“தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர். முஸ்லிம் என்பது ஒரு மதத்தவரின் பெயர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் மொழிவாரியாக நோக்கின் தமிழரே. எனவே தமிழரென்ற பெயரை மொழிவாரியாக மட்டும் உபயோகப்படுத்தினால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் மட்டுமல்ல அம்மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட அனைவருமே தமிழராகின்றனர். அதேபோன்று இஸ்லாத்தைப் பின்பற்றும் எவ்வினத்தவராயினும் அவர்கள் முஸ்லிம்களே. ஆகவே, தமிழரென்பது எவ்வாறு ஒரு தனிப்பட்ட இனத்தவருக்குமட்டும் சொந்தமான பெயராக இருக்க முடியாதோ அதேபோன்று முஸ்லிம் என்பதும் ஒரு தனிப்பட்ட இனத்தவரின் பெயராக இருக்க முடியாது. ” என்று கடந்த ஞாயிறன்று மெல்பனில் நடைபெற்ற ‘தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தில் எழுத்தாளர்களின் வகிபாகம்’ என்னும் தலைப்பில் உரையாற்றிய கலாநிதி அமீர் அலி தெரிவித்தார்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் மெல்பன், வேர்மண் தெற்கு சமூக இல்லத்தில் கடந்த ஞாயிறன்று மாலை நடைபெற்ற கருத்தாடல் களம், சங்கத்தின் நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதியின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது.
மேற்கு அவுஸ்திரேலியா மேர்டொக் பல்கலைக்கழகத்தின் பொருளியற் துறை விரிவுரையாளரும் எழுத்தாளரும் ஆய்வாளருமான கலாநிதி அமீர் அலி, தொடர்ந்தும் பேசுகையில், ” ஒரு திராவிடரோ சிங்களவரோ சீனரோ இஸ்லாத்தைத் தழுவிவிட்டால், அவர் தன்னை முஸ்லிமென்று அழைப்பதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை. இலங்கையைப் பொறுத்தவரை இச்சிக்கல் ஏன் தெளிவடையாமல் ஒரு தீராத பிரச்சினையாகவும் நல்லிணக்கத்தைக் குலைப்பதொன்றாகவும் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரிடையே இன்றுவரை நிலைத்திருக்கின்றது?
தமிழ்ப் பேசும் மக்கள் என்ற போர்வைக்குள் முஸ்லிம்களை உள்ளடக்கியமை ஓர் அரசியல் உபாயமேயன்றி அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு வழியல்ல. நல்லிணக்கம் தமிழுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலா? தமிழரென்ற இனத்துக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலா? என்பதை ஆராயின், தமிழுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் நல்லிணக்கம் அன்றுமிருந்தது, இன்றுமிருக்கிறது, இன்னுமிருக்கும்.
ஆனால், இந்த நல்லிணக்கம் எந்த அளவுக்கு ஆழமானது என்பதிலும் ஒரு தெளிவில்லாமல் இருக்கிறது. இன்று இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமின்றி சிங்களப் பகுதிகளுக்குள் வாழும் முஸ்லிம்களும் தமிழையே தாய்மொழியாகக் கொண்டுள்ளமையையும், அம்முஸ்லிம்களின் மத்தியிலிருந்து அற்புதமான பல தமிழிலக்கியப் படைப்புகள் ஆண்டுதோறும் வெளிவந்து கொண்டிருப்பதையும், மேலும் அவர்களின் மார்க்கச் சொற்பொழிவுகளெல்லாம் தமிழ் மொழியிலேயே பள்ளிவாசல்களில் நடைபெறுகின்றன என்பதையும் நோக்குகையில் தமிழுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள நல்லிணக்கம் காலத்தையும் வென்றதொன்று என்பதை மறுக்க முடியாது.
கல்வி மந்திரியாக இருந்த பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் மட்டக்களப்பில் ஒரு பொது மேடையிலே உரையாற்றியபோது அங்கு குழுமியிருந்த இந்து, கிறிஸ்தவத் தமிழர்களை நோக்கி, “நீங்கள் இரண்டு மாகாணங்களில் தமிழை வளர்க்கிறீர்கள், நாங்களோ ஒன்பது மாகாணங்களிலும் வளர்க்கிறோம்” என்று பெருமையுடன் பேசியதை நான் கேட்டேன். அதுமட்டுமன்றி, இன்றும்கூட ஒரு தனிச் சிங்களக் கிராமத்திலே ஒரு தமிழ்ப் பத்திரிகையையோ புத்தகத்தையோ பலரும் கேட்கும்படியாக ஒருவர் குரலெழுப்பி வாசிப்பாராயின் அவர் ஒரு முஸ்லிமாகத்தான் இருப்பார். இவ்வாறு தமிழ் மொழியுடன் இரண்டறக் கலந்து வாழும் இம்முஸ்லிம்கள் ஏன் தம்மை மொழிவாரியாகவேனும் தமிழரென அழைப்பதற்குத் தயங்குகின்றனர்? இது ஒரு புதிராகத் தோன்றவில்லையா?
இன நல்லிணக்கத்தை வளர்க்க மதஸ்தாபனங்கள், அதாவது கோயில்களும் மசூதிகளும், அவற்றில் பணியாற்றும் மதபோதகர்களும், அவற்றைப் பராமரிக்கும் நிர்வாகிகளும் பிரதான பாகத்தை வகிக்கின்றனர் என்பதை மறுக்கமுடியாது. எழுத்தாளர்களுக்கும் மதஸ்தாபனங்களுக்குமிடையே நெருங்கிய உறவு ஏற்படவேண்டியுள்ளது. வாசகர்கள் விரைவாகக் குறைந்துகொண்டு செல்லும் ஒரு சூழலில் கருத்துகளும் வார்த்தைகளும் செவிவழியாகவே பொதுமக்களைச் சென்றடையவேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை வாராந்தம் வெள்ளிதோறும் மசூதியிலே நடைபெறும் பிரசங்கம் மிகமுக்கியமான ஒரு நிகழ்வு.
இலங்கையில் நான் சமூகமளித்த எத்தனையோ வெள்ளிக் கிழமைப் பிரசங்கங்களில் இனநல்லிணக்கம்பற்றிய ஒன்றையேனும் இதுவரை நான் கேட்டதில்லை. இதைப்பற்றி நான் பல இமாம்களிடம் முறையிட்டும் பலனில்லை. இந்துக் கோயில்களின் நிலைபற்றி எனக்கெதுவும் தெரியாததனால் அதைப்பற்றி எதுவும் என்னால் சொல்ல முடியாது. இந்த மதக் கோட்டைக்குள் எழுத்தாளர்களின் கருத்துக்கள் எவ்வாறு நுழையலாம்? இது ஆராயப்படவேண்டிய ஒரு விடயம்.
மெல்பனிலும், லண்டனிலும், டொரொண்டோவிலும் முஸ்லிம்-தமிழர் நல்லிணக்கத்தைப்பற்றி எழுத்தாளர்களும் கல்விமான்களும் கூடிக் கலந்துரையாடுவதும் மாநாடுகள் அமைப்பதும் இலகு. அவை வரவேற்கத்தக்க முயற்சிகள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவ்வாறான கலந்துரையாடல்கள் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் நடத்தப்பட வேண்டும். இலங்கையிலே இவ்வாறான ஒரு கலந்துரையாடலை நடத்துவதானால் கொழும்புத் தமிழ்ச் சங்கமே கதியென்ற நிலைதான் இன்று காணப்படுகின்றது. என்னைப் பொறுத்தவரை அதுகூட பொருத்தமான ஒரு தலமல்ல. ஏனென்றால் பிரச்சினை கொழும்புக்கு வெளியேதான் காணப்படுகிறது. சாக்கடையிலிருந்துதான் நுளம்புகள் உற்பத்தியாகின்றன. நுளம்புத் தொல்லையை முற்றாக ஒழிக்கவேண்டுமாயின் முதலில் சாக்கடையைச் சுத்தப்படுத்த வேண்டும். எழுத்தாளர்களே! சாக்கடையை நோக்கி உங்களின் எழுத்தாணிகளும் கணினிகளும் படையெடுக்கட்டும். இதுதான் உங்களை எதிர்நோக்கும் இன்றைய மகத்தான பணி.”
கலாநிதி அமீர் அலி அவர்களின் உரையைத்தொடர்ந்து, சபையோரின் கருத்துக்களும் இடம்பெற்றன.
மெல்பனில் வதியும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
letchumananm@gmail.com