நான் Illustrated Weekly of India வுடன் பரிச்சயம் கொண்டிருந்த காலத்தில் அதற்கு C.R.Mandy என்பவர் ஆசிரியராக இருந்தார். அதன் பெயருக்கு ஏற்பவே எந்தக் கட்டுரையானாலும் நிறைய படங்கள் உடன் பிரசுரமாகி இருக்கும். படங்கள் இல்லாத பக்கமோ கட்டுரையோ அதில் பார்க்கமுடியாது. நான் வாங்கத் தொடங்கிய போது அது 12 அணாவுக்கு விற்று வந்தது. 12 அணா என்பது முக்கால் ரூபாய். படம் என்றதும் ஓவியங்களின் கலர் பதிவுகளையும் முக்கிய மாகச் சொல்ல வேண்டும். நான் 1950 களில் தெரிய வந்த, வாழ்ந்த முக்கிய இந்திய ஓவியர்களையும் அவர்கள் ஒவியங்களையும் அறிமுகம் செய்து கொண்டதற்கும் மேலாக அவரகளது பாணியையும் பற்றி அதற்கான பின்னணி பற்றியும் தெரிந்து கொண்டதும், அந்தப் பத்திரிகை மூலம் தான். அந்தப் பத்திரிகை தவிர இது பற்றி எனக்குச் சொல்லும் பத்திரிகை அப்போது வேறு ஒன்றும் இருக்கவில்லை. இதன் தொடர்ச்சியாகத் தான் MARG என்ற காலாண்டு கலைப் ப்த்திரிகையும் எனக்கு தெரிய வந்தது. Two Leaves and a Bud, Untouchable போன்ற நாவல்கள் மூலம் பிரசித்தி பெற்ற ஆங்கில நாவலாசிரியரான முல்க் ராஜ் ஆனந்த்தின் ஆசிரியத்வத்தில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகை அது. அது பற்றித் தெரிய வர எனக்கு அதிக காலம் ஆகவில்லை. ஏதோ ஒன்றின் இழை கிடைத்தால் அதைப் பற்றிக்கொண்டு நகர்ந்தால் மற்றவையும் பரிச்சயம் கொள்ளும். மார்க், கலைத்துறையின் எல்லா விகாசங்களையும் தன் அக்கறையாகக் கொண்டிருந்தது. ஓவியம், சிற்பம், கலம்காரி, கோவில்கள், நடனம், சங்கீதம் வங்க காலிகாட், ஒரிய பட்கதா காங்கரா, பஹாரி, ராஜஸ்தானி, மொகல் என்று பலவும் எனக்கு அறிமுகமாகின.