ஒரு கலைஞன் தான் பார்த்து கேட்டு அனுபவித்த விடயங்களை தனக்கு கை வந்த ஊடகத்தினூடாக வெளிப்படுத்தும் போது அது கலையாகின்றது. கலைஞர்களுக்கிடையே வெளிப்படுத்தும் முறையிலும் கையாளும் உத்திகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது அவர்களது அனுபவத்தினாலும் பயிற்சியினாலும் சூழலினாலும் வேறுபடுகின்றது. ஒரு கலைப்படைப்பில் சமூகத்திலுள்ள பிரச்சினைகளும் அதிலிருந்து மீள்வற்கான வழிமுறைகளும் கூறப்படும் போது அதன் பெறுமதி இன்னும் அதிகரிக்கின்றது. கலையாக்கங்களில் சமூகத்தின் நிலைமைகளை பிரதிபலிப்போரில் பழைய கதைகளுக்கு புதிய வியாக்கியானங்களையும் புதிய கருத்தேற்றங்களையும் செய்வோரும் உள்ளனர். இது தழுவலாகவோ அல்லது அதே கதையமைப்புடன் சிறு மாற்றத்தினை மேற்கொள்ளும் முறைமையுடையதாகவோ அமைந்து காணப்படும். இராமாயணம் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பல விடயங்களை உள்ளடக்கி யுள்ளது. இதனால்தான் பல இராமாயணங்கள் (கம்பர், வால்மீகி, வசிட்டர், போதாயினர், துளசி, சம்பூர்ணர்,….இராமாயணங்கள்) உருவாயின. இராமாயணம் சமூகத்திற்கான பல்வேறுபட்ட கருத்துக்களை முன் வைக்கின்றது. அந்தவகையில் இராமாயணக் கதையினை அடிப்படையாகக் கொண்டு, 2010ல் இராமாயணத்தைத் தழுவியதான கதையமைப்புடன் மணிரத்தினத்தின் இராவணணனும் (சினிமா) இராமாயணத்தின் யுத்த காண்டத்தை அடிப்படையாகக் கொண்டு மௌனகுருவின் இராவணேசனும்(நாடகம்) படைத்தளிக்கப்பட்டுள்ளன.