கனடிய எழுத்தாளரான ஜான் மார்டெல் (Yann Martel) எழுதிய புகழ்பெற்ற நாவல் ‘பை’யின் வாழ்வு (Life Of Pi). இந்த நாவல் 2002ஆம் ஆண்டுக்குரிய ‘புக்கர்’ விருதினைப் பெற்றதுடன் பிரான்சின் புக்கர் விருதினை இதன் பிரெஞ்சிய மொழிபெயர்ப்பிற்காகப் பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்க நாவல் விருது, இலக்கியத்திற்கான ஆசிய/பஸிபிக் அமெரிக்க விருது (2001-2003)எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த நாவல் ஐந்து தடவைகள் பிரித்தானிய பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நான் வாசித்த நாவல்களில் மட்டுமல்ல, இதுவரையில் நான் வாசித்த நாவல்களில் எனக்குப் பிடித்த நாவல்களிலொன்றாக இந்நாவலும் அமைந்து விட்டதென்று கூறினால் அது மிகையான கூற்றல்ல. ஜான் மார்டெல்லின் இந்த நாவல் பல்வேறு காரணங்களுக்காக என்னைக் கவர்ந்துள்ளது. அவற்றில் முக்கியமானவையாக நான் கருதுவது: கதை கூறப்படும் முறை, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, மானுட இருப்பு பற்றிய தேடல், இயற்கை பற்றிய சித்திரிப்பு… இவைதான் முக்கியமாக இந்நாவல் என்னைக் கவர்ந்ததற்குக் காரணம். இவையெல்லாம் சேர்ந்து இந்நாவலை வாசிக்கும் அனுபவத்தையொரு இன்பகரமானதொரு அனுபவமாக்கி விட்டன. அதன் விளைவே இந்நாவல் பற்றிய எனது இந்தக் குறிப்புகளும்.