதனுக்குக் கூட தான் எங்கே செல்கிறோம் என்று தெரிந்திருக்குமோ என்னவோ, எனக்கு அந்தக் கணம் எதுவுமே புலப்படவில்லை.
இனி துடுப்பு வலித்தால். கரையில் முட்டுவேனோ அல்லது தீவில் கொண்டு இடிப்பேனோ என்று தெரியாததால், துடுப்பு வலிப்பதை நான் நிறுத்தினேன். அந்த சமயத்தில் என் கைகளைச் சேர்த்துப் பிடிக்கக் கூட இயலாத அளவு அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்த நான் அப்படியே அசையாமல் உக்கார்ந்து மிதந்து கொண்டிருப்பது என்று முடிவு கட்டினேன். நதியில், தூரத்தே இருந்து ஒரு விளிச்சப்தம் கேட்டதும், எனது உற்சாகம் மீண்டும் தொற்றியது. அந்த ஒலியை மீண்டும் கேட்பதற்காக கவனமாக துடுப்பு வலிக்க ஆரம்பித்தேன். அடுத்த முறை அந்த ஒலியைக் கேட்டவுடன், அந்த ஒலியை நோக்கித் தான் செல்லவில்லை என்றும் அதனின் வலது புறம் சென்று கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். அடுத்த முறை கேட்டபோது அதனிலிருந்து இடது பக்கம் போய்க்கொண்டிருந்தேன். அந்த ஒலியை தொடர்ந்து செல்வதை விட்டுவிட்டு அங்கேயே எல்லா இடங்களிலும் சுற்றி வந்திருக்கிறேன் என்பதால் அந்த ஒலி கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு நீங்கியது.
Continue Reading →