வாசிப்பும், யோசிப்பும் 102: எழுத்தாளர் ஜெயமோகனுடனான சந்திப்பொன்று பற்றி

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடனான விசேட கலந்துரையாடல்

எழுத்தாளர் ஜெயமோகனுடனான சந்திப்பொன்று பற்றி எழுத்தாளர் இளங்கோ (டிசெதமிழன்) பின்வருமாறு முகநூலில் எழுதியிருந்தார் “நேற்று ஜெயமோகன் உரையாற்றிய நிகழ்வொன்றுக்குப் போயிருந்தேன். வழமைபோல ‘நேரத்திற்குச் சென்றதால்’ அவரின் உரையைத் தவறவிட்டிருந்தேன். ஆனால் கேள்வி பதில்களைக் கேட்க முடிந்தது. கவிதைகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு, பாரதி, கு.ப,ரா, வானம்பாடி எனத் தொடர்ந்து வந்து நீட்சித்த பேச்சில் ஈழக்கவிதைகளுக்கு எந்த இடமுமில்லை. தன்னைக் கவனம் கோரும் இன்றைய கவிஞர்களில் தமிழகம் சார்ந்த கவிஞர்களைத் தவிர எந்தக் கவிஞர்களும் இல்லை என்பதற்கப்பால், ஒரு பெண் கவிஞர் கூட அவருக்கு நினைவில் வரவில்லை..”

பொதுவான சந்திப்பொன்றில் எழுத்தாளர் உடனடியாக நினைவில் இருப்பவர்களைப்பற்றிக்குறிப்பிட்டிருக்கலாம். அதற்காக அவரைக் குற்றஞ்சாட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவரது ஆக்கங்களில் அவ்விதம் அவர் இருட்டடிப்பு செய்திருந்தால் அது விவாதத்துக்குரியது.

ஜெயமோகனது சந்திப்பு பற்றி யோகன் கண்ணமுத்து தனது முகப்பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

“சமீபத்தில் ஜெயமோகன் கனடா வந்திருந்தபோது அவருடனான சந்திப்புக்களில்- கலந்துரையாடல்களில் இவ்வாறு வைக்கப்பட்ட விமர்சனங்கள், கருத்துக்கள்,எதிர்வினைகள், குற்றச் சாட்டுக்கள் அவர் முன்னிலையில் உரையாடப்பட்டனவா என அறிய விரும்புகின்றேன். சந்திப்புக்களில் கலந்துகொண்டு ,ஜெயமோகனின் “பிரசங்கத்தை” செவிமடுத்து வந்த பின், முகப் புத்தகங்களில் விமர்சனம் எழுதுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. அவர் கருத்தோடு முரண்பாடுகள் இருந்திருப்பின், அச் சந்திப்பு- உரையாடல்களிலேயே எங்களின் விமர்சனத்தை- எதிர்வினையை முன்வைத்து ஒரு ஆரோக்கியமான கருத்துப் பரிமாறல்களை செய்திருக்கலாம்”

ஜெயமோகனுடனான சந்திப்பிலேயே இளங்கோ ஜெயமோகனிடமே ஏன் ஈழத்துக்கவிதைகள் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை என்று கேட்டிருக்கலாம். அதன் பின்னர் அவரது பதில் திருப்தி அளிக்காதிருந்தால் இவ்விதமானதொரு கருத்தினைக் கூறியிருக்கலாம். எப்பொழுதுமே முகத்துக்கு முன்னாலேயே கருத்துகளைக் கூறி விவாதிப்பதே ஆரோக்கியமானது. ஆனால் எனது அனுபவங்களின்படி ஜெயமோகன் எல்லா விடயங்களைப்பற்றியும் அவருக்கென்று ஒரு தீர்மானத்தை வைத்திருப்பார். அதனை விட்டு எப்பொழுதுமே அவர் இறங்கி வரப்போவதில்லை. அவரால் பதில் கூற முடியாது விவாதமிருப்பின் மிகவும் இலகுவாக அவ்விதமான விடயங்களைத்தவிர்த்து விட்டு, மீண்டும் மீண்டும் தன் நியாயத்தை வலியுறுத்திச்செல்வார்.  அவருடனான ஒரு சில விவாதங்களில் இதனை நான் அவதானித்திருக்கின்றேன். ஆனால் அதற்காக அவரிடமே சந்தேகமொன்றினைக் கேட்காமல் அது பற்றிக் குற்றச்சாட்டினை முன் வைப்பது ஆரோக்கியமானதாகத்தெரியவில்லை.

மேலும் இளங்கோவின் பதிவில் “ஈழக்கவிதைகளுக்கு எந்த இடமுமில்லை.’ என்றிருப்பது பிழையான அர்த்தத்தையே தருகிறது. ஜெயமோகன் மேற்படி கலந்துரையாடலில் ஈழக்கவிதை பற்றிக் குறிப்பிடாதிருந்தாலும் தனது கட்டுரைகளில் , நூல்களில் நிறையவே குறிப்பிட்டிருக்கின்றார். அவரது தெரிவுகள் பலருக்கு உடன்பாடானவையாக இல்லாதிருக்கலாம். அதற்காக அவர் ஈழத்துக்கவிதைகள் பற்றிக்குறிப்பிடவில்லையென்று கூறுவதன் மூலம் அவர் மீதான அவ்விடயம் பற்றிய எதிர்மறையான பிம்பமொன்றினை உருவாக்குவது ஆரோக்கியமான செயற்பாடல்ல.

அவர் தனது கட்டுரையொன்றில் சேரனின் கவிதைகளைப்பற்றி விரிவாகவே எழுதியிருந்ததை வாசித்தது நினைவுக்கு வருகின்றது. ‘நவீனத்தமிழ் இலக்கிய அறிமுகம்’ நூலிலும் நிறையவே ஈழத்துக்கவிதை பற்றி, புலம்பெயர்தமிழிலக்கியம் பற்றி குறிப்பிட்டிருக்கின்றார். உண்மையில் ஜெயமோகனைப்பொறுத்தவரையில் ஈழப்போராட்டத்திற்கு உகந்த இலக்கிய வடிவமாகக் கவிதையே இருந்தது என்று கருதுகின்றார் (பக்கம் 237; நூல் – நவீனத்தமிழிலக்கியம் அறிமுகம்).

அந்நூலில் அவர் ஈழத்துக்கவிதை பற்றிக் குறிப்பிடும் சில கருத்துகள் வருமாறு:

1. கவிதை அங்கு நுண்ணுணர்வுள்ள வாசகர்களுக்காக எழுதப்படவில்லை. துயருற்ற அனைவரையும் நோக்கிப் பேசும் குரலாக ஒலித்தது. அது உரத்த குரலில் உணர்ச்சிகரமாக  முழங்குவதாக இருந்தது. இக்காலகட்டத்தில்தான் ஈழக்கவிதை தமிழ்நாட்டில் விரிவான அங்கீகாரத்தைப்பெற்றது.

2. ஈழபோராட்டத்தின் உணர்ச்சிமயமான  சித்திரங்களை அளித்த  கவிதைகளை எழுதிய  சு.வில்வரத்தினம் இவர்களில் முக்கியமானவர். மரபான படிமங்களை சந்த அழகு மிக்க வரிகளில் உணர்ச்சி  ஓங்க அவர் எழுதிய கவிதைகள், அந்த காலகட்டத்தையும் தாண்டி, நவீன ஈழக்கவிஞர்களில் முக்கியமானவர் என்று அவரை நிலைநாட்டுகிறது.

3. மேலும் அந்நூலில் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், கவிஞர் அ.யேசுராசா, கவிஞர் சேரன், மு.புஷ்பராஜன், கருணாகரன், சோலைக்கிளி, இளவாலை விஜயேந்திரன், கி.பி. அரவிந்தன், செழியன், திருமாவளவன் எனப் பல ஈழத்து மற்றும் புலம்பெயர்தமிழ்க்கவிஞர்கள் பற்றி அவர் குறிப்பிட்டிருக்கின்றார். கவிதைகள் தவிர ஈழத்துப் புனைவிலக்கியத்துக்கு, புலம்பெயர்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்களென்று பலரையும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

எனவே ஒரு கலந்துரையாடலில் ஜெயமோகன் ஈழக்கவிதை பற்றிக்கூறாதது மிகவும் சாதாரணமானதொரு தவறே; பெரிதானதொன்றல்ல.

இளங்கோவின் மேற்படி பதிவினை வாசித்தபொழுது எனக்கு இன்னுமொரு பதிவின் நினைவு ஞாபகத்து வந்தது. எழுத்தாளர் சுமதி ரூபன் தனது இலக்கியத்தோட்டச் சந்திப்பு பற்றிய குறிப்பில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

“ஜெயமோகனைச் சுற்றி அவருக்குத் தங்களை அறிமுகப்படுத்துவதும், புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதுமாகக் கூட்டமாக இருந்தது. சிறிது இடைவேளை கிடைத்த நேரம் ஜெயமோகன் இளங்கோவைப் பார்த்துக் கையை நீட்டிக்கொண்டு வந்து இருவரும் அணைத்துக் கொண்டார்கள். ”அது ஒரு அற்புதமான காட்சி”

இவ்வளவுதூரம் எழுத்தாளர் இளங்கோவின்மீது மதிப்பு வைத்திருக்கும் ஜெயமோகனிடம் நேரிலேயே தனது கருத்தை, யோகன் கண்ணமுத்து கூறுவதைப்போல், இளங்கோ  கூறியிருக்கலாமே என்று பட்டது..


‘இயல் விருதின் மரணமும்’ ‘இன்னும் வாழும் இயல் விருதும்’

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடனான விசேட கலந்துரையாடல்

2007ற்கான இயல்விருது மொழிபெயர்ப்புப்பணிகளுக்காக திருமதி லக்சுமி ஹோல்ம்ஸ்ராம் அவர்களுக்குக் கிடைத்தது. அம்முறை அவ்விருதுக்குரியவரை தெரிவு செய்த நடுவர்களில் ஒருவனாக நானுமிருந்தேன். அன்று அவ்விருது லக்சுமி கோல்ம்ஸ்ட்ராமுக்குக் கொடுக்கப்பட்டதைக் கண்டித்து ‘இயல் விருதின் மரணம்’ என்றொரு பதிவினை தனது வலைப்பதிவினில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்தார். அதற்கு விளக்கமளித்து பதிவுகள் இணைய இதழில் நானுமொரு கட்டுரையினை எழுதியிருந்தேன்…, அதற்கும் தனது கருத்துகளை ஜெயமோகன் அவர்கள் தனது வலைப்பதிவினில் எழுதியிருந்தார். அன்று ‘இயல் விருதின் மரணம்’ என்று எழுதியவருக்கு இன்று ‘இயல் விருது ‘கிடைத்திருக்கின்றது. ‘இயல் விருது மரணிக்கவில்லை. இன்னும் வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றது என்பதை ஜெயமோகன் புரிந்துகொண்டிருப்பாரென்று நினைக்கின்றேன்.

அன்று இயல்விருது பற்றி வெளியான எனது கட்டுரை: http://www.geotamil.com/pathivukalnew/index.php
அது பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரையொன்று: http://www.jeyamohan.in/153