*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2011ஆம் ஆண்டு ( ஜனவரி 2011 முதல் திசம்பர் 2011 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.
புலம்பெயர் எழுத்தாளர்களில் தனது படைப்புக்களினால் உலகளாவிய தமிழ் வாசகர்களின் கவனத்தை ஈர்த்த மிகச்சிலரில் குறிப்பிடக்கூடிய ஒருவர், கனடாவை வாழ்விடமாகக்கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன். சென்ற ஆண்டில் இந்தியாவில் கலைமகள் சஞ்சிகை நடாத்திய குறுநாவல் போட்டியில் “தாயுமானவர்” என்ற இவரது குறுநாவல் விருது பெற்றதின் தொடர்ச்சியாக, கனடாவில் புகழ்பெற்ற “தமிழர் தகவல்” விருது அண்மையில் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாற்றலுக்காக இந்த விருதைப்பெற்ற மிகச்சிலரில் குரு அரவிந்தனும் இடம்பெறுவது பொருத்தமானதே. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பின்னரே எழுத்துப்பணியில் புயலென உருவாகிய இவரது படைப்புகள் உலகின் பலபாகங்களில் வெளிவரும் சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்றுள்ளன. தமிழகத்தில் ஏராளமான வாசகர்களைக்கொண்ட பிரபல சஞ்சிகைளில் அண்மைக்காலத்தில் இவரது படைப்புக்கள் பல வெளிவந்துள்ளன. “ஆனந்தவிகடன்” சஞ்சிகை வெளியிடும் தீபாவளி மலர்களுக்காக இவரது சிறுகதைகளை கோரிப்பெற்று பிரசுரிப்பது பெருமை தரும் சந்தர்ப்பங்களாகும். குறிப்பாக இவர் எழுதிய இருபத்துநான்கு பக்கக் கதையான “நீர் மூழ்கி நீரில் மூழ்கி” ஆனந்தவிகடனின் ஒரே இதழில் முதன்முறையாக ஐந்து புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களுடன் வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டினைப் பெற்றது.