[‘புத்தம் வீடு’ என்னும் தனது நாவலின் மூலம், உலகத் தமிழிலக்கியத்தில் தன் தடத்தினைப் பதித்த ஹெப்ஸிபா ஜேசுதாசன் பெப்ருவரி 9, 2012 அன்று இயற்கை எய்தினார். அவரது நினைவாக ‘அ.ராமசாமி எழுத்துகள்’ என்னும் வலைப்பதிவில் வெளியான கட்டுரையினை மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்-] ஹெப்ஸிபா ஜேசுதாசன் அறுபதுகளின் மத்தியில் ‘புத்தம் வீடு’ என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் பிரவேசம் செய்தவர். தான் எழுத ஆரம்பித்த காலம் தொடங்கி, தமிழ் இலக்கியச் சூழலில் நிலவும் ஒரு மனோபாவத்திற்கு எதிராக இயங்கியும் வருபவர். தமிழ் இலக்கியச் சூழல் என்பது பொதுவாக அறுபதுகளுக்கு முந்தியும் பிந்தியும் இரண்டு முகங்களைக் கொண்டதாகவே இருந்து வந்துள்ளது. குழுமன நிலையோடும், கட்சி அடிப்படையிலும் இயங்கிக் கொண்டிருக்கும் சிறுபத்திரிகை உலகம் ஒரு முகம். இதில் ஒரு எழுத்தாளன் ஒரு குழு சார்ந்தவனாகவோ, அல்லது கட்சி சார்ந்தவனாகவோ அடையாளங்காணப்படுதல் தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. இன்னொரு முகம் வெகுஜனப் பத்திரிகைகளின் உலகமாகும். பெருமுதலாளிகளின் வணிக லாபத்திற்கு எழுத்துச் சரக்கினை உற்பத்தி செய்யும் பேனாத் தொழிலாளர்களைக் கொண்டது இம்முகம். இவ்விருமுகங்களில் ஏதாவது ஒன்றை அணிந்து கொள்ளாமல் இயங்கி வருபவர் ஹெப்ஸிபா ஜேசுதாசன். அதே வேளையில் சிறுபத்திரிகைக் குழுவினராலும், கட்சி சார்ந்த விமரிசகர்களாலும் புறமொதுக்கப்படாமல், தமிழ் நாவல் இலக்கியத்திற்கு முக்கியப்பங்களிப்பு செய்தவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவர். இத்தகைய விதிவிலக்குகள் நவீனத் தமிழிலக்கியப்பரப்பில் வெகு சொற்பமே.