இலண்டன் மாநகரில் நடைபெற்ற நான்காவது ‘இலக்கிய மாலை” நிகழ்வில் பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்கள் அறிமுகமாகின. கடந்த சனிக்கிழமை (10 – 08 – 2013) மாலை இலண்டன் ‘மனோர் பார்க்” (Manor Park) என்ற இடத்தில் அமைந்துள்ள சைவ முன்னேற்றச் சங்க மண்டபத்தில், சமூகத் தொண்டரும் இலக்கிய அபிமானியுமான திரு செல்லையா வாமானந்தன் தலைமையில் ‘இலக்கிய மாலை” நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வி. ரி. இளங்கோவனின் நூல்களான ‘இப்படியுமா..?” – சிறுகதைத் தொகுதி, ‘அழியாத தடங்கள்” – கட்டுரைத் தொகுதி, ‘தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா..?”, ‘மண் மறவா மனிதர்கள்”, ‘பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்” – (இளங்கோவன் கதைகள் இந்தி மொழிபெயர்ப்பு) மற்றும் இளங்கோவன் பதிப்பித்த ‘இலக்கிய வித்தகர்” த. துரைசிங்கத்தின் ‘தமிழ் இலக்கியக் களஞ்சியம்” ஆகிய ஆறு நூல்களே அறிமுகமாகின. இலண்டன் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், எழுத்தாளர் துரை. சிவபாலன் நூல் அறிமுகவுரையாற்றினார். கணினி அறிஞரும் இலக்கிய அபிமானியுமான திரு சிவா பிள்ளை நூல் வெளியீட்டுரை நிகழ்த்தி நூல்களை வழங்கினார். விருதுகள் பெற்ற நாவாலாசிரியர் வவுனியூர் இரா. உதயணன் முதற்பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்.
ஆகஸ்ட் 15 என்று ஒரு புத்தகம். குமரி எஸ். நீலகண்டன் எழுதியது. இந்த மாதிரி தலைப்புகள் கொண்ட நாவல்கள் புதிதல்ல. வெகு அபூர்வம் என்று சொல்லவேண்டும். 1984 என்று அறுபது வருடங்களுக்கு முன் ஜியார்ஜ் ஆர்வெல் எழுதியது ஸ்டாலினின் கொடூர யதேச்சாதிகாரமும் கம்யூனிஸ சித்தாந்தமும் உலகை, மனித சமுதாயத்தை எங்கு இட்டுச் செல்கின்றன என்று அவர் 1949- ல் எழுதியது. அது ஒரு anti-utopia என்று வகைப்படுத்தினாலும், அது நம் மனித துயரைத் துடைக்க வந்த சித்தாந்தம் பேசினாலும், ஒரு யதேச்சாதிகாரரின் கீழ் மனித சமுதாயத்தின் சுதந்திரத்தை பறித்து அழிவுக்கு இட்டுச் செல்லும் ஒரு பயங்கர சொப்பனம், அது சொப்பனமல்ல, நிகழ்ந்து கொண்டிருக்கும் நிஜம் என்பதைச் சித்தரித்தது. அது கையாண்ட பல புதிய சொல்லாக்கங்கள் இன்று எந்த அரசினதும் ஆயுதங்களாகி அன்றாட புழக்கத்தில் வந்துள்ள மொழியாகியுள்ளது. (ஜியார்ஜ் ஆர்வெல்லுக்கும் முன்னால் கி.பி. 2000 என்று 1940களில் எப்போதோ வருங்கால கனவாக ஒரு உடோப்பியாவை போன நூற்றாண்டில் ஐம்பதுக்களிலிருந்து எழுபதுக்கள் வரை பெரிதும் கொண்டாடப்பட்ட மு. வரதராசனார் எழுதியது ஒன்றும் தமிழில் உண்டு. அதற்கும் முன்பாக கோதைத்தீவு என்று வ.ரா. ஒரு உடோப்பியா எழுதியிருக்கிறார்.
தி.ஆ. 2044 மடங்கல் (ஆவணி) 2, (18-8-2013) அன்று விழுப்புரம் தமிழ்ச் சங்க 11ஆம் ஆண்டுவிழாப் பாட்டரங்கத்தில் ‘இளங்கோ அடிகள்’ என்ற தலைப்பில் பாடிய கலிவெண்பா:
இளங்கோ அடிகள்!
– தமிழநம்பி –
பாட்டரங்கின் நற்றலைவ! பைந்தமிழ் முன்மரபில்
தீட்டும் விரைவியப் பாவல! என்றென்றும்
நெஞ்சில் நிறைந்தார் நிலைப்புகழை இவ்வரங்கில்
எஞ்சலின்றிக் கூற எழுந்துள்ள பாவலர்காள்!
ஓரேர் உழவர், உழன்று விழாவெடுக்கும்
தீராத் தமிழ்ப்பசியர் தேர்ந்த மருத்துவர்
பாவலர் நல்லெளிமை பாலதண் டாயுதரே!
ஆவலுடன் வந்தே அமைந்திருந்து கேட்கின்ற
அன்புசால் தாய்க்குலமே! ஆன்ற பெரியோரே!
இன்தமிழ்ப் பற்றார்ந்த எந்தமிழ நல்லிளைஞீர்!
எல்லார்க்கும் நெஞ்சார்ந்த என்வணக்கம் கூறுகிறேன்!
நல்ல தலைப்பொன்றை நான்பாடத் தந்தார்!
நெஞ்சில் நிறைந்த இளங்கோ அடிகள்!ஆம்!
எஞ்சலின்றி எல்லாத் தமிழருளம் ஈர்க்கும்
புரட்சி நெருப்பினில் பூத்த துறவி!
மிரட்சி கொளச்செய்யும் மேன்மைமிகு பேரறிஞர்!