நேதாஜிதாசன் கவிதைகள் மூன்று!

நேதாஜிதாசன் கவிதைகள் மூன்று!1. அப்படியில்லை நான்

அப்படியில்லை நான் என பேசுகின்றான்
ஆடை கிழிந்து
கூந்தல் கலைந்து
அனுமதி மீறலை கடந்த
வண்ண சேலைக்காரி
கண் கலங்கி நிற்கின்றாள்
அப்படியில்லை நான் என கதறுகின்றாள்
கூட்டம் யோசிக்கிறது நாமும் அன்று அப்படியில்லை நான் என சொல்லியவர்கள் தானே
நானும் அப்படியில்லை  என என்னிடமே சொல்லி பார்க்கிறேன்
அவர்கள் நம்ப மறுப்பதை போல
நான் நம்ப மறுக்கிறேன்
முதலில் அப்படியில்லை என்பதன் அர்த்தம் என்ன
மருத்துவமனையில் ஆய்வு அறிக்கை வாங்குமிடத்தில் சொல்லும் அப்படியில்லையா
காவல் அதிகாரி கைது செய்யும் போது சொல்லும் அப்படியில்லையா
கடன் கொடுத்தவன் கடனை திருப்பி கேட்கும் போது சமாளிக்கும் படி சொல்லும் அப்படியில்லையா
முதலில் அப்படியில்லையின் அர்த்தம் பகிருங்கள்
இந்த காகங்களை பாருங்கள் அரிதான சாப்பாடை பகிர்ந்து உண்கிறது
உங்களிடம் நான் சாப்பாடை கேட்கவில்லை
அர்த்தம் கேட்கிறேன்
நீங்கள் தயவு செய்து விட்ஜென்ஸ்டீனை படித்து விட்டு என்னை குழப்பும் படி அர்த்தம் உரைக்காதீர்
இதில் உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் இதோ பிடித்துக்கொள்ளுங்கள் “அப்படியில்லை நான்”


2. நானும் நாங்களும்

கட்டில் ஒன்று
ஒருவர் தூங்கலாம் முறைப்படி
கொஞ்சம் சமாளித்தால் இருவர்
அன்றோ அறுவர்
அவர்களுக்குள் அப்படி ஒரு நெருக்கம்
நானும் அவர்களுள் ஒருவன்
என்னை பார்ப்பது போலவே உள்ளது அவர்களை பார்த்தால்
அவர்களை தொட்டால் என்னை தொடுவது போலவே உள்ளது
ஆனாலும் அவர்களுக்குள் அப்படி ஒரு நெருக்கம்


3. இது எனது பூமி

நேதாஜிதாசன் கவிதைகள் மூன்று!செத்து விடுங்கள்
உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன்
செத்து விடுங்கள்
உங்கள் நண்பர்களிடமும் இதை சொல்லுங்கள்
எனக்கு நான் மட்டும் வாழும் பூமி வேண்டும்
எல்லோரும் செத்து விடுங்கள்
நான் மட்டும் வாழ்ந்து கொள்கிறேன்
நான் ஏன் சாக வேண்டும் எனக் கேட்கிறீர்களா
நீங்கள் உங்கள்
துரோகத்திற்காக
பொறாமைக்காக
தாயை புணர்ந்ததிற்காக
தாயை கொன்றதிற்காக
மகனை கொன்ற தாயை வாழ்த்தியதிற்காக
பிச்சை பொறுக்கி தின்றதிற்காக
ஏழையின் குடிசையில் திருடியதற்காக
கஞ்சா விற்றதிற்காக
கத்தியால் பச்சிளம் குழந்தையை குத்தியதற்காக
சக மனிதனின் கறியை தின்றதிற்காக
அரசு என்ற அமைப்பாகி
மக்களின் பிறப்புறுப்பின்  அசைவை கூட கட்டுப்படுத்த நினைத்ததிற்காக
நிறத்தை காரணம் காட்டி கழுத்தை அறுத்ததிற்காக
அநாதை பெண்களின் பிறப்புறுப்பை பிளந்து மண்ணை அள்ளி வீசியதற்காக
ஒவ்வொரு கொலையிலும் பரமாத்மா இருக்கிறார் என சொன்னதிற்காக
நல்லது செய்பவனை கொன்றதிற்காக
கெட்டது செய்பவனை தூக்கில் இட்டதிற்காக
இன்னும் சொல்ல இயலா காரியங்களை செய்ததிற்காக
நீங்கள் அனைவரும் செத்தே ஆக வேண்டும்
முடியாது எனில் காற்றில்லா நீரில்லா செவ்வாய் கிரகத்துக்கு சென்றுவிடுங்கள்
நான் தனியாக இருக்க வேண்டும்
எனக்கு முகங்கள் தேவையில்லை
பெயர்கள் தேவையில்லை
நினைவுகள் தேவை
பூமி தேவை
இது எனது பூமி
நீங்கள் யாரும் இங்கு வாழத்தகுதியற்றவர்கள்
தயவு செய்து செத்து விடுங்கள்
என்னை கொஞ்சம் தனியே இருக்க விடுங்கள்
நான் இங்கே மர்மமான மலைப்பகுதியில் போகரின் ஆவியை
ஆல்பர் காம்யூவின் ஆத்மாவை
நீட்சேவின் அரூபத்தை
காரல் மார்க்ஸ்ன் உருவமில்லா உடலை கண்டுபிடித்திருக்கேன்
போதாக்குறைக்கு சில்வியா பிளாத் என்ற வாலிப பெண்ணொருத்தியின் ஆவியும் எமிலி டிக்கின்ஸனின் அரூபமும் இருக்கிறது
இவர்களோடு உரையாடி கவிதை வாசித்து வாழ்ந்து விடுகிறேன்
உங்கள் எதிரியின் தலையை சீவுவதை போல இந்த மலையை சீவாதீர்கள்
என்னை தனியே அவர்களோடு இருக்கவிடுங்கள்
தயவு செய்து செத்துவிடுங்கள்
இல்லை செவ்வாய் கிரகத்துக்கு குடியேறி விடுங்கள்
நான் யாருமில்லாத உலகில் இருக்க வேண்டும்.

suryavn97@yahoo.com