புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளே!

புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்!இலங்கையில் நிலவிய அரசியல் சூழல்களையடுத்து உலகின் நானா பக்கங்களையும் நோக்கி ஈழத்தமிழர்கள் 1979இலிருந்து அதிக அளவில் புலம்பெயரத் தொடங்கினார்கள். அதற்கு முன்னரும் அரசியல் காரணங்களுக்காக , புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தாலும், 1979இல் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்கு வந்தபின்னர், அதன் பின்னர் 1983 ஜூலை இனக்கலவரத்திற்குப் பின்னர்தான் அதிக அளவில் இவ்விதம் புலம்பெயரத்தொடங்கினார்கள். இவ்விதம் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தமக்குள் பலவேறு திசைகளில் அரசியல்ரீதியில் பிரிந்து கிடந்தாலும், தாம் வாழும் நாடுகளிலிருந்துகொண்டு பல்வேறு கலை, இலக்கிய முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினார்கள்; ஈடுபட்டுக்கொண்டு வருகின்றார்கள். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக இவ்விதமான கலை, இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டு வரும் இவர்களின் செயற்பாடுகள் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. இவை பற்றிய கலந்துரையாடல்கள் விரிவாக, பரந்த அளவில் நடைபெற்றிருக்கவில்லை. அவ்விதம் நடைபெற்ற கருத்தரங்குகளெல்லாம் குறிப்பிட்ட குழுசார் மனப்பான்மையுடன் நடைபெற்றதால் விரிவாக, நடுநிலையுடன், எப்பொருள் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்னும் மனப்பாங்குடன் அவ்விதமான அமர்வுகள் நடைபெறவில்லை. இவ்விதமான சூழலில் உலகின் நானா பக்கங்களிலும் பரந்து வாழும் தமிழக் கலை, இலக்கியவாதிகள் படைப்புகள் அனைத்தையும் படிப்பதற்கு முயலவேண்டும். அவை பற்றிய கலந்துரையாடல்களை அமர்வுகள் வாயிலாகவோ, இணையத்தினூடாகவோ நடாத்திட வேண்டும். அவை பற்றிய ஆக்கங்களைப் பிரசுரிக்க வேண்டும். இதன்மூலம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் படைத்த, படைக்கும் கலை, இலக்கியப் படைப்புகள் பற்றிய விபரங்கள் ஆவணப்படுத்தப்படும். அவை பற்றிய விரிவான ஆய்வுகள் நடைபெறும்.

இதற்கு முதற்படியாக பதிவுகள் பல்வேறு நாடுகளிலு வாழும் கலை, இலக்கியவாதிகளை நோக்கி ஒரு வேண்டுகோளினை வைக்கின்றது. நீங்கள் வாழும் நாடுகளின் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதி அனுப்புங்கள். உதாரணத்திற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் ஒருவர் ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் என்னும் தலைப்பில் விரிவான, நடுநிலையுடன் நின்று ஆய்வுக் கட்டுரையினை அனுப்பி வைக்கலாம். பிரான்சிலிருப்பவர் பிரெஞ்சியத் தமிழ் இலக்கியமென்பது பற்றியும், இங்கிலாந்தில் வசிப்பவர் இங்கிலாந்துத் தமிழ் இலக்கியமென்றும், இது போல் கனடியத் தமிழ் இலக்கியம், சிங்கப்பூர்/ மலேசியத் தமிழ் இலக்கியம், அமெரிக்கத் தமிழிலக்கியமென்றும்  அல்லது ஐரோப்பியத் தமிழ் இலக்கியம், வட அமெரிக்கத் தமிழ் இலக்கியமென்றும் என்றும் பல்வேறு பிரிவுகளில் தமது ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம்.  புனைவுகள், அபுனைவுகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் .. போன்ற இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் தமது கட்டுரைகளை அனுப்பி  வைக்கலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com. இவ்விதமான எமக்குக் கிடைக்கப்பெறும் படைப்புகள் பதிவுகளில்  வெளியிடப்படும். இதன் மூலம் பல மக்கள் பயனுற முடியும் நிலை ஏற்படும். அனுப்பி வையுங்கள். தரமானவை பிரசுரமாகும்.

ngiri2704@rogers.com