இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்த காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எம்.எஸ். அப்துல் மஜீத் என்பவர். இவர் பெரும்பாலும் தனது கவிதைகளை மதியன்பன் என்ற புனைப்பெரிலேயே எழுதிவருகின்றார். காத்தான்குடி அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகத்தின் மூலம் 97 பக்கங்களில் 36 பக்கங்களை உள்ளடக்கியதாக “ஆனாலும் திமிருதான் அவளுக்கு“ என்ற மகுடத்தில் அமைந்த தனது கன்னிக் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். இந்தத் தொகுதியிலுள்ள அனைத்துக் கவிதைகளும் ஏற்கனவே பத்திரிகைகள், வானொhலிகள், இணையத்தளம், முகநூல், மதியன்பனின் வலைப்பூ போன்றவற்றில் வெளிவந்த கவிதைகளாகக் காணப்படுகின்றன.
தான் வாழுகின்ற சமூகத்தில் காணுகின்ற பிரச்சினைகளை கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்காமல் அதனை துணிவோடு யதார்த்தபூர்வமாக மக்கள் மயப்படுத்துவதே ஒரு கவிஞரின் தார்மீகப் பொறுப்பாகும் என்ற கூற்று கவிஞர் மதியன்பனுக்கும், அவரது கவிதைகளுக்கும் மிக மிகப் பொருந்திப் போகின்றது. ஏனெனில் இந்தத் தொகுதியில் உள்ள பெரும்பாலான கவிதைகள் இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகளை, அட்டூழியங்களை, அநியாயங்களைப் படம்பிடித்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளன.