“நிமலரூபன் மரணத்துக்கு சர்வதேச சமூகமே பொறுப்பு”

நிமலரூபன்– ஜூலை 24, 2012 – இலங்கை சிறைச்சாலை ஒன்றில் தாக்குதலுக்கு உள்ளாகி, அதனால் மரணடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற அரசியல் கைதி நிமலரூபனின் உடல் வவுனியாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. வவுனியாச் சிறைச்சாலையில் சில கண்காணிபாளர்களை கைதிகள் தாக்கினார்கள் என்று எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பலர் மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு இவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, நிமலரூபன் இறந்த நிலையிலேயே கொண்டுவரப்பட்டார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மரணமடைந்த நிமலரூபன் அடிகாயங்ளினாலும், உரிய சிகிச்சையில்லாமலுமே உயிரிழக்க நேரிட்டதாக தமிழ் அரசியல்வாதிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் குற்றம் சுமத்தியிருந்தனர். அவரின் மரணம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்ற போதிலும் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதையடுத்து, அவரது உடலை ராகமையிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று பொலிஸ் தரப்பில் கூறப்பட்டு அதற்கான நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டது. வவுனியாவுக்கு உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றால் அது அங்கு சமூக அமைதிக்கு தீங்கு ஏற்படும் என்று பொலிசார் கூறினர். எனினும் அவரது குடும்பத்தினரின் மேல்முறையீட்டின் பேரில் இலங்கை உச்சநீதிமன்றம் குடும்பத்தாரின் வேண்டுகோளின்படி காலமான நிமலரூபனின் உடல் வவுனியாவில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. இப்படியான பின்புலத்திலேயே இன்றுய்-செவ்வாய்க்கிழமை அவரது உடல் வவுனியாப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

நிமலரூபனின் இறுதி நிகழ்வுகளில் தமிழ், சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்

சர்வதேச சமூகத்தின் மீது குற்றச்சாட்டு
இந்த மரணத்திற்கு சர்வதேச சமூகமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இணைந்து குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதே வேளை, தாக்குதல்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளிலும், சிறைச்சாலைகளிலும் உயிருக்காகப் பேராடிக்கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகளைக் காப்பதற்கு சர்வதேசம் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் இடம்பெற்ற நிமலரூபனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய பொதுவுடைமைக்கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுமே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்.

இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதாகக் கூறி முன்வந்திருந்த, இலங்கைக்கு உதவிகளை வழங்கிய இணைத்தலைமை நாடுகளாகிய அமெரிக்கா, ஜப்பான், கனடா, நோர்வே ஆகியவற்றுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறியுள்ளதாக தமிழ் அரசியல்வாதிகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

தீர்வுக்குத் தடையாக விடுதலைப்புலிகளே இருந்தார்கள் என்றும், அவர்களை அகற்றிவிட்டால் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் இணைத்தலைமை நாடுகளின் உதவியுடன் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு மூன்று வருடங்களாகிவிட்ட நிலையிலேயே சிறைக்கைதியாகிய நிமலரூபன் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

எனவே இவரது மரணத்திற்குப் பொறுப்பேற்று இத்தகைய மரணங்கள் இனியும் நேராமல் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு இணைத்தலைமை நாடுகளும் சர்வதேசமும் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அமைதியான முறையில் நிமலரூபனின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.

நன்றி: http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/07/120724_nimalaroobanfuneral.shtml