(94) – நினைவுகளின் சுவட்டில்

வெங்கட் சாமிநாதன்அந்தக் காலத்தில் ஹிராகுட்/புர்லா முகாம்களில் என்ன தமிழ் தினசரி பத்திரிகை வந்தது, எது எனக்குப் படிக்கக் கிடைத்தது என்று நினைவில்லை. அங்கு யாரும், என்னையும் சேர்த்து, தமிழ் தினசரி பத்திரிகை எதுவும் வாங்கியதாக நினைவில்லை. ஆயினும் நான் ஒரு தமிழ் தினசரி பத்திரிகையின் மதிப்புரை பக்கத்தில் தான் இரண்டு புத்தகங்களின் மதிப்புரைகளைப் படித்துப் பார்த்த பின் தான்  அவற்றை வரவழைத்தேன்.என்ற நினைவு என்னவோ மறையவில்லை. இரண்டு சிறுகதைத் தொகுப்புகள். ஒன்று ரகுநாதன் கதைகள். மற்றது, கு. அழகிரிசாமி கதைகள். ரகுநாதன் எனக்கு பள்ளி நாட்களில் எனது நண்பன் ஆர். ஷண்முகம் கொடுத்த ஓர் இரவு என்ற தடை செய்யப்பட்ட புத்தகம் மூலமும் பின் இங்கு புர்லா வந்த பிறகு ரகுநாதன் ஆசிரியத்வத்தில் வெளிவந்த சாந்தி பத்திரிகை மூலமும். முன்னரே பரிச்சயம் ஆன பெயர் தான். சாந்தி பத்திரிகை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது பற்றி முன்னரே சொல்லியிருப்பேன் கட்டாயம். இந்த இரண்டு புத்தகங்களும் வந்தன. மூன்று  ருபாய் விலை ஒவ்வொன்றும். மிக அழகான அச்சில், பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்கள். சக்தி காரியாலயம் வெளியிட்டவை. இருவரையும் பாராட்டி கொண்டாடும் நோக்கத்துடன் வெளியானவை மாதிரி இருந்தன இரண்டு புத்தகங்களின் வெளியீடும். மிக அழகாக அச்சிடப்பட்டிருந்தன இரண்டுமே அது போல அச்சிடப்பட்ட தமிழ்ப் புத்தகங்களை நான் பார்த்ததில்லை.

ரகுநாதன் கதைகள் தொகுப்பில் இப்போது எனக்கு நினைவில் இருப்பவை, வென்றிலன் என்ற போதும், ஐந்தாம் படை, ஆனைத்தீ போன்ற கதைகள்.  அது ஒரு காலம் என்று தான் சொல்ல வேண்டும். சாந்தி பத்திரிகை, இலக்கிய விமர்சனம் என்ற அவரது முதல் விமர்சன புத்தகம், புதுமைப் பித்தன் வரலாறு, பின் இந்தத் தொகுப்பின் கதைகள் எல்லாம் எனக்குப் பரிச்சயப் படுத்திய ரகுநாதன் பின் வெகு சீக்கிரம் முற்போக்கு அணியில் ஐக்கியமாகி, தன் இலக்கியமே கட்சிப் பணிக்குத்தான் என்று மாறிவிட்டார். ஆனால் புதுமை பித்தன் உயிரோடு இருந்த வரை ரகுநாதனும் அழகிரிசாமியும் கூட, புதுமைப்பித்தனுக்கு மிக நெருக்கமாக இருந்தனர் என்று அவர்கள் எழுத்திலிருந்து சொல்லவேண்டும். இருவருமே அடிக்கடி புதுமைப்பித்தனைச் சந்தித்து அளவளாவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்றும் தெரிந்தது. இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதையான வென்றிலன் என்ற போதும் என்னும் கதையின் கைஎழுத்துப் பிரதியுடன் ரகுநாதன் புதுமைப்பித்தனிடம் சென்று காண்பித்திருக்கிறார். அதைப் படித்தப் பார்த்த புதுமைப் பித்தனுக்கு மிகவும் பிடித்துப் போக, அப்போது அங்கு வந்திருந்த ஒரு பத்திரிகை ஆசிரியரிடம் அதைக் கொடுத்து, “இந்தாய்யா உங்க பத்திரிகைக்கு ஒரு நல்ல கதை கிடைச்சிடுச்சு. எடுத்திட்டுப் போய் போடுங்க” என்று சொல்ல, அவர், “போடலாம் தான். ஆனால் ரொம்ப நீளமால்ல இருக்கு” என்று தயங்க, புதுமைப் பித்தன் அதைக் கேட்டு, “இந்தாங்க இதைப் போடறதுன்னா போடுங்க இல்லாட்டி, நீங்க என்ன போடணுமோ  போட்டு மிச்ச பக்கத்துக்கு எண்சுவடி வாய்ப்பாட்டைப் அச்சடிச்சுக்குங்க” என்று கோபத்துடன் சொன்னாராம். கு. அழகிரிசாமியின் தொகுப்பில் இருந்த ராஜா வந்தான் என்ற கதையைப் பற்றி  பலரும் சிலாகித்துச் சொல்லக் கேட்டிருக்கிறேன். க. நா. சு.வும் கூடத் தான். ஆனால் கு.அழகிரி சாமி ரகுநாதன் போல கட்சிப் பணியாற்றுகிறேன் என்று சொல்லி  பாதை மாறிவிடவில்லை.  அந்தக் காலத்தில் ரகுநாதன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளராக இருந்தார். பின் எனக்கு முற்றிலும் பிடிக்காதவராக அவர் தேய்ந்து போனாலும், அந்த ஆரம்ப கால ரகுநாதனை என் முதல் புத்தகம் பாலையும் வாழையும் வெளியான போது அவரையும் நினைவு கொண்டுள்ளேன். இடைப்பட்ட வருஷங்களில் அவரோடு காரசாரமான பரிமாறல்கள் இருந்தன தான்.

அந்த வருஷங்களில், எனக்கு தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம், புதுமைப் பித்தன் (முதல் தொகுப்பு, ரா.ஸ்ரீ தேசிகன் முன்னுரையுடன்) எல்லாம் எனக்கு மிகவும் பிடித்தவர்களாகி, ரகுநாதனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டனர்.

இன்னொரு மிக முக்கிய நிகழ்ச்சி என கல்கி மறைந்த செய்தியைச் சொல்லவேண்டும். . அப்போது அவர் அமரதாரா என்ற தொடர்கதையை எழுதி வந்தார் என்று நினைக்கிறேன். இறந்தபோது அவருக்கு வயது ஐம்பத்தைந்து தான் இருக்கும். நிலக்கோட்டையில் மாமா வீட்டில் தங்கி படித்து வந்த காலத்திலிருந்தே கல்கியை நான் படித்து வந்தேன் என்று சொல்ல வேண்டும். அப்போது அவரது பார்த்திபன் கனவு தொடர் கதையாக வந்து கொண்டிருந்தது. பலராலும் அவர் தொடர்ந்து படிக்கப்பட்டு மிகப் பிரபலமும் புகழும் பெற்ற  எழுத்தாளராக இருந்தார். என் சின்ன மாமா எங்கிருந்தோ கல்கி வாங்கி வருவார். அதே தெருவில் நான்கு வீடு தள்ளி இருந்த அம்பி வாத்தியார் என்று அழைக்கப்பட்ட நடராஜன் என்ற எங்கள் பள்ளி ஆசிரியரும் ஒருவர் மாற்றி ஒருவராக படித்து அது பற்றிப் பேசுவார்கள். கல்கி படிக்க சின்ன மாமா வீட்டுக்குக் கொண்டு வந்தால் நானும் படித்து விடுவேன்.

இடையில் ஒரு வருஷம் மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் படித்த போது, கல்கியில் வெளிவரப்போகும் தொடர்கதை ஒன்றுக்கு, அனேகமாக அபலையின் கண்ணீராக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏதோ தீபாவளிக்கு ரிலீசாகும் சினிமாவுக்கு விளம்பரம் செய்வது போல மதுரையெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. அது தான் முதல் தடவையாக ஒரு தொடர்கதைக்கு இத்தகைய விளம்பரத்தைப் பார்த்தது. அதுவே அவரது பிரபல்யத்தைச் சொல்வதாகவும் இருந்தது.

கல்கி, ஆனந்த விகடன் எல்லாம் படிக்கும் இந்தப் பழக்கம் நான் நிலக்கோட்டையை விட்டு உடையாளூருக்குப் போனபோது தான் அங்கும் தொடர்ந்தது. இந்த பிரபல வாரப் பத்திரிகைகளை யெல்லாம் கிராமத்தில் உள்ளவர்கள் கூட்டாக வாங்கி அதை முறை வைத்துப் படித்து வந்தார்கள். இந்தப் பத்திரிகைகளை வாங்குவதும் எல்லாரும் படிக்க சுற்றுக்கு விடுவதும், பின் பத்திரமாக அதை வைத்துப் பாதுகாப்பதும் அப்பாவின் பொறுப்பாக இருந்ததால் இந்தப் பத்திரிகைகள் எல்லாம் எங்கள் வீட்டுக்குத் தான் முதலில் வரும். நாங்கள் அன்றே படித்து விடுவோம். பின் தான் சுற்றுக்குப் போகும். அது வந்ததும் யார் முதலில் படிப்பது என்பதில் எனக்கும் அம்மாவுக்கும்  தான் போட்டி. அப்பா கடைசியில் அது சுற்றி வந்தபிறகு தான் மெதுவாக எழுத்துக்கூட்டிப் படிப்பார். நான் கும்பகோணத்தில் படித்து வந்த காலத்தில் கிராமத்தில் தங்கிய போது கல்கி பொன்னியின் செல்வன் எழுதி வந்தார். வேகமாகப் படிக்க வராத, எழுத்துக் கூட்டியே படிக்கும் என் அப்பா கூட கல்கி படித்தாரென்றால், கல்கியின் செல்வாக்கைச் சொல்ல வேறென்ன வேண்டும்.

1954-ல் என்று நினைக்கிறேன், புர்லாவில் இருந்த போது கல்கி மறைந்தார். அப்போது அவர் அமர தாரா என்ற தொடர்கதை எழுதி வந்தார். பாதியில் விட்டுப் போன அத் தொடரை அவருடைய மகள் ஆனந்தி, அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளை வைத்துக் கொண்டு எழுதுவார். அமர தாரா தொடர்கதை தொடரும் என்று அறிவிப்பும் வந்தது. அவர் மறைவுக்கு முன்னரே, ஹிராகுட் வந்த காலத்தில் எல்லாம் கல்கியின் தொடர்கதைகளில் எனக்கு இருந்த பிடிப்பு விட்டுப் போயிற்று. எனவே, ரகுநாதன் தன் சாந்தி பத்திரிகையில் கல்கியைப் பற்றி கடுமையான விமர்சனத்தை வைத்த போது அது எனக்கு மகிழ்ச்சியையே தந்தது. என் மனத்தில் இருப்பதை ஒருவர் சொல்கிறாரே என்று. ஆனால் சுற்றியிருந்த உலகம் கல்கியைப் புகழ்ந்து பாராட்டிக்கொண்டிருந்தது.

நாவலாசிர்யர் கதை எழுதுபவர் என்பதற்கும் மேல் அவரது ஆளுமைக்கு ஒரு விகசிப்பு இருந்தது. வாசனை விட்டு வந்தது. ஆனந்த விகடனில் இருந்த போது இசை நாடகம், நாட்டியம் பற்றியெல்லாம் எழுதியது. தேசீய போராட்ட உணர்வைத் தூண்டும் கட்டுரைகள் எழுதியது. பகுத்தறிவுப் போட்டிக்கு எதிராக வாசனிடம் சண்டை போட்டது. ஆனந்த விகடனை விட்டு விலகி சிறை சென்றது. இப்படி பல. ஆனந்த விகடனில் எஸ் வி.வியை எழுத வைக்கவேண்டும் என்று திருவன்ணாமலை சென்று அவரை தமிழ் எழுத்தாளராக ஆக்கியது. உ.வே.சா. வை என் சரித்திரம் எழுத வைத்தது, ஆர்.கே நாராயணனின் சுவாமியும் சினேகிதர்களும் நாவலை தமிழில் மொழிபெயர்த்து ஆனந்த விகடனில் வெளியிட்டது எல்லாம் வாசன் தானே செய்திருக்கக் கூடிய காரியங்கள் அல்ல. . அண்ணாதுரையின் ஓர் இரவு, நல்ல தம்பி படங்கள் வெளிவந்த போது கல்கிக்கு அவை மிகவும் பிடித்துப் போயின. அண்ணாதுரையை தென்னாட்டு பெர்னாட் ஷா என்று புகழ்ந்து எழுதினார். பிரபல பத்திரிகைகள் இதையெல்லாம் கண்டு கொள்ளாத நாட்கள் அவை. இப்போது வேண்டுமானால் நாம் இதெல்லாம் அண்ணாதுரையை பெர்னாட்ஷாவாக்கி விடுமா? என்று கேள்வி எழுப்பலாம். அப்போதிருந்த மணிக்கொடி தலைமுறை எழுத்தாளர்கள் அதை மதிக்காமல் இருக்கலாம். ஆனால் கல்கியை ஒரு பெரும் இலக்கிய சக்தியாகப் பார்த்தவர்கள் எல்லாம் கல்கியின் கருத்துக்களை மதித்தார்கள். ராஜாஜியுடனான நெருக்கம், டி.கே.சி. எஸ் மகராஜன் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையென அவருக்கென ஒரு குழு அமைந்தது. ராஜாஜி கல்கி மறைந்த பிறகு அவருக்கு சாகித்ய அகாடமி பரிசு கொடுத்தே ஆக வேண்டும் என வலியுறுத்தி அகாடமி பரிசு வாங்கிக் கொடுத்தார்.  இது பின்னால் நடந்ததென்றாலும், கல்கி மறைந்தது ஒரு வெறுமையைத் தோற்றுவித்ததை நான் ஹிராகுட்டிலேயே உணர முடிந்தது.

அங்கு இருந்த காலத்தில் தான் ஒரு அமெரிக்க பத்திரிகையுடன் (ஏதோ ஹெரால்டு என்று அதன் பெயர் என்று நினைக்கிறேன்) கூட்டாகச் சேர்ந்து ஒரு சிறுகதைப் போட்டி நடந்தது,. தமிழில் மாத்திரம் அல்ல. எல்லா இந்திய மொழிகளிலுமா அல்லது தென்னிந்திய மொழிகளில் மாத்திரமா எனபது எனக்கு இப்போது நினைவில் இல்லை. அதில் பரிசு பெற்ற இரு கதைகள் கல்கியில் வெளிவந்தன. பரிசுத் தேர்வில் கல்கியும் இருந்தார். மற்றவர்கள் யாரென்ற நினைவு இல்லை. பரிசு பெற்றவர் பி. பத்ம ராஜு என்ற தெலுங்கு சிறுகதை ஆசிரியர். அவர் பின்னும் பிரபலமடைந்தார் என நினைப்பு. இன்னொருவர் இரண்டாம் பரிசு பெற்றவர் ஏ டி. முகம்மது என்ற நினைப்பு. அவர் ஒரு மலையாள கதைக் காரர். ஒரு குருட்டுப் பெண்ணைப் பற்றிய கதை என்ற நினைவு இருக்கிறது. கொஞ்சம் செண்டிமெண்டல் கதை என்றும் நினைவு.  இந்த முகம்மது பிரபலமானவரா என்பது தெரியாது. ஐம்பத்து மூன்று-  ஐம்பத்து நாலில், இந்த இரண்டு கதைகளும் கல்கியில் பிரசுரிக்கப்பட்டன.

இன்னொரு மிக முக்கியமான பதிவைச் சொல்லியே ஆகவேண்டும். வாசனோடு கருத்து வேற்றுமை கொண்டு ஆனந்த விகடனை விட்டு வெளியேறி கல்கி பத்திரிகையைத் தொடங்கி ஆனந்த விகடனுக்குப் போட்டியாக அது வளர்ந்தாலும், கல்கி மறைந்ததும், ஆனந்த விகடன் பத்திரிகையில் வாசன், கல்கியைப் பற்றியும் அவர் எழுத்தையும் ஆனந்த விகடனுக்கு அவர் ஆற்றிய சேவை பற்றியும் மிகவும் நெகிச்சியுடன் பாராட்டி எழுதியிருந்தார். அதில் இழப்பு உணர்வு தான் நிறைந்திருந்ததே தவிர கசப்பின் மங்கலான  நிழல் கூட அதில் பதிந்து இருந்ததாக நினைவு இல்லை.எனக்கு. .  . . . .

vswaminathan.venkat@gmail.com