நூல் மதிப்புரை“செம்மையான வரலாறு’’

உலகில் ஆறாயிரம் மொழிகள் பேசப்பெறுகின்றன. அவற்றுள் எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் உடைய மொழிகள் அறுநூறுதான். உலகில் ஆறாயிரம் மொழிகள் பேசப்பெறுகின்றன. அவற்றுள் எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் உடைய மொழிகள் அறுநூறுதான். அவற்றுள்ளும் செம்மொழித் தகுதியுடைய மொழிகள் என்று பார்த்தால் பத்து மொழிகள்தான் தேறும். இன்னும் வெளிப்படையாகக் கூற வேண்டுமென்றால் செம்மொழிக்கென்று வரையறுக்கப் பெற்றிருக்கும் தகுதிகள் அனைத்தையும் பெற்றிருக்கும் ஒரே மொழி, தமிழ் மொழிதான். இது உணர்ச்சிவயப்பட்டுக் கூறும் கூற்றன்று. மொழியியலாளர்கள் ஒத்துக்கொண்ட உண்மையாகும். அந்த உண்மையைத் தெளிவுபடுத்தும் நூல் முனைவர் சி.சேதுராமன் அவர்களின் ‘தமிழ்ச் செம்மொழி வரலாறாகும்’. ஒன்பது உட்தலைப்புகளில் தமிழ்ச்செம்மொழி வரலாறு விரித்துரைக்கப்பெற்றுள்ளது.

 தமிழ்மொழி அகத்தியரால் உருவாக்கப்பட்டது என்ற அடிமைப்பட்ட கருத்து இலக்கிய உலகில் நிலவுகிறது. இன்னொரு பக்கம் சிவபெருமானின் உடுக்கையின் தென்புறமிருந்து வந்த ஒலியின் வடிவமே தமிழ் என்ற கட்டுக்கதையும் உலவுகிறது. இவை இரண்டுமே பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட கூற்றுக்களாகும். மொழி என்பதே தொடர்பு கொள்வதற்கான ஓர் ஆயுதம் என்கிற வகையில் குறிப்பிட்ட ஒரு தனிமனிதனால் எந்த ஒரு மொழியும் உருவாக்கப்ட்டது என நம்புவதற்கில்லை. இவை போன்ற கட்டுக்கதைகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இருப்பதை ஆசிரியர் முதல் தலைப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக மொழிக் குடும்பங்களாக இந்திய மொழிக்குடும்பங்கள் தொடங்கி தனிநிலைமொழிக் குடும்பங்கள் வரை உள்ள 15 வகையான மொழிக்குடும்பங்களைச் சுட்டி அவற்றுள் திராவிட மொழிக்குடும்பங்கள் சற்று விரிவாகப் பெசப்பெற்றுள்ளது. கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய பிறகு தமிழர்களிடமும் அறிஞர்களிடமும் திராவிட மொழிகள் பற்றியான ஆய்வு நோக்கு நிலை விரிவடைந்தது. அதன் காரணமாகவே பிற மொழி அறிமுகம் ஏற்படத் தொடங்கியது. அதன் விளைவுதான்செம்மொழிகள் பற்றியான பார்வையும் தோன்றத் தொடங்கியது. இவை பற்றியான கருத்துக்களம் நூலுள் பதிவு செய்யப்பெற்றுள்ளன.

‘உலகச் செம்மொழிகள்’ என்ற தலைப்பில் ‘செம்மொழி’ என்பதற்கான அறிஞர்களின் கருத்துக்கள், கலைக்களஞ்சியக் கருத்துக்கள் தொகுத்துரைக்கப்பெற்று, தொடர்ந்து ஒவ்வொரு மொழி பற்றியா சிறப்புக்களும் சுட்டிக்காட்டப்பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. தமிழ்மொழி சார்ந்த நூல் என்பதால் அதுமட்டும் பேசப்பெறாமல் செம்மொழிகளின் சிறப்பும் பேச்பெற்றிருப்பது பொதுநிலை வாசிப்பின் வெளிப்பாடாக உள்ளது.

தமிழில் கிடைத்திருக்கும் முதல் நூல் தொல்காப்பியமாகும். கிடைக்கப்பெற்ற நூல்களிலேயே முதலில் கிடைத்த நூலான தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாக இருப்பது சிறப்புக்குரியதாகும். தொல்காப்பியரின் காலம் கி.மு.3-ஆம் நூற்றாண்டு என்று அறிஞர்கள் பலர் கருத்துரைக்கின்றனர். தொல்காப்பியரின் எடுத்துரைப்பு முறையை உற்று நோக்கும்பொழுது, அவருக்கு முன்பே, இலக்கிய இலக்கண நூல்கள் தமிழில் இருந்துள்ளன என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. ஆக, தமிழ் இலக்கியத்தின் பழைமை என்பது ஏறக்குறைய 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும் எனலாம். இவ்வளவு பழைமை வாய்ந்த மொழியின் சான்றுகளாகக் கிடைக்கப்பெறுவன நூலில் எடுத்துக்காட்டப்பெற்றுள்ளன.

செம்மொழிக்கான தகுதிப்பாடும் அதைத் தொடர்ந்து தமிழில் செவ்விலக்கியங்களாக அறிவிக்கப்பெற்றுள்ள 41 நூல்கள் பற்றிய அறிமுகமும் தொகுக்கப்பெற்றிருப்பது ஒப்பீட்டு நிலையில் தொடர் வாசிப்பிற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இன்று தமிழ், செம்மொழி என அறிவிக்கப்பட்டுவிட்டது என்பது ஒரு நிகழ்வே தவிர ஏற்கனவே தமிழ், செம்மொழியாகத்தான் உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.அதே நேரத்தில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கு நடந்திருக்கும் போராட்டங்கள் எளிமையானவைகள் அல்ல. சரியாக நூற்றாண்டு போராட்டத்திற்குப் பிறகு அிறவிக்கப்பட்ட தகுதிதான் செம்மொழித் தகுதியாகும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குச் செம்மொழித் தகுதி அறிவிப்பு என்பது வெறும் அறிவிப்பு மட்டுந்தான் என்று தோன்றும். ஆனால் அதற்குப் பின்னால் மறைமுகமாக எவ்வளவு போராட்டங்களைச் சந்தித்து அறிவிப்பு வெளிவந்தது என்பது யாருக்குந் தெரியாது. பதில் சொல்ல முடியாத பல்வேறு கேள்விகளையம் கடந்துதான் செம்மொழித் தகுதி அறிவிக்கப்பெற்றது. அதுமட்டுமின்றி விருது அறிவிப்புக்களுக்கும் போராட வேண்தான் இருந்தது. எல்லாம் கடந்து தமிழழரின் ஆளுமை வெற்றி பெற்றது.

இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நூலாக இந்நூல் திகழ்கிறது. விருதுகள் அறிவிப்பு, அதற்கான தகுதிகள், யார்யாருக்கு விருது அறிவிக்கப்பட்டது, செம்மொழி மாநாடு என அனைத்து நிகழ்வுகளையம் இந்நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

மொத்தத்தில் மொழிகளின் தோற்றம் தொடங்கி, தமிழ் செம்மொழி அறிவிப்பு வரை ஒரே நீரோட்டமான வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் இந்நூல் நல்வரவாகும். மாணாக்கர்களக்குப் பெரிதும் பயன்தரும் நூல் இதுவாகும். பாவை பதிப்பகத்தார் அச்சாக்கத்தில் இன்னும்  கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நூல் : தமிழ்ச் செம்மொழி வரலாறு
ஆசிரியர்: முனைவர் சி.சேதுராமன்
பக்.. 110,
விலை ரூ.60/-
வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.